Search
Close this search box.

இன்னும் சில நாட்களில் மூன்றாம் உலக போர்…!

3-வது உலக போர் உருவாக வாய்ப்பு இருப்பதாக வல்லுனர்கள் பலரும் கணித்துள்ள நிலையில் இன்னும் சில நாட்களில்   அது சாத்தியம் என தற்போது இந்திய பிரபல ஜோதிடரும் கூறியுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் அரியானாவை சேர்ந்த பிரபல ஜோதிடரான குசால் குமார் எபவரே 3 ஆம் உலகப்போர் தொடங்கவுள்ளதாக கூறியுள்ளார். ஏற்கனவே பாபா வாங்கா உள்ளிட்டவர்கள் கணித்த கணிப்புகள் அப்படியே நடைபெற்று வருவதாக சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்படுகின்றது. இந் நிலையில், இன்னும் சில வாரங்களில் 3-வது உலக போர் தொடங்க வாய்ப்புள்ளதாக இந்தியாவை சேர்ந்த பிரபல ஜோதிடர் ஒருவர் கணித்திருப்பது தற்போது பேசு பொருளாகி உள்ளது. இது தொடர்பாக இந்திய ஜோதிடர் தனது வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது, 2024-ல் உலகெங்கிலும் நடைபெறும் போர் பதற்ற சூழ்நிலைகளே இதை கணிக்க கூடியதாக உள்ளது. கொரியா நாடுகள், சீனா-தைவான், மத்திய கிழக்கு போன்ற போர் பதற்றம் உள்ளிட்ட செய்திகளும், இஸ்ரேல், காசா போரும் இதற்கு உதாரணமான கணிப்பை தருகின்றன. அதுமட்டுமல்லாது  மத்திய கிழக்கு மற்றும் உக்ரைன்-ரஷியா போர் உள்ளிட்டவையும் நேட்டோ நாடுகளின் கோபமும் வெளிப்படும். சில நாடுகளில் ஆட்சி அதிகாரம் பெற்ற சிலர் பெரும் கவலைக்குரிய சூழ்நிலையை எதிர்கொள்வார்கள். சிலர் கடுமையான உடல் நிலையால் பாதிக்கப்படலாம் அல்லது ராஜினாமா செய்ய நேரிடலாம். அதே நேரத்தில் இன்னும் சில நாடுகளின் அரசியல் எழுச்சி ஏற்படலாம். அதை தடுக்க ராணுவம் கொண்டு வரப்படலாம். இதனால் இன்னும் சில வாரங்களில் 3-வது உலக போர் நடைபெற வாய்ப்பு உள்ளது. ஜூன் 18 ஆம் திகதிக்கு பிறகு 3-வது உலக போரை தூண்டுதலுக்கான சாத்திய கூறுகள் உள்ளன. அதற்கு முன்னதாக ஜூன் 10 ஆம் திகதி, அல்லது 29 ஆம் திகதியோ கூட நிகழ வாய்ப்பு உள்ளதாகவும் குறித்த ஜோதிடர் தனது வலைதள பக்கத்தில் கூறியுள்ளமை 3 ஆம் உலகப்போர் குறித்த அச்சத்தை இன்னும் அதிகமாக்கியுள்ளது.

இலங்கையின் பெருந்தோட்ட பகுதிகளில் உணவு பாதுகாப்பின்மை அதிகரிப்பு : சுட்டிக்காட்டிய உலக உணவுத் திட்டம்

இலங்கையின் பெருந்தோட்ட பகுதிகளில் உணவு பாதுகாப்பின்மை அதிகரித்துள்ளதாக உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது. இதனடிப்படையில், 2023 ஆம் ஆண்டில் இலங்கையில் அதிக உணவு பாதுகாப்பின்மை வீதம் பெருந்தோட்ட பகுதிகளில் பதிவாகியுள்ளதாக உலக உணவுத் திட்டம் சுட்டிக்காட்டியுள்ளது. உலக உணவுத் திட்டம் தனது 2023 ஆண்டுக்கான வீட்டு உணவுப் பாதுகாப்பு தொடர்பான மதிப்பீட்டு அறிக்கையை மாதிரிக் குடும்பங்களின் அடிப்படையில் வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த ஆண்டில் 24% குடும்பங்கள் மட்டளவில் உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொண்டிருந்ததாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீதம் மார்ச் மாதத்தில் 17% ஆக காணப்பட்டதுடன் ஒகஸ்ட் தொடக்கம் செப்டம்பர் வரையான காலப்பகுதியில் 24% வரை அதிகரித்துள்ளது.

யாழிற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி ரணில்…!

வடக்கு மாகாணத்திற்கான மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டுள்ள அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளார். இன்று (24) காலை உலங்கு வானூர்தி மூலம் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் வந்திறங்கியுள்ளார். அதிபர் ரணிலை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் வரவேற்றனர். அதிபர் ரணில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட கட்டிடத்தை திறந்துவைப்பதுடன், துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெறும் இளைஞர் சேவை மன்ற நிகழ்வு, தந்தை செல்வா கலையரங்கில் நடைபெறும் ஆசிரியர் நியமன நிகழ்விலும் கலந்துகொள்கிறார். இதேவேளை அதிபரின் வடக்கு விஜயத்தை முன்னிட்டு யாழ் நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சீரற்ற வானிலையால் மற்றுமொரு சோகம்!

நுவரெலியா மாவட்டத்தில் தொடரும் சீரற்ற வானிலை  காரணமாக ராகலை மாகுடுகலை பகுதியில் மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததில் ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ராகலை பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பகுதியில் நேற்று வீசிய கடும் காற்றினால் குறித்த  மரம் சரிந்து விழுந்துள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் கந்தப்பளை  ஹைபோரஸ்ட் இலக்கம் ஒன்றில் வசித்து வந்த கந்தசாமி ராஜ்குமார் என்ற 38 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை என தெரிவிக்கப்படுகின்றது உயிரிழந்தவரின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது  வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மலேசியாவில் இருந்து மீண்டும் திருப்பி அனுப்பப்பட்ட 1,608 இலங்கையர்கள்…!

சட்டவிரோதமாக மலேசியாவிற்குச் சென்ற 1,608 இலங்கையர்கள் மீண்டும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக மலேசியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது. மலேசியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகம் விடுத்துள்ள அறிக்கையில் குறித்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி கடந்த மார்ச் மாதம் 1ஆம் திகதியில் இருந்து ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி வரையிலான 2 மாத காலப்பகுதியில் குறித்த 1,608 பேரும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மலேசிய அரசாங்கத்தின் புலம்பெயர்ந்தோரைத் திருப்பி அனுப்பும் திட்டத்திற்கு அமைய இந்த செயற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மானிய வட்டி வீதத்தில் வங்கிக்கடன் – அரசாங்கம் அறிவிப்பு!

எதிர்வரும் வாரத்தில் இருந்து பல விசேட கடன் திட்டங்களை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தொழில்துறையினருக்காக இந்த விசேட கடன் திட்டங்கள் செயற்படுத்தப்படவுள்ளதாக கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, பிரதேச மற்றும் மாவட்ட மட்டத்தில் தொழில்துறையினரின் நிதித் தேவைகள் கண்டறியப்பட்டு, வணிக வங்கிகள் மூலம் மானிய வட்டி வீதத்தில் கடன் வழங்கும் வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. கைத்தொழில் அமைச்சின் செயலாளர்  சாந்த வீரசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் தீவிரமடையும் காற்றுடன் கூடிய மழை – பொதுமக்களுக்கு கடும் எச்சரிக்கை…!

தென்மேல் பருவப் பெயர்ச்சி நிலைமை காரணமாக நாடு முழுவதும் தற்போது நிலவும் மழை மற்றும் காற்று  மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், தென் மற்றும் வடக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சப்ரகமுவ மாகாணத்திலும் மற்றும் நுவரெலியா மாவட்டத்திலும் சில இடங்களில் 150 மி.மீ க்கும் அதிகமான மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, மன்னார், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, மேல், தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், நாட்டின் ஏனைய பிரதேசங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.