தமிழருக்கு ஒரு சட்டம் சிங்களவர்களுக்கு ஒரு சட்டமா?காணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்
கிளிநொச்சிக்கு ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விஜயம் செய்ய இருந்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் ஒன்றை நிகழ்த்த காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் திட்டமிட்டிருந்ததனர். ஆனால் அந்த போராட்டத்திற்கு நீதிமன்ற தடை உத்தரவு விதிக்கப்பட்டதாக கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் இன்று சனிக்கிழமை ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து விளக்கமளித்தனர். கிளிநொச்சி மாவட்ட வலிந்து ஆக்கப்பட்ட உறவுகள் சார்பில் கதிர்காமநாதன் கோகிலவாணி இது குறித்து தெரிவிக்கையில், ரணிலின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்ப்பு போராட்டம் ஒன்றை நிகழ்த்த திட்டமிட்டிருந்தோம், அந்த போராட்டத்திற்கு நீதிமன்ற தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. தமது பிள்ளைகளை யுத்த காலத்தில் இராணுவத்தின் கையால் ஒப்படைத்தும் , விசாரணைக்கு என்று அழைத்து காணாமல் ஆக்கப்பட்டு இன்று வரையில் எமக்கான நீதி கிடைக்கப்பெறவில்லை. கடந்த யுத்த காலங்களில் உண்ண உணவின்றி உப்பு கஞ்சி குடித்து உயிரை காத்து கொண்டோம். அதனை சர்வதேசத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் எடுத்து காட்டும் முகமாக மே18 முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டு வந்தது. குறித்த நினைவு கஞ்சிகளை இராணுவம் மற்றும் பொலிஸார் கஞ்சியை காலால்தட்டி சுகாதார கேடு என பலரை கைது செய்துள்ளனர். ஆனால் இன்று நாடுபூராகவும் வெசாக் பெருநாளை கொண்டாடி வருகின்றனர். இதுவரையில் எந்த குழப்பங்களும் இல்லாமல் நடாத்துகின்றனர். அப்படி என்றால் தமிழருக்கு ஒரு சட்டம் சிங்களவர்களுக்கு ஒரு சட்டமா என கேள்விகள் எழுந்துள்ளதாகவும், இதன் காரணங்களுக்காகவே ஐனாதிபதியின் வருகையை இன்று எதிர்த்து சர்வதேச நாடுகளுக்கு உணர்த்தும் வகையில் ஊடகங்கள் வாயிலாக கூறுவதாகவும் கதிர்காமநாதன் கோகிலவாணி தெரிவித்துள்ளார்.
காணாமல்போன மீனவர்களை ஹெலிகொப்டர் மூலம் தேடும் பணிகள் ஆரம்பம்…!
திருகோணமலை, சல்லிக் கடற்கரையில் இருந்து கடந்த 21 ஆம் திகதி இயந்திரப் படகில் மீன்பிடிக்கச் சென்றபோது காணாமல்போன இரண்டு மீனவர்களைத் தேடி இன்று காலை முதல் விமானப் படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டர் தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. இந்தத் தேடுதல் நடவடிக்கையில் கடற்படை அதிகாரி ஒருவரும் இணைந்துள்ளதாக கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. சீரற்ற காலநிலையால் கடற்படையினர் மேற்கொண்ட தேடுதல் வெற்றி பெறாத நிலையில் தற்போது விமானப்படையின் உதவி பெறப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது. சல்லியைச் சேர்ந்த குட்டிராசா சசிக்குமார் (வயது 44), முருகையா சுயாந்தன் (வயது 32) ஆகிய இரு மீனவர்களே காணாமல்போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்ட அவசர அறிவித்தல்…
நாட்டில் எப்பிரதேசத்திலும் அனர்த்த நிலைமை அல்லது மரம் முறிந்து விழும் ஆபத்து இருக்குமானால் அது தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் 117 என்ற துரித இலக்கத்துக்கு அறிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் (Pramitha Bandara Tennakoon) தெரிவித்துள்ளார். அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சில் நேற்றைய தினம் (24.05.2024) இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், சீரற்ற காலநிலை தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு செய்கிறது. அதனால் வளிமண்டல திணைக்களத்தின் அறிவித்தல்களின் பிரகாரம் செயற்படுவது அனைவரதும் கடமை.அதனால் சீரற்ற காலநிலையால் ஏற்படும் அனர்த்தங்களில் இருந்து பாதுகாப்பு பெற வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவித்தல்களுக்கு கவனம் செலுத்துமாறு நாங்கள் நாட்டு மக்களை கேட்டுக்கொள்கிறோம். மேலும் மரங்கள் முறிந்து விழும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. ஆனால் மரங்கள் முறிந்து விழுவது தொடர்பாக இதுவரை கவனம் செலுத்தப்பட்டிருப்பதாக தெரியவில்லை. மேலும், மரங்கள் விழுவது தொடர்பான எவ்வித எச்சரிக்கையும் விடுப்பதற்கென ஒரு நிறுவனம் எமது நாட்டில் செயற்படுவதில்லை. எனவே, இவ்வாறான எச்சரிக்கை விடுக்கும் பொறுப்பை கட்டட ஆராய்ச்சி நிறுவனத்துக்கு நாங்கள் வழங்கி இருக்கிறோம். அந்த துறையை முன்னேற்ற வேண்டும். துறைசார் நிபுணர்களை இதற்கு இணைத்துக்கொள்ள வேண்டும். அதேபோன்று தேசிய கொள்கை அமைக்கவேண்டும். இதுதொடர்பாக உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு பாரிய பொறுப்பு இருக்கிறது. அதேநேரம் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு பிரதான காரணமாக இருப்பது, உள்ளூராட்சி நிறுவனங்களின் அனுமதி இல்லாமல் கட்டுமானங்களை அமைப்பதற்கு அனுமதிப்பதாகும். சட்டவிரோத கட்டடங்களை நிறுத்துவதற்கு அனுமதியளிப்பதில் ஏற்பட்டிருக்கும் தாமதிப்பை மறைக்க வேண்டாம் என அந்த நிறுவனங்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் இடங்களாக இரத்தினபுரி, மாத்தறை, காலி, கொழும்பு, கழுத்துறை, கம்பஹா, அக்குரணை போன்ற பிரதேசங்கள் இனம் காணப்பட்டிருக்கின்றன. இதற்கு நடவடிக்கை எடுக்காமல், தொடர்ந்து நிவாரணம், நஷ்டயீடு என செய்துகொண்டிருக்க முடியாது. எனவே நாட்டில் எப்பிரதேசத்திலும் அனர்த்த நிலைமை அல்லது மரம் முறிந்துவிழும் ஆபத்து இருக்குமானால் அதுதொடர்பில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் 117 என்ற துரித இலக்கத்துக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்க முடியும். அதேபோன்று கிராம சேவகர் ஊடாக பிரதேச செயலாளரை அறிவுறுத்த முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கடுமையான விதிகள்: அதிர்ச்சியில் மக்கள்
சர்வாதிகார ஆட்சி நடத்தும் கிம் ஜாங்(kim jong un) உன் வடகொரியாவில்(North korea) சில கடுமையான விதிகளை அறிமுகம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.தன் நாட்டு மக்கள் மேற்கத்திய கலாசாரத்தைப் பின்பற்றக்கூடாது என கருதும் கிம், வடகொரியாவில் விவாகரத்துக்கு தடை விதித்துள்ளார். விவாகரத்து என்பது அசாதாரண நடத்தை என அவர் கருதுவதால் இந்த விதி அறிமுகப்டுத்தப்பட்டுள்ளதாகவும், விவாகரத்து செய்தோர், சமூக பிரச்சினையாக கருதப்படுவார்கள் என உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. வடகொரியாவிலுள்ள அதிகாரிகள் யாராவது விவாகரத்து செய்தால் அவர்களுக்கு பதவி உயர்வோ, முக்கிய பதவிகளோ கிடைக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.எனினும், விவாகரத்து செய்யும் பொதுமக்களுக்கான தண்டனை குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இளைஞர்களின் தொலைபேசிகளை சோதனையிடுவதற்கு அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளமை கிம் விதித்துள்ள இரண்டாவது விதியாகும்.வடகொரிய இளைஞர்கள், தென் கொரியாவின் தாக்கத்துக்கு ஆளாகியுள்ளார்களா என்பதை அறிவதற்காகவே இந்த சோதனை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, தென் கொரிய மக்கள் மொழியைப் பயன்படுத்தும் விதத்தில் வடகொரிய மக்கள் பயன்படுத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த விதியை மீறுவோர் சித்திரவதை முகாம் அடைக்கப்பபடுவதோடு கடினமான வேலைகளைச் செய்ய வற்புறுத்தப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் வாள்வெட்டு தாக்குதல்..! ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சை
மன்னார் – பேசாலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட முருகன் கோவிலடி 7ஆம் வட்டார பகுதியில் இடம் பெற்ற வாள் வெட்டுச் சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பலத்த காயங்களுடன் யாழ்ப்பாணம் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இந்த சம்பவமானது கடந்த 22 ஆம் திகதி புதன்கிழமை இரவு 9 மணியளவில் இடம் பெற்றுள்ளது. வாள்வெட்டு சம்பவத்தில் காயமடைந்தவர் அதே ஊரைச் சேர்ந்த 38 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை என தெரிய வருகிறது. சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கடந்த 23 ஆம் திகதி பேசாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். எனினும், வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய எவரும் கைது செய்யப்படவில்லை என பாதிக்கப்பட்ட தரப்பினர் தெரிவித்தனர். மேலும், அன்றையதினம் வாள் கத்தி இரும்பு கம்பிகளுடன் 15க்கும் மேற்பட்ட நபர்கள் வந்ததாகவும் வந்தவர்கள் கடும் போதையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் தொடர்ச்சியாக இவ்வாறான சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டு வருவதாகவும் பொலிஸார் இவர்களுக்கு உரிய நடவடிக்கை எடுத்து கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை முன் வைத்துள்ளனர். குறித்த பகுதி மக்கள் வாள்வெட்டு நபர்களுக்கு எதிராக கையெழுத்திட்டு உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழ் பாடசாலை அதிபர் அதிரடி கைது..! வெளியான காரணம்
தமிழ் பாடசாலையொன்றின் அதிபர் ஒருவர் கையூட்டல் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கை லஞ்ச ஊழல் மோசடித் தவிர்ப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எஹலியகொட (Eheliyagoda) பிரதேசத்தில் அமைந்துள்ள தமிழ் பாடசாலையொன்றின் அதிபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் பொறுப்பினை ஒப்படைத்த பெண்ணிடம் 30000 ரூபா கையூட்டல் பெற்றுக்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நுவரெலியாவில் அதிக பனிமூட்டம்…
நாட்டில் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையினை தொடர்ந்து நுவரெலியாவில் மழையுடனான காலநிலை காணப்படுகின்ற நிலையில் இன்று (25) காலை முதல் அதிக பனிமூட்டம் நிறைந்து காணப்படுகின்றது. குறிப்பாக நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் பிலக்பூல் சந்தி , வெண்டிகோனர் , பங்களாஹத்த , நானுஓயா , ரதல்ல குறுக்கு வீதி போன்ற இடங்களில் வழகைக்கு மாறாக அதிகளவான பனி மூட்டம் காணப்படுகின்றது இதனால் சாரதிகள் வாகனங்களை செலுத்துவதில் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றன. நுவரெலியா – ஹட்டன் ஏ7 பிரதான வீதியில் சென்ற வாகனங்கள் அதிக ஒலி எழுப்பியவாறும், வாகன விளக்குகளை ஒளிரவிட்டும் செல்வதை அவதானிக்க முடிந்தது . மேலும் தொடர்ந்து மழை பெய்வதால் அதிக குளிருடன் கூடிய காலநிலை காணப்படுவதை உணரக் கிடைத்துள்ளது. குறிப்பாக வெசாக் பௌர்ணமி தொடர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளமையால் வெளி மாவட்டத்தில் இருந்து பெரும் எண்ணிக்கையிலானவர்கள் நுவரெலியாவுக்கு வாகனங்களில் வருகை தந்துள்ளனர் எனவே குறித்த சாரதிகளுக்கும் எதிரே வரும் வாகனங்கள் தெரியாதபடி கடும் பனிமூட்டம் நிலவுவதால் விபத்துக்களை தடுக்கும் நோக்கில் மிகவும் அவதானமாக தங்களது வாகனங்களை செலுத்த வேண்டும் எனவும் வாகனங்கள் செலுத்தும் போது தங்களுக்கு உரியத்தான பக்கத்தில் வாகனங்களின் முகப்பு விளக்குகளை ஒளிரச்செய்தவாறு வாகனங்களை செலுத்த வேண்டும் எனவும் போக்குவரத்து பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
கிளிநொச்சி வைத்தியசாலையில் பெண்களுக்கான சுகாதார நிலையம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு…
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் 5,320 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பெண்களுக்கான சிறப்பு சுகாதார நிலையம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இன்று (25)காலை திறந்து வைக்கப்பட்டது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 3 நாட்கள் விஜயமாக நேற்றையதினம்(24) வடமாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் யாழில் இடம்பெற்ற பல்வேறு நிகழ்வுகளிலும் ஜனாதிபதி கலந்துகொண்டிருந்தார். இந்நிலையில் இன்று(25) காலை கிளிநொச்சி மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட போதே பெண்களுக்கான சிறப்பு சுகாதார நிலையத்தை ஜனாதிபதி திறந்து வைத்தார். நாடளாவிய ரீதியில் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்கான திட்டத்தின் கீழ் நெதர்லாந்து அரசாங்கத்தின் உதவியுடன், அரசாங்கம் இந்தத் திட்டத்தை முன்னெடுத்துள்ளது. இந்நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் , தர்மலிங்கம் சித்தார்த்தன், சுகாதாரத்துறை அதிகாரிகள், வைத்தியசாலை பணியாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
யாழ் இந்துக் கல்லூரி மாணவனின் சாதனை
யாழ் இந்துக் கல்லூரியைச் (Jaffna Hindu College) சேர்ந்த மாணவன் துஸ்யந்தன் பிரசாந்தன் என்பவர் இணை பாடவிதானச் செயற்பாடுகளில் சாதித்ததன் ஊடாக மருத்துவ பீடத்திற்கு தெரிவாகியுள்ளார். இதனடிப்படையில், மூலக்கூறு உயிரியல் பாடத்திற்கு தெரிவாகியிருந்த பிரசாந்தன் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தேசிய மட்ட சாதனையாளர்கள் நேர்முகத்தேர்வின் பின்னர் ஊவா (Uva Province) வெல்லச மருத்துவ பீடத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். பல்கலைக்கழகத் தெரிவிற்காக க.பொ.த உயர்தரப் பரீட்சையில் பிரதான மூன்று பாடங்களிலும் பெற்றுக் கொள்ளும் புள்ளிகளுக்கு Z புள்ளி கணிக்கப்படுகிறது. எனினும், மாணவர் ஒருவர் இணைப்பாட விதானத்தில் வெளிப்படுத்திய திறமைகளுக்காக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மேலதிக Z புள்ளிகளை வழங்கி அவர்களுக்கு மேலதிக வாய்ப்பை வழங்கி வருகிறது. இந்த நிலையில், 2022 ஆம் ஆண்டில் யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து 99 மாணவர்கள் மருத்துவ பீடத்திற்குத் தெரிவாகியுள்ளதோடு இருவர் விசேட வகையில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இதனடிப்படையில், குறித்த பாடசாலையின் க.பொ.த உயர்தரம் 2022 உயிரியல் பிரிவு மாணவனுக்கு மருத்துவ பீடம் (ஊவா வெல்லச பல்கலைக் கழகம்) செல்லும் வாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும், நேர்முகத்தேர்வில் உயர்தரக் காலப்பகுதியில் பெற்ற அடைவுகள் பிரதானமாக கொள்ளப்பட்டாலும் பாடசாலைக் கால அடைவுகள் அனைத்தும் கருத்திற்கொண்டு நோக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சீரற்ற காலநிலையால் டெங்கு பரவும் அபாயம்…
இலங்கையில் நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலை காரணமாக டெங்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று டெங்கு நோய் கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. நாட்டில் இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 24 ஆயிரத்து 227 டெங்கு நேயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று டெங்கு நோய் கட்டுப்பாட்டுப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, கடந்த ஏப்ரல் மாதத்தில் 2 ஆயிரத்து 234 டெங்கு நோயாளர்கள் பதிவாகியிருந்தனர். இந்த மாதத்தின் இதுரையான காலப்பகுதியில் 1,954 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இந்த மாவட்டத்தில் 5 ஆயிரத்து 183 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்டத்துக்கு அடுத்தபடியாக யாழ்ப்பாணம் மாவட்டத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 3 ஆயிரத்து 884 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.