Search
Close this search box.

பெண்களை ஏமாற்றிய முன்னாள் படையதிகாரிக்கு நேர்ந்தகதி

மணமகள் தேவை என பத்திரிகைகளில் விளம்பரம் செய்து பல பெண்களை ஏமாற்றிய முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதேவேளை, இணையம் ஊடாக பெண்கள் மோசடிகளில் சிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் அண்மையில் சுமார் 150 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கணனி குற்ற விசாரணைப் பிரிவு (Criminal Investigation Department) தெரிவித்துள்ளது. பத்திரிகையில் விளம்பரம் செய்து வாடஸ்அப் மூலம் புகைப்படங்கள் மற்றும் தகவல்களை பரிமாறிக் கொண்டு லட்சக் கணக்கான ரூபா பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. தனது சாரதியின் பிள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகக் கூறி ஒரு பெண்ணிடம் இரண்டு லட்சம் ரூபா பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், குறித்த ஓய்வுபெற்ற முன்னாள் இராணுவ மேஜரின் விளம்பரங்களில் சிக்கி ஏமாந்த பெண்களின் எண்ணிக்கை பத்து என இதுவரையில் நடைபெற்ற விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

நாட்டில் சிறுவர்களிடையே பரவும் நோய்: பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

சிறுவர்களிடையே பரவும் வைரஸ் காய்ச்சல் தொடர்பில் சுகாதார தரப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நாட்டில் தற்போது நிலவும் காலநிலை மாற்றம் காரணமாக சளி அதிகரித்து இருமல், சளி, வைரஸ் காய்ச்சல் மற்றும் ஏனைய தொற்று காய்ச்சல்கள் அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதனால் நாளாந்தம் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் வைத்தியசாலைகளின் அறிக்கைகள் தெரிவிக்கின்றது. பெரியவர்கள் புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ள வீடுகளில் குழந்தைகளுக்கு ஆஸ்துமா மற்றும் சுவாசக் கோளாறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா எச்சரித்துள்ளார். சுவாச நோய்களுக்கான சிகிச்சையாக ‘இன்ஹேலர்’களை பயன்படுத்த வைத்தியர்கள் பரிந்துரைத்தாலும், சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் அதற்கு அடிமையாகிவிடுமோ என அஞ்சுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் அது அவ்வாறு இல்லை என்றும், பெரியவர்கள் புகைப்பிடிக்கின்றமையே காரணம் என்றும் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா கூறியுள்ளார்.

களனி கங்கையில் அடையாளம் தெரியாத ஆணின் சடலம்!

பேலியகொட பிரதேசத்தில் உள்ள தனியார் நிறுவனமொன்றின் பின்புறம் களனி கங்கையில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நேற்று (17) மாலை குறித்த சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும், உயிரிழந்தவர் 50 முதல் 60 வயதுக்கு இடைப்பட்டவர் எனவும் 05 அடி 06 அங்குலம் உயரம் கொண்டவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பேலியகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையை உள்ளடக்கி உலக வங்கி மேற்கொண்டுள்ள புதிய நியமனம்

உலக வங்கி, டேவிட் சிஸ்லன் (David Sislen) என்பவரை நேபாளம், மாலைதீவு மற்றும் இலங்கைக்கான இயக்குநராக நியமித்துள்ளது. இதன்படி, காத்மண்டுவில் உள்ள உலக வங்கியின் (World Bank) துணை பிராந்திய அலுவலகத்தில் இருந்து மாலைதீவு மற்றும் இலங்கைக்கான இயக்குநராக அவர் பொறுப்பேற்கவுள்ளார் இந்த நியமனத்திற்கு முன், சிஸ்லென் உலக வங்கியில் ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியாவிற்கான நகர்ப்புற மற்றும் பேரிடர் இடர் மேலாண்மைக்கான பயிற்சி மேலாளராக பணியாற்றினார். ஜோன்ஸ் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் மற்றும் மக்கலெஸ்டர் கல்லூரியில் (அமெரிக்கா) புவியியலில் முதுகலைப் பட்டம் பெற்ற அவர் ஐரோப்பா, இலத்தீன் அமெரிக்கா, ஆபிரிக்கா, கிழக்கு ஆசியா மற்றும் பசுபிக் முழுவதும் உள்கட்டமைப்பு, நகர்ப்புற மேம்பாடு மற்றும் பரவலாக்கப்பட்ட சேவை வழங்குவதில் விரிவான அனுபவத்தைப் பெற்றுள்ளார்.

நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ள ஜனாதிபதி ரணில்..!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளார். அதன்படி கடந்த இரண்டு வருடங்களில்  இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் மற்றும் நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் தெரிவிக்கவுள்ளார். சர்வதேச நாணய நிதியத்தினால்  இலங்கைக்கு வழங்கப்பட்ட கடன் வசதியின் மூன்றாவது தவணைக்கான அங்கீகாரம் தொடர்பிலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கருத்து வெளியிட உள்ளார். இதேவேளை ஆளும் கட்சி உறுப்பினர்களின் கூட்டம் ஜனாதிபதி தலைமையில் இன்று காலை நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெறுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இந்த வாரம் காலை 09.30 மணிக்கு நாடாளுமன்றம் கூடவுள்ளதுடன், இன்று வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள சுற்றுலா சட்டத்தின் கீழும், அரச காணி கட்டளைச் சட்டத்தின் கீழும், விளையாட்டு ஊக்கமருந்து தடைச் சட்டத்தின் கீழும் பல விதிமுறைகள் விவாதிக்கப்பட உள்ளன. அத்துடன் சட்டமா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய் ராஜரத்தினத்தின் சேவை நீடிப்பு தொடர்பில் இன்று இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சஞ்சய் ராஜரத்தினத்திற்கு 06 மாத கால சேவை நீடிப்பு வழங்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சிபாரிசு செய்திருந்தமையினால் அரசியலமைப்பு சபையின் அங்கீகாரம் இதற்கு முன்னர் இரண்டு தடவைகள் ஒத்திவைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது எவ்வாறாயினும், இன்று இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.