Search
Close this search box.

நாளை மூடப்படும் கொழும்பு – கண்டி வீதியின் ஒரு பகுதி

கொழும்பு – கண்டி வீதியின் கீழ் கடுகண்ணாவை பகுதி நாளை (8) சனிக்கிழமை மூடப்படவுள்ளதாக கேகாலை மாவட்டச் செயலாளர் தெரிவித்துள்ளார். இதற்கமைய காலை 10.30 முதல் மாலை 6.30 மணி வரையான காலப்பகுதியில் அவ்வப்போது மூடப்படும் எனவும் கேகாலை மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார். இந்த பகுதியில் உள்ள ஆபத்தான பாறைகள் மற்றும் மரக்கிளைகளை அகற்றுவதற்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக வாகனத்தை செலுத்தும் சாரதிகள் மிகுந்த கவனத்துடன் செல்லுமாறும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பதுளையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞன் கைது

பதுளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பதுலுபிட்டி பகுதியில் 5220 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 28 வயதுடைய கிரீன்லாந்து டிரைவ் பதுலுபிட்டிய பதுளை பகுதியை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் இன்றைய தினம் (7) பதுளை நீதிவான் நீதிமன்றதாதில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தொடருந்து சேவைகள் தொடர்பாக மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

பல கோரிக்கைகளை முன்வைத்து தொடருந்து இன்ஜின் சாரதிகளின் பணிப்புறக்கணிப்பினால் தொடருந்து சேவைகள் சில இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் நேற்று (06) நள்ளிரவு முதல் ஆரம்பித்துள்ளதாக தொடருந்து பொறியாளர் சங்கத்தின் செயலாளர் எஸ்.ஆர்.சி.எம்.சேனாநாயக்க (S.R.C.M. Senanayake) கூறியுள்ளார். இரண்டாம் வகுப்பு பதவி உயர்வு வழங்குவதில் ஏற்பட்ட தாமதம், ஆட்சேர்ப்பு தாமதம் உள்ளிட்ட பல பிரச்சினைகளை அடிப்படையாக கொண்டு இந்த தொழில் நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஐந்து தொடருந்து நிலையங்களில் இரண்டின் சாரதிகள் மாத்திரமே பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும், இதன் காரணமாக தொடருந்து இயங்காது என தொடருந்து பொறியாளர் சங்கத்தின் செயலாளர் கூறியுள்ளார். இந்த நிலையில், பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக காலை வேளையில் இயங்கும் அலுவலக தொடருந்துகள் அதிகம் பாதிக்கப்படாது எனினும் இன்று பிற்பகல் இயங்கும் அனைத்து தொடருந்துகளும் இரத்து செய்யப்படலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், 84 தொடருந்து சாரதிகளின் பதவி உயர்வு பிரச்சினையின் அடிப்படையில் அந்த சாரதிகளே இந்த தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த தொழில்சார் நடவடிக்கையானது தொடருந்து பொறியியலாளர்கள் சங்கததின் (Association of Locomotive Operating Engineers) நிர்வாகக் குழுவால் எடுக்கப்பட்ட முடிவு அல்ல, சங்கத்தின் செயலாளரின் முடிவின்படி வேலை நிறுத்தம் நடத்தப்படுகிறது என்று சங்கத்தின் தலைவர் சந்தன லால் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

200 அடி பள்ளத்தில் விழுந்த கார்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு குழுவை ஏற்றிச் சென்ற கார் ஒன்று வீதியை விட்டு விலகி 200 அடி பள்ளத்தில் விழுந்தது. காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு அருகில் வாகனம் கவிழ்ந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். காரில் பயணித்த பெண் ஒருவர் காயமடைந்து திக் ஓயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து நேற்று (06) மாலை 5.30 மணி அளவில் ஹட்டன் மஸ்கெலியா பிரதான வீதியில் நோர்வூட் நியூவெலிகம பகுதியில் இடம்பெற்றுள்ளது. மஸ்கெலியா பிரதேசத்தில் இடம்பெற்ற இறுதிச் சடங்கு ஒன்றில் பங்கேற்றுவிட்டு கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதிக்கு திரும்பிச் சென்ற கார் ஒன்று இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. எதிர்திசையில் இருந்து வந்த பஸ்ஸுக்கு வழிவிட முற்பட்ட போது கார் வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழர் பகுதியில் பறிபோயுள்ள விவசாய நிலங்கள்

பாரம்பரிய விவசாய நிலங்கள் விடுவிக்கப்படும் என அதிபர் பல்வேறு மாவட்டங்களுக்கான தனது விஜயத்தின் போது உறுதியளித்துள்ள போதிலும் அது பேச்சளவில் மட்டுமே இருந்து வருகிறது என எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) குற்றம்சாட்டியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (06) வியாழக்கிழமை வடக்கு கிழக்கு காணி விவகாரம் தொடர்பிலேயே உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் யுத்தம் நிறைவடைந்த பின்னரும் அந்தப் பிரதேசங்களில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தைப் பேணுவதற்கான காணி பயன்பாட்டுப் பிரச்சினை இன்னமும் தீர்க்கப்படாத பிரச்சினையாகவே உள்ளது. குடியிருப்புகளைச் சுற்றியுள்ள பெரும்பாலான இடங்கள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக வர்த்தமானி வெளியிடப்பட்டிருத்தல் இதற்கு காரணமாகும். அவ்வாறே மக்களுக்கான காணிகளை விடுவிப்பதில் அரசாங்கத்தின் நடவடிக்கைகளிலும் பல பிரச்சினைகள் காணப்படுவதும் இதற்கு காரணமாக அமைகின்றது. அம்பாறை, மொனராகலை, திருகோணமலை மாவட்டங்களுக்கு, வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு அண்மையில் விஜயம் செய்த போது அவர்களது பாரம்பரிய விவசாய நிலங்கள் பறிபோயுள்ளமை தெரிய வந்தது. எனவே இதன் உண்மையை நிலை என்ன? மேலும் விவசாயிகள் பாரம்பரியமாக விவசாயத்தை மேற்கொண்டு வரும் விளைநிலங்களை பாதுகாக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித்தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

திடீரென தீப்பற்றி எரிந்த தேயிலை தொழிற்சாலை – அதிகாலையில் பரபரப்பு

நாவலப்பிட்டி –  குருதுவத்தை கல்பாய பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் தேயிலை தொழிற்சாலையில் இன்று தீ விபத்து சம்பம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அதன்படி இன்று அதிகாலை 3.45 மணியளவில் தேயிலை தொழிற்சாலையில் உற்பத்திப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், கீழ் மாடியில் இருந்து தீ பரவியதுடன் மூன்றாவது மாடிக்கும் பரவியதாக குருதுவத்தை பொலிஸார் தெரிவித்தனர். தீ விபத்து ஏற்பட்ட போது தேயிலை தொழிற்சாலையில் பல ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் குழு வேலை செய்து கொண்டிருந்ததாகவும், தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் பொலிசார் தெரிவித்தனர். மேலும் தேயிலை தொழிற்சாலையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த தேயிலை துாள்கள் தீயில் எரிந்ததுடன் பிரதேசவாசிகள் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் தீ பரவியதைத் தடுக்க முயற்சித்த போதிலும் அதனை கட்டுப்படுத்த முடியாமல் போனதால் கண்டி மாநகரசபையின் தீயணைப்புப் பிரிவினர் அழைக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் விரும்பும் தீர்வை வழங்கத் தயார்! – சஜித் பகிரங்க அறிவிப்பு

நான் ஜனாதிபதியாகத் தெரிவானால் இலங்கையின் இறையாண்மையைப் பாதிக்காத வகையில் தமிழ் மக்கள் விரும்பும் தீர்வை வழங்கத் தயாராக இருக்கின்றேன்” – என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். “எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எனக்கு வெற்றி வாய்ப்பு அதிகம். சிங்கள மக்கள் மாத்திரமின்றி பெரும்பாலான தமிழ், முஸ்லிம் மக்களும் எனக்கான ஆணையை வழங்குவார்கள். நான் ஜனாதிபதியாகப் பதவியேற்றவுடன் தற்போதைய நாடாளுமன்றத்தைக் கலைத்து விடுவேன். தேர்தல் மூலம் புதிய நாடாளுமன்றம் அமையும். ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணியே ஆட்சியமைக்கும். புதிய அரசமைப்பைக் கொண்டு வந்து இலங்கையின் இறையாண்மையைப் பாதிக்காத வகையில் தமிழ் மக்கள் விரும்பும் தீர்வை வழங்க நான் தயாராக இருக்கின்றேன். இதற்குப் புதிய நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் ஆளும் – எதிரணி உறுப்பினர்கள் ஆதரவு வழங்குவார்கள் என நம்புகின்றேன். எமது அரசில் இனவாதம், மதவாதம் என்ற ரீதியில் நாட்டில் மீண்டும் பிரச்சினைகள் ஏற்பட இடமளிக்கமாட்டேன். – என்றார்.

ஜனாதிபதியை அவசரமாகச் சந்தித்த ஆளும் கட்சி உறுப்பினர்கள்…!

ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் நேற்றைய தினம் இரவு பத்தரமுல்ல பகுதியில் சந்திப்பு ஒன்று நடைபெற்றுள்ளது. எதிர்கால அரசியல் நிலைமைகள் குறித்து இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. இதன்போது அனைவரும் இணைந்து செயற்பட வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் 31 உறுப்பினர்கள் இந்த சந்திப்பில் பங்கேற்றுள்ளனர். மாவட்ட இணைப்புச் செயற்குழுக்களின் தலைவர்களும் இந்த சந்திப்பில் இணைந்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறெனினும் இந்த சந்திப்பில் பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஆகியோர் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

வெளிநாட்டில் இருந்து இலங்கை வந்த பெண் படுகொலை

குருணாகல் (Kurunegala) மாவத்தகம பிரதேசத்தில் வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வந்த பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவமானது பெண் வீட்டில் தனியாக வசித்து வந்த நிலையில் நேற்று (06)  இரவு இடம்பெற்றுள்ளது. அத்தோடு, உயிரிழந்த பெண் மாவத்தகம காவல் பிரிவிற்குட்பட்ட பிலஸ்ஸ பகுதியிலுள்ள வீடொன்றினுள் கூரிய ஆயுதத்தினால் தாக்கி கொலைச் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், உயிரிழந்தவர் 62 வயதுடைய பெண் எனவும் மற்றும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.