காசா போரின் 21,000 குழந்தைகள் காணாமல் போயுள்ளதாக தகவல்!
காசா போரின் போது 21,000 பாலஸ்தீன குழந்தைகள் காணாமல் போயுள்ளதாகவும் 4,000 குழந்தைகள் இறந்துள்ளதாகவும் save the children வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் திகதி ஹமாஸ் உறுப்பினர்கள் இஸ்ரேலுக்குள் நுழைந்து தொடர் தாக்குதல்களுக்குப் பிறகு, இஸ்ரேல் காசா பகுதி மீது தாக்குதல் நடத்தத் தொடங்கியது. அந்தத் தாக்குதல்களில் 37,500 க்கும் மேற்பட்ட காசா மக்கள் கொல்லப்பட்டுள்ளனர், அவர்களில் பெரும்பாலோர் குழந்தைகள் என தெரியவந்துள்ளது யுத்தத்தின் போது இழந்த பிள்ளைகளை அவர்களது பெற்றோருடன் ஒன்றிணைப்பதற்கு சாத்தியமான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ள போதிலும், அதிகரித்து வரும் மோதல்கள் காரணமாக இந்த நிலைமை கடினமானதாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தவிர, இஸ்ரேல் ராணுவத்தால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட குழந்தைகளும் கணிசமான அளவில் இருப்பதாகவும் அந்த அறிக்கை மேலும் குறிப்பிட்டுள்ளது.
நான்கு வருடங்களில் 1700 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்
நாட்டை விட்டு வெளியேறும் வைத்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வருடம் முதல் 6 மாதங்களில் மட்டும் 1486 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இலங்கை மருத்துவ பேரவையின் தரவுகள் பிரகாரம், இந்த வருடம் ஜனவரி மாதம் 138 வைத்தியர்களும், பெப்ரவரி மாதம் 172 வைத்தியர்களும், மார்ச் மாதம் 198 வைத்தியர்களும், ஏப்ரல் மாதம் 214 வைத்தியர்களும், மே மாதம் 315 வைத்தியர்களும், ஜூன் மாதம் 449 வைத்தியர்களும் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இவர்கள் இலங்கை வைத்திய பேரவையிடமிருந்து நற்சான்றிதழ் பத்திரத்தையும் பெற்ற பின்னர் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளதாக அறிய முடிகிறது.
வவுனியாவில் இளைஞர் குழு அட்டகாசம் : இருவர் காயம்
வவுனியா, தேக்கவத்தைப் பகுதியில் இளைஞர் குழு ஒன்று மேற்கொண்ட தாக்குதலில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்படடுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா, தேக்கவத்தைப் பகுதியில் வசிக்கும் இளைஞர் ஒருவர் குழாய் கிணறு நிர்மாணிக்கும் தொழிலை செய்து வருகின்றார். குறித்த இளைஞர் வவுனியா நகரில் இருந்து வீடு சென்ற போது அவரை வழிமறித்த குழு ஒன்று அவர் மீது போத்தல்கள் மற்றும் தடிகாளால் தாக்குதல் நடத்தியுள்ளது. அத்துடன், குறித்த இளைஞனின் வீட்டிற்குள் நுழைந்து இளைஞனின் தந்தை மீதும் தாக்குதல் நடத்தியுள்ளது. காயமடைந்த இருவரும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். இதேவேளை, குழாய் கிணறு நிர்மாணம் தொடர்பில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நபர் ஒருவர் தனக்கு மிரட்டல் விடுத்ததாக பாதிக்கப்பட்ட இளைஞன் தெரிவித்துள்ளதுடன், அதன் தொடர்ச்சியாக இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதா என்ற கோணத்திலும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கனடாவில் அகதி அந்தஸ்து கோரும் தமிழர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்
கனடாவில் புகலிடம் கோருவோர் தொடர்பில் புதிய நடைமுறையை நடைமுறைப்படுத்துமாறு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். கனடாவில் புகலிடம் கோருவோரின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய விரைவாக விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு முடிவுகளை அறிவிக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. அகதி அந்தஸ்து கோரிக்கையை பரிசீலனை செய்ய இதுவரை 18 மாத காலங்கள் எடுக்கப்படுகின்றன. எனினும் அதனை 9 மாதங்களாக குறைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதற்கட்டமாக தலைநகர் ஒட்டாவாவில் அறிமுகம் செய்யப்படுவதுடன், விரைவில் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கும் Quebec மாகாண முதல்வர் பிரான்சுவா லெகால்ட்டினுக்கும் இடையிலான சந்திப்பின் போது இந்த விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன.
ராமர் பாலம்: செயற்கைக்கோள் புகைப்படத்தை வெளியிட்ட ஐரோப்பிய விண்வெளி மையம்
தமிழகத்தின் தனுஷ்கோடிக்கும் இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையேயான ராமர் பாலத்தின் செயற்கைக்கோள் புகைப்படத்தை ஐரோப்பிய விண்வெளி மையம் வெளியிட்டுள்ளது. ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் 1975 ஆம் ஆண்டு விண்வெளி ஆய்வுக்காக நிறுவப்பட்ட அமைப்பாகும். இதன் தலைமையகம் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் அமைந்துள்ளது. இதில் 22 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர். ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் தனது எக்ஸ் சமூகவலைதள பக்கத்தில் கோப்பர்நிக்கஸ் சென்டினெல் – 2 என்ற தனது செயற்கைக் கோள் வழியாக எடுக்கப்பட்ட தமிழகத்தின் தனுஷ்கோடிக்கும் இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையேயான ராமர் பாலம் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. அதில், ராமர் பாலம் அல்லது ராம சேது என்றும் அழைக்கப்படும் ஆதாமின் பாலம், இந்தியாவின் தென்கிழக்கு கடற்கரையில் உள்ள ராமேசுவரம் தீவு மற்றும் இலங்கையின் வடமேற்கு கடற்கரையில் உள்ள மன்னார் தீவு இடையே அமைந்துள்ளது. இந்த பாலம் இந்தியப் பெருங்கடலின் நுழைவாயிலான மன்னார் வளைகுடாவை (தெற்கு) வங்காள விரிகுடாவின் நுழைவாயிலான பாக் ஜலசந்தியிலிருந்து (வடக்கில்) பிரிக்கிறது. இந்த பாலம் ஒரு காலத்தில் இந்தியாவையும் இலங்கையையும் இணைத்த நிலத்தின் எச்சங்கள் என்று புவியியல் சான்றுகள் தெரிவிக்கின்றன. இந்த பாலம் 15ஆம் நூற்றாண்டு வரை பயணிக்கக்கூடியதாக இருந்தது, பின்னர் அது பல ஆண்டுகளாக புயல்களால் படிப்படியாக அரிக்கப்பட்டது. மன்னார் தீவு சுமார் 130 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது மற்றும் இலங்கையின் பிரதான நிலப்பகுதியுடன் சாலைப் பாலம் மற்றும் ரயில் பாலம் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. அதன் எதிர் பக்கத்தில், ராமேசுவரம் தீவு, இந்திய நிலப்பரப்பில் பாம்பன் பாலத்தின் மூலம் இணைக்கப்படுகிறது. இங்குள்ள கடல் பகுதி கடல்வாழ் உயிரின தேசிய பூங்காவாக அங்கிகரிக்கப்பட்டது. இந்த கடல் 1 முதல் 10 மீ. ஆழம் மட்டுமே கொண்டது. இங்குள்ள நிலப்பரப்பு பறவைகள் இனப்பெருக்கம் செய்யும் இடமாகவும், ஏராளமான மீன்கள், கடல் பசு, டால்பின் மற்றும் கடல் புற்கள் ஆகியவை ஆழமற்ற நீரில் செழித்து வளரக்கூடிய இடமாகவும் உள்ளதாக ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் என்று தனது இணையதளத்தில் (https://www.esa.int) தெரிவித்துள்ளது.
மன்னார் முருங்கன் பிரதான வீதியில் கோர விபத்து- இளம் குடும்பஸ்தர் பலி!
மன்னார்(Mannar) – முருங்கன் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முருங்கன் தொடரந்து கடவை பகுதியில் பேருந்தும் மோட்டார் சைக்கிளும் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்துச் சம்பவமானது நேற்று (24.06.2024) மாலை 5.00 மணி அளவில் இடம்பெற்றுள்ளது. மன்னாரில் இருந்து பயணித்த தென் பகுதியை சேர்ந்த தனியார் பேருந்தும், வவுனியா பகுதியில் இருந்து முருங்கன் வீதி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் முருங்கன்- கற்கிடந்தகுளம் கிராமத்திற்கு இடையில் உள்ள தொடருந்து கடவைப் பகுதியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதன்போது, நானாட்டான் பிரதேசத்தில் உள்ள சாளம்பன் நாக செட்டி கிராமத்தைச் சேர்ந்த 35 வயதுடைய சுந்தரலிங்கம் தீபன் என்ற இளம் குடும்பஸ்தர் ஒருவரே உயிரிழந்துள்ளார். மேலும், சடலம் முருங்கன் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணையை முருங்கன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையில் சிறை செல்பவர்கள் தொடர்பில் அதிர்ச்சித் தகவல்..!
திருட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2021ஆம் ஆண்டில் 1,202 பேரும், 2022ஆம் ஆண்டில் 3,956 பேரும், 2023ஆம் ஆண்டில் 5,687 பேரும் திருட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என சிறைச்சாலைத் திணைக்கள அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021ஆம் ஆண்டில், திருட்டு, கொள்ளை சம்பவங்களில் 19 பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், 2022ல், 49 ஆகவும், 2023ல், 61 ஆகவும் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள வேண்டுகோள்
சம்பள நிலுவையினை வலியுறுத்தி எதிர்வரும் 26ஆம் திகதி அதிபர்கள் ,ஆசிரியர்கள், ஆசிரிய ஆலோசகர்கள் முன்னெடுக்கும் சுகவீன விடுமுறை போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரையும் ஆதரவு வழங்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஊடக சந்திப்பு இன்று மாலை மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்றது. இந்த ஊடக சந்திப்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் பொ.உதயரூபன் கலந்துகொண்டு கருத்துகளை முன்வைத்தார். அரசாங்கத்துடன் எமது சம்பள முரண்பாடுகள் தொடர்பில் நடாத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததன் காரணமாக நாடெங்கிலும் உள்ள அதிபர்கள், ஆசிரியர்கள், ஆசிரிய ஆலோசகர்கள் சுகவீன விடுமுறை போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளோம். அதிபர்கள்,ஆசிரியர்கள் கூட்டமைப்பானது ஒற்றுமையாக சென்றுகொண்டிருக்கும் நிலையில் அதனை பலவீனப்படுத்துவதற்கான நடவடிக்கையினையே அரசாங்கம் முற்படுவதாகவும் அதனை முறியடிக்கும் வகையில் இலங்கை பூராகவும் கடந்த வாரம் ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்திருந்தோம். தொழிற்சங்க நடவடிக்கைகள் குறித்து கல்வி அமைச்சுக்கு அறிவித்துள்ளதன் காரணமாக எந்த அச்சுறுத்தலுக்கும் ஆசிரியர்கள் அடிபணியவேண்டியதில்லையெனவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் பொ.உதயரூபன் தெரிவித்தார். போராட்டம் நடைபெறும் இந்த நாளில் மாணவர்களின் பாதுகாப்பினை கருத்தில்கொண்டு மாணவர்களை பெற்றோர் பொறுப்பேற்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
இலங்கையில் அதிர்ச்சியை ஏற்படுத்திய வெளிநாட்டு கும்பல் – திடீர் சுற்றிவளைப்பில் சிக்கிய பாரிய மோசடி
நீர்கொழும்பில், இணையத்தின் ஊடாக சட்டவிரோதமான முறையில் நிதி கொடுக்கல் வாங்கல்களை நடத்தியதாக கூறப்படும், இரண்டு நிலையங்கள் சுற்றிவளைக்கப்பட்டு 30 வெளிநாட்டவர்களை கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நேற்று இரவு சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்களில், சீனா, பிலிப்பைன்ஸ், மாலைத்தீவு, பாகிஸ்தான், இந்தியா மற்றும் நேபாளம் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த பிரஜைகளும் அடங்குவதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் ஊடாக, இவர்கள் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளதாக அதிகாரி தெரிவித்துள்ளார். 5000 ரூபாய் முதலீடு செய்தால் 3000 ரூபாய் லாபம் கிடைக்கும் என்று கூறி அதிக அளவில் பணம் வசூலித்து இவர்கள் மோசடியில் ஈடுபட்டதாக அதிகாரி தெரிவித்துள்ளார். சுற்றிவளைக்கப்பட்ட இரண்டு வீடுகளிலும் இருந்து,பெருமளவிலான தொடர்பாடல் உபகரணங்களை குற்றப் புலனாய்வு திணைக்களம் கைப்பற்றியுள்ளது. இலங்கையில் தங்கியிருக்கும் இந்தக் குழுவினர், ஏனைய நாடுகளுக்கும் இந்த மோசடி திட்டத்கை விரிவுப்படுத்தியுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. இந்தநிலையில், குறித்த வெளிநாட்டவர்கள் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மங்கள தெஹிதெனிய குறிப்பிட்டுள்ளார். அவர்கள் பலகோடி ரூபாய் பணத்தை மோசடி செய்துள்ளதாக சந்தேகிக்கப்படுவதாகவும், அவ்வாறான மற்றுமொரு இடத்தில் சோதனை நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு 150 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி…
இலங்கைக்கு 150 மில்லியன் டொலர்களை நிதியுதவியாக வழங்க உலக வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சபை அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, இலங்கைக்கான ஆரம்ப சுகாதார சேவைகளின் தரம் மற்றும் பயன்பாட்டை மேம்படுத்துவதற்காக இந்த நிதியுதவி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.