இலங்கையில் மிகவும் மோசமான முறையிலும் சுத்தமற்ற முறையிலும் குடிநீர் வழங்கப்படுவதாக இணையத்தில் வெளியான புகைப்படத்தால் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த புகைப்படங்கள் தொடர்பில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை விளக்கமளிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
தாய்லாந்தில் இருந்து அகற்றப்பட்ட பழைய நீர் குழாயின் புகைப்படத்தைப் பயன்படுத்தி சமூக ஊடகங்கள் ஊடாக நாட்டின் நீர் பாவனையாளர்களை சிலர் தவறாக வழிநடத்தவும் அச்சுறுத்தவும் முயற்சிப்பதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
கலடுவ நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து வரும் நீர் விநியோகக் குழாய் வெடித்து சிதறியதன் காரணமாக ஏற்பட்ட அனர்த்த நிலைமையின் பின்னணியில் இந்த புகைப்படம் தவறான முறையில் சமூக வலைத்தளங்களில் பகிரப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு குறிப்பிட்டுள்ளது.
நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை, நீர் பாவனையாளர்களால் வழங்கப்படும் சுத்தமான நீர் தொடர்பில் அச்சப்படத் தேவையில்லை என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், மக்களை தவறாக வழிநடத்தும் மற்றும் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையிலான பொய்யான செய்திகளை பரப்புவது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.