ஆர்ப்பாட்டப் பேரணியைக் கலைக்க நீர்த்தாரை பிரயோகம்
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களால் இன்று முற்பகல் பத்தரமுல்லை பொல்துவ சந்தியில் நடத்தி வரும் ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்காக பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் நடத்தியுள்ளனர். இந்நிலையில், இன்று (13) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்ட பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்துக்கும் தடை விதித்து நீதிமன்றால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம், நாவல திறந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் இணைந்து குறித்த ஆர்ப்பாட்ட பேரணியை ஏற்பாடு செய்துள்ளனர். ஆர்ப்பாட்டத்தின் போது ஒலிபெருக்கிகளை பயன்படுத்தி வீதி நாடகங்களை நடத்தவுள்ளதாக மிரிஹான தலைமையக பொலிஸ் பரிசோதகருக்கு கிடைத்த தகவவலை அடுத்து அவரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய நுகேகொட நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. அனுலா வித்தியாலாயம், புனித ஜோசப் பெண்கள் கல்லூரி, சமுத்திரா தேவி பெண்கள் கல்லூரி, புனித ஜோன்ஸ் ஆண்கள் கல்லூரி, சுஜாதா பெண்கள் கல்லூரி ஆகியவை கல்வி பொது தராதர சாதாரண தார பரீட்சை மையங்களாகவும், பிரதான வீதிக்கு அருகாமையில் அனுலா வித்தியாலயம் பரீட்சை ஒருங்கிணைப்பு நிலையமாகவும் இயங்கி வருவதாலும் இவற்றை கருத்தில் கொண்டு நீதிமன்றால் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் இலங்கை விஜயம்
தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லு இன்று (13) நாட்டுக்கு விஜயம் செய்யவுள்ளார்.
கோடையின் தாகத்தை பனை நுங்கு மூலம் குறைக்கும் சுயாதீன தமிழ் இளைஞர்களின் நுங்குத் திருவிழா….
வவுனியா மரக்காரம்பளையில் தமிழரின் பாரம்பரிய பறை இசையுடன் நுங்கு திருவிழா 12.05.2024 இடம்பெற்றது இதன்போது பனை மரத்தின் பயன்கள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டதுடன் பனை மரத்தின் உற்பத்திப்பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. மேலும் கலை நிலா கலையகத்தினால் “குளக்கரையை பாதுகாப்போம்” எனும் தொனிப்பொருளில் நாடகம் ஆற்றுகையும் இடம்பெற்றிருந்தது சுயாதீன தமிழ் இளைஞர்களினால் தொடர்ச்சியாக ஐந்தாவது வருடமாக ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த நிகழ்வில் பெருமளவான இளைஞர் யுவதிகள் என பலரும் கலந்துகொண்டு கோடையின் தாகத்தை பனை நுங்கு மூலம் குறைத்துசென்றனர்
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் திடீர் மாற்றம்…!
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நாளுக்கு நாள் ஏற்ற இறக்கத்துடன் பதிவாகியுள்ளது. அதனடிப்படையில் இன்றையதினம்(13) , செலான் வங்கியில்- அமெரிக்க டாலரின் வாங்குதல் மற்றும் விற்பனை விகிதங்கள் மாற்றமின்றி ரூ. 292.50 மற்றும் ரூ. முறையே 302. மக்கள் வங்கியில்- அமெரிக்க டாலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விகிதங்கள் ரூ. 293.21 முதல் ரூ. 293.60 மற்றும் ரூ. 303.14 முதல் ரூ. முறையே 303.55. கொமர்ஷல் வங்கியில்- அமெரிக்க டாலரின் கொள்முதல் விகிதம் ரூ. 292.23 முதல் ரூ. 292.73 மற்றும் விற்பனை விலை ரூ. 302.50 முதல் ரூ. 303. சம்பத் வங்கியில்- அமெரிக்க டாலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விலைகள் ரூ. 294 முதல் ரூ. 294.50 மற்றும் ரூ. 303 முதல் ரூ. முறையே 303.50 ஆக பதிவாகியுள்ளது.
தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதே சிறந்தது: இந்தியா தெரிவித்துள்ள விடயம்….
இலங்கைக்குள் சமத்துவம், நீதி, சமாதானம் மற்றும் கண்ணியம் ஆகியவற்றுக்கான தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படுவது இலங்கையின் நலனுக்கே சிறந்தது என்று இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா தெரிவித்துள்ளார். கொழும்பில் தெரிவு செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதில் வழங்கும்போதே இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார். மேலும் குறிப்பிடுகையில், “அரசியல் நல்லிணக்கம் மற்றும் இலங்கை அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துதல் தொடர்பில் இலங்கை அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிகளுக்கு இது பொருந்தும். இலங்கையின் ஐக்கியம், ஸ்திரத்தன்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு இந்தியா உறுதியாக உள்ளதோடு இலங்கையின் பல்வேறு துறைகளில் இந்தியாவின் ஒட்டுமொத்த ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக, வடக்கு மற்றும் கிழக்கு இலங்கை மக்களுக்கு நன்மை பயக்கும் அபிவிருத்தி முயற்சிகள் நறைமுறைப்படுத்தப்படுகின்றன இந்த விடயங்களில் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றும் நிலைப்பாட்டையே இந்தியா கொண்டிருக்கிறது. இலங்கையின் கடன் மறுசீரமைப்பு விவாதங்களின் தொடக்கத்திலிருந்து இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதில் இந்தியா முன்னணியில் இருந்து வருகிறது. தற்போது, இலங்கை அரசாங்கம் தனியார் கடன் வழங்குநர்களுடன் அவர்களின் கடனை மறுசீரமைப்பதற்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்து கலந்துரையாடி வருகிறது. இந்தநிலையில் இலங்கை தரப்பின் கோரிக்கையின் அடிப்படையில் முடிந்த எந்த வகையிலும் இந்தியா தமது உதவி கரத்தை நீட்ட தயாராக இருக்கின்றது. இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் வை மேம்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன. இதேவேளை இலங்கையின் பொருளாதார வளர்ச்சியும் பாதுகாப்பும் ஒன்றோடொன்று இணைந்துள்ளன எனவே, இரண்டு நாடுகளும் பாதுகாப்பு மற்றும் உணர்திறன்களை மனதில் வைத்து ஒன்றிணைந்து செயல்படுவது அவசியம்” என்றும் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கிய நான்கு தமிழர்கள் கைது
முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தை முன்னிட்டு திருகோணமலை – மூதூர் பகுதியில் கஞ்சி காய்ச்சி வழங்கிய மூன்று பெண்கள் உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கமலேஸ்வரன் தென்னிலா, கமலேஸ்வரன் விஜிதா, காளிராஜா சுஜா மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மூதூர் அமைப்பாளர் ஹரிஹரகுமார் ஆகியோர் கைதாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று காலை கஞ்சி தயாரித்து வழங்கியப் போது பொலிஸாரின் அச்சுறுத்தல் விடுத்ததாகவும், பின்னர் இரவு குறித்த அனைவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழினப்படுகொலை நினைவேந்தல் வாரத்தின் ஆரம்ப நாளான இன்று முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கிய பெண் ஒருவரை சம்பூர் ஆண் பொலிசார் வீட்டில் சென்று மிகவும் கீழ்த்தரமான முறையில் இழுத்து சென்றுள்ளனர் இதன்போது பெண் ஒருவரை பொலிஸார் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றுள்ளனர். இது குறித்த காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன. இதனிடையே, எதிர்வரும் 14 நாட்களுக்கு முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையை நினைவுகூரும் வகையில் திட்டமிடப்பட்டுள்ள எந்தவொரு நிகழ்வுகளையும் தடைசெய்யும் நீதிமன்ற உத்தரவையும் மூதூர் நீதவான் நீதிமன்றில் பொலிஸார் பெற்றுக்கொண்டனர். தமிழர் தாயகம் தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் வாரம் வடக்கு கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த கைது நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன. நீதிமன்றின் உத்தரவுக்கு அமையவே குறித்த அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சியில் சிக்கிய பாரியளவான போதைப்பொருள்…!
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியான கனகபுரம் மற்றும் விவேகானந்தா நகர் பகுதிகளில் ஒரு கிலோவும் 760 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. பொலிஸ் விசேட அதிரடிப்படைக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மோட்டார் சைக்கிளை வழிமறித்து சோதனைக்கு உட்படுத்த முற்பட்ட வேளையில் மோட்டார் சைக்கிளையும் ஒரு கிலோ 500 கிராம் கஞ்சாவையும் கைவிட்டு ஒருவர் தப்பிச் சென்றுள்ளார். இதேபோன்று கிளிநொச்சி பொலிஸ் மது ஒழிப்பு பிரிவுக்கு கிடைக்கப் பெற்ற ரகசிய தகவலையடுத்து வீதியில் சென்று கொண்டிருந்த இரண்டு சந்தேக நபர்களை சோதனைக்கு உட்படுத்திய போது அவர்களிடமிருந்து 260 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மற்றும் பொலிஸாரும் மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மற்றும் கைப்பற்றப்பட்டுள்ள கஞ்சா போதைப்பொருளும் மோட்டார் சைக்கிளும் இன்று நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஊர்காவற்துறை பாடசாலை ஒன்றில் 7 மாதங்களின் பின் மீண்டும் மின்சாரம்…!
யாழ்ப்பாணம் தீவகப் பகுதிக்கு உட்பட்ட ஊர்காவற்துறை பாடசாலை ஒன்றில் ஏழு மாதங்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பத்திரிகைகள் மற்றும் இணைய ஊடகங்களில் செய்திகள் வெளிவந்த நிலையில் வடமாகாண பிரதம செயலாளரின் தலையீட்டினால் மீண்டும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த பாடசாலையில் மின்சார இணைப்புக்கான பட்டியல் நிலுவைத் தொகை வலக் கல்வி பணிமனையினால் செலுத்தப்படாத நிலையில் குறித்த பாடசாலை மின்சாரம் துண்டிக்கப்பட்டது. துண்டிக்கப்பட்ட மின்சாரத்தை மீளப் பெறுவதற்கு தண்டப் பணமாக சுமார் 3000 ரூபாய் வரை செலுத்த வேண்டும். குறித்த பணத்தை வலயம் செலுத்தினால் கணக்காய்வு திணைக்களத்துக்கு காரணம் கூற வேண்டி வரும் என்ற காரணத்தினால் குறித்த பணத்தை கட்டாது காலம் கடத்தி வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் அச்சு ஊடகங்கள் மற்றும் இணையதளங்கள் செய்தி வெளியிட்ட நிலையில் வடமாகாண பிரதமர் செயலாளர் இ.இளங்கோவனின் துரித நடவடிக்கை காரணமாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு வழங்கப்பட்ட பணிப்புரையின் காரணமாக குறித்த பாடசாலைக்கு மீண்டும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸாரிடம் சிக்கிய காதலி…! குளியாப்பிட்டிய இளைஞரின் படுகொலை…! நடந்தது என்ன?
குளியாப்பிட்டியில் கடந்த சில நாட்களாக காணாமல் போயிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞரின் கொலைக்கு உதவிய குற்றச்சாட்டில் 18 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில், கொலை செய்யப்பட்ட இளைஞனின் காதலி மற்றும் குளியாப்பிட்டிய, இலுகென, வஸ்ஸாவுல்ல பிரதேசத்தை சேர்ந்த சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீண்ட விசாரணையைத் தொடர்ந்து, குற்றத்திற்கு உதவியமை, ஒரு நபரைக் கொலை செய்தமை மற்றும் குற்றத்தை மறைத்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் குளியாப்பிட்டி பொலிஸார் குறித்த பெண்ணை கைது செய்தனர். பாதிக்கப்பட்ட 31 வயதான குளியாப்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் நபர், கடந்த ஏப்ரல் 22ஆம் திகதி காணாமல் போயிருந்ததாகவும், 16 நாட்களுக்குப் பின்னர் கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் 07 ஆம் திகதி மாதம்பே காட்டுப்பகுதியில் எரிக்கப்பட்ட நிலையில் கைவிடப்பட்ட நிலையில் இளைஞனின் சடலத்தை பொலிஸார் கண்டெடுத்துள்ளனர். உணவகத்தை நடத்தி வந்த பாதிக்கப்பட்ட நபர், குளியாப்பிட்டியவில் உள்ள தனது காதலியின் இல்லத்திற்கு தனது ஊழியருடன் சென்றிருந்த நிலையில், அவர் காணாமல் போனதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குளியாப்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மற்றொரு வௌிநாட்டு வேலை வாய்ப்பு மோசடி….
ருமேனியாவில் வேலை வாய்ப்பை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்றுக் கொண்ட நீர்கொழும்பு பகுதியில் இயங்கி வரும் வேலைவாய்ப்பு முகவர் நிறுவனம் ஒன்றின் முன்பாக நேற்று (12) பதற்றமான சூழல் ஏற்பட்டது. 128 இளைஞர்கள் தலா 7 முதல் 10 இலட்சம் ரூபா வரை பணம் இந்த வேலை வாய்ப்பிற்காக பணம் செலுத்தியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இவர்கள் அனைவரும் நேற்று வேலைவாய்ப்பு முகவர் நிறுவனத்திற்கு முன்பாக திரண்டனர். அங்கு அவர்கள் ஊடகங்ளிடம் கருத்து தெரிவிக்கையில் “நான் வாத்துவையில் இருந்து வந்தேன்.. ருமேனியா செல்வதற்காக 7.45 லட்சம் ரூபாய் கொடுத்தேன். இதேபோன்று 120 பேர் இங்கே வந்துள்ளனர். நாளை நேர்முகத்தேர்வுக்கான திகதி வழங்கப்பட்டிருந்த நிலையில், இன்று அழைத்து அனைத்தும் இரத்து செய்யப்பட்டதாக கூறினர். ஒரு பாரிய மோசடியாகும்” என்றனர்.