உடன் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும்: விடுக்கப்பட்ட அவசர அறிவுறுத்தல்…
தென்மேற்கு பருவமழை தீவிரம் காரணமாக, தீவைச் சுற்றியுள்ள கடற்பரப்புகள் கொந்தளிப்பாகக் காணப்படலாம், எனவே மீள் அறிவித்தல் வரை மீன்பிடி மற்றும் கப்பல் போக்குவரத்தில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு கடற்றொழில் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. வங்காள விரிகுடா மற்றும் அரபிக் கடல் பகுதியில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 முதல் 70 கிலோ மீற்றர் வரை அதிகரிக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் கடற்தொழில்களில் ஈடுபடுவோர் இருப்பின், அவர்கள் விரைவில் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் கடற்றொழில் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. அத்துடன், தற்போது பெய்து வரும் பருவ மழையினால் அனர்த்தம் ஏற்பட்டால், அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அவசர அழைப்பு இலக்கமான 117க்கு அறிவிக்குமாறு திணைக்களம் மக்களைக் கோரியுள்ளது. தென்மேற்கு பருவப் பெயர்ச்சி காரணமாக தற்போது நிலவும் மழை மற்றும் காற்றுடன் கூடிய வானிலை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது. அத்துடன் சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களிலும் இன்றைய தினம் (27.05.2024) 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மியன்மாரில் சிக்குண்ட இலங்கையர்களை மீட்க தாய்லாந்துடன் கைகோர்க்கும் அரசு
மியன்மார் சைபர் குற்றவலயத்தில் சிக்குண்டுள்ள இலங்கையர்களை மீட்பதற்கான ராஜதந்திரமட்ட பேச்சுவார்த்தை நிமித்தம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று தாய்லாந்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ளது. அந்தவகையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான வசந்த யாப்பா பண்டார, ஜே.சி. அலவத்துவல மற்றும் சுஜித் சஞ்சய் பெரேரா ஆகியோர் இன்று அதிகாலை நாட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளனர். குறித்த குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை 01.10 அளவில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமானமூடாக தாய்லாந்தின் பாங்கொக் நோக்கி சென்றுள்ளனர். மியன்மார் சைபர் குற்றவலயத்தில் சிக்குண்டுள்ள இலங்கையர்களை மீட்பது தொடர்பாக மியன்மார் மற்றும் ரஷ்யாவில் 5 நாட்கள் தங்கியிருந்து பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த குழுவினர் தாய்லாந்து மற்றும் மியான்மர் மகாநாயக்கர்கள் மற்றும் ரஷ்ய தூதரக அதிகாரிகளையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதியின் வடக்கு விஜயத்தில் புறக்கணிக்கப்பட்ட பிராந்திய ஊடகவியலாளர்கள்
ஜனாதிபதியின் வடக்கு விஜயத்தின் போது வடக்கு மாகாண (Northern Province) பிராந்திய ஊடகவியலாளர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக ஊடகவியலாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். வடக்கு மாகாணத்திற்கு கடந்த வெள்ளிக்கிழமை விஜயம் செய்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremsinghe) யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா என நான்கு மாவட்டங்களிலும் இடம்பெற்ற பல்வேறு நிகழ்வுகளில் மூன்று தினங்களாக கலந்து கொண்டுள்ளார். இதன்போது ஜனாதிபதி செயலகத்தால் தெற்கில் இருந்து அழைத்து வரப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு மாத்திரம் நிகழ்வுகளில் செய்தி அறிக்கையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஊடக அமைச்சில் அங்கீகரிக்கப்பட்ட ஊடக அடையாள அட்டையை கொண்டிருந்த வடக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கு நிகழ்வுகளுக்கு செல்வதற்கும், செய்தி அறிக்கையிடவும் அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் வடக்கில் ஜனாதிபதி சென்ற இடங்களில் உள்ள பிராந்திய ஊடகவியலாளர்கள் ஜனாதிபதியின் நிகழ்வு நடைபெற்ற இடங்களுக்கு வெளியே நீண்ட நேரம் காத்திருந்து விட்டு ஏமாற்றத்துடன் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் ஜூலை முதல் நடைமுறையாகும் திட்டம்: வெளியான புதிய அறிவிப்பு
நாட்டின் பிரஜைகளின் சொத்துக்கள் தொடர்பான தகவலை பெற்றுக் கொள்வதற்கான வர்த்தமானி அறிவிப்பு புதிய சட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதாக அமையாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய (Ranjith Siyambalapitiya) தெரிவித்துள்ளார். அரச நிறுவனங்கள் உட்பட இலங்கை பிரஜைகளின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் தொடர்பான தகவல்கள் உள்நாட்டு இறைவரி திணைக்களத்திற்கு எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் வழங்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டிருந்தார். இலங்கைப் பிரஜைகளின் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் மற்றும் வாகன உரிமைப் பரிமாற்றங்கள் தொடர்பான தகவல்கள் மற்றும் அதிகாரிகள் பயன்படுத்தும் தகவல்களையும் உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகத்திற்கு தொடர்ச்சியாக வழங்குமாறும் வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில், வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் அது புதிய சட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவதாக அமையாது. வருமான வரி சட்டத்தின் 123 (8) சரத்திற்கு இணங்க வருமான வரி திணைக்களம் மூன்றாவது தரப்பினரின் தகவல்களை பெற்றுக் கொள்வதற்குள்ள உரிமையை செயற்படுத்துவது மாத்திரமே இதன் மூலம் இடம்பெறும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர்: கொள்கை ரீதியில் இணக்கம் என்கிறார் சுரேஷ் பிரேமசந்திரன்
ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 17ஆம் திகதிக்கு முன்னர் நடைபெறும் எனவும் அதனை மாற்ற யாராலும் முடியாது எனவும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார். பலரும் பல விதமான கதைகளை கூறினாலும் அரசியலமைப்பை மாற்றியமைக்க யாராலும் முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்நிலையில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களை பிரநிதித்துவப்படுத்தி பொது வேட்பாளர் ஒருவரை முன்னிலைப்படுத்த வடக்கின் தமிழ் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகள் கொள்கை ரீதியான இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்ணணியின் (EPRLF) தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார். ஜனநாயக தமிழ் கட்சியின் மாவட்டக் குழுக் கூட்டம் கிளிநொச்சியில் இடம்பெற்ற நிலையில் அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கும் அரசியல் ரீதியான அபிலாஷைகள் காணப்படுவதாகவும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரை முன்நிறுத்துவதாகவும் அவர் தெரிவித்தார். எவ்வாறாயினும், பெரும்பாலான தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரநிதித்துவப்படுத்தும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்தியக் குழு கூட்டத்தின் போது தமிழர் தரப்பிலிருந்து ஜனாதிபதி பொது வேட்பாளரை பிரநிதித்துவப்படுத்தும் முன்மொழிவு நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. தமிழ் மக்கள் ஒன்றிணையும் போது தென்னிலங்கை அரசியல் களம் வழமைக்கு மாறாக சூடு பிடிக்க ஆரம்பித்து விடும். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்துவது என கடந்த ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி வவுனியாவில் தமிழ் சிவில் சமூகம் ஒன்றுகூடி தீர்மானித்திருந்தது. தமிழ் ஜனாதிபதி பொது வேட்பாளர் குறித்த சிங்கள அரசியல் தலைவர்களின் அச்சமே தற்போது வடக்கு நோக்கி அவர்கள் படையெடுப்பதற்கான காரணம் என அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.`
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு செல்லவிருப்போருக்கு வெளியான முக்கிய தகவல்…
வருகை முனையத்திற்கு வெளியே வாகனங்களை நிறுத்துவதை ஒழுங்குபடுத்துவதற்கு விமான நிலையமும் விமான சேவை நிறுவனமும் நடவடிக்கை எடுத்துள்ளன. அதன்படி, ஓட்டுநர் இல்லாமல் வாகனங்களை வருகை முனையத்திற்கு வெளியே நிறுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது மேலும், குடியேற்ற பயணிகளை ஏற்றிச் செல்ல வந்த வாகனங்கள் அந்தந்த வாகன நிறுத்துமிடங்களில் இருந்து குறிப்பிட்ட நேரத்தில் வருகை முனையத்தை விட்டு வெளியே வர வேண்டும். சாரதியுடன் 30 நிமிடங்களுக்கு மேல் சுற்றித் திரியும் வாகனங்களுக்கு விமான நிலைய வளாகத்தை விட்டு வெளியேறும்போது சிறப்புக் கட்டணம் வசூலிக்கப்படும் என்று விமான நிலையம் மற்றும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில், விமான நிலைய வளாகத்திற்கு சட்டவிரோத வாகனங்கள் மற்றும் மக்கள் வருகையை கட்டுப்படுத்துவதே இதன் நோக்கம் என நிறுவனம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கையில் காய்கறிகளின் விலையில் சடுதியாக ஏற்பட்ட மாற்றம்..!
தொடர் மழைவீழ்ச்சி காரணமாக காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஒரு மாத காலமாக சந்தைக்கு அதிகளவு காய்கறிகள் வரத்து காரணமாக, சந்தையில் காய்கறிகளின் விலை வேகமாக சரிந்தது. இந்தநிலையில், தற்போது மழையுடனான வானிலை அதிகரித்துள்ளதனால் காய்கறிகளின் விலை உயர்வடைந்து, ஒரு கிலோ கிராம் போஞ்சியின் விலை 700 ரூபாயாகவும், கறிமிளகாய் ஒரு கிலோ கிராம் 480 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது. அத்துடன், மத்திய மலைநாடுகளில் பயிரிடப்படும் மற்றைய காய்கறிகளிள் ஒரு கிலோ கிராம் விலை சுமார் 350 ரூபாய் வரை பதிவாகியுள்ளது. இதேவேளை, நாரஹேன்பிட்டி பொருளாதார சந்தையில் இன்றைய தினம் (27) ஒரு கிலோ கிராம் இஞ்சியின் சில்லறை விலை 5000 ரூபாவாக உயர்வடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மின்சாரம் தாக்கி பெண்ணொருவர் மரணம்!
களுத்துறை (Kalutara) – ஹொரணை (Horana) காவல்துறை பிரிவிற்குட்பட்ட அபகஹவத்த பகுதியில் மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். அபகஹவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 78 வயது பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். மின்கம்பத்திலிருந்த மின்சாரக் கம்பிகள் தரையில் வீழ்ந்து கிடந்த நிலையில் குறித்த பெண் அந்த மின்சாரக் கம்பிகளில் சிக்கியதில் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவரது சடலம் ஹொரணை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹொரணை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
காலி முகத்திடலில் பலவந்தமாக கேளிக்கை நடத்தும் குழுவினர் – விடுக்கப்பட்ட எச்சரிக்கை
கொழும்பு காலி முகத்திடல் மைதானத்தில் சமய நிகழ்வுகள் தவிர்ந்த ஏனைய நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் பலம் பெற்ற சில குழுவினர் பலவந்தமாக கேளிக்கை விளையாட்டுக்கள் அடங்கிய திருவிழாவை நடாத்தி வருவதாக துறைமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த விழாவை உடனடியாக நிறுத்துமாறு இலங்கை துறைமுக முகாமைத்துவ மற்றும் ஆலோசனை சேவைகள் நிறுவனம் கொழும்பு காலி முகத்திடல் ஏற்பாட்டாளர்களுக்கு அறிவித்துள்ளது. காலி முகத்திடல் மைதானத்தை சமய விழாவிற்காக முன்பதிவு செய்வதற்காக 45 இலட்சம் ரூபா வழங்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் ஏற்பாட்டாளர்கள் சுமார் இருபது இலட்சம் ரூபாவையே குறித்த நிறுவனத்திற்கு இதுவரை செலுத்தியுள்ளதாக தெரியவருகின்றது. அரகலய போராட்டத்தின் பின்னர் கொழும்பு காலி முகத்திடல் மைதானத்தில் மத நிகழ்வுகள் தவிர வேறு எந்த நிகழ்வுக்கும் இடமளிக்க வேண்டாம் என அமைச்சரவை தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மலையக பெருந்தோட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்ட அமைச்சர்!
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மலையக பெருந்தோட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களை நேற்று (26) இலங்கை தொழிலாளர் காங்ரஸின் காங்ரஸின் பொதுச்செயலாளரும் நீர் வழங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமுக அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் நேரில் சென்று பார்வையிட்டார். இதன் போது போகாவத்த அக்கரபத்தனை போடைஸ் இன்ஞஸ்ரீ சாஞ்சிமலை மற்றும் பொகவந்தலாவ பகுதியில் டியன்சின் கெம்பியன் பெற்றோசோ ஆகிய பகுதிகளுக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து கலந்துரையாடினார். இதேவளை பெருந்தோட்ட தொழிலாளர்களை சந்தித்த அமைச்சர் ஜீவன் தொண்டமான் 1,700 ரூபாய் சம்பளம் தொடர்பிலும் கலந்துரையாடினார். சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 40 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைப்பு பணிகளை உடனடியாக முன்னெடுக்கமாறு பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிருவத்திற்கு பணிப்புரை விடுத்தார். இதன் போது இந்த நேரடி சந்திப்பில் இலங்கை தொழிலாளர் காங்ரஸின் பொதுச்செயலாளரும் நீர் வழங்கள் மற்றும் தோட்ட உள்கட்டமைப்பு சமுக அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் நோர்வூட் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் நீர் வழங்கள் மற்றும் அம்பகமுவ பிரதேசத்திற்கான இனைப்பாளர் ரவி குழந்தைவேல் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிருவனத்தின் அதிகாரிகள் ஆகியோர் நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தனர்.