Search
Close this search box.

அவசரமாக புறப்பட்ட ஹெலிகொப்டர்..! தயார் நிலையில் விமானப்படை

காலி மாவட்டத்தின் நெலுவ பகுதிக்கு அவசரமாக ஹெலிகொப்டர் ஒன்றை இலங்கை விமானப்படை அனுப்பி வைத்துள்ளது. பெல் 412 ரக ஹெலிகொப்டர் ஒன்றையே விமானப்படை அவசரமாக அனுப்பியுள்ளதாக விமானப்படை பேச்சாளர் குரூப் கெப்டன் துஷான் விஜேசிங்க தெரிவித்துள்ளார். நெலுவ பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்கும் வகையிலேயே இந்த ஹெலிகொப்டர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அத்துடன், மீட்புப் பணிகளை மேற்கொள்ளும் நோக்கில் மேலும் இரண்டு ஹெலிகொப்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்

வெள்ள நிலைமைகளை ஆராய ஜனாதிபதி கள விஜயம்.!

கொழும்பு, கொலன்னாவ பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலையை ஆராய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்பார்வைப் பயணமொன்றை இன்று பிற்பகல்  மேற்கொண்டார். அதன்படி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்குத் தேவையான பணிப்புரைகளை ஜனாதிபதி இதன்போது அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இதேவேளை மோசமான காலநிலையால் முழுமையாக சேதமடைந்த வீடுகளை முப்படையினரின் உதவியுடன், அரசாங்கத்தின் செலவில் புதிதாக நிர்மாணிப்பதற்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்குமான பணிகளை முன்னெடுப்பதற்குத் தேவையான அவசர அமைச்சரவைப் பத்திரமொன்று இன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும், பிரதமருக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த விடயம் தீர்மானிக்கப்பட்டது.

வடமாகாண பாடசாலைகள் நாளை நடைபெறுமா..? வெளியான முக்கிய அறிவிப்பு

வடமாகாண பாடசாலைகள் வழமைபோன்று நாளை செவ்வாய்கிழமை  நடைபெறும் என்றும், புதிய உயர்தர மாணவர்களுக்கான வகுப்புக்களும் நாளை ஆரம்பமாகும் ஏனவும்  வடக்கு மாகாண கல்வி பணிப்பாளர் தி.யோன் குயின்ரஸ்  அறிவித்துள்ளார் சீரற்ற காலநிலை காரணமாக நாடுபூராகவும்  இன்று பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது. எனினும் வடமாகாண காலநிலையை கருத்தில் கொண்டு நாளை பாடசாலைகள் வழமைபோல் நடைபெறும் எனவும், க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்த மாணவர்களுக்கான க.பொ.த உயர்தர வகுப்புக்களை ஆரம்பிக்கும்  செயற்பாடுகளும்  நாளை ஆரம்பமாகவுள்ளது. கல்வி அமைச்சின் செயலாளரது கடிதத்தின் பிரகாரம், க.பொ.த உயர்தர வகுப்பை நாளை ஒவ்வொரு  வலய 1A, 1C பாடசாலைகளில் ஆரம்பித்து மாணவரின் வரவினை தற்காலிகப் பதிவேட்டில் பதிவு செய்து அப்பாடசாலையில் கற்ற மாணவர்களினதும் வேறு பாடசாலையிலிருந்து அப்பாடசாலைக்கு வருகை தந்த மாணவர்களினதும் விபரஙகளினை மாகாணக் கல்வித் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்குமாறும் கேட்டுள்ளார். மாணவர்கள் க.பொ.த உயர்தர பாடத்துறைகளுக்கு தற்காலிகமாக இணைப்புச் செய்யப்பட்ட காலப் பகுதியினுள் வருகை தந்த நாட்களின் எண்ணிக்கையானது க.பொ.த உயர் தர பரீட்சைக்குத் தோற்றும் போது 80% சதவீத வரவுக்காக கருத்தில் கொள்ளப்படும். க.பொ.த சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் க.பொ.த உயர் தரத்தில் கற்பதற்காக வேறு பாடசாலையொன்றிற்கு அனுமதி பெற்றுக் கொள்ளும் போது இந்த தற்காலிக இணைப்புக்கு அமைய ஏதேனும் ஒரு பாடசாலைக்கு அனுமதிக்கப்பட்டு கற்றிருப்பது முன்னுரிமை வழங்கப்படும் விடயமாக கருத்தில் கொள்ளப்படும். மாணவர்கள் க.பொ.த சாதாரண தர பெறுபேறுகளின் படி வேறு பாடசாலையொன்றிற்கு அனுமதி பெறுவதற்கு விண்ணப்பிக்கும் சந்தர்ப்பங்களில், இணைப்புக் கால எல்லையினுள் பாடசாலை வரவு மற்றும் இணைப் பாடவிதான செயற்பாடுகள் தொடர்பான அறிக்கையொன்றை, தற்காலிகமாக இணைப்பு பெற்றுள்ள பாடசாலை அதிபர்கள் வழங்க நடவடிக்கையெடுத்தல் வேண்டும் என்பதுடன் அதனை மேலதிக தகுதியொன்றாக கருத்தில் கொள்ள வேண்டும். அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளின் க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்காகவும்,  இந்த முன்னோடி நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியும். அத்துடன் மேற்படி 20/2024 சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு வசதிகள் மற்றும் சேவைகள் கட்டணம், சீருடைகள் மற்றும் மாணவர் விடுகைப் பத்திரம் தொடர்பாக வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்த தடவடிக்கையெடுத்தல் வேண்டும் எனவும் வடமாகாண கல்வி பணிப்பாளர் அறிவித்துள்ளார்

தமிழ் பொது வேட்பாளரை நியமிப்பதற்கு ரெலோ ஆதரவு வழங்க தீர்மானம்

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவற்கு தமிழ் ஈழ விடுதலை இயக்கம் பூரண ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்குவதாக கட்சியின் தலைமைக்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் ஊடக பேச்சாளர் சுரேன் குருசாமி தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு வாவிக்கரையிலுள்ள கட்சியின் செயலாளர் காரியாலத்தில் நேற்று (02) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், உப தலைவர் ஹென்ரி மகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு இந்த தீர்மானத்தை வெளியிட்டுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்ற தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைமை குழு கூட்டத்தில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது பற்றிய விரிவான கலந்துரையாடல் நடைபெற்றது. இதன்போது கருத்து தெரிவித்த சுரேன் குருசாமி, கடந்த கால எமது அனுபவங்களின் அடிப்படையில் தமிழ் மக்கள் மத்தியில் பொது வேட்பாளர் என்ற நிலைப்பாடு எழுந்துள்ள சூழ்நிலையிலும் காலத்தின் தேவை மற்றும் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டும் பொது வேட்பாளர் என்ற கோரிக்கைக்கு ஆதரவு நிலைப்பாட்டை எமது கட்சியின் தலைமை குழு எடுத்திருக்கிறது. இந்தக் கோரிக்கையானது வெற்றியளிப்பதற்கு தமிழ் தேசிய தரப்பில் இருக்கும் அனைவரும் ஒன்றிணைந்து பொது வேட்பாளரை முன் நிறுத்த வேண்டிய அவசியத்தையும் நாம் வலியுறுத்துகிறோம். அதேவேளை அனைத்து தமிழ் தரப்பினர்களையும் ஒருங்கிணைக்கும் தற்போதைய முயற்சிக்கு நமது பூரண ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்குவதாகவும் தீர்மானித்துள்ளோம் என கூறியுள்ளார்.

பின்வாங்கிய அரசியல்வாதிகள் மீண்டும் தலைதூக்குகின்றனர் – அனுரகுமார

அரகலயவின் போது பின்வாங்கிய அரசியல்வாதிகள் தற்போது மீண்டும் தலைதூக்குகின்றனர் என ஜேவிபியின் தலைவர் அனுரகுமாரதிசநாயக்க தெரிவித்துள்ளார். குருநாகலில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் மாநாட்டில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அரகலயவின் பின்னர் பின்வாங்கிய ஊழல் ரவுடி அரசியல்வாதிகள் மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளனர் என தெரிவித்துள்ள அவர் அரகலயவின் உண்மையான அபிலாசைகள் நிiவேற்றப்படவேண்டும் என்றால் மக்கள் எழுச்சியின் உண்மையான நோக்கங்களை நிறைவேற்றும் அரசாங்கத்தினை ஏற்படுத்தவேண்டும் என குறிப்பிட்டுள்ளார். 2022 மக்கள் எழுச்சியின் உண்மையான அபிலாசைகளை உறுதிசெய்யக்கூடிய அரசாங்கம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமே எனவும் அவர் தெரிவித்துள்ளார். அரசியல்வாதிகள் இன்னமும் அரகலயவிலிருந்து பாடங்களை கற்கவில்லை மாறாக அதனை அவமானப்படுத்தும் நோக்கத்துடன் செயற்படுகின்றனர் எனவும் ஜேவிபி தலைவர் குறிப்பிட்டுள்ளார். மக்கள் குறிப்பாக இளைஞர்கள் எந்தவொரு அரசியல்கட்சியுடனும் தங்களை அடையாளப்படுத்தாமல் பொதுவான அபிலாசைகளிற்காக வீதியில் இறங்கினார்கள் எனவும் அனுரகுமாரதிசநாயக்க தெரிவித்துள்ளார். ஊழல் மோசடி அற்ற ஒழுக்கமும்சட்டமும் காணப்படும் நாட்டை மக்கள் எதிர்பார்க்கின்றனர் பொதுவான சமூக நோக்கத்திற்காக அவர்கள் வீதியில் இறங்கினார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாடு திரும்பிய வடபகுதியை சேர்ந்த நால்வர் அதிரடி கைது

தலைமன்னார் ஊர்மனை பகுதிக்கு வருகை தந்த இலங்கையைச் சேர்ந்த 5 பேர் திங்கட்கிழமை(3)காலை தலைமன்னார் ஊர்மனை கடற்கரை பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர். இந்தியாவில் இருந்து சட்ட விரோதமான முறையில் படகில் இவர்கள் ஊர்மனைக்கு வந்துள்ளனர். கடற்படையினரால் கைது செய்யப்பட்ட குறித்த 5 நபர்கள், கடற்படையினரால் விசாரணைக்கு உற்படுத்திய பின்னர் தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் மன்னார் தாழ்வுபாடு, தலைமன்னார், வவுனியா, கிளிநொச்சி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 37,39,24,26 மற்றும் 38 வயதுடைய ஆண்கள் என தெரிய வந்துள்ளது. குறித்த 5 பேரும் இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு கடந்த சில வருடங்களுக்கு முன் சென்றுள்ள நிலையில் இந்தியாவின் பல்வேறு இடங்களில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையிலே குறித்த 5 பேரும் படகு மூலம் இந்தியாவில் இருந்து சட்ட விரோதமான முறையில் தலைமன்னார் ஊர்மனை பகுதிக்கு வருகை தந்த நிலையில் திங்கட்கிழமை(3) காலை தலைமன்னார் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட குறித்த 5 சந்தேக நபர்கள் தற்போது தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதோடு,விசாரணைகளின் பின்னர் குறித்த நபர்கள் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

உக்ரைன் போர் களத்தில் மகிந்தவின் மெய்பாதுகாவலர்

உக்ரைன் – ரஷ்ய போர் களத்தில் இலங்கை படையில் இருந்து ஓய்வுப் பெற்ற பலர் கூலிப்படைகளாக இணைந்துள்ள விவகாரம் தற்போது பேசுபொருளாகியுள்ளது. இருநாடுகளின் சார்பில் போரிடும் இலங்கையர்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். தற்போது இந்த விவகாரத்தில் இலங்கை அரசாங்கம் தலையிட்டுள்ளது. இவ்வாறான பின்னணியில் முன்னாள் பிரமதர் மகிந்த ராஜபக்சவின் மெய்பாதுகாவலராக இருந்த ஒருவர் தற்போது உக்ரைனுக்கு ஆதரவாக போரிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு மே மகிந்த ராஜபக்சவின் மெய்பாதுகாவலராக இருந்த லஹிரு காவிந்த அத்துருசிங்க என்பவரே உக்ரைனுக்கு ஆதரவாக போரிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போர் களத்தில் இருந்தவாறே இலங்கை ஊடகவியலாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியில் அவர் பல்வேறு விடயங்களை பகிர்ந்துகொண்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, “உக்ரைன் படையில் வெளிநாட்டினரை பிரதிநிதித்துவப்படுத்தும் 15 பேர் கொண்ட குழுவின் தலைவராக செயற்படுகின்றேன். இந்த குழுவில் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் இருக்கின்றனர். இலங்கையில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தின் போது அப்போதைய பிரதமர் மகிந்த ராஜபக்சவின் மெய்பாதுகாவலராக இருந்திருந்தேன். சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் மெய்பாதுகாவலராக பணியாற்றினேன். மெய்பாதுகாவல் வழங்கிய அந்த காலப்பகுதியில் நடந்த எதையும் கூறமுடியாது. அது நெறியும் கிடையாது. தன்னை தனது குடும்பத்தில் ஒருவரைப் போலவே மகிந்த ராஜபக்ச பார்த்தார். இந்நிலையில், எதிர்காலத்தில் செய்யவேண்டிய அனைத்தையும் இப்போதே திட்டமிட்டுள்ளேன். ரஷ்யாவுக்கு எதிரான போரில் இதுவரையில் காயம் எதுவும் ஏற்படவில்லை. போர் குறித்த அச்சங்களும் எனக்கில்லை. எனது குழு மீது எனக்கு முழு நம்பிக்கை இருக்கின்றது. எனக்கு எது நேர்ந்தாலும் அவர்கள் என்னை கைவிடமாட்டார்கள். அதேபோல் தனது குழுவில் உள்ள எவருக்கும் எது நடந்தாலும் முதல் ஆளாக நான் அங்கிருப்பேன். இலங்கை இராணுவத்தில் கற்றுக்கொண்ட நுட்பங்களை கொண்டு எனது குழுவினருக்கு பயிற்சிகளை வழங்கி வருகின்றேன். கடந்த எட்டு மாதங்களால் எந்தவொரு பாதிப்புகளும் இன்றி போர்களத்தில் செயற்பட்டு வருகின்றேன். வெளிநாட்டு இராணுவத்தில் இணைய வேண்டும் என்ற விருபத்தின் பேரிலேயே உக்ரைன் இராணுவத்தில் இணைந்துகொண்டேன். நான் ஒருபோதும் கூலிப்படையாக இங்கு இணையவில்லை. எனது முழு விருப்பத்தின் பேரிலேயே உக்ரைன் இராணுவத்தில் இணைந்துகொண்டேன். எவ்வாறாயினும் இலங்கை இராணுவத்தில் இருந்து நான் அதிகாரப்பூர்வமாக விலகவில்லை. முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட யாருக்கும் இந்த விடயம் தெரியாது. உக்ரைனுக்கு எதிராக போரிட்ட இரண்டு இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் குறித்து உக்ரைன் பாதுகாப்பு அமைச்சிடம் கேட்கமுடியாது. அவ்வாறு கேட்டால் எதிரிநாட்டு படையினருடன் தொடர்புவைத்துள்ளதாக சந்தேகிப்பார்கள். எவ்வாறாயினும், அவர்கள் எங்களுக்கு எதிராக போரிட்டவர்கள் ஆவர். யாரும் ரஷ்யாவை பாதுகாக்கும் நோக்கில் அந்நாட்டு படையில் இணைந்து கொள்ளவில்லை. தமது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள தேவையான பணத்திற்காகவே இணைந்துள்ளனர். 50 நாட்கள் போர்களத்தில் இருந்தால் 14 நாட்கள் விடுமுறை கிடைக்கும். ஆனால் நான் அந்த விடுமுறையை இதுவரை பெற்றுக்கொள்ளவில்லை. எவ்வாறாயினும் விதியை மீறி எதுவும் நடக்காது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளுக்கான விடுமுறை நீடிப்பு …! சற்றுமுன் வெளியான அறிவிப்பு…!

தற்போதைய பேரிடர் நிலையைக் கருத்தில் கொண்டு காலி மற்றும் மாத்தறை மாவட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளை(04) மற்றும் நாளை மறுதினம்(05) காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. தென்மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, கல்வி அதிகாரிகளுடன் நடத்திய கலந்துரையாடலில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது. இதேவேளை நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இன்றையதினமும் நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் போலி கடவுச்சீட்டுகளை தயாரித்த இலங்கையர்கள் கைது!

இந்திய கடவுச்சீட்டுகளை சட்டவிரோதமான முறையில் தயாரித்த இரண்டு இலங்கையர்கள் உட்பட மூவரை இந்திய அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இலங்கை அகதிகளுக்கான இந்திய கடவுச்சீட்டுகளை தயாரித்த குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சந்தேக நபர்களை தமிழகத்தில் வைத்து கைது செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இரண்டு இலங்கையர்களுடன் இந்திய பெண்ணொருவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் கடவுச்சீட்டுகளை வழங்கியவர் என சந்தேகிக்கப்படுகிறது. 21 இலங்கையர்களுக்கு இந்திய கடவுச்சீட்டுகளை பெற்றுக் கொள்வதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாக இந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர். எவ்வாறாயினும், இந்த மோசடி தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்திய குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இந்த ஆண்டு ஜனவரி மாதம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. அதன்படி, மோசடி தொடர்பாக 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தக் குழுவில் மூன்று இலங்கையர்கள் உள்ளதாக தெரிவிக்கும் இந்திய பொலிஸார், ஆட்கடத்தல் தொடர்பில் 06 பொலிஸ் அதிகாரிகளும் கைது செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

உண்மை மற்றும் நல்லிணக்கத்துக்காக ஸ்தாபிக்கப்படவுள்ள விசேட நீதிமன்றம்

இலங்கையில் உண்மை, ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவை நிறுவுவதற்கான சட்டத்தின் வரைவில் உத்தேச ஆணைக்குழுவைச் செயல்படுத்துவதற்கு திருத்தங்களை மேற்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறைக்கான இடைக்கால செயலகத்தின் பணிப்பாளர் அசங்க குணவன்ச இதனை தெரிவித்துள்ளார். உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு சட்டத்தரணிகள் அல்லது நீதித்துறை அதிகாரங்கள் இருக்க வேண்டும்.இல்லையெனில், தேவையை நிவர்த்தி செய்வதற்கு விசேட நீதிமன்றமொன்று ஸ்தாபிக்கப்படலாம் என குணவன்ச குறிப்பிட்டுள்ளார். இந்த ஆணைக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், தனி நீதிமன்றம் அமைக்கப்படலாம் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் யாழ்ப்பாணத்தில் வெளியிட்ட தகவல் தொடர்பிலேயே செயலகத்தின் பணிப்பாளர் தமது கருத்தை வெளியிட்டுள்ளார். இந்நிலையில் ஒரு சிறப்பு நீதிமன்றத்தை ஸ்தாபித்தல், வழக்குத் தொடுனர் மற்றும் நீதித்துறை அதிகாரங்கள் என்பன அரசாங்கத்தினால் தீர்மானிக்கப்பட வேண்டியவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.