நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட மதுபானசாலை அனுமதிப்பத்திரங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட மதுபானசாலை அனுமதிப்பத்திரங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. இந்த பின்னணியில், அவ்வாறான உண்மைகள் கண்டறியப்படும் நிலையில், மதுபானசாலை அனுமதிப்பத்திரத்தை இடைநிறுத்தவுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் மதுபானசாலை அனுமதிப்பத்திரங்களைப் பெற்று, 5 கோடி ரூபாவுக்கு விற்பனை செய்துள்ளதாக முறைப்பாடுகள் தெரிவிக்கின்றன. நாட்டில் புதிதாக 478 மதுபானசாலைகளை அமைப்பதற்கு புதிய நிபந்தனைகளின் கீழ் மதுபான உரிமங்களை வழங்குவதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்திற்கமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் மதுபானசாலைகளை திறப்பதற்கான அனுமதியை வழங்கும்போதும் உறவினர்களின் பெயரில் உரிமம் பெறுவதற்கு ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இந்த விடயங்கள் தொடர்பில் நாடாளுமன்ற விசேட குழு கண்டறிவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, இவ்வாறான சம்பவம் பதிவு செய்யப்படும் நிலையில் அல்லது முறைப்பாடு செய்யப்படும் நிலையில், திணைக்களம் உரிய சட்டங்களை நடைமுறைப்படுத்துவதாக மதுவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். மதுவரித் திணைக்கள கட்டளைச் சட்டத்தின் படி, திணைக்களத்தின் அனுமதி இன்றி மதுபானசாலை அனுமதிப்பத்திரங்களை விற்பனை செய்யவோ அல்லது வேறு தரப்பினருக்கு வழங்கவோ முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், எந்தவொரு தரப்பினரும் மதுபானசாலை உரிமத்தினை விற்பனைசெய்ய விரும்பினால், அவர்கள் 15 மில்லியன் ரூபாவினை அரசாங்கத்திற்கு செலுத்துவதன் மூலம் இதனைச் செயற்படுத்த முடியுமென மதுவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.
3 பெண்களை வலைவீசி தேடி வரும் பொலிஸார்!
அம்பாறையில் (Ampara) திருட்டுச்சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 3 பெண்கள் தொடர்பாக காவல்துறையினர் தகவல் கோரியுள்ளனர். குறித்த பெண்கள் அம்பாறையில் உள்ள சந்தை ஒன்றில் அண்மைக்காலமாக திருட்டுச்செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறையினர் சந்தேகித்துள்ளனர். இந்த நிலையில், இவர்கள் தொடர்பில் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனடிப்படையில், இவர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் அம்பாறை காவல் நிலைய குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு தெரிவிக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். குறித்த தகவல்களை, 0718593256, 0772921071 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு அம்பாறை காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ். பல்கலை மருத்துவபீட கட்டட திறப்பு விழாவுக்கு கல்விசாரா ஊழியர்கள் எதிர்ப்பு..!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட கட்டடமொன்றை திறந்துவைப்பதற்காக வருகைதந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினரால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது யாழ்ப்பாண பல்கலைக்கழக பிரதான வளாகம் மற்றும் மருத்துவபீட வளாகத்தில் கறுப்பு கொடிகள் கட்டப்பட்டு போராட்டம் நடத்தப்பட்டது. கல்விசாரா பணியாளர்கள் சம்பள உயர்வு மற்றும் சம்பள முரண்பாட்டுக்கான தீர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து 02.05.2024 நண்பகல் முதல் தொடர்ச்சியாக தொழிற்சங்க போராட்டமானது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் இன்றி சகல பல்கலைக்கழகங்களும் செயற்படாது இருக்கின்றவேளையில் எமது கோரிக்கைகளை தீர்த்துவைத்தலில் எவ்வித அக்கறையுமற்று காலங்கடத்தப்படுகின்றதாக ஊழியர்கள் சுட்டிக்காட்டினர். இவ்வேளையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் யாழ் போதனா வைத்தியசாலையுடன் இணைந்த புதிய கட்டிடத் தொகுதியானது அதிபர் ரணில், கல்வியமைச்சர், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு திறந்துவைக்கப்பட்டதாக குறிப்பிட்டனர். இதனை யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் கண்டிப்பதோடு இச்செயற்பாடு எமது தொழிற்சங்கப் போராட்டத்தை மலினப்படுத்தும் செயற்பாடாக காணப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கை சிறுவர்களின் போஷாக்கு அளவுகள் ; சுகாதார அமைச்சுமுன்னெடுக்கப்படவுள்ள ஆய்வு
நாடளாவிய ரீதியில் உள்ள குழந்தைகள் மற்றும் சிறுவர்களின் போஷாக்கு அளவுகள் தொடர்பாக கணக்கெடுப்பை நடத்துவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கணக்கெடுப்பானது ஜூன் மாதத்தில் வரும் தேசிய ஊட்டச்சத்து மாதத்தை ஒட்டி நடத்தப்படவுள்ளது. இதில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 6 முதல் 18 வயது வரையிலான சிறுவர்களின் ஊட்டச்சத்து அளவு தனித்தனியாக அளவிடப்படவுள்ளது. குடும்ப சுகாதார உத்தியோகத்தர்கள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களால் இந்த கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும் என குடும்ப சுகாதார பணியகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு இதேபோன்று நடத்தப்பட்ட ஆய்வில் குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. இதன்படி பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு விசேட போஷாக்கு மாத்திரைகள் வழங்கப்பட்டதாக பணியகம் குறிப்பிட்டுள்ளது.
ISIS உறுப்பினர்களுடன் தொடர்புடைய நபர் கொழும்பில் கைது
இந்தியாவில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் உறுப்பினர்களுடன் தொடர்பில் இருந்த ஒருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். கொழும்பு – மாளிகாவத்தையில் வைத்து குறித்த சந்தேநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த 19ஆம் திகதி இரவு இலங்கையில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக இண்டிகோ எயார்லைன்ஸ் விமானத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் உறுப்பினர்கள் நால்வரும் இந்தியாவிற்கு சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்திய பாரதீய ஜனதா கட்சியின் தலைவர்கள், யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களே இந்த பயங்கரவாதிகளின் இலக்கு என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இறுதி யுத்தத்தில் படையினரின் அநீதிகளை மறுக்கும் இலங்கை அரசாங்கம்…
இலங்கையில் உள்நாட்டு யுத்தத்தின் போது தங்கள் படையினர் இழைத்த அநீதிகளை இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் மறுத்துவருகின்றது என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய பசுபிக் இயக்குநர் எலைன்பியர்சன் தெரிவித்துள்ளார். அதேவேளை, கொல்லப்பட்டவர்களையும் காணாமல் ஆக்கப்பட்டவர்களையும் நினைவு கூர்ந்தவர்களை இலங்கை அதிகாரிகள் அச்சுறுத்தியதோடு, தடுத்தும் வைத்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கம், உண்மை நீதி இழப்பீடு போன்றவற்றை வழங்குவதற்கு பதில் பாதிக்கப்பட்டவர்களையும் அவர்களின் சமூகத்தினரையும் மௌனமாக்க முயல்கின்றது என தெரிவித்துள்ளார். 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி முடிவடைந்த இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் போது பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்த விவகாரத்திற்கு தீர்வை காண்பதற்காக சர்வதேச விசாரணைகள் மற்றும் ஏனைய பொறுப்புக்கூறல் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என மே 17 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட மக்களிற்கு நிவாரணம் வழங்குவதற்கும் துஸ்பிரயோகங்கள் நிகழாமல் தடுப்பதற்கும் மேலும் சர்வதேச நடவடிக்கைகள் அவசியம் என்பது புலனாகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார். மே 18 ஆம் திகதி நினைவேந்தல் தினத்திற்கு முன்னர் இலங்கை பொலிஸார், வடக்கு கிழக்கில் நினைவேந்தல் நிகழ்வுகளை குழப்ப முயன்றனர். அதுமட்டுமன்றி, யுத்தத்தின் போது நிலவிய பட்டினி நிலையை குறிக்கும் விதத்தில் வழங்கப்படும் கஞ்சியை தயாரித்து வழங்கியமைக்காக நால்வரை கைதுசெய்து ஒருவாரம் தடுத்து வைத்திருந்தனர் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. காணாமல்போனவர்களின் உறவினர்கள் சிலரும் ஏனையவர்களும் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொள்வதை தடை செய்யும் விதத்தில் அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவுகளை பெற்றிருந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் பொலிஸார் தலையிட்டு நிகழ்வுகளை தடுத்ததோடு, மக்கள் அங்கு செல்வதையும் தடுத்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஐக்கிய நாடுகளின் புதிய அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பக அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள படி, வலிந்து காணாமலாக்கப்பட்டமை இலங்கையில் இடம்பெற்றது என்பதையும், அதன் அளவையும் ஏற்றுக்கொள்ள வேண்டும், உடனடி நம்பகதன்மை மிக்க விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும், பாரியமனித புதைகுழிகளை அகழ்வதற்கு சர்வதேச தொழில்நுட்ப உதவியை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கை அரசாங்கம் ஒரு சுதந்திரமான வழக்குரைஞர் அதிகாரத்தை ஏற்படுத்த வேண்டும் பயங்கரவாத தடைச்சட்டம் உட்பட துஸ்பிரயோகங்களிற்கு வழிவகுக்கும் அனைத்து சட்டங்களையும் நீக்க வேண்டும் எனவும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் முன்வைத்துள்ள பரிந்துரைகளை வெளிநாட்டு அரசாங்கங்கள் ஐக்கியநாடுகள் அமைப்புகள் நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களிற்கு கடும் வேதனையை துன்பத்தை ஏற்படுத்தும் வலிந்து காணாமலாக்கப்பட்ட வரலாற்றை இலங்கை கொண்டுள்ளது என தெரிவித்துள்ள சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய பசுபிக் இயக்குநர் எலைன்பியர்சன், இது நாட்டில் மேலும் துஸ்பிரயோகங்கள் நிகழும் ஆபத்தை ஏற்படுத்துகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் பொறுப்புக்கூறல் செயற்திட்டத்திற்கான ஆணையை செப்டம்பர் அமர்வில் ஐக்கிய நாடுகள் மனிதஉரிமை பேரவை புதுப்பிப்பது மிகவும் அவசியம் என தெரிவித்துள்ள அவர் அந்த குற்றங்களிற்கு காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்துவதற்கு உலகெங்கிலும் உள்ள வழக்குரைஞர்கள் இந்த ஆதாரங்களை பயன்படுத்துவது அவசியம் எனவும் தெரிவித்துள்ளார்.
யாழில் மருத்துவ பீடத்தின் புதிய கட்டிடம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளார். இன்னிலையில் யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் புதிய கட்டிடம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அதன்படி இதில் மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சித் தொகுதி என்பன அடங்குகின்றன. மேலும் 942 மில்லியன் ரூபா செலவில் யாழ்.பல்கலைக்கழகத்தில் 46 வருடங்களின் பின்னர் புதிய கட்டிடம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
கலைக்கப்படுகிறது நாடாளுமன்றம்?
ஜனாதிபதியின் பதவி காலத்தை நீடிப்பதற்கு எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (23) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். எனவே உரிய காலத்தில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். அதேநேரம், நாடாளுமன்றத்தை கலைப்பதற்கும் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
தமிழில் கொண்டாடப்பட்ட வெசாக் தினம்…
தமிழ் பக்திப் பாடல்கள் மற்றும் பௌத்த வரலாற்றுக் கதைகளுடன் முல்லைத்தீவில் வெசாக்தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. கௌதம புத்தரின் பிறப்பு, ஞானம் பெறல் மற்றும் பரிநிர்வாணத்தை நினைவு கூரும் உலக பௌத்தர்களின் புனிதமான நாளான வெசாக் தினம் முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டிருந்தது. உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் உள்ள பௌத்தர்கள் விளக்குகளை ஒளிரவிட்டு, வழிபாடுகளுக்கு முன்னுரிமை அளித்து, மிகுந்த பக்தியுடன் இதனை வருடம் தோறும் மே மாதம் 23 திகதி கொண்டாடி வருகின்றனர். மேற்படி வெசாக்தினம் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 59ஆவது காலல் படையினரின் ஏற்பாட்டில் புதுக்குடியிருப்பு பிரதேசசபை மைதானத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டிருந்தது. குறித்த நிகழ்வில் புத்த பெருமானின் பரிநிர்வாணத்தை நினைவுகூரும் வரலாற்றுக் கதைகளும் தமிழ் பக்தி பாடல்களும் ஒலிபரப்பப்பட்டிருந்தன. குறித்த வெசாக் கொண்டாட்டத்தில் மதம், இனம் என்ற வேறுபாடுகளைக் கடந்து சிறுவர்கள், பெரியோர்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு வெசாக் தினத்தினை கொண்டாடியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
தயார் நிலையில் உள்ள விமானப்படை வெளியாகிய தகவல்…
சீரற்ற வானிலையால் நீர்ப்பாசனத் திணைக்களம் திடீர் வெள்ளப்பெருக்கு எச்சரிக்கையை விடுத்துள்ள நிலையில், மூன்று உலங்கு வானுர்திகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது. அவசர நிலை தொடர்பில் தகவல் கிடைத்தவுடன் இந்த உலங்கு வானுர்திகள் மீட்புப் பணிகளுக்காக அனுப்பி வைக்கப்படும் என விமானப்படை ஊடகப் பேச்சாளர் துஷான் விஜேசிங்க கூறியுள்ளார். கட்டுநாயக்க, இரத்மலானை மற்றும் ஹிகுராக்கொட விமானப்படை தளங்களில் இந்த உலங்கு வானுர்திகள் நிறுத்தப்பட்டுள்ளதாக விமானப்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதற்காக இரண்டு பெல் 212 விமானங்களும், எம்ஐ 17 விமானமும் தயார் செய்யப்பட்டுள்ளன. பேரிடர் மேலாண்மை மையத்தின் அறிவிப்பின் பேரில் மீட்பு பணிகளுக்கு விமானங்கள் தயார் நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.