Search
Close this search box.

சுகாதார சேவை உத்தியோகத்தர்களுக்கான ஆட்சேர்ப்பு: நிதியமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களை சேர்ப்பதற்கான நேர்முகத் தேர்வில் சித்தியடைந்து இதுவரை ஆட்சேர்ப்பு செய்யப்படாத விண்ணப்பதாரர்கள் தொடர்பில் சுகாதார அமைச்சிடம் இருந்து விசேட அறிக்கை கோரப்படும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது. ஆட்சேர்ப்பு செய்யப்படாத விண்ணப்பதாரர்கள் தொடர்பான விசேட அறிக்கை எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி (01ஆம் திகதி) அழைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படாத இந்த முந்நூற்று பதினாறு பெண் விண்ணப்பதாரர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அமைச்சரவைப் பத்திரம் பதினைந்து நாட்களுக்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட்டதாகவும், அது நிராகரிக்கப்படவில்லை எனவும், அதனை ஆராய்வதற்காக சமர்ப்பிக்கப்பட்ட கண்காணிப்புப் பத்திரம் மாத்திரமே நிராகரிக்கப்பட்டதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முகத் தேர்வில் சித்தியடைந்த இரண்டாயிரத்து எண்ணூற்று முப்பத்தாறு (2836) விண்ணப்பதாரர்களில் 2500 விண்ணப்பதாரர்கள் இணைத்துக் கொள்ளப்பட்ட போதிலும், முந்நூற்று ஏழு தகுதியான விண்ணப்பதாரர்கள் இதுவரை சுகாதார அமைச்சினால் ஆட்சேர்ப்பு செய்யப்படவில்லை. நான்கு வருடங்களுக்கு முன்னர் குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வதாக வர்த்தமானி அறிவித்தல் வெளியானதோடு நேர்முகத்தேர்வில் 2836 பேர் தெரிவு செய்யப்பட்டனர். அதன் பின்னர் இரண்டு கட்டங்களாக 2500மாணவிகள் உள்வாங்கப்பட்டுள்ளதுடன், எஞ்சிய 300 மாணவர்களுக்கான தகுதியுடைய மாணவர் சேர்க்கையை சுகாதார அமைச்சு இடைநிறுத்தியமை குறிப்பிடத்தக்கது.

தடை விதிக்கப்பட்ட காலப்பகுதியில் 44,430 வாகனங்கள் சந்தைக்கு இறக்குமதி! அமைச்சர் தகவல்.

தடை விதிக்கப்பட்ட காலப்பகுதியில் 44,430 வாகனங்கள் சந்தைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அதன்படி, 38,144 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 6,286 கார்கள் சந்தைகளில் இருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இறக்குமதி தடைகளை நீக்குவது தொடர்பாக வாகன அசெம்பிளர்களுக்கும் (vehicle assemblers)நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவிற்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இது தெரியவந்துள்ளது. அத்துடன், வாகன இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும், உதிரிபாகங்களை அசெம்பிள் செய்து விற்பனை செய்வது தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கலந்துரையாடலில் பல உள்ளூர் வாகன உற்பத்தி நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டதுடன் வாகன இறக்குமதிக்கான அனுமதி வழங்குவது தொடர்பில் ஆழமான கலந்துரையாடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக களமிறங்கும் ரணில்..! வெளியானது அறிவிப்பு.

ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க  சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுவார் என  ஜனாதிபதி ஆலோசகர் பேராசிரியர் ஆஷு மாரசிங்க  தெரிவித்துள்ளார். ரணிலின் புதிய அரசியல் அலுவலகத்தை கொழும்பில்  நேற்று திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமது அரசியல் நடவடிக்கைகளுக்கான அலுவலகத்தை திறந்து வைத்துள்ளார். இதேவேளை,  ஜனாதிபதி தேர்தல் இவ்வருடத்தில் குறிப்பிட்ட காலப்பகுதியில் நடாத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் கடவுச்சீட்டு விநியோகத்தில் கடுமையாகும் கட்டுப்பாடு! மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

சில தசாப்தங்களுக்கு முன்னர் வழங்கப்பட்ட தேசிய அடையாள அட்டைகளில் தற்போது அந்த நபரின் அடையாளத்தை உறுதிப்படுத்த முடியாமையினால் கடவுச்சீட்டு வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக, குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் தீர்மானித்துள்ளார். அதற்கமைய, தேசிய அடையாள அட்டைகளில் தெளிவற்ற புகைப்படங்கள், எண்கள் மற்றும் எழுத்துக்களை வைத்திருக்கும் நபர்கள் கடவுச்சீட்டிற்கு விண்ணப்பிப்பதற்கு முன்னர் தேசிய அடையாள அட்டையை தயார் செய்ய வேண்டும். கடவுச்சீட்டிற்கு விண்ணப்பிக்கும் போது தெளிவான அடையாளத்துடன் கூடிய தேசிய அடையாள அட்டையை முன்வைக்குமாறு குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார். மேலும் கடவுச்சீட்டு வழங்குவதற்கு விண்ணப்பதாரரின் விண்ணப்ப படிவம், ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகும் வண்ண புகைப்படம், தேசிய அடையாள அட்டை, பிறப்பு சான்றிதழ் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். பல விண்ணப்பதாரர்கள் சமர்ப்பித்த தேசிய அடையாள அட்டைக்கமைய, விண்ணப்பதாரரை உண்மையான விண்ணப்பதாரராக அங்கீகரிக்க முடியாததன் காரணத்தால் கடவுச்சீட்டை வெளியிட முடியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களின் தேசிய அடையாள அட்டைகள், புகைப்படங்கள், பிறப்புச் சான்றிதழ்கள் போன்றன குடிவரவு அமைப்பில் ஸ்கேன் செய்து புதுப்பிக்கப்படும் என்றும் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.  

வெள்ளத்தில் மூழ்கி ஒரே நாளில் உயிரிழந்த உற்ற நண்பர்கள்..! இலங்கையில் சோகம்

கடும் மழையுடனான வானிலையால் மாத்தறையில் ஏற்பட்ட வெள்ளத்தில் மூழ்கி உற்ற நண்பர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். 20 வயதுடைய தரிந்து சம்பத் மற்றும் 17 வயதுடைய நவிந்து ஆகிய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். கடந்த இரண்டாம் திகதி, தான நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்கமைய, அங்கு வசிப்பவர்களுக்கு உணவு கொண்டு செல்லும் போது, ​​மாலை 3 மணியளவில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் இருவரும் சிக்கி உயிரிழந்துள்ளனர். குறித்த இருவரும் சிறுவயதில் இருந்தே உற்ற நண்பர்களாக இருந்தவர்கள் என தெரியவந்துள்ளது. உயிரிழந்த இருவரது உடல்களும் நேற்றைய தினம் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இரண்டு நாட்களுக்கு காய்ச்சல் நீடித்தால் உடனடியாக வைத்தியசாலை செல்லவும்..! அவசர எச்சரிக்கை

இரண்டு நாட்களுக்கு காய்ச்சல் நீடித்தால் உடனடியாக அருகில் உள்ள வைத்தியரிடம் உரிய ஆலோசனைகளை பெறுமாறு தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் சமூக வைத்திய அதிகாரி, விசேட வைத்தியர் அனோஜா தீரசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட விசேட வைத்தியர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 2024ஆம் ஆண்டு இலங்கையில் 25 417 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். குறிப்பாக கொழும்பு, கம்பஹா, களுத்துறை, இரத்தினபுரி, கண்டி, கேகாலை மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களில் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. டெங்குவைத் தடுப்பதற்கான மிக அடிப்படையான வழி, நுளம்பு பரவலைத் தடுப்பதாகும். அதற்கு வீடுகள், பாடசாலைகள், பணியிடங்களில் நுளம்புகள் உருவாகும் இடங்களை அகற்றுவது பொது மக்களின் பொறுப்பாகும். மேலும், காய்ச்சல் ஏற்பட்டால், இரண்டு நாட்களுக்குள் அருகில் உள்ள வைத்தியரை அணுகி, உரிய ஆலோசனை பெற வேண்டும். காய்ச்சலைக் கட்டுப்படுத்த ‘பரசிட்டமோல்’ மாத்திரையை மாத்திரம் உட்கொள்ள வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த காலகட்டத்தில் அதிக காய்ச்சல், வயிற்று வலி, வாந்தி, கடுமையான தலைவலி, வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் தென்பட்டால் அதை டெங்கு நோயாகக் கருதுவது மிகவும் அவசியம். இந்த அறிகுறிகள் இருந்தால், முதலில் உடல் ரீதியாக ஓய்வெடுப்பது அவசியம். அறிகுறிகள் இரண்டு நாட்களுக்கு மேல் நீடித்தால், முழுமையான இரத்த பரிசோதனை (FBC) செய்து, அரச வைத்தியசாலையில் வைத்திய ஆலோசனை பெற வேண்டும். இதற்கிடையில், நீர் மற்றும் கஞ்சி வகைகள், ஜீவனி, இளநீர் மற்றும் எலுமிச்சை போன்ற பானங்களைப் பருக வேண்டும். சிவப்பு நிறத்தில் அல்லது செயற்கை இரசாயனங்கள் கொண்ட பானங்களைத் தவிர்ப்பதும் முக்கியம். என்றும் அவர்  தெரிவித்துள்ளார்.

சூப்பர் ஓவரில் பாகிஸ்தானை பந்தாடிய அமெரிக்கா!

ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 11 ஆவது போட்டி நேற்று (06) இரவு நடைபெற்றது. பாகிஸ்தான் மற்றும் அமெரிக்க அணிகள் மோதிய இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற அமெரிக்க அணி முதலில் பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 159 ஓட்டங்களை பெற்றது. பாகிஸ்தான் அணி தலைவர் பாபர் அசாம் 44 ஓட்டங்களையும், ஷதாப் கான் 40 ஓட்டங்களையும் சேர்த்தனர். கடைசியில் களமிறங்கிய ஷாஹீன் ஷா அப்ரிடி 23 ஓட்டங்களையும் விளாசினார். இதை அடுத்து 160 என்ற ஓட்ட இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய அமெரிக்க அணி தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அமெரிக்க அணியின் தொடக்க வீரரும், அணி தலைவருமான மொனாக் படேல் 38 பந்துகளில் அரைசதம் கடந்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த வீரர்கள் தங்கள் பங்கிற்கு ஓட்டங்களை சேர்க்க அந்த அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 159 ஓட்டங்களை சேர்த்தது. இதன் காரணமாக போட்டி சமநிலையில் முடிந்தது. இதனால் சூப்பர் ஓவர் கொண்டுவரப்பட்டது. சூப்பர் ஓவரில் முதலில் துடுப்பாடிய அமெரிக்க 1 விக்கெட் இழப்புக்கு 18 ஓட்டங்களை பெற்றது. 19 ஓட்டங்களை நோக்கி துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி சூப்பர் ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 13 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. இதன் காரணமாக போட்டியில் அமெரிக்க அணி 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நடப்பு ரி20 உலகக் கிண்ண தொடரின் 2 ஆவது சூப்பர் ஓவர் போட்டியாக இது அமைந்தமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச நாணய நிதியத்தின் புதிய நம்பிக்கை!

கடன் மறுசீரமைப்பில் இலங்கை போதியளவு வலுவான முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் மதிப்பிடுவதாக அதன் தொடர்பாடல் திணைக்களத்தின் பணிப்பாளர் ஜூலி கோசாக் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி நிரலுக்கு அமைாக, வெளி வணிகக் கடன் வழங்குநர்களுடன் ஒப்பந்தங்கள் விரைவில் எட்டப்படும் என்று மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது என்று ஜூலி கோசாக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்கு எந்த வித ஆணையும் இல்லை!

எமது நாட்டில் மின் உற்பத்தி முறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் மின்சார சட்டத்தை அவசரமாக எடுத்துக்கொள்வதை விடுத்து, அதை மேலும் ஆராய்ந்து குறைபாடுகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். தேசிய சொத்துக்கள் மற்றும் தேசிய வளங்களை இவ்வாறு இஷ்டத்துக்கு ஏற்ப மறுசீரமைக்க தற்போதைய அரசாங்கத்துக்கு மக்கள் ஆணை இல்லை. இன்று (07) கூட இது தொடர்பில் விவாதித்து முடிவெடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (06) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். எமது நாட்டின் மின்சார உற்பத்தி முறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் விடயமாக இந்த மின்சார சட்டத்தை அழைக்கலாம். இந்த சிக்கலான சட்டத்தில் மாற்றங்களைச் செய்யும்போது, ​​உன்னிப்பாகக் கவனித்து, சாத்தியமான அனைத்து விளைவுகளையும் நன்கு புரிந்துகொண்டு அதை ஆராய்ந்து, குறைபாடுகளை களைந்து இந்த சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார். மின்சாரத்துறையில் நிகழும் மாற்றம் குறித்தும் நடைமுறைப்படுத்துவது குறித்தும் மேலும் ஆராய்ந்து, ஒருதலைபட்சமாக மேற்கொள்ளாமல், மேற்கொண்டு ஆய்வுகளுக்கு உட்பட்டு கலந்துரையாடி, இதனை ஏற்றுக்கொள்வதா இல்லையா என்பதை தீர்மானிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.

ஏற்றுமதி தொடர்பான தடைகளை நீக்க முன்மொழிவு!

கள்ளு உள்ளிட்ட கித்துள், பனை மற்றும் தென்னை சார்ந்த தயாரிப்புகளை உள்ளூரில் உற்பத்தி செய்தல் மற்றும் ஏற்றுமதி செய்தல் தொடர்பான தடைகளை நீக்குவதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு தேசிய பொருளாதார மற்றும் பௌதிகத் திட்டங்கள் பற்றிய குழுவினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. நீண்ட காலமாக கள்ளு உள்ளிட்ட கித்துள், பனை மற்றும் தென்னை சார்ந்த தயாரிப்புகளை உள்ளூரில் உற்பத்தி செய்தல், விநியோகித்தல் மற்றும் ஏற்றுமதி செய்தல் என்பவற்றுக்கு சிக்கல்கள் காணப்படுவதாகவும், இதனை நிவர்த்தி செய்வதன் மூலம் பாரியளவு வருமானத்தை அரசுக்குப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் கமத்தொழில் மற்றும் பெருந்தோட்ட அமைச்சினால் இதற்கு முன்னர் இடம்பெற்ற குழுக் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. அதற்கமைய, இது தொடர்பில் காணப்படும் சிக்கல்கள் பற்றி கலந்துரையாடி அவற்றைத் தீர்ப்பதற்கு மதுவரித் திணைக்களம், சுங்கத் திணைக்களம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் குழுவினால் அழைக்கப்பட்டிருந்தது. இதன்போது இந்த திணைக்களங்களுடன் கலந்துரையாடி இது தொடர்பில் காணப்படும் தடைகளை நீக்குவதற்கு இணக்கம் காணப்பட்டது. தேசிய பொருளாதார மற்றும் பௌதிகத் திட்டங்கள் பற்றிய குழு அதன் தலைவர் பாரளுமன்ற உறுப்பினர் கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே தலைமையில் அண்மையில் (04) கூடிய போதே இந்த விடயம் கலந்துரையாடப்பட்டது. அத்துடன், வட மாகாணத்தில் தயாரிக்கப்படும் பனங்கள்ளை மொத்தமாக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் விநியோகிப்பதற்குக் காணப்படும் தடைகளை நீக்குவதற்கும் இணக்கம் தெரிவிக்கப்பட்டது. மேலும், ஏற்றுமதியாளர்களுக்கு வசதியாகவும் முறையாகவும் கித்துள், பனை மற்றும் தென்னை சார்ந்த தயாரிப்புகளை ஏற்றுமதி செய்வதற்கான பொறிமுறை ஒன்றை தயாரிக்குமாறும் குழுவினால் ஆலோசனை வழங்கப்பட்டது. கித்துள், பனை மற்றும் தென்னை சார்ந்த தயாரிப்புகளுக்கு வெளிநாட்டில் பாரிய சந்தை வாய்ப்புக்கள் காணப்படுவதாக குழு சுட்டிக்காட்டியது. அதனால் இந்தத் தடைகளை நீக்குவதன் மூலம் எதிர்காலத்தில்  பாரியளவு வருமானம் அரசாங்கத்துக்கு வரும் என குழு சுட்டிக்காட்டியது. அத்துடன், கித்துள், பனை மற்றும் தென்னை சார்ந்த தயாரிப்புகள் தொடர்பான அனைத்து முன்மொழிவுகளும் அடங்கிய அறிக்கையை குழுவுக்கு வழங்குமாறும் இதன்போது அறிவுறுத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான  அஷோக் அபேசிங்க,  ஹர்ஷண ராஜகருணா ஆகியோர் கலந்து கொண்டனர். அத்துடன், கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு, இலங்கை சுங்கம், மதுவரித் திணைக்களம், பனை அபிவிருத்தி சபை, கித்துள் அபிவிருத்தி சபை, தென்னை அபிவிருத்தி சபை, தென்னைப் பயிர்ச்செய்கை சபை மற்றும் தென்னை ஆராய்ச்சி நிலையம் என்பவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தி அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.