Search
Close this search box.

இந்திய வௌிவிவகார அமைச்சர் நாளை இலங்கைக்கு வருகை!

உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இந்திய வௌிவிவகார அமைச்சர் எஸ்.ஜெயசங்கர் நாளை (20) இலங்கைக்கு வருகை தரவுள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்திற்கு முன்னதாக, இரு நாடுகளுக்கும் இடையில் முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டங்களை மீளாய்வு செய்வதற்காகவே அவர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் ஓகஸ்ட் மாதம்  இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சுற்றுலாத்துறையில் வடக்கு கிழக்கு திட்டமிட்டுப் புறக்கணிப்பு – சாணக்கியன்!

சுற்றுலாத்துறையில் வடக்கு கிழக்கு மாகாணங்கள் திட்டமிட்டுப்  புறக்கணிக்கப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினா் இராசமாணிக்கம் சாணக்கியன் குற்றம் சுமத்தியுள்ளாா். இவ்விடயம் தொடா்பாக நாடாளுமன்றத்தில் மேலும் கருத்துத் தொிவித்த சாணக்கியன், வடக்கு கிழக்கு மாகாணங்களில் சுற்றுலா அபிவிருத்திகள் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுவதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை வட கிழக்கில் குறைவாக காணப்படுகின்றது. வடக்கு கிழக்கினை பொறுத்த வரையில் இன்று சுற்றுலாப்பயணிகளின் வருகை மிக குறைவாக உள்ளது. கிழக்கு மாகாணத்தின் அறுகம்பை பிரதேசத்தில் அரசாங்கத்தின் எந்த முன்னேற்றகரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாத போதும் சுற்றுலாப் பயணிகள் அங்கு வருகை தருகின்றனர். இந்திய வெளிவிவகார அமைச்சர் 20ம் திகதி வரவிருப்பதை செய்திகள் மூலம் அறிய முடிகின்றது. இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் நிலத் தொடர்பினை ஏற்படுத்துவது, புகையிரத சேவையினை ஆரம்பிப்பது மிக முக்கிய விடயமாக உள்ளது. ஏனெனில் தென்னிந்தியாவில் உள்ள எங்களது தமிழ் சகோதர மக்களில் குறிப்பிட்ட தொகையினர் இலங்கைக்கு வந்தால் வடக்கு, கிழக்கினை எம்மால் கட்டியெழுப்ப முடியும். ஆகவே அரசாங்கம் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். சுற்றுலாப் பயணிகள் மூலமாக வருமானமீட்டுவதற்கான வழியினை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். மாகாண சபைகளுக்கு அதிகாரம் வழங்க வேண்டுமென தொடர்ச்சியாக கூறக் காரணம் நாங்களே எங்களது பிரதேசங்களை கட்டியெழுப்ப முடியும் என்பதால் ஆகும். ஜனாதிபதிக்கு தமிழ் மக்களின் ஆதரவு கிடைக்க வேண்டுமாயின் அவர் தமிழ் மக்களுக்கு கூறும் சில விடயங்களையாவது செய்ய வேண்டும். இவற்றினை மேற்கொள்ளாது செயற்படுவதனால் தமிழ் மக்களை ஏமாற்றுவதனையே தனது நோக்கமாக கொண்டுள்ளார் என்பதனையே நாங்கள் எண்ண முடியும் என நாடாளுமன்ற உறுப்பினா் இராசமாணிக்கம் சாணக்கியன் மேலும் தொிவித்துள்ளாா்.

சீர்குலைந்த ஐக்கியத்தை மீளக்கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் 34ஆவது தியாகிகள் தினம்!

தமிழர்களின் தேசிய சுயநிர்ணய உரிமையை நிலைநாட்டுவதற்கான ஆயுதப் போராட்ட காலகட்டத்தில் போராட்ட அமைப்புகள் பிளவுபட்டு நின்று எமது இலக்கை அடைய முடியாது என்பதை உணர்ந்துகொண்ட இடதுசாரி ஜனநாயகத்தின்மீது பற்றுக்கொண்ட ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் தோழர் க.பத்மநாபா அவைகள் மத்தியில் ஒரு ஐக்கியத்தை உருவாக்குவதற்காக கடும் முயற்சி எடுத்து அதில் வெற்றியும் அடைந்தார் என ஈழமக்கள் மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் 34வது தியாகிகள் தினத்தை முன்னிட்டு அவரால் இன்று (18.06.2024) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது. இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையை தோற்றுவித்தவர்கள் சிங்கள பௌத்த மேலாதிக்கவாதிகளாக இருப்பினும் அன்றைய பூகோள அரசியல் சூழலில் அதற்கு எண்ணெய் ஊற்றி இனவாதத் தீயை அணையாமல் பார்த்துக்கொண்டது ஏகாதிபத்திய சக்திகள் என்பதை சரியாக இனங்கண்டு ஏகாதிபத்திய சக்திகளுக்கு எதிரான புரட்சிகர அமைப்புகளுடன் கரம்கோர்த்து ஈழ மக்களின் நண்பர்களையும் எதிரிகளையும் சரியாக அடையாளம் காட்டினார். அதன் காரணமாகவே ஏகாதிபத்திய சக்திகளின் சூழ்ச்சிகளால் ஐக்கியம் சிதைக்கப்பட்டு, எது தமிழ் மக்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும் என்று தஞ்சம் அடைந்தோமோ அதே தமிழகத்தில் எமது செயலாளர் நாயகத்துடன் பதின்மூன்று தோழர்களும் படுகொலை செய்யப்பட்டனர். இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை தீர்க்கப்படவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டதன் விளைவே எமது செயலாளர் நாயகத்தின் மறைவிற்குக் காரணமாக அமைந்தது. ஆயுதப் போராட்ட எழுச்சியின் விளைவே இலங்கை-இந்திய ஒப்பந்தம் ஏற்படுவதற்கும் மாகாணசபை உருவாகுவதற்கும் காரணமாக அமைந்தது. மாகாணசபை முறைமையை எப்படியாவது சீர்குலைத்துவிடவேண்டும் என்பதில் சிங்கள பௌத்த பேரினவாதமும் ஏகாதிபத்திய சக்திகளும் கங்கனம் கட்டி செயற்பட்டன. இதன் பின்விளைவுகளை எமது சமூகம் நன்கு அனுபவித்துள்ளது. அவருடைய திசைவழியில் நின்று தொலைநோக்குச் சிந்தனையுடன் இன்று எமது உரிமைகளை சர்வதேச சமூகம் ஏற்றுக்கொண்டுள்ள தேர்தல் ஜனநாயகத்தின் ஊடாக எமது உரிமைகளை அடைவதற்கான சூழலை ஏற்படுத்த விரும்புகின்றோம். அந்த முயற்சியில் எமது தலைவர் தோழர் க.பிரேமச்சந்திரனின் தொலைநோக்குப் பார்வையில் உருவான ஜனாதிபதித் தேர்தலுக்கான தமிழ் பொது வேட்பாளர் என்னும் எண்ணகரு மக்கள் மத்தியில் பிரபல்யம் அடைந்துவரும் நிலையில் அதனைக் குழப்புவதற்கு தென்னிலங்கை அரசியல் சக்திகளுடன் எமது மக்கள் தலைவர்களும் கரம்கோர்த்திருப்பது வேதனையளிக்கிறது. இன்று அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், கனடா, பிரித்தானியா உள்ளிட்ட சர்வதேச சமூகம் இலங்கையின்மீது அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்கும் தென்பகுதி ஜனாதிபதி வேட்பாளர்கள் நாட்கணக்கில் வடக்கில் தங்கியிருந்து தமது பிரச்சாரத்தை மேற்கொள்வதற்கும் தமிழ் பொதுவேட்பாளர் எண்ணக்கருவும் ஒரு காரணம் என்பதை மக்கள் புரிந்துகொண்டுள்ள நிலையில் அதனை வலுப்படுத்துவதற்கு அனைத்து அரசியல் தலைமைகளும் இதயசுத்தியுடன் ஒன்றிணைய வேண்டும் என்று அறைகூவல் விடுக்கின்றோம். மக்களை வழிநடத்த வேண்டிய தமிழ் அரசியல் தலைமைகள் ஒரு பொதுவான வேலைத்திட்டத்தின்கீழ் ஒன்றிணைய வேண்டியதன் அவசியத்தை இன்றைய அரசியல் சூழல் ஏற்படுத்தியுள்ளது. முப்பத்து நான்காவது தியாகிகள் தினத்திலும் தமிழ் அரசியல் தலைமைகள் மத்தியிலும் பொதுஅமைப்புகள் மத்தியிலும் இதயசுத்தியுடனான ஐக்கியத்தைக் கட்டியெழுப்புவதில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி பற்றுறுதியுடன் ஈடுபட்டு வருகின்றது. எமது பாசமிகு தோழனும் நேசமிகு ஆசானுமான தோழர் பத்மநாவின் கூற்றுக்கு அமைய ஐக்கியம் என்னும் தளத்தில் நின்று இறுதி வெற்றிவரை உறுதியுடன் போராடுவோம் என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி 34ஆவது தியாகிகள் தினத்தில் உறுதியளிக்கிறது என்றார்.

இலட்சக்கணக்கான வீடுகளுக்கு மின்சாரம் துண்டிப்பு! எம்.பி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

10 லட்சம் வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் மரிக்கார் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இந்த நாட்டின் தனியார் துறை பணியாளர்கள் இரண்டு சந்தர்ப்பங்களில் வரி செலுத்துகின்றனர். அதேபோல் மின் கட்டணம் மற்றும் நீர் கட்டணம் அதிகரித்துள்ளமையினால் நாட்டு மக்கள் பல பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர். 10 லட்சம் வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலைக்கு மத்தியிலேயே இப்போது புதிதாக மேலும் வரி அறவிட தீர்மானித்துள்ளார்கள். அரச வருமானத்தை அதிகரிப்பதற்காகவே வாடகை வருமான வரி அறிவிடப்படுவதாக ஜனாதிபதி கூறுகின்றார். உள்நாட்டு தேசிய உற்பத்தி ஊடாக வருமானத்தினை அதிகரிப்பதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறு மக்கள் மீது வரி சுமைகளை அதிகரிப்பதன் மூலம் மேலும் நெருக்கடி நிலை ஏற்படும். ஜனாதிபதி இந்த நாட்டில் மேலும் ஆட்சியில் நீடிப்பதற்கு , ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என சிலர் கூறுகின்றனர். நாட்டில் வரிசுமையை அதிகரிப்பதற்காகவே அவர்கள் அதனைக் கோருகின்றார்களா என்ற கேள்வியும் தற்போது எழுகின்றது என தெரிவித்துள்ளார்.

26 ஆம் திகதி பாடசாலைகளுக்கு விடுமுறையா..? ஆசிரியர் சங்கம் எடுத்த அதிரடித் தீர்மானம்

எதிர்வரும் 26ஆம் திகதி சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. உறுதியளித்தபடி கோரிக்கைகளை வழங்க நடவடிக்கை எடுக்காவிட்டால் சாதாரண தர மீள் மதிப்பீட்டு நடவடிக்கைகளில் இருந்து விலக நேரிடும் என அதன் பொதுச் செயலாளர்  ஜோசப் ஸ்டார்லிங் தெரிவித்தார். எவ்வாறாயினும், ஆசிரியர்கள் தொழில்சார் நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும், தற்போதைய சந்ததியினர் அதனை பொருட்படுத்தாமல் தமது கல்வித் தேவைகளை பூர்த்தி செய்து வருவதாக அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த நேற்று (18) நடைபெற்ற வைபவமொன்றில் தெரிவித்தார். இதேவேளை, சம்பளப் பிரச்சினை தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடல் சாதகமாக அமைந்துள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழு தெரிவித்துள்ளது. சம்பளப் பிரச்சினைக்கு உரிய தீர்வை வழங்குவதற்கு அதிகாரிகளுக்கு ஒரு வார கால அவகாசம் வழங்கப்படும் என அதன் இணைத் தலைவர்  தம்மிக்க பிரியந்த தெரிவித்தார். இதேவேளை, இன்று முதல் பல்கலைக்கழகத்திற்கு  சத்தியாக்கிரக போராட்டம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாகவும், தீர்வு கிடைக்காவிடின் சத்தியாக்கிரக போராட்டத்தை கொழும்புக்கு கொண்டுவரவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நீதி அமைச்சர் விஜயதாசவை பதவி விலகுமாறு ஜனாதிபதி அழுத்தம்..? வெளியான தகவல்

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவை  அரசாங்கத்தில் இருந்து விலகுமாறு ஜனாதிபதி அழுத்தம் கொடுத்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். கட்சியின் அரசியல் உயர் பீட கூட்டத்தின் போது அமைச்சர் விஜயதாச ராஜபகக்ச இதனை வெளிப்படுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் அமைச்சர் விஜயதாச ராஜபக்ச, ​​ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்த கருத்து உண்மைக்குப் புறம்பானது என தெரிவித்துள்ளார். தம்மை பதவி விலகுமாறு ஜனாதிபதி அறிவிப்பு விடுக்கவில்லை எனவும் நீதியமைச்சர்  தெரிவித்தார்.

இலங்கையில் அறிமுகமாகவுள்ள புதிய வரிகள்: சர்வதேச நாணய நிதியம் தகவல்

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) அண்மைய அறிக்கைக்கு அமைய, அரசாங்கத்தின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில் அடுத்த மாதத்திற்குள் தொடர்ச்சியான வரி மாற்றங்கள் இலங்கையில் நடைமுறைபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை தொடர்பான இரண்டாவது மதிப்பாய்வை அடுத்து சர்வதேச நாணய நிதியம் பல முக்கிய வரி சீர்திருத்தங்களை முன்வைத்துள்ளது. இதற்கமைய, டிஜிட்டல் சேவையுடன் தொடர்புபட்ட துறைகளிற்கும் பெறுமதி சேர் வரியை (VAT) அறவிடுதலும், ஏற்றுமதி சேவைகளிற்கு தற்போது விதிக்கப்படும் வருமான வரியில் விலக்களிக்கப்படுவதும் முக்கிய திருத்தங்களாக கூறப்படுகின்றது. மேலும், விற்பனைச் செயற்பாடுகளுக்கு அறவிடப்படும் சமூக பாதுகாப்பு வரிக்கு பதிலாக பெறுமதி சேர் வரியும்அறவிடப்படக் கூடும். இதேவேளை மதுபானம், புகையிலை மற்றும் விளையாட்டு நிறுவனங்களுக்கு அறவிடப்படும் வர்த்தக வருமான வரி 40 சதவீதத்தில் இருந்து 45 சதவீதமாக அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கைக்கு அமைய, இவ்வாறான பல புதிய வரிகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் நடைமுறையாகும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

நாடளாவிய ரீதியில் மதுபான சாலைகளுக்கு பூட்டு

பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானங்களின் விற்பனையும் தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்ட புனித வலயங்களில் இரண்டு முதல் ஏழு நாட்கள் வரை மதுபானம் விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறித்த தகவல்களை கலால் ஆணையாளர் நாயகம் (Excise Department of Sri Lanka) எம். ஜே. குணசிறி தெரிவித்துள்ளார். அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், தம்புள்ளை (Dambulla) மற்றும் திஸ்ஸமஹாராம நகர சபைக்குட்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட பொசன் பண்டிகை வலயங்களில் 21 வெள்ளிக்கிழமை மற்றும் 22 சனிக்கிழமை ஆகிய இரண்டு நாட்களுக்கு மதுபான சாலைகள் மூடப்படும் என எம். ஜே. குணசிறி குறிப்பிட்டுள்ளார். அத்துடன், மத்திய நுவரகம் பலாத்த , கிழக்கு நுவரகம் பலாத்த மற்றும் மிஹிந்தலை ஆகிய பிரதேச செயலகங்கள் உட்பட அனுராதபுரம் புனித நகரை உள்ளடக்கிய பகுதிகளில் நேற்று (18.06.2024) முதல் 24 ஆம் திகதி வரை அனுஷ்டிக்கப்படும் பொசன் வாரத்தில் ஏழு நாட்களுக்கும் மதுபான விற்பனை தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, கலால் சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கலால் ஆணையாளர் நாயகம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையில் இரட்டை குடியுரிமை : வெளியான தகவல்

இலங்கையில் (Sri Lanka) 2015 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை 58,304 பேருக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் (Tiran Alles)  தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க (Kayanta Karunatilaka)  நேற்று (18) நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “2015 முதல் 2020 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இரட்டை குடியுரிமைக்காக 63,917 பேர் விண்ணப்பித்துள்ளனர். இலங்கையில் 2015 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை இரட்டைக் குடியுரிமைக்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கை குறித்து ஆராய்ந்தோம். 2015ஆம் ஆண்டில் 17,126 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன் 2016 ஆம் ஆண்டில் 14,802 விண்ணப்பங்கள் வந்துள்ளன. 2017ஆம் ஆண்டு 9549 பேரும் 2018 ஆம் ஆண்டில் 9,750 பேரும் விண்ணப்பித்துள்ளதோடு 2019ஆம் ஆண்டு 8,702 பேரும் மற்றும் 2020 ஆம் ஆண்டில் 3,988 பேரும் விண்ணப்பித்துள்ளனர். 2015 முதல் 2020 ஆம் ஆண்டு வரையிலான மொத்த விண்ணப்பங்களின் எண்ணிக்கை 63,917 ஆகும் அத்தோடு 2015 ஆம் ஆண்டு 16,184 விண்ணப்பதாரர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு 13,933 பேருக்கு வழங்கப்பட்டுள்ளதுடன் 2017ஆம் ஆண்டு 8,881 பேருக்கு வழங்கப்பட்டது. மேலும், 2018 ஆம் ஆண்டு 8,747 வழங்கப்பட்டுள்ளது அத்தோடு 2019 ஆம் ஆண்டு 7,405 பேருக்கு வழங்கப்பட்டுள்ளதுடன் 2020 ஆம் ஆண்டு 3,154 பேருக்கு வழங்கப்பட்டது. அதன்படி, 2015 முதல் 2020 ஆம் ஆண்டு வரை 58,304 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.

களுத்துறை கடற்கரையில் சிக்கிய மர்ம பொருள் – வெளியேற்றப்பட்ட மக்கள்!

களுத்துறை – கட்டுகுருந்தவில் உள்ள பிரபல சுற்றுலா ஹோட்டலுக்கு பின்புறம் உள்ள கடற்கரையில் மர்ம பொருள் ஒன்று மிதந்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மர்ம பொருள் ஒரு சாதனமாக உள்ளதெனவும், இது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர். களுத்துறை கட்டுகுருந்த விஷேட அதிரடிப்படை அதிகாரிகளால் அங்கு நின்றவர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற்றியதாகவும் தெரியவருகின்றது. பின்னர் பரிசோதனைக்காக சாதனத்தை பாதுகாப்பாக எடுத்து செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதிலிருந்து ஓரளவு வெளிச்சம் வெளிப்பட்டு வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.