ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 11 ஆவது போட்டி நேற்று (06) இரவு நடைபெற்றது.
பாகிஸ்தான் மற்றும் அமெரிக்க அணிகள் மோதிய இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற அமெரிக்க அணி முதலில் பந்துவீச்சை தெரிவு செய்தது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 159 ஓட்டங்களை பெற்றது.
பாகிஸ்தான் அணி தலைவர் பாபர் அசாம் 44 ஓட்டங்களையும், ஷதாப் கான் 40 ஓட்டங்களையும் சேர்த்தனர். கடைசியில் களமிறங்கிய ஷாஹீன் ஷா அப்ரிடி 23 ஓட்டங்களையும் விளாசினார்.
இதை அடுத்து 160 என்ற ஓட்ட இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய அமெரிக்க அணி தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
அமெரிக்க அணியின் தொடக்க வீரரும், அணி தலைவருமான மொனாக் படேல் 38 பந்துகளில் அரைசதம் கடந்து ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து வந்த வீரர்கள் தங்கள் பங்கிற்கு ஓட்டங்களை சேர்க்க அந்த அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 159 ஓட்டங்களை சேர்த்தது.
இதன் காரணமாக போட்டி சமநிலையில் முடிந்தது. இதனால் சூப்பர் ஓவர் கொண்டுவரப்பட்டது. சூப்பர் ஓவரில் முதலில் துடுப்பாடிய அமெரிக்க 1 விக்கெட் இழப்புக்கு 18 ஓட்டங்களை பெற்றது.
19 ஓட்டங்களை நோக்கி துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி சூப்பர் ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 13 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.
இதன் காரணமாக போட்டியில் அமெரிக்க அணி 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நடப்பு ரி20 உலகக் கிண்ண தொடரின் 2 ஆவது சூப்பர் ஓவர் போட்டியாக இது அமைந்தமை குறிப்பிடத்தக்கது.