குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு வீட்டுத் திட்டம்: வெளியான மகிழ்ச்சி தகவல்..!
இலங்கையில் (Sri Lanka) குறைந்த வருமானம் பெறும் 50,000 குடும்பங்களுக்கு காணி உறுதிப் பத்திரம் வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க (Prasanna Ranatunga)சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்தின் பிரகாரமே அமைச்சரவை இதனை தீர்மானித்துள்ளது. உறுதிப் பத்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ், வீடுகளின் முழு உரிமையை மாற்றும் போது அசல் பயனாளி இறந்திருந்தால், தற்போது அந்த வீட்டில் வசிக்கும் அவரது வாரிசுகளுக்கு உரிமைப் பத்திரம் வழங்கப்படவுள்ளது. இதேவேளை, வீட்டு உரிமையாளர்களுக்கு நோட்டரி கட்டணம், முத்திரைகள் மற்றும் உரிமைப் பத்திரங்களை வழங்கும்போது ஏற்படும் பிற வரிகளில் இருந்து விலக்கு அளிக்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதோடு அதற்கான நோட்டரி கட்டணம், முத்திரைகள் மற்றும் பிற வரிகள் திறைசேரியால் ஏற்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது. 2024ஆம் ஆண்டு வரவு செலவு திட்ட முன்மொழிவுகளின் ஊடாக நகர வீட்டு உரிமையின் கீழ் குறைந்த வருமானம் பெறும் 50,000 வீட்டு உரிமையாளர்களுக்கு வீட்டு உறுதிப் பத்திரங்களை வழங்க அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) முன்மொழிந்துள்ளார். இது தொடர்பில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கடந்த ஜனவரி 04ஆம் திகதி அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்திருந்த நிலையில், சட்டமா அதிபர் தனது அவதானிப்புகளை முன்வைத்து உறுதிப் பத்திரங்கள் வழங்கும் போது அந்த வீடுகளில் வசிக்கும் ஒரு தரப்பினருக்கு பாதகம் ஏற்படலாம் எனத் தெரிவித்துள்ளார். இந்த வீடுகளில் வசிப்பவர்களில் சிலர் ஏற்கனவே டிசம்பர் 31 முதல் நிலுவைத் தொகையை செலுத்தியுள்ளனர். எனினும், சிலர் செலுத்தாத காரணத்தினால் உரிய நேரத்தில் உரிய வாடகையை முழுமையாக செலுத்தியவர்களுக்கு இந்த பாதகம் ஏற்படக்கூடும் என சட்டமா அதிபர் தனது அவதானிப்புகள் மூலம் சுட்டிக்காட்டியுள்ளார். இதன்படி, கடந்த ஏப்ரல் மாத இறுதியில் சட்டமா அதிபரின் அவதானிப்புகளை கவனத்தில் கொண்டு அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்த விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, டிசம்பர் 31இற்குள் வாடகை செலுத்திய வீட்டு உரிமையாளர்களுக்கு பத்திரங்களை வழங்குவதற்கு முன்னுரிமை வழங்க முன்மொழிந்தார். மேலும், உரிய காலத்துக்கான வாடகையை செலுத்தி பிறருக்கு உறுதிப் பத்திரங்களை வழங்கவும் முன்மொழியப்பட்டது. இந்நிலையில், குறைந்த வருமானம் பெறும் வீடுகளின் முழு உரிமையும் மாற்றப்பட்ட பின், அந்த அடுக்குமாடி குடியிருப்புகளின் பராமரிப்புப் பணிகள் கூட்டு ஆதன முகாமைத்துவ அதிகார சபையினால் நியமிக்கப்பட்ட கூட்டு ஆதன முகாமைத்துவ கூட்டுத்தாபனங்களுக்கு மாற்றப்படும்.இதற்காக நம்பிக்கை நிதியமொன்றை (Stinting Fund) உருவாக்குவதற்கும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி 12,230 வீடுகளுக்கு தலா 50,000 ரூபா வீதம் 611.5 மில்லியன் ரூபாவை திறைசேரியிலிருந்து வழங்குமாறும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அமைச்சரவையிடம் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சியில் சீரான போக்குவரத்து வசதி கோரி போராட்டம்
கிளிநொச்சி (Kilinochci) முட்கொம்பன் பிரதேசத்துக்கான சீரான போக்குவரத்து வசதியை ஏற்படுத்தி தருமாறு கோரி பிரதேச மக்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். குறித்த போராட்டம் இன்றையதினம் (22.05.2024) முன்னெடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட முட்கொம்பன் மற்றும் அரசபுரம் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 700இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில், குறித்த கிராமத்திற்கான போக்குவரத்து சேவை சீராக இடம்பெறவில்லை என்பதுடன் ஒரே ஒரு சேவையில் ஈடுபடும் அரச பேருந்து, பாடசாலை விடுமுறை நாட்களில் சேவையில் ஈடுபடுவதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வரும் அப்பிரதேச மக்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை நடத்தியுள்ளனர்.
நடுவானில் திடீரென குலுங்கிய விமானம்: பயணியொருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 71 பேர் காயம்
லண்டனிலிருந்து சிங்கப்பூர் நோக்கி பயணித்த விமானம் நடுவானில் திடீரென குலுங்கியதில் பயணியொருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 71பேர் காயமடைந்துள்ளனர். இந்த அனர்த்தத்தில் உயிரிழந்த பயணி பிரித்தானிய பிரஜை என தகவல் வௌியாகியுள்ளது. லண்டனின் ஹீத்ரோவிலிருந்து நேற்று முன்தினம் புறப்பட்ட சிங்கப்பூர் எயார்லைன்ஸின் SQ 321 போயிங் 777-300ER என்ற விமானமே நடுவானில் திடீரென குலுங்கியதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால், விமானம் உடனடியாக தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டு, காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனிடையே, SQ 321 விமானம் வங்காள விரிகுடாவைக் கடந்த சில நிமிடங்களில், அதன் பயண உயரத்திலிருந்து 6,000 அடி தாழிறங்கியதாக விமான கண்காணிப்பு தரவு தெரிவிக்கிறது. விமானத்தில் 211 பயணிகள் மற்றும் 18 பணியாளர்கள் இருந்ததாக விமான நிறுவன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வானிலையில் ஏற்பட்ட திடீர் மாற்றமே விபத்திற்கு காரணமெனவும் கூறப்பட்டுள்ளது.
கடலுக்கு செல்ல படகுகளுக்கு அனுமதி இல்லை..! மீனவர்களுக்கு அவசர அறிவித்தல்…!
பல நாள் மீன்பிடி படகுகள் உட்பட அனைத்து மீன்பிடி படகுகளும் இன்று முதல் மறு அறிவித்தல் வரை கடலுக்கு செல்ல அனுமதிக்கப்படாது என கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களம் அறிவித்துள்ளது. இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த இதனைத் தெரிவித்தார். அடுத்த சில நாட்களில் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பலத்த மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து, திணைக்களம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. அத்துடன், தற்போது கடற்றொழிலுக்கு சென்றுள்ள பல நாள் மீன்பிடி படகுகளுக்கு பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்
பேருந்து சில்லில் சிக்கி பரிதாபமாக பலியான 10 வயது பாடசாலை மாணவி…!
புதிய கருவாத்தோட்டம் பிரதேசத்தில் தனியார் பேருந்து ஒன்றின் சில்லில் சிக்கி பாடசாலை மாணவி ஒருவர் இன்று காலை துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார். மல்கொல்ல – படிதலாவ பகுதியைச் சேர்ந்த 10 வயதுடைய பாடசாலை மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். புதிய கருவாத்தோட்டம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடஹென்தென்ன பிரதேசத்தில் பேருந்தில் இருந்து இறங்கி குறித்த பேருந்துக்கு முன்னால் வீதியைக் கடக்கச் சென்ற போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த மாணவி, புதிய கருவாத்தோட்டம் பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனரை பொலிஸார் கைது செய்துள்ளனர். புதிய கருவாத்தோட்டம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
யாழில் பாணுக்குள் கண்ணாடித்துண்டுகள் : விசாரணைகள் முன்னெடுப்பு!
யாழ்ப்பாணத்தில் பாண் ஒன்றுக்குள் கண்ணாடித் துண்டுகள் காணப்பட்டமையை அடுத்து, பொதுச் சுகாதார பரிசோதகரிடம் முறையிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மருதனார்மடம் பகுதியில் உள்ள கடையொன்றில் நேற்றையதினம் ஒருவர் பாண் வாங்கியுள்ளதுடன், அதனை வீட்டில் சாப்பிட முனைந்த போது, பாணினுள் இருந்து உடைந்த போத்தலின் கண்ணாடித் துண்டுகள் காணப்பட்டுள்ளன. அது தொடர்பில் அப்பகுதி சுகாதார பரிசோதகருக்கு அறிவிக்கப்பட்டதை , அடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் குறித்த கடைக் சுன்னாகம் பகுதியில் உள்ள பிரபல வெதுப்பகம் ஒன்றே பாண் விநியோகம் செய்துள்ளமை தெரிய வந்துள்ளது. இதனையடுத்து குறித்த வெதுப்பகத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்குப் பொதுச் சுகாதார பரிசோதகர் நடவடிக்கை எடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க வேண்டும்: இந்து சம்மேளனம் கோரிக்கை
சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள வணக்கத்துக்குரிய கலகொடஅத்தே ஞானசார தேரர் ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என இலங்கை இந்து சம்மேளனம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதம் ஒன்றின் மூலம் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஞானசார தேரரை பலர் தவறாகப் புரிந்துகொண்டுள்ளனர் எனவும் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஞானசார தேரரின் ஜனநாயகக் குரலை முடக்கும் நோக்கத்துடன் அரசாங்கத்தின் சில ஜனநாயக அமைப்புகளால் அறியப்பட்ட மற்றும் அறியப்படாத கூறுகளால் அவர் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளனர். மேலும், ஞானசார தேரர் முன்னெடுத்துள்ள சேவைகளையும் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் பட்டிலிட்டுள்ளனர். அந்தந்த மத நம்பிக்கைகளைப் பின்பற்றுபவர்கள் மத்தியில் சமாதானத்தை நிலைநாட்டவும், நாட்டின் பொருளாதார, சமூக மற்றும் ஆன்மீகத் தளங்களை அழிக்கக்கூடிய முரண்பாடுகளை இல்லாதொழிக்கவும் ஞானசார தேரர் பாடுபட்டுள்ளதாக அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஞானசார தேரருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுகள் தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றம் அவருக்கு நான்கு ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதித்திருந்தது. 2016ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கூரகல பள்ளிவாசல் தொடர்பில் ஞானசார தேரர் தெரிவித்த கருத்து தேசிய மற்றும் மத நல்லிணக்கத்துக்கு பங்கம் விளைவித்ததாக தெரிவித்து இந்த வழக்கு தொடரப்பட்டிருந்தது.
திடீரென வீதிக்கு வந்த காட்டு யானையால் பதற்றம்! மன்னார் – மதவாச்சி வீதியில் பயணிப்பவர்களுக்கு எச்சரிக்கை!
மன்னார் – மதவாச்சி பிரதான வீதி, முருங்கன் பகுதியில் காட்டு யானை ஒன்று இன்று காலை திடீரென வீதிக்கு வந்தமையினால் குறித்த வீதியூடான போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டிருந்தது. முருங்கன் பன்ணையின் பின் பகுதியூடாக வந்த குறித்த யானை, பன்ணையின் சுற்று வேலியை உடைத்துக் கொண்டு மன்னார் – முருகன் பிரதான வீதிக்கு வந்து சிறிது நேரத்தின் பின்னர் வீதியைக் கடந்தது. இதனால் குறித்த வீதியூடான போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டிருந்ததுடன், குறித்த யானை காட்டுப் பகுதிக்குள் சென்றுள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக மன்னார் மதவாச்சி பிரதான வீதியில் இரவு பகல் பாராது காட்டு யானையின் திடீர் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில் மக்களை அவதானமாக பயணிக்குமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொழும்பில் மக்களுக்கு ஆபத்தாக மாறியுள்ள மரங்கள்..!
கொழும்பு நகர எல்லையில் கடந்த இரண்டு நாட்களில் சுமார் 20 மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன் பிரகாரம் கொழும்பு நகரில் மரங்கள் ஆபத்தானவை என அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன், முறிந்து வீழ்ந்த மரங்களில் அபாயகரமானதாக இனங்காணப்பட்ட மரங்களும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு நகர எல்லையில் ஆபத்தில் உள்ள சுமார் 200 மரங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதன்படி இதுவரை சுமார் 100 மரங்கள் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பௌத்த கொடியின் வர்ணங்களில் ஒளிரவுள்ள தாமரை கோபுரம்..!
வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு தாமரை கோபுரம் பௌத்த கொடியிலுள்ள வர்ணங்களில் ஒளிரும் என தாமரை கோபுர நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாளை வியாழக்கிழமை (23) மற்றும் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (24) கோபுரம் ஒளிரும். கொழும்பு தாமரை கோபுரத்தில் பிரமிக்க வைக்கும் காட்சிகளுடன் வெசாக் பண்டிகையை கொண்டாடுமாறு நிர்வாகம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், வெசாக் தினங்களில் பிக்சல் ப்ளூம், ஊடாடும் டிஜிட்டல் கலை அனுபவத்தை அனுபவிக்கும் நேரத்தையும் தாமரை கோபுர நிர்வாகம் அறிவித்துள்ளது