Search
Close this search box.

ஐனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவிப்பு!!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் செப்டெம்பர் 17 ஆம் திகதிக்கும் ஒக்டோபர் 16 திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அம்பாறையில் முதலைகளின் நடமாட்டம் அதிகரிப்பு…! மக்கள் அச்சம்…!

அம்பாறை மாவட்டத்தில் சிறுபோக வேளாண்மை செய்கை ஆரம்பமாகியுள்ள நிலையில் அதிகளவிலான முதலைகள் வெளியேறி மக்கள் குடியிருப்புகளுக்குள் செல்கின்றன. இந்நிலையில், தற்போது மாவடிப்பள்ளி பாலம் சம்மாந்துறை பகுதி ,ஒலுவில் பகுதி ,நிந்தவூர் ,மருதமுனை, பெரியநீலாவணை ,நற்பிட்டிமுனை, பாண்டிருப்பு ,கிட்டங்கி, நாவிதன்வெளி, உள்ளிட்ட பகுதிகளை அண்மித்த ஆற்றை விட்டு இரவிலும் பகலிலும் முதலைகள் வெளியேறுவதனால் வீதியால் செல்லும் பயணிகள் மற்றும் பாதசாரிகள் அச்சத்துடனேயே பயணத்தை மேற்கொள்கின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் அதிகமான சுமார் 9,5, 4அடி நீளமுடைய முதலைகள் வெளியேறுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும், இம்மாவட்டத்தில் உள்ளிட்ட களப்புக்கள் போன்ற இடங்களிலும் முதலை அச்சறுத்தல் தொடர்ந்து வருகின்றன. மேற்படி பகுதிகளில் உள்ள வாவிகள் குளங்களிலும் முதலைகளின் பெருக்கம் அதிகரித்து காணப்படுகிறது. மேலும் தற்போது சிறுபோக வேளாண்மை செய்கை ஆரம்பமாகி உள்ளதனால் வயல் நிலங்கள் கால்வாய்கள் அண்டிய பகுதியில் நீருக்காக குளங்களை நாடிச் செல்லும் ஆடுஇ மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் முதலைகளினால் இரைக்குள்ளாகின்றது. இப்பகுதியில், இரவிலும் பகலிலும் முதலைகள் வெளியேறுவதனால் கட்டாக்காலிகளாக இப்பகுதியில் திரியும் மாடுகளே இம்முதலைகளுக்கு இரையாகுவதாக தெரிவிக்கப்படுகிறது. மேற்படி பகுதிகளில் முதலைகளின் பெருக்கம் அதிகரித்து காணப்படுகிறதுடன் முதலைகளின் பெருக்கம் சம்பந்தமாக உரிய இடங்களில் அறிவுறுத்துதல்கள் எச்சரிக்கை பலகைகள் உரிய இடங்களில் இதுவரையும் வைக்கப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. முதலை அபாயம் தெரியாமல் இப்பகுதியில் பயணிப்பதால் முதலையின் பிடிக்குள் அகப்படும் சாத்தியம் உள்ளது. இதை உரிய அதிகாரிகள் கவனத்தில் எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.

18 மாதங்களுக்கு பின் இந்தியாவுக்கு புது தூதரை நியமித்தார் சீன அதிபர்

18 மாதங்களுக்கு பிறகு இந்தியாவுக்கான தூதராக ஷியு பெயிகோங் என்பவரை சீன அதிபர் ஷி ஜின்பிங் நியமித்துள்ளார். இந்தியாவிற்கான சீன தூதராக சன் வெயிடோங் பதவி வகித்து வந்தார். அவரது பதவிக்காலம் கடந்த 2022 அக்., மாதத்துடன் நிறைவு பெற்றது. தற்போது இவர் அந்நாட்டின் வெளியுறவு இணை அமைச்சராக உள்ளார். இவர் பதவிக்காலம் முடிந்த பிறகு இந்தியாவிற்கான புது தூதர் யாரையும் அந்நாட்டு அரசு நியமிக்கவில்லை. இந்நிலையில், இந்தியாவிற்கான புதிய தூதராக ஷியு பெயிகோங் நியமிக்கப்பட்டு உள்ளார். இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், இந்த நியமனத்தை சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் உறுதி செய்துள்ளது. ஷியு பெயிகோங் விரைவில் டில்லி வந்து துாதராக பதவியேற்பார் என தகவல் வெளியாகி உள்ளது.

கிராம உத்தியோகத்தர் நியமனங்களில் அநீதி: முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு!

தற்போது வழங்கப்படும் கிராம உத்தியோகத்தர் நியமனத்துக்காக கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவில் இருந்து 11 பேர் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்ட போதிலும் இருவருக்கு மாத்திரமே நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப்(Imran Maharoof) கவலை வெளியிட்டுள்ளார். இந்த விடயம் குறித்து மீள் பரிசீலனை செய்யுமாறு உள்நாட்டலுவல்கள் பிரதியமைச்சர் அசோக பிரியந்தவைச் சந்தித்து வேண்டுகோள் விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று பிரதியமைச்சரைச் சந்தித்து இவ்வேண்டுகோளை அவர் முன்வைத்துள்ளார். “கிராம உத்தியோகத்தர் நிமயனத்திற்காக நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் நியமனம் பெறும் எண்ணிக்கையினரை விட அதே போன்ற ஒரு மடங்கு தொகையினர் வர்த்தமானி அறிவித்தலுக்கமைய நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கப்பட்டிருந்தனர். இதன்படி கிண்ணியாவிலிருந்து 11 பேர் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டிருந்தனர். எனவே, 5 அல்லது 6 பேருக்கு நியமனம் வழங்கப்பட வேண்டும். எனினும் தற்போது இருவருக்கு மாத்திரமே நியமனம் வழங்கப்படுகின்றது. ஏனைய பிரதேச நியமனங்களோடு ஒப்பிடுகையில் கிண்ணியா பிரதேசத்துக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது.எனவே, இது குறித்து மீள் பரீசீலனை செய்ய வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கு மேற்பட்ட மரக்குற்றிகள் மீட்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரணைப்பாலை பகுதியில் தனியார் காணி ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல இலட்சம் பெறுமதியான நூறுக்கும் மேற்பட்ட முதிரை மரக்குற்றிகள் முல்லைத்தீவு பொலிஸாரால் நேற்றையதினம்(08) கைப்பற்றப்பட்டுள்ளன. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் விசாரணைகளின் பின்னர் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை இவ்வாறு இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த அரச அதிகாரிகள் உடனடியாக உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் போருக்குப் பின்னரும் தமிழர்களுக்கு எதிராக சித்திரவதை”

இலங்கையில் உள்நாட்டு போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னரும், தமிழ் மக்களுக்கு எதிரான் சித்திரவதைகள் தொடர்வதாக சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டம் (International Truth and Justice Project – ITJP) தெரிவித்துள்ளது. இதன்படி, 2015 – 2022 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் சித்திரவதைகளுக்கு உள்ளானதாகக் கூறப்படும் 123 தமிழர்களின் விபரங்களையும் ITJP வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இலங்கைக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள இந்தக் குற்றச்சாட்டை அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் நேற்றைய தினம் முற்றாக மறுத்திருந்தார். போருக்கு பின்னர் இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் துஷ்பிரயோகங்களை ஆவணப்படுத்தி வரும் லண்டனை தளமாகக் கொண்ட சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டம் (International Truth and Justice Project – ITJP) அறிக்கையாக வெளியிட்டுள்ளது. 2022 ஜூலை மாதம் இலங்கையின் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றதன் பின்னர், மேற்குறிப்பிட்ட 123 பேரில் 11 தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவ்வாறு பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் நபர்கள் பிரித்தானியாவில் புகலிம் கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இலங்கைக்கு எதிராக சர்வதேச சமூகம் அழுத்தத்தை பிரயோகிக்காத வரையில் தமிழர்களுக்கு எதிராக அடக்குமுறை தொடரும் என ITJP இன் நிறைவேற்றுப் பணிப்பாளர் யாஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார். இந்த அறிக்கை தொடர்பில் சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட வெளியுறவுத்துறை இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய, “யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர், மனித உரிமைகள் பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்கும், தமிழர்களுக்கு காணிகளை விடுவிப்பது, இராணுவத்தை முகாம்களுக்கு மட்டுப்படுத்துவது உள்ளிட்ட நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கும் இலங்கை பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது அத்துடன், காணாமற்போனதாகக் கூறப்படும் மக்கள் தொடர்பான வழக்குகளை ஆராய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும்” கூறியுள்ளார்.

இலங்கையில் தமிழ் விகாரை கட்டப்பட வேண்டும்: ராகுல தேரர் பகிரங்கம்

இலங்கையில் தான் மரணிக்கும் முன் தமிழ் விகாரையொன்று கட்டப்பட வேண்டுமென ராகுல தேரர் தெரிவித்துள்ளார். ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அத்தோடு, அந்த தமிழ் விகாரையில், நூற்றுக்கணக்கான தமிழ் தேரர்கள் இருக்க வேண்டுமெனவும், அச்சமின்றி தமிழர்கள் விகாரைகளுக்கு செல்லும் நிலை நாட்டில் ஏற்பட வேண்டுமெனவும் அவர் கூறியுள்ளார். மேலும், இலங்கையில் உள்ள தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்காக குரல் கொடுக்கவும் தமிழ் அரசியல் தலைவர்களின் ஆதரவுடன் மக்களுக்காக சேவை செய்யவும் தான் உள்ளிட்ட காவி உடையணிந்த தேரர்கள் தயாராக இருப்பதாக ராகுல தேரர் தெரிவித்துள்ளார். எனினும், தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்கள் தேரர்களிடம் ஆலோசனைகளை பெற்றுக் கொள்ள ஏன் தயங்குகிறார்கள் என்றும் தேரர் கேள்வியெழுப்பியுள்ளார். இதேவேளை, ஈழத்தமிழர்கள் உலகின் பல நாடுகளில் தற்போது பரந்து வாழ்ந்து சாதனை படைத்துள்ளதாகவும் அவர்களுக்கு இலங்கையை கைப்பற்ற வேண்டுமென்ற அவசியம் கிடையாது எனவும் ராகுல தேரர் தெரிவித்துள்ளார்.

பெண்ணொருவரின் பல மில்லியன் ரூபாய் செத்துக்கள் முடக்கம்!

காலி பிரதேசத்தில் பெண்ணொருவருக்கு சொந்தமான பல மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களை தடை செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த சொத்து எவ்வாறு ஈட்டப்பட்டமை குறித்த தகவல்கள் வெளியிடப்படாமை காரணத்தினால், காலி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவரின் சொத்துக்கள் தடை செய்யப்பட்டுள்ளன. தடை செய்யப்பட்ட சொத்துக்களின் சந்தைப் பெறுமதி சுமார் 120 மில்லியன் ரூபாய் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த சொத்துக்களில் காலி தடல்ல பிரதேசத்தில் நான்கு மாடி கட்டிடமும் அக்மீமன பிரதேசத்தில் ஒன்றரை ஏக்கர் தேயிலை மற்றும் மிளகு காணியும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த சொத்துக்கள் தொடர்பில் எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

டயானா கமகே, வெளிநாடு செல்லத் தடை!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே வெளிநாடு செல்வதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (09) தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. பாதிக்கப்பட்ட தரப்பு சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கையை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவின் நகல்களை குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் அலுவலகம் மற்றும் தேசிய புலனாய்வு பணிப்பாளர் அலுவலகத்திற்கும் அனுப்பி வைக்கமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர் டயானா கமகேயின் பாராளுமன்ற உறுப்புரிமையை வறிதாக்கி உயர் நீதிமன்றம் நேற்று (08) தீர்ப்பளித்தது. சமூக செயற்பாட்டாளரான ஓஷல ஹேரத் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியது. டயானா கமகே பிரித்தானிய பிரஜையாக இருப்பதால் இந்த நாட்டின் பாராளுமன்றத்தில் அமர சட்டரீதியாக தகுதியற்றவர் என தீர்ப்பளிக்க கோரி இந்த மனு சமர்ப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கல்முனையில் 46 நாட்களைக் கடந்து முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம்!

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக தமிழ் மக்கள் முன்னெடுத்து வருகின்ற தொடர் போராட்டம் 46 நாளாகவும் இன்றும் தீர்வின்றி தொடர்கின்றது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பாக கடந்த மார்ச் மாதம் 25ஆம் திகதி இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. சில அரசியல்வாதிகள் மற்றும் உயர் அதிகாரிகளினால் குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக தமிழ் மக்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம் பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிருவாக அடக்குமுறைகளையும் கண்டித்தும் 46வது நாளாக இப் போராட்டம் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.