வேகக் கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் வாகனம்…! கிளிநொச்சியில் விபத்து…..
கிளிநொச்சியில் டிப்பர் வாகனமொன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலைக்கு முன்பாக வீதியில் பயணித்த டிப்பர் வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வீதி ஓரத்தில் வைக்கப்பட்ட பாதுகாப்பு அமைப்புக்களுடன் மோதி விபத்துக்குள்ளானது. குறித்த விபத்து இன்று காலை 8.30 மணியளவில் இடம்பெற்றது. இவ் விபத்தில் டிப்பர் வாகனத்தின் முன்பகுதி கடுமையாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை, கிளிநொச்சி வைத்தியசாலை கட்டடத்தை திறந்து வைப்பதற்காக இன்றையதினம்(25) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கிளிநொச்சிக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், நிகழ்வு இடம்பெறும் பகுதியில் இடம்பெற்ற விபத்தினால் வாகன நெரிசல் ஏற்பட்ட நிலையில், வாகன நெரிசலை கட்டுப்படுத்த பொலிசார் தீவிரமாக செயற்பட்டு வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
வடக்கு, கிழக்கு மக்களுக்குக் காணிப் பிரச்சினையால் பாதிப்பு! யாழில் ஒப்புக்கொண்டார் ரணில்…
“காணிப் பிரச்சினை வடக்கு மாகாணத்தையும் கிழக்கு மாகாணத்தையும் கடுமையாகப் பாதித்துள்ளது. அரச காணிகளில் குடியேற்றப்பட்ட மக்களைத் தவிர யுத்தத்தினால் காணிகளை இழந்தவர்கள் ஏராளம்.” இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ‘உறுமய’ வேலைத்திட்டத்தின் கீழ் யாழ். மாவட்ட மக்களுக்கான காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கும் நிகழ்வில் நேற்று கலந்துகொண்டு ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். யாழ். மாவட்டத்தின் 15 பிரதேச செயலகப் பிரிவுகளையும் உள்ளடக்கிய 1286 இலவசப் பத்திரங்கள் மக்களிடம் வழங்கி வைக்கப்பட்டன. காணி உறுதிப் பத்திரங்களை ஜனாதிபதி அடையாளமாக சிலருக்கு வழங்கி வைத்தார். உறுமய’ வேலைத்திட்டத்தின் கீழ் வடமாகாணத்தின் முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களுக்கு 13 ஆயிரத்து 858 இலவச காணி உறுதிப் பத்திரங்கள் எதிர்காலத்தில் வழங்கப்படவுள்ளன. இந்த நிகழ்வில்,.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் உரையாற்றுகையில், “கடந்த பொருளாதார நெருக்கடி காரணமாக இடைநிறுத்தப்பட்ட வடமாகாண வீட்டுத்திட்டம் அடுத்த வருடம் முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும். இந்த இலவச காணி உரிமைத் திட்டம் அதன் ஒரு படியாகும். உறுமய வேலைத்திட்டம் நாட்டிலேயே மிகப்பெரிய தனியார்மயமாக்கல் வேலைத்திட்டம். நாட்டு மக்களுக்கு இலவச காணி உரிமை வழங்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளோம். இந்த வேலைத்திட்டத்தை நாடளாவிய ரீதியில் அனைத்து பகுதிகளிலும் நடைமுறைப்படுத்துவதே எமது நோக்கமாகும். அனைத்து மக்களுக்கும் அவர்கள் வாழும் மண்ணில் முழு உரிமையுள்ள காணி உரிமை வழங்கப்பட வேண்டும். இந்த பத்திரங்கள் இன்று வழங்கப்பட்டதுபோன்று, இந்தப் பணி எதிர்காலத்திலும் முன்னெடுக்கப்படும். காணி ஆணையாளர் திணைக்களத்தில் பணியாளர்கள் பற்றாக்குறையால், பணிகள் சற்று தாமதமாகி வருகின்றன. அதுபற்றி கலந்துரையாடிய பிறகு, காணி ஆணையாளர் நாயகத் திணைக்களத்திற்கு 100 புதிய பணியாளர்களையும், நில அளவைத் திணைக்களத்திற்கு 150 பேரையும் நியமனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளன. இதன்படி எதிர்காலத்தில் இந்த வேலைத்திட்டத்தை மிகவும் திறமையான முறையில் நடைமுறைப்படுத்த முடியும். காணிப் பிரச்சினை வடக்கு மாகாணத்தையும் கிழக்கு மாகாணத்தையும் கடுமையாகப் பாதித்துள்ளது. அரச காணிகளில் குடியேற்றப்பட்ட மக்களைத் தவிர யுத்தத்தால் காணிகளை இழந்தவர்கள் ஏராளம். தீர்க்கப்பட வேண்டிய இரண்டு பிரச்சினைகள் உள்ளன. வடக்கு மற்றும் கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவ்வப்போது என்னுடன் இது குறித்து கலந்துரையாடியுள்ளனர். அதற்கமைவாக, பாதுகாப்புத் தரப்பினருடன் கலந்துரையாடி, பாதுகாக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள காணிகளில், காணி விடுவிக்கப்படக் கூடிய சந்தர்ப்பங்களில் அந்த அனைத்து காணிகளும் மக்களிடம் மீள ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும், வனவளப் பாதுகாப்புத்துறை கையேற்ற காணிகள் குறித்தும் பிரச்சினை உள்ளது. இந்தப் பிரச்சினை வடக்கு, கிழக்கில் மட்டுமல்ல. தென் மாகாணத்திலும் இந்தப் பிரச்சினை உள்ளது. எனவே, 1985 வரைபடத்தின்படி, காடுகளாக உள்ள பகுதிகளை, காடுகளாக பேணவும்,மீதமுள்ள காணிகளை காடு அல்லாத பகுதிகளாக கருதவும் கொள்கை ரீதியான முடிவு எடுத்துள்ளோம். தற்போது அது தொடர்பில் ஆலோசித்து வருவதோடு குறிப்பிட்ட காணிகளை வழங்குமாறும் தெரிவித்துள்ளோம். தொல்பொருளியல் திணைக்களத்தின் கீழும் அதிக அளவிலான காணிகள் உள்ளன. தொல்பொருளியல் நடவடிக்கைகளுக்கு தேவையான காணிகளை தவிர்த்து ஏனைய காணிகளை மீள ஒப்படைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன் பிரகாரம் இந்தக் காணிகள் அனைத்தையும் விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம் அத்துடன், யாழ்ப்பாணத்தின் உயர்பாதுகாப்பு வலயம் பாரியளவில் குறைக்கப்பட்டுள்ளது. விசேட ஆய்வுகளின் பின்னர் மேலும் விடுவிக்கப்படக்கூடிய காணிகளை விடுவிக்க பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது. அத்துடன், உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள மத வழிபாட்டுத் தலங்களுக்குச் சொந்தமான காணியின் ஒரு பகுதி ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க நாட்டின் அனைத்து மக்களினதும் காணி உரிமையை உறுதிப்படுத்தி முன்னோக்கிச் செல்வதற்கான வாய்ப்பை உருவாக்க எதிர்பார்க்கின்றேன். அத்துடன், கடந்த இரண்டு வருடங்களாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக இம்மாகாண மக்களுக்கு தேவையான வீடுகளை நிர்மாணிப்பதற்கான நிதியை ஒதுக்க முடியவில்லை.ஆனால் அடுத்த ஆண்டு முதல் மீண்டும் அது ஆரம்பிக்கப்படும் என்பதைக் கூற விரும்புகிறேன். இந்த இலவச பத்திரங்களை வழங்குவதும் அந்த திட்டத்தின் ஒரு பகுதி என்றுதான் கூற வேண்டும். இலவசப் பத்திரங்களை வழங்குவதை இந்நாட்டின் மிகப்பெரிய தனியார்மயமாக்கும் திட்டம் என்று கூறலாம்.. ஜப்பான், கொரியாவைத் தவிர வேறு எந்த நாடும் அந்த வகையில் மக்களுக்கு காணி உரிமை வழங்கவில்லை. ஆனால், ஜப்பானும் கொரியாவும் மக்களுக்கு இலவசமாக காணி உரிமையை வழங்கவில்லை. குறைந்த விலையில் வாங்குவதற்கான வாய்ப்பை மட்டுமே தருகிறது. ஆனால் எமது நாட்டில் மக்களுக்கு இலவச காணி உரிமையை வழங்குவதற்காக செயற்பட்டு வருகின்றோம். பருத்தித்துறையிலிருந்து தேவேந்திர முனை வரையிலும் மட்டக்களப்பில் இருந்து நீர்கொழும்பு வரையிலும் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளோம். இலங்கை மக்கள் தங்கள் இனம் அல்லது மதம் எதுவாக இருந்தாலும் பாரம்பரியமாக காணி உரிமையை மதிக்கின்றனர். இன்று நீங்கள் அதை சரியாகப் புரிந்துகொள்கிறீர்கள். அந்த நிலத்தைப் பாதுகாத்து உங்கள் பிள்ளைகளுக்குக் கொடுப்பது உங்கள் பொறுப்பு என்பதை நினைவூட்ட விரும்புகிறேன்.”- என்றார்.
மர்மமான முறையில் உயிரிழந்த இரு இளைஞர்கள்!
தொம்பே, மல்வான மாயிவல பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த இருவரின் சடலங்கள் வயல் ஒன்றில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்கள் 18 மற்றும் 29 வயதுடைய ரம்பொட, நாவலதென்னவத்தை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். தொம்பே, மல்வான மாயிவல பிரதேசத்தில் வயல்வெளியில் இரண்டு சடலங்கள் மிதப்பதாக 119 மற்றும் 118 அவசர அழைப்பு பிரிவுக்கு கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவர்கள் இருவரும் கடந்த 22ம் திகதி தாம் தங்கியிருந்த விடுதியில் இருந்து வௌிறேயி மீண்டும் திரும்பாததால், விடுதியில் தங்கியிருந்த ஒருவர் பொலிஸில் முறைப்பாடு அளித்துள்ளார்.
ரோலில் இருந்த கறல் பிடித்த கம்பி!
யாழ்ப்பாணம், மருதனார்மடம் சந்தியில் உள்ள வெதுப்பகத்தில் வாங்கிய ரோலுக்குள் சுமார் 4 இஞ்சி அளவிலான கறல் பிடித்த கம்பி காணப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நேற்று வெள்ளிக்கிழமை மாலை உறவினர் வீட்டுக்கு கொண்டு செல்வதற்காக குறித்த வெதுப்பகத்தில் ஒருவர் 80 ரூபா விதம் 10 ரோல்கள் வாங்கிச் சென்றுள்ளார். உறவினர்களின் வீட்டில் குறித்த ரோலை உண்பதற்காக பரிமாறியபோது, நான்கு வயது சிறுமி ஒருவருக்கு ஊட்டுவதற்காக தாய் ரோலை பிரித்த போதே ரோலிற்குள் கறல் பிடித்த கம்பி இருந்தது தெரிய வந்துள்ளது. இது தொடர்பான படங்களை குறித்த வெதுப்பகத்தில் ரோலினை கொள்ளளவு செய்த நபர் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளார். இதனிடையே தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குள் இவ்வாறான உணவக சீர் கேட்டுச் சம்பவங்கள் அண்மைக்காலத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவது குறித்து பொதுமக்கள் தரப்பில் விசனம் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் சுகாதார அதிகாரிகள் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் பொதுமக்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டுவருகிறது.
தொலைபேசி இணைப்புகளை திருடிய 7 பேர் கைது!
வென்னப்புவ பகுதியில் நிலத்தடி தொலைபேசி இணைப்புகளை திருடி அதனை பழைய இரும்புக் கடையொன்றில் விற்பனை செய்துள்ளனர் எனும் குற்றச்சாட்டின் கீழ் டெலிகோம் நிறுவனத்தில் பணியாற்றும் ஏழு தொழிநுட்ப பணியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சுமார் 40 இலட்சம் ரூபா பெறுமதியான வயர்களை சந்தேக நபர்கள் இவ்வாறு திருடி விற்பனை செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது என பொலிஸார் தெரிவித்தனர். வென்னப்புவ துனுவில பகுதியில் இருந்து கிரிமெட்டியான சந்தி வரையிலான 4 கிலோ மீற்றர் தூரத்திற்கு நிலத்தடி ஊடாக புதைக்கப்பட்டிருந்த தொலைபேசி இணைப்புக்களை இவ்வாறு வெட்டி எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கடுநேரிய, மாரவில, தொடுவாவ, கொஸ்வத்த, ஆனமடுவ மற்றும் கொபேய்கேன் பகுதிகளைச் சேர்ந்த 38, 43, 37, 35, 51, 41 மற்றும் 56 வயதுடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். வென்னப்புவ பிரதேசத்தில் டெலிகொம் நிறுவனம் ஏலம் விடுவதற்காக போடப்பட்டிருந்த நிலத்தடி தொலைபேசி இணைப்புகளை சிலர் வெட்டி அகற்றியதை அவதானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் வென்னப்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு ஐதராபாத் அணி தகுதி!
நடப்பு ஐபிஎல் போட்டித் தொடரின் இறுதிப் போட்டிக்கு சன்ரைசஸ் ஐதராபாத் அணி தகுதி பெற்றுள்ளது. அதன்படி, எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை இடம்பெறவுள்ள கல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான இறுதிப் போட்டியில் சன்ரைசஸ் ஐதராபாத் அணி விளையாடவுள்ளது. 2024 ஐபிஎல் இரண்டாவது அரையிறுதி போட்டி சன்ரைசஸ் ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற ராஜஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசஸ் ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 175 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. அவ்வணி சார்பில் அதிகபட்சமாக ஹென்ரிச் கிளாசென் 50 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். பந்து வீச்சில் Trent Boult மற்றும் Avesh Khan ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தினர். அதன்படி, 176 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதலுக்கு துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 139 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது. அவ்வணி சார்பில் துருவ் ஜூரல் ஆட்டமிழக்காமல் 56 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். பந்து வீச்சில் Shahbaz Ahmed மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தினார். அதன்படி, 2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் ராஜஸ்தான் அணியை 36 ஓட்டங்களால் வீழ்த்தி ஐதராபாத் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
வெள்ள நிலைமை ஏற்படும் அபாயம் -வளிமண்டலவியல் திணைக்களம் அவசர எச்சரிக்கை!
தென்மேற்கு பருவக்காற்று நிலை காரணமாக மழை மற்றும் காற்று தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று வெளியாகியுள்ள வானிலை அறிக்கையிலே இந்த விடயம் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கு மேல் இருக்கலாம். மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லி மீற்றர் அளவில் கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் சில் இடங்களில் மழை பெய்யும் என குறிப்பிடப்படுகின்றது. மத்திய மலையகத்திலும், வடக்கு, வடமத்திய, மேற்கு, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் 50-60 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும். இலங்கையின் ஏனைய பகுதிகளில் அவ்வப்போது காற்று 30-40 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. களு கங்கை, அத்தனகலு ஓயா மற்றும் சில இடங்களுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 20 ஆம் திகதி வெளியிடப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு இன்று இரவு 9 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இந்த விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு குறித்த பிரதேச மக்களுக்கு தெரிவிக்கப்படுவதுடன், அவ்வழியாக செல்லும் வாகன சாரதிகளும் அவதானமாக இருக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.