ரி20 உலகக் கிண்ணத் தொடரின் நெதர்லாந்து அணிக்கு எதிராக நேற்று இடம்பெற்ற முதல் பயிற்சி ஆட்டத்தில் இலங்கை அணி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
அமெரிக்காவின் புளோரிடாவில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி நெதர்லாந்து அணியை முதலில் துடுப்பெடுத்தாட அழைத்தது.
அதன்படி களம் இறங்கிய நெதர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 181 ஓட்டங்களை எடுத்தது.
பந்து வீச்சில் தில்ஷான் மதுஷங்க 39 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
உலகக் கிண்ணத் கிரிக்கெட் தொடரின் முதல் சுற்றில் நெதர்லாந்துக்கு எதிராக இலங்கைக்கு போட்டி உள்ளதால், இலங்கை அணியின் முக்கிய பந்துவீச்சாளர்களான வனிந்து ஹசரங்க, மதீஷ பத்திரன, மஹீஷ் தீக்ஷன ஆகியோர் பந்து வீசவில்லை.
இந்நிலையில், 182 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இலங்கை அணியால் 18 ஓவர்கள் 5 பந்துகளில் அனைத்து விக்கெட்டுக்களை இழந்து 161 ஓட்டங்களை மட்டுமே எடுக்க முடிந்தது.
இலங்கை அணி சார்பில் அணித்தலைவர் வனிந்து ஹசரங்க அதிகபட்சமாக 43 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
தசுன் ஷனக 20 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 35 ஓட்டங்களையும் தனஞ்சய டி சில்வா 31 ஓட்டங்களையும் பெற்றனர்.
இலங்கை அணி பங்கேற்கும் இரண்டாவது பயிற்சி ஆட்டம் மே 31ம் திகதி அயர்லாந்துக்கு எதிராக நடைபெற உள்ளது.