Search
Close this search box.

திலித் – கம்மன்பில – விமல் புதிய அரசியல் கூட்டணி!

ஒன்றுபட்ட நாடு – மகிழ்ச்சியான தேசம்’ என்ற தொனிப்பொருளில் அரசியல் கட்சிகள் சிலவும் சிவில் அமைப்புகள் சிலவும் ஒன்றிணைந்து ‘சர்வ ஜன பலய’ என்ற புதிய அரசியல் இயக்கம் ஒன்றை இன்று (27) உருவாக்கியுள்ளனர். அதற்காக மவ்பிம ஜனதா கட்சி, பிவித்துரு ஹெல உறுமய, தேசிய சுதந்திர முன்னணி, ஜனநாயக இடதுசாரி முன்னணி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தலைமையிலான சுயேட்சை உறுப்பினர்களும் குறித்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர். குறித்த அரசியல் இயக்கத்தை அமைப்பதற்கான எழுத்துமூல ஒப்பந்தம் இன்று கொழும்பில் கைச்சாத்திடப்பட்டது.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் சரிவு…!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றையதினம்(25) சற்று சரிவை  சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதனடிப்படையில், செலான் வங்கியில்- அமெரிக்க டாலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விகிதங்கள் மாற்றமின்றி ரூ. 293.75 மற்றும் ரூ. முறையே 303.25. மக்கள் வங்கியில்- அமெரிக்க டாலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விகிதங்கள் ரூ. 294.24 முதல் ரூ. 294.59 மற்றும் ரூ. 304.20 முதல் ரூ. முறையே 304.56. கொமர்ஷல் வங்கியில்- அமெரிக்க டாலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விகிதங்கள் ரூ. 293.33 முதல் ரூ. 293.58 மற்றும் ரூ. 303.50 முதல் ரூ. முறையே 303.75. சம்பத் வங்கியில்- அமெரிக்க டாலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விலைகள் ரூ. 295 முதல் ரூ. 295.50 மற்றும் ரூ. 304 முதல் ரூ. முறையே 304.50 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையிலுள்ள வளம் தொடர்பில் போட்டியில் இறங்கியுள்ள உலக நாடுகள்…

இலங்கையின் மூலோபாய சொத்துக்கள் மற்றும் வளங்கள் மீது உலகளாவிய கவனம் காலணித்துவ ஆட்சிக்காலத்தில் இருந்தே தொடர்ந்து வருகிறது. இந்தவகையில் நாட்டின் கிராஃபைட் (graphite) துறையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கான போட்டியில் சீனா, இந்தியா, அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே இந்த தொழில்துறையில் கனடா அவுஸ்திரேலியா நிறுவனங்கள் தங்களை ஈடுபடுத்தியுள்ள நிலையிலேயே இந்தியா சீனா அமெரிக்கா போன்ற நாடுகள் முதலீடு செய்வதற்கான ஆர்வத்தை வெளியிட்டுள்ளன. இலங்கையில் உயர்தர காரீயம் காணப்படுவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். புவியியல் மற்றும் சுரங்க ஆய்வு பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் ரஞ்சித் பிரேமசிறி இந்தியா சீனா உட்பட பல வெளிநாடுகள் இந்த துறையில் முதலீடு செய்ய ஆர்வமாகவுள்ளதாக தெரிவித்துள்ளார். யார் அதிகபட்ட மதிப்புக்கூட்டலில் ஈடுபடுகின்றார்கள்,  மேம்பட்ட தொழில்துறைகளிற்காக பயன்படுத்துகின்றார்கள் என்பதை பார்க்கவேண்டும். இலங்கையில் கைவிடப்பட்ட 3000 சுரங்கங்கள் உள்ளன நாங்கள் அதிகமாக கோரலாம் என அவர் தெரிவித்துள்ளார்.  

அதிகாலையில் பயங்கர விபத்து; குடைசாய்ந்த கார்…!

மட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புனாணை பகுதியில் கார் விபத்தில் கணவன் மற்றும்  மனைவி ஆகியோர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்துச் சம்பவம் இன்று  காலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது. ஓட்டமாவடி பகுதியைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் அல் ஹாஜ் ஹலால்தீன் என்பவர் தனது மனைவி, மூன்று பிள்ளைகளுடன் கொழும்புக்கு சென்று ஊர் திரும்பிக் கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. கார் வீதியை விட்டு விலகி குடைசாய்ந்ததில் காரில் பயணித்த கணவன் மற்றும் மனைவி இருவரும் காயமடைந்துள்ளனர். காரில் பயணித்து மூன்று பிள்ளைகளும் காயங்களின்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். இவ் விபத்தில் காயமடைந்த கணவனும் மனைவியும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பொதுத் தேர்தல் நடத்த நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை..! தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு

இந்த ஆண்டில் பொதுத் தேர்தல் நடத்துவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என தேர்தல்கள்  ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எனினும், ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள்  ஆணைக்குழுவின் பிரதானி ஏ.எல்.ரட்நாயக்க தெரிவித்துள்ளார். பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டுமாயின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதற்கான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டுமென குறிப்பிட்டுள்ளார். இந்த ஆண்டில் தேர்தலுக்காக பத்து பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குறித்த நிதியானது முழுக்க முழுக்க ஜனாதிபதி தேர்தலை நடத்தும் நோக்கில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் அதன் பின்னர் பொதுத் தேர்தல் நடத்துவதற்காக நிதியை ஒதுக்கீடு செய்ய முடியாது என அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியினால் மட்டுமே இதற்கான நிதியை ஒதுக்கீடு செய்ய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முல்லைத்தீவு கடற்கரைப்பகுதியை ஆக்கிரமித்துள்ள தனியார் நிறுவனம்…! போராட்டத்தில் குதித்த கடற்றொழிலாளர்கள்…!

சுதந்திரமாக மீன்பிடிக்க அனுமதிக்க கோரியும் வீதி மறிக்கப்பட்டதை கண்டித்தும் தியோநகர் மீனவர்கள் நேற்றையதினம்(26) இரவில் இருந்து தொடர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, முல்லைத்தீவு கரையோர கிராமங்களில் ஒன்றான தியோநகர் பகுதியில் பிராதான வீதியினையும், கடற்கரையினையும் இணைக்கும் இணைப்பு வீதியானது சில  தரப்பினரால் மறித்து வேலி இடப்பட்டுள்ளது. குறித்த  வீதியூடாக மீனவர்கள் மீன்பிடிக்கு செல்ல முற்பட்ட நிலையில் குறித்த  வீதியானது வேலி அடைக்கப்பட்டு கற்கள் போடப்பட்டு மூடப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்த நிலையில்,  தியோ நகர் மக்கள் ஒன்று கூடி குறித்த வீதித்தடைகள், வேலிகளை அகற்றியுள்ளனர். இது குறித்து குறித்த பகுதி மக்கள் கருத்து தெரிவிக்கையில், குறித்த பகுதியில் சுற்றுலாத்தளம் ஒன்றினை அமைத்துள்ள தனியார்  நிறுவனம் ஒன்று தொடர்ச்சியாக மீனவர்களுக்கு தொல்லை கொடுத்து வருவதாகவும், தமது வளங்களை சுரண்டி வருகின்றனர். அதேவேளை, தமது  மீன்பிடிப்படகுகள், வலைகளை உள்ளே வைத்தே வேலைக்கு செல்லும்  பாதையினை அடைத்ததாகவும், கரையோரத்தில் மீன்பிடிப்பதற்கு சுதந்திரமாக விடுவதில்லை என்றும் மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது தொடர்பில் அதிகாரிகளுக்கு முறையிட்டும் பயன் கிடைக்கவில்லை என்றும் சம்பவ இடத்திற்கு வந்த பொலிசாரும் உரிய முறையில் தீர்வினை வழங்கவில்லை என்றும் தமக்கான நிரந்தரத்தீர்வு கிடைக்கும் வரை தொடர் போராட்டத்தில் குறித்த இடத்தில் ஈடுபடப்போவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். சம்பவ இடத்திற்கு முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் நேரில் சென்று மக்களது பிரச்சினைகளை கேட்டறிந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பிறந்த குழந்தைக்கு நேர்ந்தது என்ன…? குற்றம் சுமத்திய உறவினர்…

பிரசவத்தின் போது உயிரிழந்தாக கூறப்படும் குழந்தையின் சடலத்தை தமக்கு காட்டுவதற்கு மாத்தறை புதிய மாவட்ட வைத்தியசாலையின் பணிக்குழாமினர் நடவடிக்கை எடுக்கவில்லை எனஅந்த குழந்தையின் உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். சடலம் தொடர்பில் வைத்தியசாலை பணிக்குழாமினர் மூன்று தடவைகள் முன்னுக்கு பின் முரணான கருத்துக்களை வெளியிட்டமை தொடர்பில் பலத்த சந்தேகம் நிலவுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். மாத்தறை வெலிகம பகுதியைச் சேர்ந்த 24 வயதான காவிந்த்யா மதுஷானி தனது முதல் குழந்தையைப் பிரசவிப்பதற்காக மாத்தறை புதிய மாவட்ட பொது வைத்தியசாலையில் கடந்த 22ஆம் திகதி அனுமதிக்கப்பட்டார். மதுஷானி அந்த மருத்துவமனையில் சேவையாற்றும் மகப்பேற்று மருத்துவர் ஒருவரிடம் தனியார் மருத்துவ மையத்தில் மருத்துவ பரிசோதனை செய்துள்ள நிலையில் பிரசவத்திற்காக அந்த மருத்துவமனை தேர்வு செய்யப்பட்டது. பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்று நடத்தப்பட்ட ஸ்கேன் மற்றும் அதற்கு முன்னர் தனியார் சிகிச்சை மையத்தில் நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையிலும் வயிற்றில் குழந்தை ஆரோக்கியமாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அண்மையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மதுஷானி தனது முதல் குழந்தையைப் பெற்றெடுத்துள்ள போதும், பின்னர் குழந்தை இறந்ததாக மருத்துவமனை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதற்கமைய வைத்தியசாலையின் பிரேத அறையில் உள்ள சடலத்தை அடக்கம் செய்ததற்காக மாத்தறை மாநகர சபைக்கு 2500 ரூபாய் பணம் செலுத்தி பற்றுச்சீட்டை கொண்டு வருமாறு வைத்தியசாலை பணிக்குழாமினர் உறவினர்களிடம் தெரிவித்துள்ளனர். அதன்படி, உரிய தொகையை மாநகர சபைக்கு செலுத்த நடவடிக்கை எடுத்திருந்தனர். எனினும் குழந்தையின் சடலத்தை தந்தையிடம் காட்டாமல் புதைத்தமை தொடர்பில் வைத்தியசாலை ஊழியர்களிடம் உறவினர்கள் வினவிய போது சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவித்தனர். உயிரிழந்த குழந்தையின் சடலத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில் உறவினர்கள் நேற்று முன்தினம் (25) இரவு வரை வைத்தியசாலையில் காத்திருந்த போதிலும் வைத்தியசாலை பணிக்குழாமினர் எவரும் சடலம் தொடர்பில் உறுதியான அறிவிப்பை வெளியிடவில்லை. இவ்வாறானதொரு பின்னணியில் இச்சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை அதிகாரிகளை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வினவ முற்பட்ட போதும் எவரும் அதுற்கு பதில் அளிக்கவில்லை.

ஒரே இடத்தில் சடலமாக மீட்கப்பட்ட 07 யானைகள்!

பொலன்னறுவை தேசிய பூங்காவின் ஹந்தபன்வில்லு ஏரியில் உயிரிழந்த ஏழு காட்டு யானைகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் பின்னர் காட்டு யானைகள் ஓடை கால்வாயை கடக்கும் போது சேற்றில் அடித்து செல்லப்பட்டிருக்கலாம் என வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிரித்தலை வனவிலங்கு கால்நடை வைத்திய பிரிவின் வைத்திய குழுவினர் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இந்தியாவில் மோசடியில் ஈடுபட்ட இலங்கையர் ஒருவர் பல போலி ஆவணங்களுடன் கைது..!

போலி ஆவணங்களை தயாரித்து மோசடியில் ஈடுபட்ட இலங்கையர் ஒருவர் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 45 வயதான உமேஷ் பால ரவீந்திரன் என்பவரே இந்திய மத்திய குற்றப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 2010ஆம் ஆண்டு இந்தியாவுக்குச் சென்ற குறித்த நபர், 2014ஆம் ஆண்டு சட்டவிரோதமான முறையில் அரச ஆவணங்களைத் தயாரித்து மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பின்னர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார். இவர் கடந்த 2016ஆம் ஆண்டு சட்டவிரோதமாக இந்தியாவுக்குச் சென்று கர்நாடகாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தங்கியிருந்து இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சந்தேக நபரால் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட ஆவணங்கள், சாரதி அனுமதிப்பத்திரங்கள், கைத்தொலைபேசிகள் மற்றும் கைத்துப்பாக்கி ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. சந்தேகத்திற்குரிய இலங்கையர் கைது செய்யப்பட்ட பின்னர், அவர் தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் இலங்கைக்கு தப்பிச் செல்ல முயன்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் விமான நிலையத்தில் இருந்தபோது, ​​பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் – வெளியான அறிவிப்பு…!

2023 ஆம் ஆண்டிற்கான கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இந்த வார இறுதியில் வெளியிடப்படும் என பரீட்சை திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேவேளை பரீட்சை பெறுபேறுகளை வெளியிடும் நடவடிக்கைகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன. கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை 281,445 பாடசாலை விண்ணப்பதாரர்களும் 65, 531 தனியார் விண்ணப்பதாரர்களும் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை இன்று அல்லது நாளை பெறுபேறுகள் வெளியாகும் என்ற சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களை நம்ப வேண்டாம் என பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.