சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் கடற்படை மருத்துவமனைக் கப்பலான “அமைதிப் பேழை” (“Peace Ark”)இலங்கை உட்பட பல நாடுகளுக்குச் செல்வதற்காக சீனாவின் இராணுவத் துறைமுகமான சுசானில் இருந்து நேற்று (16) புறப்பட்டுள்ளது.
இந்த கப்பல் தமது பயணத்தின் போது, சீசெல்ஸ், தான்சானியா, மடகாஸ்கர், மொசாம்பிக், தென்னாப்பிரிக்கா, அங்கோலா, கொங்கோ குடியரசு, காபோன், கெமரூன், பெனின், மொரிட்டானியா, ஜிபூட்டி மற்றும் இலங்கை ஆகிய 13 நாடுகளுக்கு சென்று உள்ளூர் மக்களுக்கு மருத்துவ சேவைகளை வழங்கவுள்ளது.
அத்துடன் பிரான்ஸ் மற்றும் கிரிஸுக்கு துறைமுக அழைப்பு பயணங்களையும் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் இந்த கப்பல் எப்போது இலங்கைக்கு வரும் என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை.
இது 2008 ஆம் ஆண்டு இந்த கப்பல் சேவை ஆரம்பிக்கப்பட்டது “அமைதிப் பேழை” கப்பல், உள்ளூர்வாசிகள், சீன நிறுவனங்களில் உள்ளவர்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள சீனர்கள் ஆகியோருக்கு பொதுவான மற்றும் பரவலான நோய்களுக்கான இலவச நோயறிதல் மற்றும் சிகிச்சையை வழங்குகிறது.
இந்த கடல்சார் மருத்துவமனையில் 100 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் உள்ளனர். இதில் 17 மருத்துவ பிரிவுகளும் 5 துணை நோயறிதல் பிரிவுகளும் அமைந்துள்ளன.
“அமைதி பேழை” என்பது சீனாவினால், உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட மருத்துவமனைக் கப்பல் ஆகும். இது 45 நாடுகள் மற்றும் பிராந்தியங்களுக்குச் சென்று, 290,000 பேருக்கு மேல் மருத்துவ சேவைகளை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.