Search
Close this search box.

கஞ்சா பயிரிட்ட முன்னாள் இராணுவ வீரர் – கைது

மகுலுகஸ்வெவ பகுதியில் கஞ்சா தோட்டம் ஒன்றை நடத்தி வந்த முன்னாள் இராணுவ வீரர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். தம்புள்ளை பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேலும் அதே பகுதியை சேர்ந்த நபர் ஒருவரும் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது வீட்டில் நடத்திய சோதனையில் ராணுவ சீருடைகள் பல கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர் மகுலுகஸ்வெவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.

பாலினத்தை மாற்ற விரும்பும் எம்.பிக்கள்

பாலின சமத்துவ சட்டமூலம் பாலின சிகிச்சை மாற்று வியாபாரத்தை  ஊக்குவிப்பதால் இந்த சட்டமூலத்துக்கு ஆதரவாக  வாக்களிக்கும் ஆண் எம்.பி.க்கள்  பெண்களாகவும்,பெண் எம்.பி.க்கள் ஆண்களாகவும் மாற்றமடைவதற்கு  விரும்புகின்றார்கள் என்றே   கருதப்படுமென தேசிய சுதந்திர முன்னணியின்  தலைவரும்,  சுயாதீன எதிரணி எம்.பி.யுமான பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (19)  பாலின சமத்துவ சட்டமூலம் தொடர்பில் சபையில் ஏற்பட்ட வாதப் பிரதிவாதத்தின் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில், பாலின சமத்துவம் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கிய வியாக்கியானத்தை எதிர்க்க வேண்டிய அவசியம் கிடையாது.அரசியலமைப்புக்கு அமையவே நீதிமன்றம் தொழில்நுட்ப ரீதியில் ஆராய்ந்து தீர்ப்பளித்துள்ளது. பெண் சமத்துவம் என்று குறிப்பிட்டுக் கொண்டு  தயாரிக்கப்பட்டுள்ள சட்ட ஏற்பாடுகளுக்குள் மாற்று பாலினத்தவர்களை உள்ளடக்குவதையே நாங்கள் எதிர்க்கிறோம் என்றார்.

வவுனியா பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் சத்தியாக்கிரக போராட்டம்

வவுனியா பல்கலைக்கழகத்தின் கல்விசாரா ஊழியர்கள் இன்று முதல் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அனைத்து பல்கலைக்கழகத்தின் கல்வி சாரா ஊழியர்கள் தமது சம்பள உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 48 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டதோடு அரச தரப்போடு பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டு வந்திருந்தனர். எனினும் அவர்களுடைய பேச்சுவார்த்தைகள் வெற்றி அளிக்காத நிலையில் 49 ஆவது நாளான இன்றிலிருந்து அவர்கள் வவுனியா பல்கலைக்கழக வாயிலில் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்கலைக்கழக வாயிலில் கொட்டகை அமைத்து தமது கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை காட்சிப்படுத்தியவாறு அவர்கள் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அரசியலில் அதிரடி மாற்றம் – முற்றாக வெளியேறும் மகிந்த

அரசியலில் இருந்து விடைபெறுவதற்கு பொதுஜன பெரமுனவின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதென மகிந்தவுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதற்கமைய, அவர் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடாமல் இருக்க தீர்மானித்துள்ளதாக தெரியவந்துள்ளது. உடல்நிலை மற்றும் அரசியலில் ஈடுபடுவதற்காக நாடு முழுவதும் பயணம் செய்வதால் ஏற்படும் அசௌகரியங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த முடிவை எடுத்துள்ளார். எவ்வாறாயினும், எதிர்வரும் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் வெற்றிக்காக அவர் தொடர்ந்து பாடுபடுவார் என அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

வவுனியாவில் இடம்பெற்ற 34வது தியாகிகள் தினம்.

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் 34 வது தியாகிகள் தினம் இன்று வவுனியாவில் உணர்வு பூர்வமாக நினைவு கூரப்பட்டது. வவுனியா நகர மத்தியில் அமைந்துள்ள ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் பத்மநாபா அவர்களின் திருவுருவ சிலைக்கு ஈழ மக்கள் புரசிகர விடுதலை முன்னணியின் செயலாளரும் முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் அவர்களால் மாலை அணிவிக்கப்பட்டு நிகழ்வு ஆரம்பமானது. அதனை தொடர்ந்து ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் வவுனியா மாவட்ட அலுவலகத்தில் மலரஞ்சலி நிகழ்வும் நினைவு பெருரையும் இடம் பெற்றது. இன் நிகழ்வில் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர்களான இந்திரராசா, தியாகராசா மற்றும் வவுனியா நகர சபையின் முன்னாள் தலைவர் கௌதமன் மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சியின் அரசியல் உயர்பீட உறுப்பினர்கள் மத்தியகுழு உறுப்பினர்கள் , மாவட்ட கட்சி உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

முல்லைத்தீவு வான் பரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்திய அதிசய உருவம்.

முல்லைத்தீவு வான் பரப்பில் அதிசய உருவம் இரண்டு நேற்றையதினம் (18.06.2024) தோன்றியிருந்ததையடுத்து மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்பொழுது நிலவி வரும் சீரற்ற காலநிலையினையடுத்து முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்றையதினம் இரவு வேளை வானில் தொடர்ச்சியாக நீல நிறமாக ஒரு உருவம் ஔிர்ந்து கொண்டிருக்க அதனை சுற்றி வேறு நிற ஔி உருவம் விட்டு விட்டு ஔிர்ந்து கொண்டிருந்தது. இதனை அவதானிக்த மக்கள். இயற்கை மாற்றம் ஏற்படுமா என்ற நிலையில் அச்சமடைந்துள்ளனர். இதேவேளை வவுனியாவில் நேற்றிரவு 2.3 ரிக்டர் அளவில் சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வுமையம் மற்றும் சுரங்க பணியகம் உறுதிப்படுத்தியிருந்தது.

1400 கோடி செலவில் இந்தியாவில் குளிர்பான நிறுவனம் அமைக்கும் முரளி

இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முரளீதரன் கர்நாடக மாநிலம் சாமராஜநகரா மாவட்டத்தில் உள்ள படன குப்பேயில் குளிர்பானங்கள் மற்றும் தின்பண்டங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் 1,400 கோடி ரூபா முதலீடு செய்ய உள்ளதாக கர்நாடக தொழில்துறை அமைச்சர் பாட்டீல் தெரிவித்துள்ளார். இந்தத் திட்டம் பற்றி அவருடன் முரளீதரன் கலந்துரையாடியுள்ளதாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். குறித்த பதிவில் இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முரளீதரன் குளிர்பானங்கள் மற்றும் தின்பண்டங்கள் தயாரிக்கும் நிறுவனம் அமைக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக ஆரம்பத்தில்; 230 கோடி ரூபாய் முதலீட்டில் திட்டமிடப்பட்ட இந்த திட்டம், தற்போது மொத்தம் 1,000 கோடியாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் 1,400 கோடியாக உயர்த்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்திற்காக ஏற்கனவே 46 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். குறித்த நிறுவனத்துக்கான உற்பத்தி நடவடிக்கைகள் அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், முரளீதரன் எதிர்வரும் காலங்களில் தார் வாட்டில் மற்றொரு பிரிவையும் தொடங்க திட்டமிட்டுள்ளார் என குறித்த பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் 41 விமான நிலையங்களுக்கு வெடி குண்டு அச்சுறுத்தல்: அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

மும்பை – சென்னை விமானத்திற்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து, இண்டிகோ விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட 18 நாட்களுக்குப் பின்னர், தற்போது மீண்டும் இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாறு வெடிகுண்டு அச்சுறுத்தல் வந்ததால், நேற்று இரவு 10:24 மணிக்கு விமானம் மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. இதன்போது விமானத்தில் இருந்த 196 பயணிகளும் 7 பணியாளர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். இதனையடுத்து விமானம் தனிமைப்படுத்தப்பட்டு, சோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. இதேவேளை நேற்று மாத்திரம் இந்தியா முழுவதும் உள்ள 41 விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல், மின்னஞ்சல்கள் கிடைத்துள்ளன. எனினும் அனைத்து அச்சுறுத்தல்கள் மின்னஞ்சல்களும் போலியானவை என நிரூபிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. எல்லா விமான நிலையங்களுக்கும் வந்த மின்னஞ்சல்கள் கிட்டத்தட்ட ஒரே செய்தியைக் கொண்டிருந்தன. அந்த செய்தியில், “ஹலோ, விமான நிலையத்தில் வெடிபொருட்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளன. விரைவில் வெடிகுண்டுகள் வெடிக்கும். நீங்கள் அனைவரும் இறந்துவிடுவீர்கள்.” என்று குறிப்பிடப்பட்டிருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. KNR” என்ற இணையக் குழு இந்த அச்சுறுத்தல் மின்னஞ்சல்களுக்குப் பின்னால் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இதற்கிடையில் கடந்த இரண்டு நாட்களில் மும்பையில் உள்ள 60 மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்கள் கிடைத்துள்ளன. இதில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளும் அடங்குகின்றன. இதன்படி இந்திய பொலிஸாரின் கூற்றுப்படி, மின்னஞ்சல்கள்; கிடைத்தவுடன், மருத்துவமனைகள் உடனடியாக உள்ளூர் பாதுகாப்புதுறைக்கு தகவல் வழங்கி, முழுமையான சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இலங்கையில் இரண்டு இலட்சத்தினால் அதிகரித்துள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை..!

கடந்த 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது வாக்காளர் எண்ணிக்கை இரண்டு இலட்சத்தினால் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை 2024 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பின் அடிப்படையில் நடாத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இதன்படி, வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் ஜூலை மாதம் 15ஆம் திகதி இறுதி பட்டியல் கையொப்பமிடப்பட்டு வெளியிடப்பட உள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு வாக்காளர் எண்ணிக்கையுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டில் இரண்டு இலட்சம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அடுத்த மாதம் 17ஆம் திகதியின் பின்னர் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தீர்மானிப்பதற்கான அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவிற்கு உண்டு என தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி ஜுலை மாத இறுதியில் ஜனாதிபதி தேர்தல் குறித்த வர்த்தமானி அறிவித்தல் அநேகமாக வெளியிடப்படும் என தெற்கு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் மேலும் 5 சுற்றுலா வலயங்களை ஆரம்பிப்பதற்குத் திட்டம்!

நாட்டில் மேலும் 5 சுற்றுலா வலயங்களை ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். சுற்றுலாத்துறையை கட்டியெழுப்புவதற்கு பல சவால்களை எதிர்கொள்ள நேரிட்டது. மின்சாரம் எரிபொருள் எரிவாயு இல்லாத ஒரு நாட்டில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது வேடிக்கையான விடயமாகும். அவ்வாறான ஒரு சூழ்நிலையில் இந்த நாட்டின் ஜனாதிபதியாக பொறுப்பேற்ற ரணில் விக்ரமசிங்க நெருக்கடிக்கு தீர்வு காணும் முயற்சிகளை மேற்கொண்டார். தற்போது நாட்டின் சுற்றுலாத்துறை வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. நாட்டிற்கு வருகைதரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. சுற்றுலாத்துறையின் அபிவிருத்தியானது பொருளாதார வளர்ச்சிக்கு பாரிய ஒத்துழைப்பு வழங்கும் வகையில் உள்ளது. நாட்டில் மேலும் 5 சுற்றுலா வலயங்களை ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதனூடாக சுற்றுலாத்துறை வருமானத்தை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டங்களை நடைமுறப்படுத்துவதற்கும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது என தெரிவித்துள்ளார்.