Search
Close this search box.

பேருந்தும், முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து – 27 பேர் வைத்தியசாலையில் அனுமதி

கொழும்பு – பதுளை பிரதான வீதியில் பெல்மடுல்ல நகருக்கு அருகில் தனியார் பேருந்தும், முச்சக்கர வண்டியொன்றும் நேருக்கு நேர் மோதியதில் 27 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். எம்பிலிப்பிட்டியவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்தும் எதிர்திசையில் இருந்து வந்த முச்சக்கரவண்டியுமே மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது மண் திட்டுடன் மோதி பேருந்து சில அடிகள் கீழே சாலையில் கவிழ்ந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் காயமடைந்த 20 பேர் கெஹாவத்தை ஆதார வைத்தியசாலையிலும் ஏழு பேர் இரத்தினபுரி போதனா வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தென்னைகளில் தீவிரமடையும் வெண்நிற ஈ தாக்கம்…! உயரும் தேங்காய் விலை

திருகோணமலை – சம்பூர் பிரதேசத்தில் உள்ள தென்னை மரங்கள் வெண்நிற ஈ தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதாக சம்பூர் பிரதேச தென்னை செய்கையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். சம்பூர் பகுதியில் உள்ள பெரும்பாலான தென்னை மரங்கள் வெண்நிற ஈ தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் இதனால் தமது தென்னை செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டுள்ளமையினால் என்ன செய்வது என்று தெரியாமல் இருப்பதாகவும் கவலை தெரிவிக்கின்றன. இவ்வாறு வெண்நிற தாக்கத்தினால் தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டுள்ளமையினால் தேங்காயின் விலையும் அதிகரித்துள்ளது. இந்நோய் தாக்கம் அதிகரிக்குமாக இருந்தால் தேங்காய்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் நிலை ஏற்படும் எனவும் சம்பூர் பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். இந்நோய் தாக்கத்தினை கட்டுப்படுத்துவதற்கு , அதற்குரிய ஆலோசனைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வழங்க வேண்டும் எனவும் சம்பூர் பகுதி தென்னை செய்கையாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

உயர்ந்தது இலங்கை ரூபாயின் மதிப்பு – பணவீக்கம் மற்றும் வாழ்க்கைச் செலவும் குறையும்! அமைச்சர் அறிவிப்பு

ஏப்ரல் மாத இறுதிக்குள் இலங்கையின் மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு 5.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சுமார் 8 வீதத்தால் வலுவடைந்துள்ளதாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். ரூபாய் மதிப்பு உயர்வால் பணவீக்கம் குறையும், ஒட்டுமொத்த வாழ்க்கைச் செலவும் குறையும், வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துவது எளிதாகும் என்றார். இது உலகளவில் நாட்டின் நிதி பலத்தின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கும் என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் கூறுகிறார்

வங்கிக்குள் மூன்று நாட்கள் பதுங்கியிருந்து கொள்ளை – இலங்கையில் சினிமா பாணியில் நடந்த பயங்கரம்…

ஜால பிரதேசத்தில் உள்ள கூட்டுறவு கிராமிய வங்கியொன்றை உடைத்து மூன்று நாட்கள் அங்கு இரகசியமான தங்கியிருந்து பணம் மற்றும் தங்கத்தை திருடிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். வெசாக் பண்டிகையை முன்னிட்டு வங்கி விடுமுறையின் போது சந்தேக நபர் சுவரை உடைத்து வங்கிக்குள் பிரவேசித்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அங்கு சுமார் 4 கோடி ரூபாய் மதிப்புள்ள 2 கிலோ தங்கம் மற்றும் பத்து லட்ச ரூபாய்க்கும் அதிகமான பணம் திருடப்பட்டதுடன், வங்கியின் சிசிடிவி கமரா அமைப்பும் முற்றிலுமாக கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும்  வென்னப்பு பகுதியில் அமைந்துள்ள கிராமிய வங்கி ஒன்றினுள் புகுந்து 06 கோடி பெறுமதியான தங்கம் மற்றும் நாடுமுழுவதும் உள்ள தபால் நிலையங்களின் பெட்டகங்களையும் இந்த நபர் திருடிச் சென்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. சந்தேக நபரிடம் நடத்திய விசாரணையில், வங்கியில் திருடப்பட்ட சுமார் 500 வாடிக்கையாளர்களின் தங்க நகைகள், பெட்டகங்கள், சுத்தியல், அன்றைய தினம் அணிந்திருந்த ஆடைகள் உள்ளிட்ட பல பொருட்களை பொலிஸார் கண்டுபிடித்தனர். மேலும் சந்தேகநபர் திருட்டுக்கு பயன்படுத்திய சொகுசு காரும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

500 ரூபா பணத்திற்காக நடந்த கொடூரம்; அண்ணனை கொலை செய்த தம்பி!

பாணந்துறை – பின்வத்த பகுதியில்500 ரூபா பணத்தை திருடி தனது மூத்த சகோதரனை எட்டி உதைத்து கொலை செய்த சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பின்வத்த பொலிஸார் தெரிவித்துள்ளனர். பின்வத்த, உபோசதாராம வீதியில் வசிக்கும் 48 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். உபோசதாராம வீதியைச் சேர்ந்த ஜயந்த சில்வா என்ற 52 வயதுடைய நபரே பாணந்துறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். சந்தேகநபர் உயிரிழந்த தனது மூத்த சகோதரர் மற்றும் தாயாருடன் வீட்டில் வசித்து வருவதுடன், 500 ரூபா திருடப்பட்டமை தொடர்பில் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் முற்றியதையடுத்து, கடந்த 13 ஆம் திகதி அவர் தனது மூத்த சகோதரனை தாக்கியுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த தாக்குதலில் காயமடைந்த நபர் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் கடந்த 21ஆம் திகதி உயிரிழந்துள்ளதுடன், பிரேதப் பரிசோதனையின் போது தெரியவந்த உண்மைகளின் அடிப்படையில் பிரதான பொலிஸ் பரிசோதகர் பத்மா நந்தன தலைமையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் பாணந்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி தேர்தலை பிற்போடும் திட்டம் எதுவும் இல்லை..! – ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு…

ஜனாதிபதி தேர்தலை பிற்போடும் திட்டம் எதுவும் இல்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்க பண்டார ஜனாதிபதி தேர்தலையும் நாடாளுமன்ற தேர்தலையும் பிற்போடுவதற்கான யோசனையொன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பது குறித்து கருத்து தெரிவித்ததை தொடர்ந்து அரசியல் வட்டாரங்கள் நேற்று பெரும் குழப்பநிலை காணப்பட்டது. நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள் ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளரின் அறிவிப்பை முற்றாக நிராகரித்ததுடன், ஜனாதிபதி உடனடியாக பதிலளிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். நேற்று மாலைக்குள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பலர் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டனர், இவர்களில் பலர் எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதியை தொடர்புகொண்ட எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளரின் அறிக்கை குறித்து மேலும் விளக்கங்களை தெளிவுபடுத்தல்களைகோரியுள்ளதாக தெரியவருகின்றது. இதனை தொடர்ந்து, தேர்தலை பிற்போடும் திட்டம் எதுவும் இல்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களை தனது சார்பில் கருத்துக்களை வெளியிடுமாறு ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஏன் அவ்வாறான அறிக்கையை வெளியிட்டார் என்பது தெரியவில்லை என குறிப்பிட்டுள்ள ஜனாதிபதிக்கு நெருக்கமான ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள், அந்த அறிக்கையை நிராகரித்துள்ளதுடன், சர்வஜன வாக்கெடுப்பை நடத்தும் திட்டம் எதுவும் ஜனாதிபதியிடம் இல்லை என குறிப்பிட்டுள்ளனர். ஜனாதிபதி ஜனநாயக விழுமியங்களை பின்பற்றுவார் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இது பாலித ரங்க பண்டாரவின் தனிப்பட்ட அறிக்கை என ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

மகனை தலைகீழாக கட்டித் தொங்கவிட்டு கொடூர தாக்குதல் – தாய்க்கு நேர்ந்த கதி..

மட்டக்களப்பு – ஏறாவூர் பகுதியில் தமது மகனை தலைகீழாக கட்டித் தொங்கவிட்டு தாக்கியதாகக் கூறப்படும் தாய் ஒருவரை ஏறாவூர் பொலிஸார் கைது செய்துள்ளனர். 7 வயதுடைய தனது மகன் மீது சரமாரியாகத் தாக்குதல் நடத்திய குறித்த தாய் காணொளியொன்றையும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். அதற்கமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளையடுத்து, 35 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுவனை சட்டவைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சந்தேகநபரை  ஏறாவூர் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேநேரம், குறித்த காணொளியில் மற்றுமொறு பெண், இரண்டரை வயது சிறுவன் ஒருவரை சித்திரவதைக்கு உள்ளாக்கும் காட்சியும் பதிவாகியுள்ளது. அது தொடர்பிலும் ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பொலிஸில் சரணடைந்த 11 பாடசாலை மாணவிகள்! யாழில் சம்பவம்!

யாழ்ப்பாணம், தீவகம் கல்வி வலயத்திலுள்ள பாடசாலையொன்றின் விடுதியில் கிறிஸ்தவ அருட்சகோதரி ஒருவரின் கொடூர தாக்குதலை தாங்க முடியாமல், அங்கு தங்கியிருந்த 11 பாடசாலை மாணவிகள் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர். 10 முதல் 17 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவிகளே பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தனர். அகப்பை காம்பு மற்றும் தடியால் தாக்குவது, தலைமுடியை பிடித்து சுவருடன் தாக்குவதென, விடுதிக்கு பொறுப்பான அருட்சகோதரி கடந்த 3 வருடங்களாக தம்மை சித்திரவதை செய்வதாக மாணவிகள் கண்ணீருடன் முறையிட்டுள்ளனர். புது வகையான ஆங்கில உச்சரிப்பை பேசச் சொல்வது, ஆங்கில உச்சரிப்பு தவறு, ஆங்கிலம் முறையாக பேசாதது, பிரார்த்தனையை முறையாக  மனனம் செய்யாதது உள்ளிட்ட காரணங்களிற்காகவே அருட் சகோதரி தாக்குதல் நடத்தியதாக குறிப்பிடப்படுகிறது. அத்துடன், பாடசாலை மாணவிகளுடன் உரையாடக்கூடாத கெட்ட வார்த்தைகளையும் உபயோகித்து திட்டுவதாக குறிப்பிட்டுள்ளனர். பாடசாலையில் குறித்த விடயத்தை சொன்னபோதும் சமாளித்து போகுமாறு கூறவே அச்சம் காரணமாக 11 மாணவிகளும் இன்று ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளனர். இதனையடுத்து அனைத்து மாணவிகளும்  யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சட்டவைத்திய அதிகாரியிடம் முற்படுத்தப்பட்டனர். மாணவிகளிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில், அவர்களின் உடலில் தாக்கப்பட்ட தழும்புகள் அவதானிக்கப்பட்டுள்ளது. குறித்த 11 மாணவிகளும் ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் விடுதி பொறுப்பாசிரியரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

நெதர்லாந்திடம் இலங்கை அணி தோல்வி!

ரி20 உலகக் கிண்ணத் தொடரின் நெதர்லாந்து அணிக்கு எதிராக நேற்று இடம்பெற்ற முதல்  பயிற்சி ஆட்டத்தில் இலங்கை அணி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. அமெரிக்காவின் புளோரிடாவில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி நெதர்லாந்து அணியை முதலில் துடுப்பெடுத்தாட அழைத்தது. அதன்படி களம் இறங்கிய நெதர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 181 ஓட்டங்களை எடுத்தது. பந்து வீச்சில் தில்ஷான் மதுஷங்க 39 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். உலகக் கிண்ணத் கிரிக்கெட் தொடரின் முதல் சுற்றில் நெதர்லாந்துக்கு எதிராக இலங்கைக்கு போட்டி உள்ளதால், இலங்கை அணியின் முக்கிய பந்துவீச்சாளர்களான வனிந்து ஹசரங்க, மதீஷ பத்திரன, மஹீஷ் தீக்ஷன ஆகியோர் பந்து வீசவில்லை. இந்நிலையில், 182 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இலங்கை அணியால் 18 ஓவர்கள் 5 பந்துகளில் அனைத்து விக்கெட்டுக்களை இழந்து 161 ஓட்டங்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இலங்கை அணி சார்பில் அணித்தலைவர் வனிந்து ஹசரங்க அதிகபட்சமாக 43 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். தசுன் ஷனக 20 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 35 ஓட்டங்களையும் தனஞ்சய டி சில்வா 31 ஓட்டங்களையும் பெற்றனர். இலங்கை அணி பங்கேற்கும் இரண்டாவது பயிற்சி ஆட்டம் மே 31ம் திகதி அயர்லாந்துக்கு எதிராக நடைபெற உள்ளது.

உணவில் மட்டைத்தேள் – உணவகத்திற்கு சீல்!

கடந்த வெள்ளிக்கிழமை திருநெல்வேலி பகுதியில் உள்ள ஓர் உணவகத்தில் மதிய உணவு வாங்கிய ஒருவரின் சோற்று பார்சலில் மட்டைத்தேள் காணப்பட்டதாக பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவனிற்கு முறைப்பாடு ஒன்று கிடைத்தது. இதனையடுத்து சனிக்கிழமை குறித்த உணவகம் திருநெல்வேலி பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவனினால் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது பொது சுகாதார பரிசோதகரால் ஏற்கனவே வழங்கப்பட்ட திருத்த வேலைகள் எவையும் நிவர்த்தி செய்யப்படாமல் இருப்பது அவதானிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்றைய தினம்  (27) கடை உரிமையாளரிற்கு எதிராக மேலதிக நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை நேற்றை தினம் விசாரணைக்கு எடுத்து கொண்ட நீதவான், உரிமையாளரிற்கு 45,000/= அபராதம் அறவிட்டதுடன் கடையினை திருத்த வேலைகள் முடிவடையும் வரை சீல்வைத்து மூடுமாறு பொது சுகாதார பரிசோதகரிற்கு கட்டளை வழங்கினார். இதனையடுத்து பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவனால் குறித்த உணவகம் நேற்யை தினம் சீல் வைத்து மூடப்பட்டது.