சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனாவின் விவகாரத்துடன், கொதிப்படைந்த சில சமூக ஊடக பயனர்கள் சகட்டுமேனிக்கு வைத்தியத்துறையை விளாசி வருகிறார்கள்.
இந்த விளாசலில் உண்மைக்கும், ஆதாரங்களுங்களும் இடமில்லாமல் போய்விட்டது.
இவ்வாறு, சம்பந்தமில்லாமல் இணைக்கப்பட்ட விவகாரமே- வைத்தியர் நடராசா ஜெயக்குமாரனின் குற்றச்சாட்டு விவகாரம்.
யாழ்ப்பாணம், தெல்லிப்பளை புற்றுநோயாளர் வைத்தியசாலையின் வைத்தியர்கள் மீது, வைத்தியர் ஜெயக்குமாரன் குற்றம்சாட்டிய கடிதம் ஒன்று சமூக ஊடகங்களில் பரவியது.
பின்னர் அது சமூக ஊடக பயனர்கள் பலரால் பிரதியெடுக்கப்பட்டு பலவிதமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த குற்றச்சாட்டு கடிதத்தின் பின்னணி, அதன் பின்னாலுள்ள மருத்துவ விவகாரங்கள் பற்றியெல்லாம் யாரும் ஆராயவில்லை.
“பச்சை சட்டை போட்டால் அடிப்போம்“ பாணியில், மருத்துவர்கள் மீது யார் குற்றம்சாட்டினாலும், கண்ணை மூடிக்கொண்டு அதை நம்பி பகிர்வோம் என்ற மனநிலையுடன் பெரும்பாலானவர்கள் காணப்பட்டதை அவதானிக்க முடிந்தது.
வைத்தியர் ஜெயக்குமாரனின் குற்றச்சாட்டு பின்னணியை ஆராய்ந்த போது கிடைத்த தகவல்களை தொகுத்து தருகிறோம்.
யாழ்ப்பாணத்தில் இப்போது புற்றுநோய் சிகிச்சை சிறப்பான நிலையில் உள்ளது. தெல்லிப்பளையில் உள்ள புற்றுநோயாளர் சிகிச்சை நிலையத்துக்கு தினமும் ஏராளமானவர்கள் வருகிறார்கள்.
பணவசதியுள்ள சிலர் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலைகளுக்கு சென்றாலும், வடக்கிலுள்ள பெரும்பாலான புற்றுநோயாளர்களுக்கு ஆதாரமாக தெல்லிப்பளை புற்றுநோயாளர் சிகிச்சை நிலையமே உள்ளது.
இதற்கு காரணமான வைத்தியர்கள் இருவர். முதலாமவர்- வைத்தியர் ஜெயக்குமாரன்.. இரண்டாமவர் வைத்தியர் கிருசாந்தி.
இருவருமே அர்ப்பணிப்பாக செயற்பட்டதாலேயே தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை வளர்ச்சியடைந்துள்ளது. தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலையின் வளர்ச்சியில் இருவரின் பங்கும் தவிர்க்க முடியாதது என்பதே உண்மை.
ஆனால் சிக்கல் என்னவெனில்- கிட்டத்தட்ட ஒரே தகுதி நிலையுடைய இருவருமே ஒருவித ஈகோ சிக்கலில் சிக்கியுள்ளதே பிரச்சினையின் மூல காரணமென்கிறார்கள் மருத்துவத்துறையினர்.
அண்மையில், தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு ஜெயக்குமாரன் வழங்கிய செவ்வியை தொடர்ந்து, சமூக வலைத்தளங்களில் பல தவறான கருத்துக்கள் பரப்பப்பட்டு வருகிறது.
அதில் முக்கியமானது- ஜெயக்குமாரனின் வீட்டை எரித்து, உடைத்து அவரை வடக்கிலிருந்து விரட்டியதாகவும், அந்த சம்பவத்தின் பின்னணியில் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தியே இருந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.
இது மிகவும் தவறன தகவல். சத்தியமூர்த்தி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளராக கடமையேற்கு முன்னரே, ஜெயக்குமாரன் வெளியேறி விட்டார்.
ஜெயக்குமாரன் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேறியதற்கு ஒரே காரணமாக அமைந்த சம்பவம்- அப்போது யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக இருந்த பவானி.
பவானி பணிப்பாளராக இருந்த சமயத்தில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பெரும் ஊழல் மோசடி நடைபெற்றதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்திருந்தன.
நிர்வாக உத்தியோகத்தர் ஒருவரின் உதவியுடன் இந்த மோசடி நடந்ததாகவும் பகிரங்கமாக செய்திகள் வெளியாகியிருந்தன.
அப்போது, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவராக செயற்பட்டவர் ஜெயக்குமாரன்.
அப்போது, யாழ்ப்பாணத்தில் கோலோச்சிய அரச ஆதரவு ஆயுத இயக்கமொன்றின் தலைவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் பவானியை தீவிரமாக ஆதரித்தார்.
சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னள் பதில் அத்தியட்சகர் விவகாரத்திலும் இதே விதமான அணுகுமுறை தென்பட்டது.
இதனால், அந்த ஆயுத இயக்கத்தின் தலைவருடனும், வைத்தியர் ஜெயக்குமாரன் முரண்பட்டிருந்தார்.
இதன்பின்னர், 2012ஆம் ஆண்டு வைத்தியர் ஜெயக்குமாரன் வீட்டின் மீது கழிவு ஓயில் வீசப்பட்டு தாக்கப்பட்டது.
இந்த தாக்குதலை யார் நடத்தியது என்பது தொடர்பான விசாரணைகள் நடத்தப்படவில்லை.
வைத்தியசாலையின் ஊழல் தரப்பு அல்லது ஆயுத இயக்க தரப்பு இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாமென அப்போது கருதப்பட்டது.
இதுதான், வைத்தியர் ஜெயக்குமாரன் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேறிய கதை.
ஜெயக்குமாரன் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேறிய போது, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர். பலமான தொழிற்சங்க தலைவராக இருந்த வேறு யாரேனும் இப்படியொரு முடிவை எடுத்திருப்பார்களா என்பது சந்தேகமே. எனினும், உயிராபத்து என அவர் வெளியேறிய முடிவை யாரும் குறைமதிப்பிற்குட்படுத்த முடியாது.
வைத்தியர் கிருசாந்தி, வைத்தியர் ஜெயக்குமாரன் விவகாரத்தில் யார் சரி, யார் தவறு என்பதை தீர்மானிப்பது சிரமம்.
வைத்தியர் கிருசாந்தி உள்ளிட்ட தெல்லிப்பளை புற்றுநோயாளர் வைத்தியசாலையில் வைத்தியர்கள் தனியார் வைத்தியசாலைகளிலும் சிகிச்சையளிக்கிறார்கள்.
வைத்தியர் ஜெயக்குமாரனும் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கிறார்.
அவர் தனியார் வைத்தியசாலையிலும், மகரகம தேசிய புற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சையளித்தவர்களையும் தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்ததே சர்ச்சையாகியுள்ளது.
இவர்கள் அனைவருமே தனியார் வைத்தியசாலைகளிலும் சிகிச்சையளித்து, சிகிச்சைக்கு அரச வைத்தியசாலைகளையும் பயன்படுத்தியுள்ளனர்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது தந்தையை தெல்லிப்பளைக்கு அழைத்துச் சென்று, மனம் வெறுத்து, மகரகமவிற்கு அழைத்து சென்ற ஒருவர் தமிழ் பக்கத்துடன் பேசிய போது, தனது தந்தைக்கு புற்றுநோய் இருப்பது தெரிய வந்ததும், தனது நண்பருக்கு அறிமுகமான தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை வைத்தியர் ஒருவரை, நண்பர் மூலமாக தொடர்பு கொண்ட போது, எம்மை யாழிலுள்ள தனியார் வைத்தியசாலைக்கு அழைத்ததாக தெரிவித்தர்.
தனியார் வைத்தியசாலையில் ஒரு நோயாளிக்கு ஆரம்ப சிகிச்சையளித்து விட்டு, அவரை அரச வைத்தியசாலைக்கு பரிந்துரைத்து ஒரு வைத்தியர் அனுப்பினால் விவகாரம் சிக்கலானதே. ஜெயக்குமாரன் விவகாரத்தில் இதுதான் நடந்தது.
ஆனால், அரச வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்பட்ட ஒருவர், மற்றொரு அரச வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதை வைத்தியர்களே எதிர்ப்பது அநீதியானது.
ஆனால், உயிராபத்தான புற்றுநோய் போன்ற சிகிச்சைகளில், நோயாளிகள் மாற்றப்படும் போது, அவரது சிகிச்சை விபரங்களை முறையாக அனுப்ப வேண்டும். அந்த விபரங்களில் சிக்கல் இருந்ததாக தெல்லிப்பளை வைத்தியர்கள் வட்டாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் மருத்துவம் ஜெயக்குமாரன் அதை மறுக்கிறார்.
இப்படியான சமயத்தில், இரு தரப்பையும் இணைத்து பேசி சிக்கலை தீர்ப்பதே முறையான நடவடிக்கை. அதுதான் நடந்தது. தனக்கு எதிராக வைத்தியர் சத்தியமூர்த்தி உள்ளிட்டவர்கள் கையொப்பமிட்டு கடிதம் அனுப்பியதாக கூறப்படும் சம்பவத்தின் பின்னணி இதுதான்.
இரு தரப்பையும் இணைத்து பேசி, சிக்கலில்லாத சிகிச்சை பொறிமுறையை உருவாக்க வேண்டுமென்றுதான் அந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் மற்றொரு பார்வையும் உள்ளது. ஜெயக்குமாரன் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சையளித்த நோயாளியை தெல்லிப்பளை அரச வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தெல்லிப்பளை வைத்தியர்களும், யாழில் தனியார் வைத்தியசாலைகளில் சிகிச்சையளிப்பவர்கள்தான். யாழில் தனியார் வைத்தியசாலைகளில் சிகிச்சையளிக்கும் தமது நோயார்களை, அங்கு இல்லாத வளங்களை பயன்படுத்த, தெல்லிப்பளை அரச வைத்தியசாலைக்கு அழைத்து வருகிறார்கள்.
வைத்தியர் ஜெயக்குமாரனின் பேட்டி ஒளிபரப்பான சமயத்தில், அந்த நிகழ்ச்சியில் தொலைபேசி வழியாக உரையாடிய தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் தேவநேசன், தெல்லிப்பளை புற்றுநோய் மருத்துவர்கள் நோயாளர்களுடன் சுமுகமாக நடப்பதில்லையென்ற முறைப்பாடு தன்னிடம் வரவில்லையென தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், அவ்வாறான முறைப்பாடுகள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சென்றுள்ளதை தமிழ்பக்கம் அறிந்தது.
இந்த விவகாரம் தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அதிகாரியொருவர் விளக்கம் கோரும் அளவுக்கு நிலைமை சென்றுள்ளது.
தெல்லிப்பளை புற்றுநோயாளர் வைத்தியசாலை வைத்தியர்கள், நோயாளர்களை அணுகும் விதத்தில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் அது சீர்செய்யப்பட வேண்டும்.
அதற்காக, அங்கு மருத்துவ மாபியா கடைவிரித்து உட்கார்ந்துள்ளது என்பது பொருளல்ல. பிற தனியார் வைத்தியசாலைகளில் சிகிச்சையளித்து விட்டு தெல்லிப்பளைக்கு பரிந்துரைப்பதே மாபியாவின் கூறு- அதை வைத்தியர் ஜெயக்குமாரன் செய்திருப்பினும் தவிர்க்கப்பட வேண்டியதே. தெல்லிப்பளை வைத்தியசாலையில் அது நடப்பதும் தவிர்க்கப்பட வேண்டியதே.
வைத்தியர் ஜெயக்குமாரனும், தற்போது தெல்லிப்பளையிலுள்ள வைத்தியர்களும்- இந்த சமூகத்திலுள்ள புற்றுநோயாளர்களுக்கு சிகிச்சையளிக்க தேவையானவர்களே.
வைத்தியத்துறை மீதான மக்களின் கோபங்களை, வைத்தியத்துறை அமைப்பின் மீதான கோபமாக மாற்றும் முயற்சிகள் தற்போது நூதனமாக நடந்து வருவதை பலரும் அறியவில்லை.
இது ஆபத்தானது. தற்போது மருத்துவ மாபியா பற்றி பரவலாக பேசும் யாரும், யாழிலுள்ள நெதேர்ன் சென்ரல் வைத்தியசாலை பற்றியோ, பிற தனியார் வைத்தியசாலைகள் பற்றியோ பேசவில்லை.
அண்மையில் நொதேர்ன் சென்ரல் வைத்தியசாலையில் ஒரு ஸ்கானரை வைத்து, யாழிலுள்ள வைத்தியர்களை அழைத்து கருத்தமர்வு நடந்தது. அதை யாரும் கண்டுகொள்ளவில்லை.
இவைதான் மருத்துவ மாபியா. யாழில் கருவுறு சிகிச்சை ஒரு பெரும் மாபியாவாக வளர்ந்து வருகிறது.
இதை யாரும் கண்டுகொள்ளவில்லை. மாறாக, இரண்டு வைத்தியர்கள் தொடர்பான ஈகோ போட்டியை நாம் அலசி ஆராய்ந்து கொண்டிருப்பது, வைத்தியத்துறை மாபியாவை தப்ப வைப்பதுடன், சிஸ்டம் மீதான அவநம்பிக்கையை உருவாக்கி, தனியார் வைத்தியசாலைகளை நோக்கி மக்களை திசைதிருப்பும் ஒரு முயற்சியுமாகும்.