முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தை முன்னிட்டு திருகோணமலை – மூதூர் பகுதியில் கஞ்சி காய்ச்சி வழங்கிய மூன்று பெண்கள் உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கமலேஸ்வரன் தென்னிலா, கமலேஸ்வரன் விஜிதா, காளிராஜா சுஜா மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மூதூர் அமைப்பாளர் ஹரிஹரகுமார் ஆகியோர் கைதாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று காலை கஞ்சி தயாரித்து வழங்கியப் போது பொலிஸாரின் அச்சுறுத்தல் விடுத்ததாகவும், பின்னர் இரவு குறித்த அனைவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழினப்படுகொலை நினைவேந்தல் வாரத்தின் ஆரம்ப நாளான இன்று முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கிய பெண் ஒருவரை சம்பூர் ஆண் பொலிசார் வீட்டில் சென்று மிகவும் கீழ்த்தரமான முறையில் இழுத்து சென்றுள்ளனர்
இதன்போது பெண் ஒருவரை பொலிஸார் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றுள்ளனர். இது குறித்த காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
இதனிடையே, எதிர்வரும் 14 நாட்களுக்கு முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையை நினைவுகூரும் வகையில் திட்டமிடப்பட்டுள்ள எந்தவொரு நிகழ்வுகளையும் தடைசெய்யும் நீதிமன்ற உத்தரவையும் மூதூர் நீதவான் நீதிமன்றில் பொலிஸார் பெற்றுக்கொண்டனர்.
தமிழர் தாயகம் தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் வாரம் வடக்கு கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த கைது நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.
நீதிமன்றின் உத்தரவுக்கு அமையவே குறித்த அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.