Search
Close this search box.

இலங்கையில் உயிரிழந்த பிரான்ஸ் தூதுவர்: எடுக்கப்படவுள்ள இறுதி முடிவு

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவரின் மரணம்  தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என பிரான்ஸ் தூதரகம் தெரிவித்துள்ளது. அவரது இறுதிக் கிரியைகள் இலங்கையில் நடைபெறுமா இல்லாவிட்டால் சடலம் பிரான்ஸுக்கு எடுத்துச் செல்லப்படுமா என்பது குறித்து இன்று (27) இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன் ஃபிராங்கோயிஸ் பேக்டெட் ( Jean Francois Pactet) நேற்று (26) பிற்பகல் இராஜகிரியில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் வெலிக்கடை காவல்துறை அதிகாரிகள் குழுவினால் சடலமாக மீட்கப்பட்டார். அதன்படி, திடீர் சுகவீனம் காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், 1970 இல் பிறந்த  Jean Francois Pactet, ஒக்டோபர் 2022 முதல் இலங்கை  மற்றும் மாலத்தீவுகளுக்கான பிரான்ஸ் தூதுவராக இருந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய வீதிக்கு நாளை பூட்டு…!

கொழும்பு – கண்டி பிரதான வீதியின், கீழ் கடுகண்ணாவை பகுதி நாளை மூடப்படவுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது. அந்தப் பகுதியிலுள்ள ஆபத்தான கற்பாறைகள் அகற்றப்படவுள்ளதன் காரணமாக மேற்படி பகுதி மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாளை 2 மணித்தியாலங்களுக்கு அந்தப் பகுதி மூடப்படவுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.

மாத்தறையில் துப்பாக்கிச் சூடு…

மாத்தறை, வெலிகம பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. வெலிகம, படவல, பத்தேகம ஆரம்ப பாடசாலைக்கு அருகில் இன்று காலை இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது. மற்றுமொரு துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை இலக்கு வைத்து இந்த துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் இதனால் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்பு..

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான இணையவழி முறையின் ஊடாக விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் இன்று (27) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இதன்படி எதிர்வரும் ஜூன் மாதம் 14 ஆம் திகதி வரை இணையவழி முறையின் ஊடாக விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். ஜூன் 14ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்குப் பின்னர் இணையவழி  நுழைவு நிறுத்தப்படும் என்றும், விண்ணப்பங்களை ஏற்கும் இறுதி திகதி எக்காரணம் கொண்டும் நீட்டிக்கப்பட மாட்டாது என்றும் அவர் கூறினார். அரசாங்க பாடசாலைகள் அல்லது அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பாடசாலைகளில் ஐந்தாம் வகுப்பில் கற்கும் மாணவர்கள் மாத்திரமே புலமைப்பரிசில் பரீட்சையில் பங்கேற்க முடியும் என்பதோடு, 31 ஜனவரி 2025 அன்று 11 வயதுக்குட்பட்ட குறைந்த வருமானம் கொண்ட மாணவர்கள் மட்டுமே உதவித்தொகை பெற தகுதியுடையவர்கள் ஆகும். onlineexams.gov.lk என்ற இணையத்தளத்திற்கு பிரவேசித்து விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், இது தொடர்பில் சிக்கல்கள் இருப்பின், பரீட்சை திணைக்களத்தின் அவசர இலக்கமான 1911 அல்லது 011-2 784537, 0112 786616, 0112 784208 ஆகிய இலக்கங்களுக்கு அழைப்பதன் மூலம் மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார். இந்த ஆண்டு, 5ஆம் தரம் புலமைப்பரிசில் பரீட்சை செப்டம்பர் மாதம் 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

அஹுங்கல்ல துப்பாக்கிச் சூடு – சந்தேகநபர் கைது..

காலி – அஹுங்கல்ல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொஸ்கொடை பொலிஸார் நேற்று (26) பெந்தர கஹ்பிலியாகந்த பகுதியில் வைத்து சந்தேக நபரை கைது செய்துள்ளனர். சந்தேகநபரிடம் இருந்து 03 கிராம் 410 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 36 வயதான சந்தேகநபர் நில்லபதன பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. கடந்த 08 ஆம் திகதி இரவு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் அஹுங்கல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட போகஹபிட்டிய லோகன்வத்த பகுதியிலுள்ள வீடொன்றில் வைத்து நபர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தனர்.

ஐ.பி.எல் கிண்ணத்தை வென்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…

17 ஆவது ஐ.பி.எல் கிண்ணத்தை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சுவீகரித்துள்ளது. 17 ஆவது ஐ.பி.எல் தொடரின் இறுதிப் போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய அணிகளுக்கு இடையில் சென்னையில் இன்று இடம்பெற்றது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அந்த அணி 18.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 113 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் அணியின் தலைவர் Pat Cummins 24 ஓட்டங்களையும் Aiden Markram 20 ஓட்டங்களை பெற்றதுடன் ஏனைய வீரர்கள் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர். பந்து வீச்சில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சார்பில் Andre Russell 03 விக்கெட்டுக்களையும் Mitchell Starc மற்றும் Harshit Rana ஆகியோர் தலா 02 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர். இந்நிலையில், 114 ஓட்டங்களை வெற்றி இலக்காக நோக்கி துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 10.3 ஓவர்கள் நிறைவில் 02 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் Venkatesh Iyer ஆட்டமிழக்காமல் 52 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இன்றும் பலத்த காற்றுடன் மழை!

தென்மேல் பருவப் பெயர்ச்சி நிலைமை காரணமாக நாடு முழுவதும் தற்போது நிலவும் மழை நிலைமையும் காற்று நிலைமையும் மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்றும் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள புதிய வானிலை முன்னறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா மாவட்டத்திலும் சில இடங்களில் 75 மில்லி மீற்றர் வரை பலத்த மழை பெய்யக்கூடும். ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய, மேல், தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் காற்றானது மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோ மீற்றர் வேகத்தில் வீசக்கூடும். நாட்டின் ஏனைய பகுதிகளில் அவ்வப்போது 30-40 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.