Search
Close this search box.
தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதே சிறந்தது: இந்தியா தெரிவித்துள்ள விடயம்….

இலங்கைக்குள் சமத்துவம், நீதி, சமாதானம் மற்றும் கண்ணியம் ஆகியவற்றுக்கான தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படுவது இலங்கையின் நலனுக்கே சிறந்தது என்று இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா தெரிவித்துள்ளார்.

கொழும்பில்  தெரிவு செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதில் வழங்கும்போதே இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

மேலும் குறிப்பிடுகையில், “அரசியல் நல்லிணக்கம் மற்றும் இலங்கை அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துதல் தொடர்பில் இலங்கை அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிகளுக்கு இது பொருந்தும்.

 

இலங்கையின் ஐக்கியம், ஸ்திரத்தன்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு இந்தியா உறுதியாக உள்ளதோடு இலங்கையின் பல்வேறு துறைகளில் இந்தியாவின் ஒட்டுமொத்த ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக, வடக்கு மற்றும் கிழக்கு இலங்கை மக்களுக்கு நன்மை பயக்கும் அபிவிருத்தி முயற்சிகள் நறைமுறைப்படுத்தப்படுகின்றன

இந்த விடயங்களில் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றும் நிலைப்பாட்டையே இந்தியா கொண்டிருக்கிறது.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு விவாதங்களின் தொடக்கத்திலிருந்து இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதில் இந்தியா முன்னணியில் இருந்து வருகிறது.

தற்போது, இலங்கை அரசாங்கம் தனியார் கடன் வழங்குநர்களுடன் அவர்களின் கடனை மறுசீரமைப்பதற்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்து கலந்துரையாடி வருகிறது.

இந்தநிலையில் இலங்கை தரப்பின் கோரிக்கையின் அடிப்படையில் முடிந்த எந்த வகையிலும் இந்தியா தமது உதவி கரத்தை நீட்ட தயாராக இருக்கின்றது.

 

இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் வை மேம்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன.

இதேவேளை இலங்கையின் பொருளாதார வளர்ச்சியும் பாதுகாப்பும் ஒன்றோடொன்று இணைந்துள்ளன

எனவே, இரண்டு நாடுகளும் பாதுகாப்பு மற்றும் உணர்திறன்களை மனதில் வைத்து ஒன்றிணைந்து செயல்படுவது அவசியம்” என்றும் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா தெரிவித்துள்ளார்.

Sharing is caring

More News