Search
Close this search box.

ரஷ்ய போரில் பங்கெடுத்திருக்கும் இலங்கையர்கள் தொடர்பில் ஆராய விசேட குழு!

ரஷ்ய – உக்ரைன் போரின் தொடர்புபட்டிருக்கும் இலங்கையர்கள் குறித்து ஆராய்வதற்காக விசேட தூதுக் குழுவொன்றை ரஷ்யாவிற்கு அனுப்புமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளதாக வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்தார். அதற்கமைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், முன்னாள் ரஷ்யாவின் தூதுவர் மற்றும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் அடங்கிய குழுவொன்று உடனடியாக ரஷ்யாவிற்கு அனுப்பப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய இதனைத் தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர்: தற்போது வெளிவிவகார அமைச்சும் பாதுகாப்பு அமைச்சும் இணைந்து ரஷ்ய உக்ரைன் போரில் பங்கெடுத்திருக்கும் இலங்கையர்களின் கணக்கெடுப்பை நடத்தி வருகின்றன. சுற்றுலா விசாவில் இலங்கையர்கள் சிலர் ரஷ்யாவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. மேலும், அவர்களில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் முப்படைகளிலிருந்து ஓய்வு பெற்ற வீரர்கள். ரஷ்யாவிற்கு எத்தனை பேர் சென்றிருக்கிறார்கள் என்ற கேள்விதான் தற்போதைய பிரச்சினையாக காணப்படுகிறது. உறுதிப்படுத்தப்படாத தகவல்களின் படி ரஷ்யாவில் 600-800 வரையிலானவர்கள் அல்லது அதற்கு அதிகமானவர்கள் சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. எவ்வாறாயினும், அரசாங்கம் என்ற வகையில், ரஷ்யாவில் இருக்கும் இலங்கையின் ஓய்வுபெற்ற இராணுவ உறுப்பினர்கள் தொடர்பான அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவில் போரில் பங்கேற்றிருப்பது தொடர்பில் தகவல் வௌிப்படுத்திய ஊடகங்களுக்கு நன்றி. ரஷ்யாவில் இவர்கள் தங்கியிருக்கும் பிரதேசம் தொடர்பில் அறிய முடியாமல் இருப்பதே தற்போதைய சிக்கலாகும். ரஷ்ய குடியுரிமை வழங்குவது போன்ற பொய்யான வாக்குறுதிகளை வழங்கி ஆள் கடத்தல்காரர்கள் இவர்களை ரஷ்யாவிற்கு அழைத்துச் சென்றுள்ளதாக அறிய கிடைத்துள்ளது. இந்த ஆள்கடத்தல் செயற்பாடுகளில் இராணுவ உயர் அதிகாரியொருவருக்கும் தொடர்பு இருப்பதாக தெரியவந்திருக்கிறது. எவ்வாறாயினும் ரஷ்யாவிற்கு ஆட்களை அனுப்புவது நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். உண்மை நிலைமையை அவர்களுக்குச் சொல்ல வேண்டும். பின்னர், இராஜதந்திர மட்டத்தில் கலந்துரையாடி அங்கு சென்றுள்ளவர்களை இலங்கைக்கு அழைத்து வர முடியும் என நம்புகிறோம். அரசாங்கம் அதற்காக முழுமையாக அர்பணிக்கும். வெளிவிவகார அமைச்சர் வெளிநாடு சென்றிருக்கும் நிலையிலும், ரஷ்ய – உக்ரைன் போரில் பங்கெடுத்திருக்கும் இலங்கையர்கள் குறித்து ஆராய்வதற்கான விஷேட தூதுக்குழுவொன்றை ரஷ்யாவுக்கு அனுப்புமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். இதன்படி, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், முன்னாள் ரஷ்ய தூதுவர், வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் அடங்கிய குழுவொன்று ரஷ்யாவுக்கு அனுப்பப்படவுள்ளது. இது குறித்து ரஷ்ய தூதரகத்துக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும்” என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

உணவு வழங்கும் திட்டம் – பாடசாலை மாணவர்களின் வருகை அதிகரிப்பு..

பகல் உணவு வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் ஆரம்பப் பாடசாலைகள் மற்றும் 100ற்கும் குறைவான மாணவர்கள் உள்ள பாடசாலைகளில் மாணவர்களின் வருகை அதிகரித்துள்ளதா என்பது பற்றியும், உணவுத் திட்டத்தைப் பெற்றுக்கொள்ளும் ஆரம்பப் பாடசாலை மாணவர்கள் மற்றும் 100 பேருக்குக் குறைவான பாடசாலைகளில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை பற்றி ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பாராளுமன்ற வழி வகைகள் பற்றிய குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பாட்டலி சம்பிக ரணவக்க, கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார். அத்துடன், இத்திட்டத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் அறிக்கை கையளிக்குமாறு அவர் குறிப்பிட்டார். வழிவகைகள் பற்றிய குழு அதன் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையில் அண்மையில் பாராளுமன்ற குழு அறையில் கூடியபோதே இவ்விடயம் பற்றிக் கலந்துரையாடப்பட்டது. ஆரம்பப் பாடசாலைகளில் மாணவர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தின் ஊடாக நன்மை பெறும் மாணவர்களின் தொகை 2024ஆம் ஆண்டு 11 இலட்சத்திலிருந்து 16 இலட்சமாக அதிகரிக்கப்பட்டிருப்பதாக வழி வகைகள் பற்றிய குழுவில் தெரியவந்தது. இதற்கமைய ஒரு மாணவருக்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகை 80 ரூபாவிலிருந்து 110 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், உணவின் தரம் தொடர்பில் அளவுகோல்கள் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டம் தொடர்பாக மாகாணக் கல்வித் திணைக்களம், பிராந்தியக் கல்விப் பிரிவு அதிகாரிகள் மற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மூலம் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் குழுவில் தெரியவந்தது. கடந்த காலத்தில் 6 இலட்சம் பாடசாலை மாணவர்கள் காலை உணவை எடுத்துக்கொள்ளாமல் பாடசாலைகளுக்கு வருகை தருவதாக அறிக்கையிடப்பட்டதாகவும், இந்த உணவு வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதும் மாணவர்களின் வருகை அதிகரித்திருப்பதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்துக்காக வருடமொன்றுக்கு 16.6 பில்லியன் ரூபா செலவிடப்படுவதாகவும், எனினும், 4 பில்லியன் ரூபாவுக்கான பற்றாக்குறை நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தில் பங்கெடுக்கும் நோக்கில் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் விருப்பத்துடன் உதவிகளை வழங்கினாலும், இந்த உதவிகளை நேரடியாக அரசாங்கத்திற்கு வழங்கத் தயாராக இல்லை எனவும் தலைவர் தெரிவித்தார். ஆசிரியர் சங்கங்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கங்களுக்கு இவ்வாறான உதவிகளை நேரடியாக வழங்குவதில் ஏதாவது சட்டரீதியான தடைகள் உள்ளனவா என்பது பற்றி ஆராயுமாறும் அவர் அறிவுறுத்தினார். மேலும், சமூக ஊடகங்களின் அடிப்படையில் புகார்களைப் பெறுவதற்கான கட்டமைப்பைத் தயாரிக்குமாறு சுட்டிக்காட்டிய குழுவின் தலைவர், வழங்கப்படும் உணவின் தரம் தொடர்பில் புகராளிப்பதற்கு வட்ஸ்அப் செயலியைப் பயன்படுத்துமாறும் ஆலோசனை வழங்கினார். அத்துடன், அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் 2024ஆம் ஆண்டு மே மாதம் 1,000,000 குடும்பங்களுக்கு அதன் நன்மைகள் வழங்கப்பட்டிருப்பதாகவும், இதில், மிகவும் வறுமையான மற்றும் வறுமையான பிரிவுகளின் கீழ் முறையே 313,947 குடும்பங்களும், 653,047 குடும்பங்களும் நன்மைகள் வழங்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் குழுவின் தலைவருக்குப் பதில் வழங்கினர். தேசிய அடையாள அட்டைகள் மற்றும் வங்கிக் கணக்குகளில் உள்ள சிக்கல்கள் போன்ற பல்வேறு காரணங்களால் நலன்புரித் திட்டங்களைப் பெறுவதற்கு 200,000 பேர் தகுதியடைந்துள்ளபோதிலும் அவர்களுக்கு உரிய நன்மைகளைப் பெற்றுக் கொள்ள முடியாதிருப்பதும் இங்கு தெரியவந்தது. மேலும், மேன்முறையிடுகளில் காணப்படும் முன்னேற்றங்கள் குறித்தும் குழு கேட்டறிந்துகொண்டது. இந்த வருடத்தின் மே மாதத்தில் ஒவ்வொரு பிரிவின் கீழும் அஸ்வெசும நலன்புரி வழங்கிய முதல், நலன்புரித் திட்டத்தைப் பெற்றுக்கொண்ட குடும்பங்களின் எண்ணிக்கை, கையளிக்கப்பட்டுள்ள மேன்முறையீடுகளில் தெரிவுசெய்யப்படவுள்ள பயனாளர்களின் எண்ணிக்கை போன்ற சரியான தகவல்கள் மற்றும் ஜூலை 2024 முதல் பயனாளிகளின் எண்ணிக்கை 24 இலட்சமாக அதிகரிக்கப்படவுள்ளதால் தகுதியானவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான வழிமுறைகள் மற்றும் அளவுகோல்கள் குறித்த அறிக்கையை குழுவுக்கு வழங்குமாறும் வழிவகைகள் பற்றிய குழுவின் தலைவர் பரிந்துரைத்தார். அத்துடன், கிராம சேவகர் பிரிவில் அஸ்வெசும நலன்புரித் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு எந்த அதிகாரிகளைச் சார்ந்தது என்பது தொடர்பில் பிரச்சினை இருப்பதாகவும், இது தொடர்பான அறிக்கையொன்றையும், பெரும் எண்ணிக்கையிலான நபர்கள் தவறான தகவல்களை வழங்கி அஸ்வெசும பயனாளிகளாகியிருப்பது புலனாகியிருப்பதால் நலன்புரித் திட்டத்தைப் பெற்றுக் கொள்வதற்கான தகவல்களை வழங்கியவர்களின் புள்ளிவிபரங்கள் அடங்கிய அறிக்கையயும் குழுவிடம் சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. விதாதா நிலையங்கள் மற்றும் வணிக வங்கிகளில் சிறிய மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளுக்காக கடன் திட்டத்துடன் இதனையும் ஒன்றிணைக்குமாறு வழிவகைகள் பற்றிய குழுவினால் இதற்கு முன்னர் வழங்கப்பட்ட அறிவுறுத்தல் நடைமுறைப்படுத்துப்பட்டுள்ளன என்பது குறித்தும் குழுவின் தலைவர் வினவினார். உத்தேச குடும்ப அமுலாக்கத் திட்டம் குறித்த கால அட்டவணையுடன் தகவல்கள் அடங்கிய அறிக்கையை குழுவிடம் சமர்ப்பிக்குமாறும் அதன் தலைவர் வலியுறுத்தினார். முதியோர்களுக்கு வழங்கப்படும் மாதாந்த உதவித்தொகை குறித்தும் ஆலோசிக்கப்பட்டதுடன், சிறுநீரக நோயாளர்களுக்கான மாதாந்த உதவித்தொகைக்கான செலவு குறித்த விரிவான அறிக்கையை வழிவகைகள் பற்றிய குழுவிடம் வழங்குமாறு தலைவர் அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் வழிவகைகள் பற்றிய குழுவின் உறுப்பினர்களான இராஜாங்க அமைச்சர் சிறிர ஜயகொடி, பாராளுமன்ற உறுப்பினர்களான தயாசிறி ஜயசேகர, எஸ்.எம்.எம்.முஷாரப், சஞ்சீவ எதிரிமான்ன, உதயன கிரிந்திகொட மற்றும் சுதத் மஞ்சுள ஆகியோரும் கலந்துகொண்டனர்.

பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்!

இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை காரணமாக மழை நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. அனுராதபுரம் – பி.ப. 2.00 மணிக்குப்பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் மட்டக்களப்பு – பி.ப. 2.00 மணிக்குப்பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் கொழும்பு – மழை அல்லது இடியுடன்கூடிய மழை பெய்யும் காலி – மழை அல்லது இடியுடன்கூடிய மழை பெய்யும் யாழ்ப்பாணம் – பி.ப. 2.00 மணிக்குப்பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் கண்டி – பி.ப. 2.00 மணிக்குப்பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் நுவரெலியா – பி.ப. 2.00 மணிக்குப்பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் இரத்தினபுரி – மழை அல்லது இடியுடன்கூடிய மழை பெய்யும் திருகோணமலை – பி.ப. 2.00 மணிக்குப்பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்

நான் ரணிலின் ரசிகன் அல்ல!

தற்போதைக்கு கட்சியை விட நாடு முக்கியம் எனவும் அதனால் தான் ரணில் விக்கிரமசிங்கவிற்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என தாம் ஆலோசனை வழங்குவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வலியுறுத்துகின்றார். ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பாராளுமன்ற தேர்தலை நடத்துவது தற்போது பொருத்தமற்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாடு எதிர்நோக்கி வரும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு நிலையான அரசாங்கம் அமைய வேண்டும் எனவும் தற்போதைய சூழ்நிலையில் பாராளுமன்ற தேர்தலின் மூலம் நிலையான அரசாங்கம் உருவாகாது எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் பொதுத் தேர்தலை நடத்துவதன் மூலம் நாட்டில் மீண்டும் ஒரு நிலையான அரசாங்கத்தை உருவாக்க முடியும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். மீரிகம தொகுதி உறுப்பினர்களுக்கு கட்சியை வலுப்படுத்துவது மற்றும் எதிர்வரும் அரசியல் செயற்பாடுகள் குறித்து அறிவிக்கும் நிகழ்ச்சி ஒன்றில் நேற்று (15) கலந்து கொண்டு அமைச்சர் இதனை தெரிவித்தார். தாம் ரணிலின் ரசிகன் அல்ல என்பதை வலியுறுத்திய அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, தான் ஒருபோதும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணையப் போவதில்லை என்றும் கம்பஹா மாவட்ட மக்களுக்கு அநீதி இழைக்கப் போவதில்லை என்றும் உறுதியளித்தார். மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, “தேர்தல் என்றாலே அவ்வப்போது வெவ்வேறு சித்தாந்தங்கள் உருவாகும். ஒரு காலத்தில் “டட்லியின் வயிறு மசாலா வடை ” என்று அழைக்கப்பட்டது. இப்போது சமீபத்திய சித்தாந்தம் “75 வருட சாபம்”. தயாரிக்கும் கதை தான் இந்த 75 வருஷமும் சாப்பிட்டுவிட்டு முயற்சி செய்து பாருங்கள் என்று ஒரு கருத்தை உருவாக்குகிறார்கள். இதன்போது இந்த நாட்டின் பெரும்பான்மையானோர் 05 இலட்சத்து 45 இலட்சம் ஆக்க முயற்சிக்கின்றனர். அதற்கு, 400 சதவீதம் அதிகரிக்க வேண்டும். அதற்காகச் செல்வது கடினம் என்பது அவர்களுக்குத் தெரியும் அதனால்தான் ஒவ்வொரு குழுவையும் குறிவைத்து சித்தாந்தங்களை உருவாக்குகிறார்கள். 75 ஆண்டுகால சாபத்தைப் பற்றிப் பேசும்போது, இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லவில்லையென்றால் நம் கட்சிக்காரர்கள் அதைக் கேட்டுத் தலையை ஆட்டுவார்களே தவிர, எதிர்க் கருத்துகளை உருவாக்க மாட்டார்கள். அதற்கான திட்டத்தை உருவாக்க வேண்டும். அரசியல் செய்யும்போது கூட்டத்தைக் காட்டி அலைக்கழிப்பது ஒரு வழியாகும். அலை மணலில் அடித்தால், அது மறைந்துவிடும். இது தற்காலிகமானது. கிராம மட்டத்தில் நல்லதொரு அமைப்பு பலத்தை உருவாக்கினால் அரசியல் செய்து தேவைக்கேற்ப முடிவெடுக்கும் திறன் எமக்கு உண்டு. மே 9 அன்று, எனது வீடு தீவைக்கப்பட்டது. 1977 இல் என் தந்தையின் வீடு எரிந்தது. பயந்தால் கட்சிக்காரர்களை காக்க முடியாது. நம்முடன் வேலை செய்பவர்களை கைவிட முடியாது. மே 9, 2022 அன்று நடந்த சம்பவத்தால், நம் மக்கள் இப்போது அச்சத்தில் உள்ளனர். ஏனென்றால் மக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. அமரகீர்த்தி பற்றி மட்டுமே பேசுகிறோம். ஆனால் இலங்கை முழுவதும் 20க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். கிராமங்களை விட்டு விரட்டப்பட்டோம். இரண்டு மூன்று மாதங்களாக நாங்கள் கிராமத்திற்கு வரவில்லை. அவர்களின் நோக்கம் நிறைவேறியது. அதனால் தான் நாங்கள் இதை ஒரு அணியாக எதிர்கொள்ள முடிவு செய்தோம். நமது சித்தாந்தங்கள் கீழ் மட்டத்திற்கு செல்ல வேண்டும். அதனால்தான் எங்கள் அமைப்பு பலத்தை அதிகரிக்கச் செயல்படுகிறோம். 75 ஆண்டுகால சாபத்தைப் பற்றி பேசுவது, உண்மையில் இந்த நாட்டில் செய்யப்படவில்லையா? சுதந்திரம் பெற்ற போது நமது நாட்டில் மக்களின் ஆயுட்காலம் 42 ஆண்டுகள். இப்போது ஆயுட்காலம் 77-80 ஆண்டுகள் ஆகிவிட்டது. தாய் சேய் இறப்பு குறைந்துள்ளது. மருத்துவமனைகள் மேம்பட்டுள்ளன. ஒவ்வொரு 05 கி.மீட்டருக்கும் ஒரு ஆரம்ப மருத்துவப் பிரிவு உள்ளது. தற்போது மாவட்ட வைத்தியசாலைகளும் அடிப்படை வைத்தியசாலைகளும் உருவாக்கப்பட்டு இலவச சுகாதாரம் இந்த நாட்டில் உயர் மட்டத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. காலனியாக மாறிய பிறகு மருத்துவமனைகளில் 18 படுக்கைகள் உள்ளன. 75 ஆண்டுகளில் 90,000 படுக்கைகள் உள்ளன. 75 ஆண்டு கால சாபம் பற்றி பேசுபவர்கள் அந்த 75 ஆண்டு காலத்தில் எந்த அரசியல் கட்சிக்கும் பங்களிக்கவில்லையா? ஜே.ஆர்.ஜயவர்தனவை ஆட்சிக்குக் கொண்டு வருவதற்கு ஜே.வி.பி உதவியதாக எனக்கு ஞாபகம். சிறிசேன குரேயுடன் இணைந்து கொண்டு ஜே.ஆரைக் கொல்ல முயற்சித்து அன்று பிரேமதாசாவை ஆட்சிக்குக் கொண்டு வந்தது ஜே.வி.பி தான். சந்திரிக்காவை விகாரமஹா தேவி என்று அழைத்து வந்து மேடைகளில் பேசிய மக்கள் விடுதலை முன்னணி.  மகிந்தவை நாங்கள்தான் அழைத்து வந்தோம் என்கிறார்கள். அதன் பின்னர் சரத் பொன்சேகாவுடன் இணைந்து கொண்டார்கள். மைத்திரிபால வெற்றியடையவும் இணைந்து கொண்டனர். மந்திரி அவர்கள் மந்திரி பதவிகளை ஏற்று செயற்பட்டார்கள். இந்த 75 ஆண்டுகளில் எந்த அரசியல் தொடர்பும் இல்லாத எண்களைப் பற்றி பேசுகிறார்கள். பொருளாதார நெருக்கடி என்பது கோத்தபாய வந்து இரண்டு வருடங்களின் பின்னர் ஏற்பட்ட ஒன்றல்ல. இயற்கைப் பேரழிவான சுனாமி, 71 கலகம், 83 கறுப்பு ஜூலை, 88/89 கலகம் போன்றவை ஏற்பட்டன. 30 வருட யுத்தம் நடந்தது. இவை அனைத்தும் பொருளாதாரத்தை பாதித்தன. 83 கறுப்பு ஜூலை  காரணமாக, மக்கள் விடுதலை முன்னணி உட்பட பல கட்சிகள் தடை செய்யப்பட்டன. மறுவாழ்வுக்குப் பிறகு கட்சித் தலைவர்கள் அரசியல் களத்துக்குத் திரும்பினர். ஜே.வி.பி அரசியலுக்கு வரவில்லை. அவர்கள் மறைந்திருந்ததால், 88/89 களில், அவர்கள் மக்களைக் கொன்று தங்கள் காட்டுச் சட்டத்தை அமல்படுத்தத் தொடங்கினர். நாங்கள் வெற்றி பெற்றால், கிராமத்தில் உள்ள எங்கள் உறுப்பினர்களைக் கொண்டு கிராமத்தில் சட்டத்தை அமல்படுத்துவோம் என்று லால் காந்தா சமீபத்தில் கூறினார். கிராமத்திற்கு யார் அதிகாரம் கொடுக்க முடியும்? பாராளுமன்றம் நீதிமன்றத்திற்கு வழங்கிய அதிகாரத்தை கிராமத்திற்கு வழங்க முடியாது. அதைச் செய்ய யாருக்கும் உரிமை இல்லை. அவர்கள் வெறும் கதைகளைச் சொல்வதில்லை. இன்று நாடு பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வருகிறது. சுற்றுலாப் பயணிகளும் முதலீட்டாளர்களும் இன்று இலங்கைக்கு வருகின்றனர். வெளிநாட்டு தொழிலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறுகின்றனர். ஏனெனில் இந்நாட்டு மக்களுக்கு வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. தற்போது சுற்றுலா பயணிகள் வருவதை தடுக்கும் வகையில் நாசவேலைகள் செய்யப்படுகின்றன. நாடு நெருக்கடியான நிலையில் இருந்தால் சுற்றுலாப் பயணிகளும் முதலீட்டாளர்களும் இந்நாட்டிற்கு வரமாட்டார்கள். கோவிட் தொற்றுநோய் மற்றும் அரகலவின் மூலம் இந்த சூழ்நிலையை நாங்கள் எதிர்கொண்டோம். ஆனால் இப்போது நாம் நினைத்ததை விட பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வருகிறோம். ஜனாதிபதித் தேர்தலுக்கு மொட்டுக் கட்சியில் வேட்பாளர் இல்லை என்பதால், இந்த நேரத்தில் சவால்களை ஏற்றுக்கொண்ட தலைவரை, சவால்களை எதிர்கொள்ளக்கூடிய தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என்று நான் அறிக்கை வெளியிட்டேன். 2022 நமது ஜனாதிபதியும் பிரதமரும் ராஜினாமா செய்தனர். அதன் பின்னர் இதனைத் தொடர்ந்து கொண்டு செல்ல  எங்களுக்கு உதவுமாறு பலரை அழைத்தோம். யாரும் உதவுவதற்கு முன் வரவில்லை. யாரும் ஏற்கவில்லை. இதனை திரு.ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக்கொண்டார். கட்சி என்பது உறுப்பினர்களின் குழுவாகும். ஒரு நாடு என்பது அதில் வாழும் அனைத்து குடிமக்களையும் குறிக்கும். ஒரு நாட்டிற்கா அல்லது கட்சிக்கா நாம் பெரியவர்களாக இருக்க வேண்டும்? கட்சியின் நிகழ்ச்சி நிரலை நாங்கள் நிறைவேற்றுகிறோம். ஒரு நாடு, இரண்டு கட்சிகள். நாட்டைப் பற்றி யோசித்து, திரு.ரணில் விக்கிரமசிங்கவுக்கு உதவ முடிவு செய்தேன். அது எனது தனிப்பட்ட கருத்து. இலங்கை குறுகிய காலத்தில் மீண்டு வந்த நாடு என்று சர்வதேச நாணய நிதியமும் உலக வங்கியும் இன்று கூறுகின்றன. இந்நாட்டு மக்கள் செய்த தியாகத்தினால் இது சாத்தியமானது. மக்கள் போராட்டங்களுக்கு செல்லவில்லை. தலைவர்கள் மக்களைப் போராடத் தூண்டினர். இந்த நாட்டில் என்ன நடக்கிறது என்பதை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். தற்போதைய ஜனாதிபதிக்கு மக்கள் தியாகம் செய்து உதவுகிறார்கள். ஜனாதிபதியும் அரசாங்கமும் மக்கள் தீர்மானங்களை எடுக்கவில்லை. மக்களின் பங்களிப்பு இல்லாவிட்டால், இதை வெற்றியடையச் செய்திருக்க முடியாது. நாடாளுமன்றத் தேர்தல் வந்தால் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது. பெரும்பான்மை பெற முடியாவிட்டால் என்ன நடக்கும்? கரு ஜயசூரியவுடன் ஒரு குழு ஒன்று கூடி பாராளுமன்ற அதிகாரத்தை பலப்படுத்தியதால் மகிந்த போரில் வெற்றி பெற்றார். பெரும்பான்மை இல்லாமல் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள முடியாது. எனவே, பாராளுமன்ற வாக்கெடுப்பை விட ஜனாதிபதி பதவிக்காலம் இருப்பது சிறந்தது. ரணில் விக்கிரமசிங்க அவர்கள் சிறப்பாக வேலை செய்கிறார் என்பதற்காக மீண்டும் ஆட்சிக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் மக்கள் உள்ளனர். அவர் ஒரு பொதுவான அடையாளத்துடனும் பொதுவான கூட்டணியுடனும் வர வேண்டும். இன்று நான் ரணிலின் ரசிகனாக மாறிவிட்டேன். நான் ஐக்கிய தேசியக் கட்சிக்கு செல்லப் போவதாக சிலர் கூறுகின்றனர். நம்மிடையே இருப்பவர்களே அப்படிச் சொல்கிறார்கள், வெளியாட்கள் அல்ல. கம்பஹா மாவட்ட மக்களுக்கு அநீதி இழைக்கும் முடிவை நான் ஒருபோதும் எடுக்க மாட்டேன். மக்களைப் பற்றி சிந்தித்து முடிவுகளை எடுக்கிறேன். கட்சிகள் வரும் போகும். அரசியல் செய்தால் வெற்றியும் தோல்வியும் ஏற்படும். ஒரு நாடு சிதைந்தால் அதற்கு நாம் அனைவரும் பொறுப்பேற்க வேண்டும்.

O/L பரீட்சையில் மேலும் சில மோசடிகள்!

கல்விப் பொதுத்தராதர சாதாரணத் தரப் பரீட்சையில் மேலும் சில மோசடிகள் தொடர்பில் இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 14 மாணவர்களுக்கு புவியியல் வினாத்தாளில் சில பிரிவுகள் வழங்கப்படவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதேபோல், இரணடு விசேட தேவையுடைய மாணவர்களுக்கும் பரீட்சை மேற்பார்வையாளர்களால் இடையூறு ஏற்படுத்தப்பட்டதாகவும் முறைப்பாட்டாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். நேற்று நிறைவடைந்த சாதாரண தரப் பரீட்சையில் பிழைகள் காணப்பட்டதாகவும் மற்றும் பரீடசை நிலையங்கள் சிலவற்றில் மோசடிகள் இடம்பெற்றதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வந்தது. இவ்வாறான சூழலில் மினுவங்கொடை கல்வி வலயத்தின் அல்ஹமான் முஸ்லிம் மகா வித்தியாலத்தில் தமிழ் மொழி மூல பரீட்சையில் தோற்றிய 14 மாணவர்களுக்கு புவியியல் பாடத்தின் முதலாவது வினாத்தாள் மற்றும் வரைப்பட பகுதி பெற்றுக் கொடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இலங்கையில் இணைய சிறுவர் துஷ்பிரயோகம் அதிகரிப்பு!

இணையத்தில் சிறார்களை துஷ்பிரயோகம் செய்வது அதிகரித்துள்ளமை தொடர்பில் அமெரிக்க அமைப்பு ஒன்று இலங்கைக்கு அறிவித்துள்ளது. அந்த அறிக்கையை அடிப்படையாக கொண்டு நீதிமன்றம் சென்ற பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் இது தொடர்பில் விரிவான விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், இந்த வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் மாத்திரம், இணையத்தில் நிர்வாண புகைப்படங்களைப் பயன்படுத்தி சிறார்களை அச்சுறுத்தல் மற்றும் துன்புறுத்தல் தொடர்பாக 55 முறைப்பாடுகள் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு கிடைத்துள்ளன. பெற்றோரின் பராமரிப்பில் வளரும் குழந்தைகள் சமூகத்தில் வெளிப்படும் போது படிப்படியாக கைப்பேசி மற்றும் இணைய நடவடிக்கைகளுக்கு திரும்புகின்றனர். இணையத்தில் அதிகரித்து வரும் சிறார் துஷ்பிரயோகங்களால் இது ஒரு பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது. இணையம் மற்றும் சமூக ஊடக வலையமைப்புகளில் நிர்வாண புகைப்படங்களைப் பயன்படுத்தி சிறார்களை அச்சுறுத்துவது மற்றும் அழுத்தம் கொடுத்தல் தொடர்பில் 2023 ஆம் ஆண்டில் 150 முறைப்பாடுகளும், இந்த வருடம் ஏப்ரல் 31 ஆம் திகதி வரை 55 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. 2021, 22 மற்றும் 23 ஆம் ஆண்டுகளில் துஷ்பிரயோகத்திற்காக சிறார்களை இணையத்தளங்களில் கோருவது 300 சதவீதம் அதிகரித்துள்ளது என அமெரிக்க நிறுவனமான காணாமல் போன மற்றும் சுரண்டப்பட்ட சிறார்கள் தொடர்பான தேசிய மையம் வௌிப்படுத்தியுள்ளது. இலங்கையில் வயது குறைந்த சிறுவர்களின் ஆபாச புகைப்படங்களை உருவாக்கி இணையத்தில் வெளியிட சில குழுக்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குறித்த அமெரிக்க நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், நேற்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு சென்ற பொலிஸ் தலைமையக சிறுவர் மற்றும் மகளிர் பணியகம், குறித்த அறிக்கையை அடிப்படையாக கொண்டு  விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. எனினும்  எத்தனை சிறார்களின் புகைப்படங்கள் ஆபாசமான புகைப்படங்களாக உருவாக்கப்பட்டுள்ளன என்பது இதுவரை கண்டு பிடிக்கப்படவில்லை. சமர்ப்பணங்களை பரிசீலித்த கொழும்பு மேலதிக நீதவான் கெமிந்த பெரேரா, சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொண்டு உண்மைகளை நீதிமன்றில் தெரிவிக்குமாறு பொலிஸ் தலைமையக சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திற்கு உத்தரவிட்டார்.

தற்காலிகமாக மூடப்பட்ட எல்ல – வெல்லவாய வீதி!

இன்று காலை முதல் பெய்து வரும் அடை மழை காரணமாக பதுளை மாவட்டம் எல்ல – வெல்லவாய வீதியை இன்று (16) மாலை 6 மணி முதல் நாளை (17) காலை 6 மணி வரை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. மலிதகொல்ல பிரதேசம் உட்பட பல பகுதிகளில் வீதி ஆபத்தான நிலையில் காணப்படுவதனால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மாற்று வழிகளை பயன்படுத்துமாறும் மக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.