ஓட்டோ தரிப்பிடத்தில் தகராறு…! மகனைக் காப்பாற்ற முயன்ற தந்தை மரணம்…!
ஓட்டோ தரிப்பிடம் தொடர்பில் ஏற்பட்ட தகராறில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இளைஞர் ஒருவர் தனது ஓட்டோவை நிட்டம்புவ, திஹாரிய பிரதேசத்தில் உள்ள ஓட்டோ தரிப்பிடத்தில் நிறுத்த முற்பட்டபோது அங்கிருந்த ஏனைய சாரதிகள் அந்த இளைஞருடன் தகராறில் ஈடுபட்டனர். இதன்போது, அங்கிருந்த இளைஞரின் தந்தை தனது மகனைக் காப்பாற்ற முற்பட்டபோது தாக்குதலுக்குள்ளாகிக் காயமடைந்தார். இந்நிலையில் அவர் நிட்டம்புவ வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று(28) உயிரிழந்தார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நிட்டம்புவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
இலங்கை வந்த அவுஸ்திரேலிய பெண்ணுக்கு நேர்ந்த அவலம் – உதவுவோருக்கு 5,000 அமெரிக்க டொலர்கள் வெகுமதி
சுற்றுலாவுக்காக இலங்கை வந்த அவுஸ்திரேலிய பெண் ஒருவரின் பணப்பை திருடப்பட்டுள்ளதாக கொழும்பு கோட்டை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த பெண், யூடியூப் சேனல் ஒன்றினை நடாத்தி வருவதாகவும் அதில் காணொளிகளை பதிவிட கடந்த 24 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில், கொழும்பில் இருந்து எல்ல பிரதேசத்திற்கு செல்வதற்காக பேருந்து ஒன்றில் பயணம் செய்த போதே அவரின் பணப்பை இரு நபர்களால் திருடப்பட்டுள்ளது. இது அந்த பேருந்தில் இருந்த சிசிரிவி கமராவலும் பதிவாகியுள்ளது. திருடப்பட்ட அவரின் பணப்பையில், 2,000 அமெரிக்க டொலர்கள், விமான டிக்கெட், கமரா மற்றும் மடிக்கணனி போன்ற பொருட்கள் இருந்ததாக குறித்த பெண் தெரிவித்துள்ளார். அத்துடன், திருடப்பட்ட பையை மீண்டும் அவரிடம் ஒப்படைப்பவருக்கு 5,000 அமெரிக்க டொலர்களை வெகுமதியாக தரவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மர்ம நபரின் கொடூர தாக்குதலில் பறிபோனது குடும்ப பெண்ணின் உயிர்…!
கூரிய ஆயுதமொன்றினால் தாக்கப்பட்டு குடும்ப பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் பாதுக்க, வத்தரக பிரதேசத்தில் இன்று(29) காலை இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பாதுக்க வத்தரக பிரதேசத்தில் வசிக்கும் பெண்ணொருவர் இன்று காலை தனது வீட்டின் முன் அறைக்கு சென்ற போது மர்ம நபரொருவர் திடீரென குறித்த பெண் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நடாத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளார். குறித்த தாக்குதலில் படுகாயமடைந்த பெண் உடனடியாக பாதுக்க மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக மெகொட பொலிஸார் தெரிவித்தனர். வத்தரக, பாதுக்க பிரதேசத்தை சேர்ந்த 65 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதேவேளை குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மெகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பிரான்ஸில் 10 வருட சிறைத்தண்டனை அனுபவிக்கவுள்ள இலங்கை அகதி
பிரித்தானியாவுக்கு இலங்கையர்களை கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள இலங்கை ஏதிலி ஒருவருக்கு பிரான்ஸில் (France) பத்து ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படலாம் என்று அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 2001இல் தனது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் இங்கிலாந்துக்கு சென்றபின் சதாசிவம் சிவகங்கனுக்கு (Sathasivam Sivagankan) புகலிடம் வழங்கப்பட்டுள்ளது. எனினும், இலங்கையில் மோதல்கள் இடம்பெற்ற 2004 முதல் 2005 வரை இலங்கைக்கு திரும்பியதாக குறிப்பிட்டுள்ளது. இந்தநிலையில் இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்திற்கு இலங்கையர்களை கடத்தும் சர்வதேச குழுவின் முன்னணி உறுப்பினராக சிவகங்கன் இருப்பதாக பிரான்ஸின் சட்டத்துறையினர் குற்றம் சுமத்தியுள்ளனர். ருமேனியா, இத்தாலி, ஜெர்மனி, ஹங்கேரி, உக்ரைன், ஸ்லோவேனியா மற்றும் ஒஸ்திரியாவிலிருந்து கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் வளர்ச்சியில் பிரான்சுக்கும் இலங்கையர்கள் கடத்தப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டால் சிவகங்கன் பத்து ஆண்டுகள் வரையான சிறைத்தண்டனைக்கு உள்ளாக வேண்டியிருக்கும். இந்நிலையில் இங்கிலாந்தின் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், அவர் விரைவில் பிரான்ஸிற்கு நாடு கடத்தப்படவுள்ளார். அதுவரை அவரை கண்காணிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வன்னி ஊடகவியலாளரின் புகைப்படங்களுக்கு ஐ.நா அங்கீகாரம்
இலங்கையில் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் வெளியிடப்பட்ட விசேட அறிக்கைக்காக, வன்னியில் முன்னணி தமிழ் ஊடகவியலாளர் ஒருவர் எடுத்த புகைப்படங்களை ஐக்கிய நாடுகள் சபை பயன்படுத்தியுள்ளது. மே 21 அன்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தால் வெளியிடப்பட்ட “பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் மரபு இலங்கையை ஆட்டிப்படைக்கிறது” (Legacy of enforced disappearances haunts Sri Lanka) என்ற கட்டுரைக்கு புகைப்பட ஊடகவியலாளர் கனபதிப்பிள்ளை குமணன் எடுத்த புகைப்படங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இலங்கையில் யுத்தத்தின் போது பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது எனக் கேட்டு இலங்கையில் நீண்ட காலமாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் சங்கத்தைச் சேர்ந்த தாய்மார்களின் அனுபவங்களை மையப்படுத்தி இக்கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையில் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் உள்ளுர் பொறுப்புக்கூறல் இல்லாமை தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையுடன் இணைந்து இந்தக் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. “ஒருவேளை நான் மீண்டும் என் மகனைப் பார்ப்பேன் அல்லது குறைந்தபட்சம் அவன் எங்கே புதைக்கப்பட்டான் என்பதைக் கண்டுபிடிப்பேன்.” கடந்த 2009ஆம் ஆண்டு முதல் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை கண்டுபிடிக்கக் கோரி முடிவில்லாத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் 72 வயதான தாய் ஒருவர் இவ்வாறு ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள கட்டுரையில் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். அகதிகள் முகாம்களுக்கு, கிராமங்களில் உள்ள வெகுஜன புதைகுழிகளுக்குச் சென்றதோடு, ஏனைய தாய்மார்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் மனைவிமாருடன் 2,650 நாட்களைக் கடந்து அமைதியான ஆர்ப்பாட்டங்களை நடத்தி வரும் அவர், அதிகாரிகளிடம் கேட்கின்றார் எங்கள் பிள்ளைகள் எங்கே? எங்கள் கணவர்மார் எங்கே? இலங்கையில் உள்நாட்டுப் போர் 15 ஆண்டுகளுக்கு முன்பே முடிவுக்கு வந்தாலும், பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உண்மைக்காகவும், தங்கள் அன்புக்குரியவர்களுக்கான நீதிக்காகவும் தொடர்ந்து போராடி வருகின்றனர். ஒன்றரை தசாப்தங்களுக்குப் பிறகும், அவர்கள் தங்கள் அன்புக்குரியவர்களின் தலைவிதி அல்லது இருப்பிடம் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை. “பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் மரபு இலங்கையை ஆட்டிப்படைக்கிறது” என்ற தலைப்பில் வெளியிடப்படடுள்ள இந்த கட்டுரையில் பயன்படுத்தப்பட்டுள்ள இரண்டு புகைப்படங்களின் உரிமையாளரான கனபதிப்பிள்ளை குமணன் பொதுவாக போரினால் பாதிக்கப்பட்ட மக்களைப் பற்றி வன்னியில் பல ஆண்டுகளாக அறிக்கையிட்டு வருகின்றார். ஊடகங்களில் பாதுகாப்புப் படையினரின் அச்சுறுத்தல்களுக்கு மேலதிகமாக, மூன்று வருடங்களுக்கு முன்னர் ஒரு போலி மரக் கடத்தலை அம்பலப்படுத்தியதற்காக அவர் தனது தொழில்முறை நண்பரான சண்முகம் தவசீலனுடன் சேர்ந்து கடுமையான தாக்குதலையும் சந்திக்க வேண்டியிருந்தது. வன்னியில் ஊடகவியலாளர்களுக்கு எதிரான பல வன்முறைச் சம்பவங்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
20 சதவீதத்தால் குறையும் மின்சாரக் கட்டணம்..! இன்று வெளியான முக்கிய அறிவிப்பு
மின்சாரக் கட்டணத்தை 10 முதல் 20 வீதம் வரை குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும், மின்சார சபையை மறுசீரமைத்தால் மின்சாரம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் தனுஷ்க பராக்கிரமசிங்க தெரிவித்துள்ளார் கொழும்பில் இன்று விசேட செய்தியாளர் மாநாட்டை நடத்தும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த வருடத்தின் இரண்டாவது மின் கட்டண திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான பிரேரணையை ஜூலை 1 ஆம் திகதி மின்சார சபை மற்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கவுள்ளதாகவும், அங்கு மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என அவர் தெரிவித்தார். மேலும் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ள மின்சார சபை மறுசீரமைப்பு சட்டத்தின் மூலம் மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கு தேவையான ஏற்பாடுகள் இடம்பெற்றதுள்ளதாகவும், வெளிநாட்டு நிறுவனங்களின் தேவைக்கேற்ப மின்சார சபையின் தற்போதைய நிர்வாகம் செயற்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான 1700 ரூபா சம்பள விடயத்தில் எவ்வித விட்டுக்கொடுப்புக்கும் இடமில்லை…!ராமேஷ்வரன் எம்.பி தெரிவிப்பு…!
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான 1700 ரூபா சம்பள விடயத்தில் எவ்வித விட்டுக்கொடுப்புக்கும் இடமில்லை என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்துள்ளார். அமரர் ஆறுமுகன் தொண்டமானின் ஜனன தினத்தை முன்னிட்டு, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் ஆலோசனைக்கமைய ராமேஷ்வரன் நிதி ஒதுக்கீட்டின் மூலம் கொத்மலை கல்வி வலயத்துக்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் இசைக்கருவிகள் வழங்கும் நிகழ்வு இன்று(29) பூண்டுலோயா தமிழ் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ்வரன் இவ்வாறு தெரிவித்தார். கடந்த முறை சம்பள நிர்ணயசபை ஊடாக ஆயிரம் ரூபா சம்பளம் நிர்ணயிக்கப்பட்டபோதும் அதனை வழங்க முடியாது எனக்கூறி தோட்ட நிர்வாகம் நீதிமன்றத்தை நாடியது. எனினும், இறுதியில் நாம் வெற்றிபெற்றோம். இந்நிலையில் பல சுற்று பேச்சுகளின் பின்னரே இம்முறை ஆயிரத்து 700 ரூபா நிர்ணயிக்கப்பட்டு, அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் கலந்துரையாடல்களில் கம்பனிகள் பங்கேற்கவில்லை. அது அவர்களின் தவறு. எனவே, வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள தொகையை வழங்க முடியாவிட்டால் தோட்டங்களை அரசாங்கத்திடம் ஒப்படைத்துவிட்டு, கம்பனிகள் வெளியேறலாம். இது பற்றி அரசாங்கமும் அறிவித்துவிட்டது. ஆயிரத்து 700 என்பது தேர்தல் வாக்குறுதி அல்ல, எதிரணியில் உள்ள சிலர்தான் சம்பள விவகாரத்தை வைத்து அரசியல் நடத்துகின்றனர். கம்பனிகளை நீதிமன்றம் செல்வதற்கு தூண்டியதுகூட இந்த எதிரணி தரப்புதான். நாட்டில் உள்ள சட்டத்தின் பிரகாரம் முதலில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும். தேர்தல் தொடர்பில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் கருத்துகளை வெளியிடலாம். ஆனால் அரசமைப்பின் பிரகாரமே செயற்பாடுகள் இடம்பெறும். அந்த வகையில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கின்றோம் எனவும் தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை காரியாலயத்திற்கு முன் போராட்டம் – குவிக்கப்பட்ட பொலிஸார்..!
ஸ்ரீகொத்தாவில் அமைந்துள்ள ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை காரியாலயத்திற்கு முன்பாக போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. மக்கள் போராட்டத்தின் குடிமக்கள் என்ற அமைப்பின் உறுப்பினர்களே இன்று இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர், பாலித ரங்கே பண்டார நேற்றைய ஊடக சந்திப்பில் முன்வைத்த கருத்தினை எதிர்த்தே தற்போது ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலை 2 வருடங்கள் பிற்போடவேண்டும் என அவர் முன்வைத்த கருத்தானது ஜனநாயகத்துக்கு விரோதமானது என ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறியுள்ளனர். மேலும் உடனடியாக ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்தும் முகமாக பொலிஸார் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
உயர்தரப்பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் தினம் – அமைச்சர் சுசில் அறிவிப்பு
2023ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இந்த மாதம் 31ஆம் திகதி வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். க.பொ.த உயர்தரப் பரீட்சை கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்றிருந்த நிலையில் 346 976 பரீட்சாத்திகள் நாடுமுழுவதிலுமிருந்து தோற்றியுள்ளனர். இதில் 281,445 பாடசாலைப் பரீட்சாத்திகளும் 65,531 தனிப்பட்ட பரீட்சாத்திகளும் உள்ளடங்குவர். இந்நிலையில் மே 31 முதல் மாணவர்கள் தங்கள் முடிவுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் அதிகாரபூர்வ இணையதளம் ஊடாக பார்வையிடலாம் என சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டுள்ளார்
தமிழ்ப் பொது வேட்பாளர் விடயத்தை குழப்பியடிக்கின்றார் சுமந்திரன் எம்.பி…! விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு…!
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தரப்பு சார்பில் தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்குவது தொடர்பில் இடம்பெற்றுவரும் முன்னெடுப்புக்களை பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் குழப்பியடிக்கின்றார் என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார். தமிழ் பொது வேட்பாளர் குறித்து சுமந்திரன் எம்.பி. அடுத்த மாதம் 9ஆம் திகதி ஏற்பாடு செய்துள்ள கருத்துப் பரிமாற்றம் நிகழ்வு தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே சி.வி.விக்னேஸ்வரன் இவ்வாறு தெரிவித்தார். தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பான இந்தக் கூட்டத்துக்கு எனக்கொரு அழைப்பும் வரவில்லை. ஆனால், இவ்வாறான கருத்துப் பரிமாற்ற கூட்டங்கள் என்பது எங்களைத் திசை திருப்புவதாகவே அமையும். ஏனென்றால் தேசியத்தோடு இணைந்திருக்கும் எங்கள் சிவில் சமூகத்தினர் தமிழ் மக்கள் சார்பிலே ஒருவரைப் பொது வேட்பாளராக நிறுத்துவது என்ற முடிவுக்கு வந்து விட்டார்கள். இதனை முன்வைத்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் மக்களுடனும், பல அரசியல் தரப்பினர்களுடனும் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றார்கள். இவ்வாறாக பொதுவான நிலைப்பாடு எடுக்கப்பட்டு அதனை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கும்போது இந்த விவகாரத்தைப் பொது வெளியில் கொண்டு சென்று கருத்துப் பரிமாற்றம் என்று சொல்லி முரண்பாட்டுக்குரியதாகக் கொண்டு வந்து நிறுத்துவது எங்களைத் திசை திருப்புவதாகவே அமையும். ஆகவே, எங்களுடைய இந்த நிலைப்பாட்டுக்கு எதிராக யாராவது ஏதாவது சொல்ல வேண்டுமாக இருந்தால் எப்பவும் எதனையும் சொல்லட்டும். அதற்குரிய பதில்களை நாங்கள் கூறுவோம். அதாவது பொது வேட்பாளரைக் கொண்டு வந்து நிறுத்தினால் தமிழ் மக்கள் வாக்களிக்காமல் விடுவார்கள் அல்லது அப்படி, இப்படி என்று ஏதாவது காரணங்களைச் சொன்னால் அதற்குரிய பதில்களை வழங்கவும் நாங்கள் தயாராக இருக்கின்றோம். நாங்கள் எடுத்துக்கொண்ட தீர்மானத்தில் இருந்து நழுவக் கூடாது. அந்தத் தீர்மானத்தில் இருந்து எங்களை அங்கு, இங்கு எனக் கொண்டு செல்ல அல்லது வழிநடத்தப் பார்க்கின்றார்கள். ஆகவே, எங்களுடைய சிவில் சமூகத்தினர் இது சம்பந்தமான நடவடிக்கைகளில் மிகக் கவனமாக இறங்க வேண்டும். எமது தீர்மானம் குறித்து எந்தவிதமான கருத்துப் பரிமாற்றமும் தேவையில்லை. ஏனெனில் நாங்கள் ஒரு முடிவை எடுத்துவிட்டோம். அது சம்பந்தமாக ஆதரவு அல்லது எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் தங்களுடைய கருத்துக்களை எங்களுக்குத் தருகின்றபோது அதற்குப் பதிலைக் கொடுப்பது எங்களுடைய கடமை. அதனை விடுத்து இந்த விடயத்தைப் பொது வெளியில் அல்லது பொது மன்றத்தில் பேசவும் அதைப் பெரிதாக்கவும் வேறுவிதமாக இதைத் திசை மாற்றிக் கொண்டு செல்ல நினைப்பதும் பிழையான ஒரு வழிமுறை என்பது என்னுடைய கருத்தாகும். மேலும், இந்தச் சந்திப்பு தொடர்பில் எனக்கும் எதுவும் அறிவிக்கப்படவில்லை. அதற்கு நான் அழைக்கப்படவும் இல்லை. பத்திரிகைகள் ஊடாகவே இதனை நான் பார்த்தேன். அதேபோன்று வேறு யாரும் எனக்கு இது தொடர்பில் எதுவும் தெரிவிக்கவும் இல்லை. இருப்பினும் இந்த நடவடிக்கை மிகவும் பிழையானது. அவ்வாறான ஒரு கருத்துப் பரிமாற்றம் இருக்கக் கூடாது. மீண்டும் மீண்டும் சொல்கின்றோம் நாங்கள் ஒரு முடிவை எடுத்து இருக்கின்றோம். அந்த முடிவுக்கு எதிராக யாராவது ஒரு தமிழ் மகன் எதிர்க் கருத்துக்களைத் தெரிவித்தால் அதற்குப் பதில் சொல்ல வேண்டியது எங்களுடைய கடமை. அதனடிப்படையில் பதில் வழங்குவோம். ஏனெனில் நாங்கள் எடுத்த அந்த முடிவிலே எங்களிடம் திடமான கருத்து இருக்கின்றது. அதற்கான அடிப்படை அத்திவாரம் நன்றாக இருக்கின்றது. நாங்கள் எவருக்கும் பயப்பட வேண்டியதில்லை. எந்தக் கேள்வி கேட்டாலும் அதற்கு எங்களால் பதில் சொல்ல முடியும். இதை விட்டுவிட்டு இப்படி, அப்படி அங்கு இங்கு என நழுவிப்போவது எங்கள் தமிழ்த் தேசியத்துக்கும் கூடாது. சிவில் சமூகத்தினர்களுக்கும் அது கூடாத ஒரு விடயம். சுமந்திரன் தமிழ்த் தேசியத்தோடு நின்றவர் அல்ல. இதுவரையில் நமக்குத் தெரிந்த வரையில் தமிழ்த் தேசியத்தோடு ஒன்றியவரும் அல்ல. எனக்குப் பயமில்லை, நான் அதைச் சொல்லுவேன், இதைச் சொல்லுவேன் என்று அவர் சொல்லுவதிலிருந்தே அது தெரியும். பொது வேட்பாளர் என்ற விடயத்தில் அவருக்கு ஈடுபாடு இல்லை. அவரைப் பொறுத்தவரையில் ஏதோ தெற்கில் இருக்கும் ஒரு வேட்பாளருக்கு அது யாரோ ஒருவருக்கு உதவி செய்ய வேண்டும் அல்லது ஆதரவு வழங்க வேண்டும் என்றும், அதிலிருந்து தமக்கு சில நன்மைகள் கிடைக்க வேண்டும் என்றும் எண்ணம் இருக்கக்கூடும். ஆனால், அதற்காகத் தமிழரசுக் கட்சியை தன்னுடைய கைப்பொம்மையாகச் சுமந்திரன் மாற்றக்கூடாது. ஏனென்றால் நாங்கள் இன்னமும் அது சம்பந்தமான ஒரு தீர்மானத்துக்கு வரவில்லை என்று அவர் சொல்லுகின்றார். அவ்வாறு அவர் கூறுவது தன்னுடைய கருத்துக்களைத்தான். இந்தக் கருத்துக்களைச் சிறீதரன் தெரிவிக்கவில்லை. சிலவேளை சிறீதரன் பொது வேட்பாளருக்குத் தான் ஆதரவு என்றும், அவருக்குத் தான் வாக்களிக்க வேண்டும் என்று கூட கூறலாம். இந்த மூன்று பிரதான வேட்பாளர் தொடர்பில் எங்களுக்கு எந்த விதமான கவலையும் இல்லை என்று கூட சிறீதரனால் சொல்லக்கூடும். ஆக மொத்தத்தில் சுமந்திரன் கூறியது அவருடைய கருத்துத் தவிர கட்சி நிலைப்பாடு அல்ல. அவருடைய அந்தக் கருத்தை மேலே தூக்கிப் பிடிப்பது தமிழ்த் தேசியத்துக்கு இழுக்காக இருக்கின்றது. மேலும் தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் என்ற முறையில் சுமந்திரன் பேசியது என்றால் இப்போது தமிழரசுக் கட்சிக்குத் தலைவர் ஒருவர் இருக்கின்றாரா? இப்ப அந்தக் கட்சிக்குள் பதவி நிலைகளுக்குக் குழப்பங்களுக்கு மத்தியில் பல விடயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அப்படிப் பார்த்தால் இவர் பழைய ஊடகப் பேச்சாளர்தான். இருந்தும் இப்பவும் அவர் தொடர்ந்து ஊடகப் பேச்சாளராக இருக்கின்றாரா என்று தெரியவில்லை எனவும் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.