Search
Close this search box.

வவுனியாவில் 80 போதை மாத்திரைகளுடன் 20 வயது இளைஞன் கைது..

வவுனியாவில் 80 போதை மாத்திரைகளுடன் 20 வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட போதை ஒழிப்பு பிரிவு பொலிசார் தெரிவித்தனர். வவுனியா குருமன்காடு பகுதியில் மாவட்ட போதை ஒழிப்பு பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் கஜேந்திரன் தலைமையிலான பொலிசார் நேற்று (28) மாலை விசேட சோதனை நடவடிக்கை ஒன்றினை மேற்கொண்டனர். இதன்போது இளைஞர் ஒருவரிடம் இருந்து 80 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டன. இதனையடுத்து குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டதுடன், அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் வியாபார நோக்கில் குறித்த போதை மாத்திரைகளை வவுனியா, குருமன்காடு பகுதிக்கு கொண்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது. வவுனியா, பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 20 வயது இளைஞரே கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளின் பின் குறித்த இளைஞரை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

வாகன இறக்குமதி தொடர்பில் மத்திய வங்கியின் நிலைப்பாடு!

வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்த அரசாங்கம் தீர்மானிக்கிறது என்றால், அதற்கான வெளிநாட்டு கையிருப்பை நிர்வகிக்கும் திறன் மத்திய வங்கிக்கு உண்டு என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். நேற்று (28) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் மத்திய வங்கியின் ஆளுநர் மேலும் தெரிவிக்கையில், மத்திய வங்கி தனது கொள்கை வட்டி வீதத்தை மாற்றியமைக்காமல் பராமரிக்க தீர்மானித்தள்ளதாக தெரிவித்தார். “ஏற்கனவே சில வாகனங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. வாகனங்களின் இறக்குமதியை படிப்படியாக தளர்த்துவது முக்கியமான முடிவு. அந்நியச் செலாவணியை எங்களால் நிர்வகிக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.”

இன்றைய வானிலை முன்னறிவித்தல்…

தென்மேல் பருவப் பெயர்ச்சி நிலைமை காரணமாக நாடு முழுவதும் தற்போது நிலவும் மழை நிலைமையும் காற்று நிலைமையும் மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான  பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணம், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, மேல், தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படுகிறது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

வௌ்ள அபாய எச்சரிக்கை குறித்து மீண்டும் அறிவித்தல்!

அத்தனகலு ஓயாவிற்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்படும் என நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தாழ்நிலங்களில் வசிக்கும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அந்த பகுதிகளில் உள்ள வீதிகள் மற்றும் கிளை வீதிகளில்  பயணிக்கும் போது பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, களுகங்கையில் குடா கங்கைக்கு வழங்கப்பட்டுள்ள வெள்ள அபாய எச்சரிக்கை அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.