ஈரான் ஜனாதிபதியின் இறுதிச் சடங்கில் பங்கேற்கவுள்ள அமைச்சர் அலி சப்ரி…
உலங்கு வானூர்தி விபத்தில் உயிரிழந்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் (Ebrahim Raisi) இறுதிச் சடங்கில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கலந்துகொள்ளவுள்ளார். ஈரான் ஜனாதிபதியின் மரணம் தொடர்பில் இந்நாட்டு அரசியல்வாதிகள் மற்றும் ஏனைய மக்கள் இந்நாட்டிலுள்ள ஈரான் தூதரகத்தில் இரங்கல் தெரிவித்திருந்தனர். அதேவேளை, ஈரானிய ஜனாதிபதி மற்றும் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சருக்கான இறுதி ஊர்வலம் வடமேற்கு ஈரானில் ஆரம்பமாகியது. மேலும், ஈரானில் 5 நாட்களுக்கு துக்க தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.
கொக்கேய்ன் போதைப்பொருள் தொகையுடன் பிலிப்பைன்ஸ் பெண் கைது!
கொக்கேய்ன் போதைப்பொருள் தொகையுடன் பிலிப்பைன்ஸ் பெண் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலைய சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட போது, அவரிடம் இருந்து 2 கிலோ 851 கிராம் கொக்கெய்ன் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கொக்கெய்ன் தொகையின் பெறுமதி 200 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாகும் என சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த பெண் எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபாவிலிருந்து தோஹா – கட்டார் ஊடாக இந்த நாட்டுக்கு வந்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் தனது சூட்கேஸில் மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் கோதுமை மா அடங்கிய 03 பொதிகளுடன் கொக்கைன் போதைப்பொருள் அடங்கிய 03 பொதிகளையும் மறைத்து வைத்திருந்தார். அவர் பிலிப்பைன்ஸில் வசிக்கும் 47 வயது உதவி கணக்காளர் என்பது தெரியவந்துள்ளது. சந்தேகநபரான பெண்ணின் நண்பியின் ஊடாக போதைப்பொருள் கடத்தல்காரர்களால் குறித்த போதைப்பொருள் இலங்கைக்குள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும், போதைப்பொருள் கடத்தல்காரர்களால், குறித்த பெண் 5 நாட்களுக்கு இலங்கையில் உள்ள சுற்றுலா ஹோட்டல்களில் தங்குவதற்கு தேவையான வசதிகளை செய்து தருவதற்கு தேவையான நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக மேலும் தகவல் வெளியாகியுள்ளது.
மன்னாரில் 160 ஏக்கர் காணி இந்திய நிறுவனத்திற்கு விற்பனை..
மன்னார் – நடுக்குடா பகுதியில் உள்ள தமிழர்களின் குடியிருப்புக் காணி உட்பட 160 ஏக்கர் நிலம் மணல் அகழ்விற்காக இந்திய நிறுவனமொன்றுக்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, குறித்த நிலப்பரப்பைச் சுற்றிலும் கொங்கிரிட் தூண்கள் மற்றும் முற்கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், மணல் அகழ்விற்காக இந்தப் பகுதியில் உள்ள மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக சுமார் 10 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. உத்தியோகபூர்வமாக இல்லாதபோதிலும், பலாலி சர்வதேச விமான நிலையம், பல்வேறு வேலைத்திட்டங்கள், படகு சேவை ஆகியவற்றை ஆரம்பிக்கப்பட்டதன் மூலம் இந்திய வடக்கு – கிழக்கில் தமது கால்தடத்தை படிப்படியாக பதிவு செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
பயிரிடப்படாத நிலங்களை பயிர்ச்செய்கைக்கு பயன்படுத்துவதற்கு புதிய சட்டங்கள்….
சமூக வலுவூட்டலுக்கு நிலம் ஒரு முக்கிய காரணியாக இருப்பதால், பயிரிடப்படாத நிலங்களை பயிர்ச்செய்கைக்கு பயன்படுத்துவதற்கு அவசியமான புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருவதாக சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் தெரிவித்தார். மேலும், சமூக வலுவூட்டலுக்காக கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைக்கு திறன்விருத்தி மற்றும் தொழிற்கல்வியை உள்ளடக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் இதனைத் தெரிவித்தார். இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல், சமூக வலுவூட்டலுக்காக கல்வி முறையில் மாற்றம் வரவேண்டும். அதன்படி, கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையில் கணிதம், மதம், மொழி போன்ற பாடங்களில் சித்திபெறாமை, பரீட்சையில் சித்திபெறாததாகக் கருதக் கூடாது. எனவே, க.பொ.த சாதாரணதரப் பரீட்சையின் பாடத்திட்டத்தில் திறன்விருத்தி மற்றும் தொழிற்கல்வி பாடத்தை உள்ளடக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி, இத் தீர்மானத்தை அடுத்த ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்த கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. அதற்கிணங்க எதிர்காலத்தில் ஒரு முழுமையான நிபுணத்துவத்துவம் மிக்கவர்களை உருவாக்குவதற்குத் தேவையான கல்விச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். மேலும், சமூகத்தை வலுப்படுத்த நிலம் ஒரு முக்கிய காரணியாகும். எனவே, பயிர்ச்செய்கைக்கு ஏற்ற, ஆனால் இதுவரை பயிரிடப்படாத நிலத்தைப் பயன்படுத்தும் வகையில் புதிய சட்டங்களை கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் முழு நாட்டையும் வலுவூட்ட அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். அதற்காக, அரச மற்றும் தனியார் துறையினர் மட்டுமின்றி அனைத்து சுயதொழில் செய்பவர்களுக்கும் பங்களிப்பு ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கின்றோம். அதேபோல், ஒரு தொழில்முயற்சியாளர்களைக் கொண்ட நாட்டை உருவாக்க நாமும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். அதனுடன், அனைவரும் தொழில் கல்வியையும் பெற வேண்டும். நாட்டை அபிவிருத்தி செய்வதற்கும் முன்னேற்றுவதற்கும் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். முன்பள்ளி ஆசிரியர்களை வலுவூட்டுவதற்காக “லியசவிய நிகழ்ச்சித்திட்டத்தையும்” நாங்கள் ஆரம்பித்துள்ளோம். மேலும், அஸ்வெசும பெறுபவர்களில் 12 இலட்சம் பயனாளிகளுக்கு வலுவூட்டுவது எமது முக்கிய நோக்கமாகும். அதற்காக இந்த வருடம் 03 இலட்சம் குடும்பங்கள் வலுவூட்டப்பட வேண்டும். அதற்குத் தேவையான சுமார் 188,000 ஆவணங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. அதன்போது, உலக வங்கி திட்டத்தின் கீழ் 10,000 குடும்பங்களையும், ஆசிய அபிவிருத்தி வங்கியின் கீழ் 16,000 குடும்பங்களையும் வலுவூட்டுத் தேவையான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளன. அதற்காக அதிகாரிகளுக்கு வழங்கப்படும் பயிற்சியும் இம்மாதம் நிறைவடையும். மேலும், இளைஞர் சேவைகள் மன்றம், தெங்கு அபிவிருத்திச் சபை மற்றும் சிறுதோட்ட அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைந்து பல சமூக வலுவூட்டல் வேலைத்திட்டங்கள் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளன. இவற்றின் மூலம் உற்பத்திப் பொருளாதாரத்தை உருவாக்க எதிர்பார்க்கின்றோம்” என்று சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் மேலும் தெரிவித்தார்.
கார் விபத்தில் மூன்று மாணவர்கள் பலி!
அமெரிக்காவின் அமெரிக்கவாழ் இந்திய மாணவர்களில் 2 பெண்கள் உள்பட 3 பேர் கார் விபத்தில் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் இந்திய மாணவர்களின் மரணமும், இந்தியர்கள் தாக்கப்படும் சம்பவங்களும் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில் அமெரிக்காவின் அமெரிக்கவாழ் இந்திய மாணவர்களில் 2 பெண்கள் உட்பட 3 பேர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்ஜியா மாகாணம் அல்பாரெட்டா பகுதியில் நடந்த கார் விபத்தில் ஆர்யன் ஜோஷி, ஷ்ரியா அவர்சாலா ஆகிய இரண்டு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தின்போது காரில் இருந்த ரித்வாக் சோமேபல்லி மற்றும் முகமது லியாகாத், அன்வி சர்மா ஆகிய 3 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் அன்வி சர்மா சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். இந்த விபத்து குறித்து பொலிசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கார் வேகமாக சென்றதே விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்த ஷ்ரியா அவர்சாலா மற்றும் அன்வி சர்மா ஆகிய இருவரும் ஜார்ஜியா பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டு படித்து வந்ததாகவும், ஆர்யன் ஷர்மா அங்குள்ள ஆல்பாரெட்டா உயர்நிலைப் பாடசாலையில் படித்து வந்ததாகவும், அவர் இந்த பாடசாலையின் கிரிக்கெட் அணியிலும் விளையாடி வந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த ஏப்ரல் 27ஆம் திகதி, அமெரிக்காவில் நடந்த பயங்கர கார் விபத்தில் குஜராத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உயிரிழந்தனர் என்பதும் அதற்கு முன்னதாக, கடந்த ஏப்ரல் 20ஆம் திகதி அரிசோனாவில் உள்ள லேக் பிளசன்ட் அருகே நேருக்குநேர் கார்கள் மோதிய விபத்தில், தெலங்கானாவைச் சேர்ந்த நிவேஷ் முக்கா மற்றும் கௌதம் பார்சி ஆகியோர் உயிரிழந்திருந்தினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
50,000 குடும்பங்களுக்கு உறுதிப் பத்திரங்கள்…
குறைந்த வருமானம் பெறும் 50,000 குடும்பங்களுக்கு உறுதிப் பத்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ், வீடுகளின் முழு உரிமையை மாற்றும் போது அசல் பயனாளி இறந்திருந்தால், தற்போது அந்த வீட்டில் வசிக்கும் அவரது வாரிசுகளுக்கு உரிமைப் பத்திரம் வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்தின் பிரகாரம் அமைச்சரவை இந்த தீர்மானத்தை எட்டியுள்ளது. வீட்டு உரிமையாளர்களுக்கு நோட்டரி கட்டணம், முத்திரைகள் மற்றும் உரிமைப் பத்திரங்களை வழங்கும்போது ஏற்படும் பிற வரிகளில் இருந்து விலக்கு அளிக்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, அதற்கான நோட்டரி கட்டணம், முத்திரைகள் மற்றும் பிற வரிகள் திறைசேரியால் ஏற்கப்பட வேண்டும். 2024 வரவு செலவு திட்ட முன்மொழிவுகளின் ஊடாக நகர வீட்டு உரிமையின் கீழ் குறைந்த வருமானம் பெறும் 50,000 வீட்டு உரிமையாளர்களுக்கு வீட்டு உறுதிப் பத்திரங்களை வழங்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்மொழிந்திருந்தார். இது தொடர்பில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கடந்த ஜனவரி 04 ஆம் திகதி அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்திருந்த நிலையில், சட்டமா அதிபர் தனது அவதானிப்புகளை முன்வைத்து, உறுதிப் பத்திரங்கள் வழங்கும் போது அந்த வீடுகளில் வசிக்கும் ஒரு தரப்பினருக்கு பாதகம் ஏற்படலாம் எனத் தெரிவித்திருந்தார். இந்த வீடுகளில் வசிப்பவர்களில் சிலர் ஏற்கனவே டிசம்பர் 31 முதல் நிலுவைத் தொகையை செலுத்தியுள்ளனர். சிலர் இன்னும் செலுத்தாத காரணத்தினால் உரிய நேரத்தில் உரிய வாடகையை முழுமையாக செலுத்தியவர்களுக்கு இந்த பாதகம் ஏற்படக்கூடும் என சட்டமா அதிபர் தனது அவதானிப்புகள் மூலம் சுட்டிக்காட்டியிருந்தார். இதன்படி, கடந்த ஏப்ரல் மாத இறுதியில் சட்டமா அதிபரின் அவதானிப்புகளை கவனத்தில் கொண்டு அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்த விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, டிசம்பர் 31 க்குள் வாடகை செலுத்திய வீட்டு உரிமையாளர்களுக்கு பத்திரங்களை வழங்குவதற்கு முன்னுரிமை வழங்க முன்மொழிந்தார். உரிய காலத்துக்கான வாடகையை செலுத்தி பிறருக்கு உறுதிப் பத்திரங்களை வழங்கவும் முன்மொழியப்பட்டது. மேலும், குறைந்த வருமானம் பெறும் வீடுகளின் முழு உரிமையும் மாற்றப்பட்ட பிறகு, அந்த அடுக்குமாடி குடியிருப்புகளின் பராமரிப்புப் பணிகள் கூட்டு ஆதன முகாமைத்துவ அதிகாரசபையினால் நியமிக்கப்பட்ட கூட்டு ஆதன முகாமைத்துவ கூட்டுத்தாபனங்களுக்கு மாற்றப்படும். அதற்காக நம்பிக்கை நிதியமொன்றை (Stinting Fund) உருவாக்குவதற்கும் எதிர்பார்க்கப்படுகிறது, அதற்காக 12,230 வீடுகளுக்கு தலா 50,000 ரூபா வீதம் 611.5 மில்லியன் ரூபாவை திறைசேரியிலிருந்து வழங்குமாறும் அமைச்சர் அமைச்சரவையிடம் கோரியுள்ளார்.
இந்தியாவில் பிடிபட்ட ISIS பயங்கரவாதிகள் குறித்து மேலும் பல தகவல்கள்!
இந்தியாவின் அகமதாபாத் சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட நான்கு இலங்கையை சேர்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் நடத்துவதற்கு கூட தயாராக இருந்ததாக குஜராத் பொலிஸ்மா அதிபர் விகாஷ் சாஹே தெரிவித்துள்ளார். இந்த நான்கு பயங்கரவாதிகளும் நீர்கொழும்பு மற்றும் கொழும்பு பகுதிகளில் வசிப்பவர்கள் என குஜராத் பொலிஸ் மா அதிபர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் தாக்குதல் நடத்தும் நோக்கில் இந் நாட்டிலிருந்து அகமதாபாத் நகருக்கு வந்த இலங்கையை சேர்ந்த ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த நான்கு பேர் அகமதாபாத் சர்தார் படேல் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனர். இவர்களை குஜராத் தீவிரவாத தடுப்புப் படையினர் கைது செய்து நேற்று மதியம் செய்தியாளர்கள் சந்திப்பில் முன்நிறுத்தியதுடன், இதில் பல தகவல்கள் வெளியாகின. இதன்படி, கைது செய்யப்பட்ட 33 வயதான மொஹமட் நுஸ்ரத் என்ற நபர் நீர்கொழும்பைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். கொழும்பை சேர்ந்த 27 வயதான மொஹமட் நஃப்ரான், 43 வயதான மொஹமட் ரஷ்டீன் மற்றும் 35 வயதான மொஹமட் ஃபரிஷ் ஆகியோர் கைது செய்யப்பட்ட ஏனைய பயங்கரவாதிகளாவர். இவர்கள் இந் நாட்டிலிருந்து சென்னை வழியாக அகமதாபாத் நகருக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழ் மொழியை மட்டுமே பயன்படுத்தும் நான்கு பயங்கரவாதிகளும் மொழி பெயர்ப்பாளர் மூலம் விசாரிக்கப்பட்டனர். இவர்களிடம் இருந்து கைப்பேசி, இரு நாட்டு நாணயத்தாள்கள் மற்றும் விமானச் சீட்டுக்களும் ஒருவரின் பயணப் பொதியில் இருந்து ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கொடியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இருந்து செயற்படும் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவரான அபுவை கடந்த பெப்ரவரி மாதம் சமூக ஊடகங்கள் மூலம் இந்தக் குழு அடையாளம் கண்டுள்ளதாகவும், பின்னர் இவர்கள் கடும்போக்கு ISIS சித்தாந்தவாதிகளாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் அபுவின் ஆலோசனையின் பேரில் இந்தியாவில் தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ள நிலையில், இலங்கை பணத்தில் 4 லட்சம் ரூபாய் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் தற்கொலைப்படை தாக்குதலுக்கு கூட தயாராகி இருந்ததாக தகவல் வௌியாகியுள்ளது. இவர்களது கைப்பேசிகளை ஆய்வு செய்ததில், அகமதாபாத் நகருக்கு அருகில் உள்ள நானாசிடோலா பகுதியில் ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது தொடர்பான தகவல்கள் அந்நாட்டு பாதுகாப்பு படையினருக்கு அம்பலமாகியுள்ளது. பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட 03 கைத்துப்பாக்கிகளும் அதற்கு பயன்படுத்தப்பட்ட 20 தோட்டாக்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட நான்கு இலங்கை ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக சேகரிக்கப்பட்ட வாய்மொழி மற்றும் விசாரணை ஆதாரங்களின் அடிப்படையில், நாட்டின் தண்டனைச் சட்டம், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் மற்றும் சட்டவிரோத ஆயுதங்கள் சட்டம் ஆகியவற்றின் கீழ் எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இதேவேளை, இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில், இந்தியாவில் கைது செய்யப்பட்ட இலங்கை ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் தொடர்பில் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோனிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் இதன்போது தெரிவித்தார். இதேவேளை, கைது செய்யப்பட்ட நான்கு ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளும் இதற்கு முன்னர் தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் உறுப்பினர்களாக செயற்பட்டவர்கள் என இந்திய ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன. உயிர்த்த ஞாயிறு அன்று பயங்கரவாதத் தாக்குதலை நடத்திய சஹ்ரான் ஹசிம் தலைமையிலான பயங்கரவாதிகள் தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பைச் சேர்ந்தவர்களாவர். 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பிறகு இந்த அமைப்பு தடை செய்யப்பட்ட அமைப்பாக அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அணு ஆயுதத் தாக்குதல் நடத்துமா ரஷ்யா?வெளியான தகவல்..!
உக்ரேன் மீது அணு ஆயுதத் தாக்குதல் ஒத்திகை நடத்தப்படுமென ரஷ்யா அறிவித்துள்ளமை உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சிலநாட்களாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், ரஷ்யாவின் இறையாண்மையை காக்க உக்ரேன் மீது அணு ஆயுதத்தை பயன்படுத்தவும் தயங்க மாட்டேன் எனத் தெரிவித்து வந்தார். இந்நிலையிலேயே தற்போது ”உக்ரேன் மீது அணு ஆயுதத் தாக்குதல் ஒத்திகை நடத்தப்படுமென” ரஷ்ய அரசு அறிவித்துள்ளது. இதேவேளை அணு ஆயுத தாக்குதல் நடத்தக் கூடாது என ரஷ்யாவுக்கு உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ரஷ்யா மற்றும் உக்ரேன் இடையேயான போர் இரண்டு ஆண்டுகளை கடந்தும் நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இறுதிப் போட்டிக்கு கல்கத்தா அணி தகுதி!
2024 ஐபில் போட்டித் தொடரின் முதல் குவாலிஃபையர் போட்டியில் சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு கல்கத்தா அணி தகுதி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற ஹைதராபாத் அணி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 159 ஓட்டங்களைப் பெற்றது. அவ்வணி சார்பில் ராஹுல் திரிபதி அதிகபட்சமாக 55 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். பந்து வீச்சில் மிட்செல் ஸ்டார்க் மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தினார். பதிலுக்கு 160 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய கல்கத்தா அணி 13.4 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. அவ்வணி சார்பில் வெங்கடேஷ் ஐயர் 51 ஓட்டங்களையும் அணித்தலைவர் ஸ்ரேயாஸ் ஐயர் 58 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றுக் கொண்டனர். இதன்படி, 2024 ஐபிஎல் தொடரின் முதல் அணியாக கல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
இன்றும் கனமழைக்கு வாய்ப்பு!
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 150 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாடு முழுவதும்தென்மேல் பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக தாபிக்கப்பட்டு வருகின்றமை காரணமாக தற்போது நிலவும் மழை நிலைமையும் காற்று நிலைமையும் மேலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய, வடமேற்கு, தெற்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என திணைக்களம் மேலும் குறிப்பிடுகிறது. இதேவேளை, தீவின் ஏனைய பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் தென் மாகாணத்திலும் மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பகுதிகளில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 30-40 கிலோ மீற்றர் வரை பலத்த காற்று வீசக்கூடும். இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.