Search
Close this search box.

வாகன சாரதிகளே அவதானம்…! பொலிஸ் வீதித் தடைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு…!

தற்காலிகமாக மூடப்பட்ட எல்ல- வெல்லவாய வீதி இன்று (17) காலை போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடும் மழை காரணமாக குறித்த வீதி நேற்றையதினம் (16) பிற்பகல் தற்காலிகமாக மூடப்பட்ட எல்ல- வெல்லவாய வீதி,   இன்று காலை 6 மணியளவில் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக பதுளை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் ஈ.எம்.எல்.உதய குமார தெரிவித்தார். எவ்வாறாயினும், எல்ல கரந்தகொல்ல மலிதகொல்ல பிரதேசத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால், அவ்விடத்தின் இருபுறமும் பொலிஸ் வீதித்தடைகள் போடப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழ் மட்டுமே சாரதிகள் அவ்விடத்தை கடந்து செல்வதற்கு வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நாடாளுமன்றம் கலைக்கப்படும்..? சபாநாயகர் வெளியிட்டுள்ள அறிவிப்பு..

நாடாளுமன்றம் கலைக்கப்படும் என வெளியாகும் தகவல்கள் அடிப்படையற்றவை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன  தெரிவித்துள்ளார். அதன்படி, நாடு நல்லதொரு நிலையை அடைந்ததன் பின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத்தேர்தல் நடத்தப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். முதலில் நாடாளுமன்றத் தேர்தலா அல்லது ஜனாதிபதித் தேர்தலா இடம்பெறும் என்ற குழப்பம் அரசியல் கட்சிகள் உட்பட பொது மக்களுக்கும் ஏற்பட்டுள்ளது. அரசியலமைப்பின் பிரகாரம் முதலில் ஜனாதிபதித் தேர்தலே நடத்தப்பட வேண்டும். ஆனால், நாடாளுமன்றத்தை கலைப்பதன் ஊடாக பொதுத் தேர்தலை நடத்தும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.  

கண்டி நகரில் கடும் மழை – வெள்ளத்தில் முழ்கிய ரயில் நிலையம்..!

கண்டி நகரில் நேற்று பெய்த கடும் மழையினால், கண்டி ரயில் நிலையம் உள்ளிட்ட நகரின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளது. ரயில் நிலையத்தை அண்மித்துள்ள முறையற்ற வடிகால் கட்டமைப்பு மற்றும் வடிகால்கள் மூடப்பட்டமையே, ரயில் நிலையம் நீரில் மூழ்க காரணம் என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், கண்டி நகரில் 100 மில்லிமீட்டருக்கும் அதிக மழை வீழ்ச்சி ஒரே நேரத்தில் பெய்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது. இதையடுத்து, போகம்பரவிற்கு பின்புறமாகவுள்ள மலை பகுதியிலிருந்து பெருமளவான வெள்ள நீர், ரயில் நிலையத்தை நோக்கி பெருக்கெடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இதேவேளை தற்காலிகமாக மூடப்பட்டிருந்த எல்ல – வெல்லவாய வீதி போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. பொலிஸாரின் பூரண கண்காணிப்பின் கீழ் கடுமையான அவதானத்துடன் குறித்த வீதியில் போக்குவரத்து நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இன்றும் (17) மழை பெய்தால் இந்த வீதி மீண்டும் ஆபத்தானதாக மாறக்கூடும் என அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது. அப்படியானால், எந்த நேரத்திலும் சம்பந்தப்பட்ட வீதியை மீண்டும் மூட வேண்டிய நிலை ஏற்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

போரில் உயிரிழந்தவர்களுக்கு வவுனியாவில் நாளை நினைவேந்தல்!

போரில் உயிரிழந்தவர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வு வவுனியாவில் எதிர்வரும் சனிக்கிழமை (18)மாலை 5 மணிக்கு வவுனியப நகரசபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது. வன்னி மக்களுக்கான ஒன்றியம், வன்னி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கம், சிறந்த இலங்கைக்கான மன்றம்,  காணாமலாக்கப்பட்டவர்களின் பிள்ளைகளின் சங்கம், உலகத்தமிழர் பேரவை, தர்மசக்தி ஒன்றியம் ஆகியன இணைந்து இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளன. இந்த நினைவேந்தல் நிகழ்வில் சர்வம மதத்தலைவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மகிந்த வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும், அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு எதிராக நாட்டுக்காக எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கத் தயங்கப் போவதில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் தலைமையகத்தில் நேற்றையதினம்(16) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தாம் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்ட போதிலும் தனது சுதந்திரத்தையும் கட்சியையும் இந்த அரசாங்கத்திற்கு காட்டிக்கொடுக்கவில்லை. அதேவேளை பொதுத் தேர்தல், ஜனாதிபதித் தேர்தல் உட்பட எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் தேசிய வளங்களை விற்பனை செய்தல் உள்ளிட்ட அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை தாம் கடுமையாக எதிர்ப்பதாகவும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையான உறுப்பினர்களும் இதே கருத்தையே கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்திய கடற்பரப்பில் கைதான 14 இலங்கை கடற்றொழிலாளர்கள்..!

இந்திய கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த 14 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாகப்பட்டினம் – கோடியக்கரைப் பகுதியில் வைத்து குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன் குறித்த மீனவர்களின் படகுகளையும் இந்திய கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். குறித்த இலங்கை மீனவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை யாழ்ப்பாணம் – மாதகல் புளியந்தரை கடற்கரை பகுதியில் படகுடன் மூன்று இந்திய மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். படகில் ஏதேனும் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டமையில் அவர்கள் புளியந்தரை கடற்கரையை அடைந்தனரா? என்பது தொடர்பில் அவர்களிடம் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இளவாலை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். விசாரணைக்கு பின்னர் அவர்கள் மூவரையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இலங்கையில் PhonePe UPI கட்டண முறைமை ஆரம்பம் !

இலங்கையில் UPI அடிப்படையிலான சேவைகளுக்கு மேலதிக வாய்ப்புகளை வழங்கும் முகமாக, PhonePe பரிவர்த்தனை கட்டமைப்பானது LankaPay உடன் இணைந்து PhonePe UPI கட்டண முறைமைகளை 2024 மே 15 ஆம் திகதி இலங்கையில் ஆரம்பித்து வைத்தது. வங்கித் துறையினைச் சேர்ந்த உயரதிகாரிகள், கட்டண முறைமை வழங்குனர்கள், வர்த்தக அமைப்புகள் மற்றும் ஊடகவியலாளர்களினது பிரசன்னத்துடன் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் ஶ்ரீ சந்தோஷ் ஜா மற்றும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி பி நந்தலால் வீரசேகர ஆகியோர் முன்னிலையில் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் கட்டண கொடுப்பனவு செயலி தொகுதியானது ஆரம்பித்துவைக்கப்பட்டது. இங்கு உரை நிகழ்த்தியிருந்த உயர் ஸ்தானிகர் ஜா, இலகுவான முறையில் டிஜிட்டல் கொடுப்பனவுகளை மேற்கொள்கின்றமை இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருகைதரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையினை மேலும் ஊக்குவிக்குமென தெரிவித்திருந்தார். அத்துடன் ஹோட்டல்களை முற்பதிவு செய்தல், வாகன முற்பதிவு மற்றும் ஏனைய விநியோக சேவைகளுக்காக UPI முறைமையினைப் பயன்படுத்திக்கொள்ளூம் வாய்ப்புகளை இந்திய கம்பனிகளுடன் இணைந்து இலங்கை கம்பனிகள் உருவாக்கவேண்டுமெனவும் அவர் அழைப்பு விடுத்தார். 2024 பெப்ரவரி 12 ஆம் திகதி இந்திய பிரதமர் ஶ்ரீ நரேந்திர மோடி மற்றும் இலங்கை ஜனாதிபதி அதி மேதகு ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் இணைந்து இலங்கையில் ஒருங்கிணைந்த கட்டண முறைமையான UPIஇனை ஆரம்பித்து வைத்திருந்தமை இச்சந்தர்ப்பத்தில் நினைவில் கொள்ளத்தக்கதாகும். ஜனாதிபதி அதி மேதகு ரணில் விக்கிரமசிங்க அவர்கள் 2023 ஜூலை மேற்கொண்டிருந்த விஜயத்தின்போது ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கை ஆவணத்தினை மேற்கோளிட்டு அச்சந்தர்ப்பத்தில் உரை நிகழ்த்தியிருந்த பிரதமர் ஶ்ரீ நரேந்திர மோடி, நிதி இணைப்புகளை வலுவாக்குதல் அந்த ஆவணத்தின் முக்கிய அங்கங்களில் ஒன்றாக இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். குறித்த முறைமை ஆரம்பித்துவைக்கப்பட்ட தருணத்திலிருந்து இதுவரையில் இலங்கையில் 6000க்கும் அதிகமான கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் 240 மில்லியன் இலங்கை ரூபா பெறுமதியான கொடுப்பனவாக அவை பதிவாகியுள்ளன. இந்நிலையில் PhonePayUPI அங்குரார்ப்பணமானது, குறிப்பாக இலங்கையின் முன்னணி வாடகை வாகன மற்றும் விநியோக செயலியான PickMe போன்ற சேவை வழங்குனர்களுடன் மேலதிக இணைப்புகளை மேற்கொள்வதன் மூலமாக டிஜிட்டல் நிதி தொழில்நுட்ப இணைப்பினை மேலும் விஸ்தரிக்கின்றது. டிஜிட்டல் துறைகள் மூலமாக இணைப்புகளை விஸ்தரிப்பதன் மூலமாக இரு நாட்டு மக்களிடையிலுமான தொடர்புகள் வலுச்சேர்க்கப்படுவது மட்டுமல்லாமல், இரு நாடுகளினதும் மக்களின் அபிலாஷைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை இலக்காகக் கொண்டு தொழில்நுட்பத்துறையின் புதிய மற்றும் வளர்ந்துவரும் சகல துறைகளிலும் இந்தியா இலங்கை இடையிலான பங்குடைமைக்கான உறுதியான உதாரணமாகவும் இது அமைகின்றது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பங்கேற்கவுள்ள சர்வதேச மன்னிப்புச் சபையின் பிரதிநிதி..!

முதன்முறையாக இலங்கைக்கு வருகைதந்துள்ள சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்ட் முல்லைத்தீவில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார். இந்நிலையில், எதிர்வரும் 24 ஆம் திகதி வரை நாட்டில் அவர் தங்கியிருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 18 ஆம் திகதி, இறுதிக்கட்ட யுத்தத்தில் உயிர் நீத்த உறவுகளை நினைவுகூரும் முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் நினைவேந்தலிலும் அவர் பங்கேற்கவுள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இடத்திலான ஏற்பாடுகள் யாவும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அதேவேளை சர்வதேச ஊடகவியலாளர்களும் அங்கு வருகை தந்து கண்காணிப்புகளில் ஈடுபட்டுள்ளார்கள். இந்த நிலையில் இலங்கை புலனாய்வாளர்களின் கண்காணிப்பும் தீவிரமாக காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இங்கிலாந்து நகரமொன்றின் மேயராக தெரிவுசெய்யப்பட்ட இலங்கை தமிழர்!

இலங்கையைச் சேர்ந்த புகலிட கோரிக்கையாளர் ஒருவர் பிரித்தானிய நகரமொன்றில் மேயராகவும், அந்தப் பதவியை வகிக்கும் முதல் இந்து என்ற பெருமையையும் பெற்றுள்ளார். தொழிலாளர் கட்சியின் இளங்கோ இளவழகன் Ipswich Borough பேரூராட்சி ஆண்டு கூட்டத்தில் ஒருமனதாக மேயராக தெரிவுசெய்யப்பட்ட பின்னர் சம்பிரதாயப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள இளவழகன், “நான் இன்று மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன், இந்த பெரிய நகரத்தின் மேயராக இருப்பதில் மிகவும் பெருமைப்படுகிறேன்” என்று கூறியுள்ளார். Ipswich Borough பேரூராட்சியின் இந்து சமூகத்தின் உறுப்பினர்கள் புதன்கிழமை மாலை இடம்பெற்ற விழாவில் கலந்து கொண்டனர், அத்துடன், வாரத்தின் பிற்பகுதியில் அருகிலுள்ள கோயிலில் கொண்டாட்டங்களும் திட்டமிடப்பட்டன. இந்து மதத்தைச் சார்ந்த ஒருவர் மேயராக தெரிவுசெய்யப்பட்டுள்ளமை Ipswich Borough பேரூராட்சி நகரின் பன்முகத்தன்மையையும் பன்முக கலாச்சாரத்தையும் காட்டுகிறது என Ipswich இந்து சமாஜத்தின் தலைவர் சச்சின் கராலே தெரிவித்துள்ளார். இது குறித்து நான் உண்மையிலேயே பெருமைப்படுகிறேன் எனவும் அவர் கூறியுள்ளார். இலங்கையை விட்டு வெளியேறிய இளவழகன் இந்தியா, உகாண்டா மற்றும் ருவாண்டா ஆகிய நாடுகளில் வாழ்ந்து பணி செய்து பிரித்தானிய வந்தடைந்தார். இளவழகன் ஆரம்பத்தில் கிழக்கு லண்டனில் உள்ள Ilfordக்கு குடிபெயர்ந்தார், எனினும், 2006 ஆம் ஆண்டில் Ipswichஇல் குடியேறினார். “நான் Ipswich வந்தபோது, மக்கள் மிகவும் நட்பாக இருப்பதை உணர்ந்தேன்,” இதனையடுத்து Ipswich எனது சொந்த நகரம் என்று முடிவுசெய்தேன்” என இளவழகன் குறிப்பிட்டுள்ளார். “பல நாடுகளில் வாழ்ந்து பலவிதமான வாழ்க்கை முறைகளை அனுபவித்துள்ளதால், தேவைப்படுபவர்களுக்கு உதவுவதில் நான் எப்போதும் ஆர்வமாக உள்ளேன்,” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கனடாவிலிருந்து திடீரென 6 ஆயிரம் பேர் வெளியேற்றம்…!

கனடாவின் மேற்கு மாகாணம் அல்பெர்டா பகுதியில் நேற்றையதினம் காட்டுத்தீ பரவியதாக கனடா செய்திகள் தெரிவிக்கின்றன. காற்று வீச்சு அதிகமாக இருந்த காரணத்தால் கட்டுக்கடங்காமல் காட்டுத்தீ வேகமாக  பரவியதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில்  தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு உலங்கு வானூர்திகள் மூலம் விரைந்து  தீப்பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அதேவேளை  தீப்பரவலை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பீகன் ஹில், அபசன்ட், பிரேரி கிரீக் உள்ளிட்ட நகரிலுள்ள சுமார் 6 ஆயிரம் பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வானிலை மாற்றம் மிகவும் மோசமாக இருக்கும் என்று கனடாவின் வனத்துறை அதிகாரிகள் அச்சம் தெரிவித்ததுடன் பலத்த காற்று வீசுவதால் தீயை அணைப்பது மிகவும் சிரமமாக உள்ளதாகவும் தெரிவித்தனர்.