இலங்கையில் தான் மரணிக்கும் முன் தமிழ் விகாரையொன்று கட்டப்பட வேண்டுமென ராகுல தேரர் தெரிவித்துள்ளார். ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, அந்த தமிழ் விகாரையில், நூற்றுக்கணக்கான தமிழ் தேரர்கள் இருக்க வேண்டுமெனவும், அச்சமின்றி தமிழர்கள் விகாரைகளுக்கு செல்லும் நிலை நாட்டில் ஏற்பட வேண்டுமெனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், இலங்கையில் உள்ள தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்காக குரல் கொடுக்கவும் தமிழ் அரசியல் தலைவர்களின் ஆதரவுடன் மக்களுக்காக சேவை செய்யவும் தான் உள்ளிட்ட காவி உடையணிந்த தேரர்கள் தயாராக இருப்பதாக ராகுல தேரர் தெரிவித்துள்ளார்.
எனினும், தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்கள் தேரர்களிடம் ஆலோசனைகளை பெற்றுக் கொள்ள ஏன் தயங்குகிறார்கள் என்றும் தேரர் கேள்வியெழுப்பியுள்ளார்.
இதேவேளை, ஈழத்தமிழர்கள் உலகின் பல நாடுகளில் தற்போது பரந்து வாழ்ந்து சாதனை படைத்துள்ளதாகவும் அவர்களுக்கு இலங்கையை கைப்பற்ற வேண்டுமென்ற அவசியம் கிடையாது எனவும் ராகுல தேரர் தெரிவித்துள்ளார்.