Search
Close this search box.

வரிகள் செலுத்தப்படாமையால் துறைமுகத்தில் விடுவிக்கப்படாமல் உள்ள அரிசி!

தேவையான வரிகள் செலுத்தப்பட்டால், இறக்குமதி செய்யப்படும் அரிசியின் இருப்பு நான்கு மணித்தியாலங்களுக்குள் கொழும்பு துறைமுகத்தில் இருந்து விடுவிக்கப்படும் என மேலதிக சுங்கப் பணிப்பாளர் நாயகம் சீவலி அருக்கொட தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள அவர், இந்த நடவடிக்கைகள் இறக்குமதி செயன்முறையை சீர்செய்வதையும், உள்ளூர் சந்தைக்கு அரிசி உரிய நேரத்தில் கிடைப்பதை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். எனவே, இறக்குமதியாளர்கள் பொருந்தக்கூடிய கடமைகளைத் தீர்ப்பதன் மூலம் பொருட்களை விடுவிக்கவேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். சுமார் 70,000 மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அருக்கொட தெரிவித்துள்ளார். இதற்காக 2,500 முதல் 3,000 அரிசி கொள்கலன்கள் நாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

யாழில் பலரை ஏமாற்றியவருக்கு நேர்ந்தகதி!

யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பகுதியைச் சேர்ந்த புகையிலையைச் செய்கையாளர்களிடம் புகையிலையைக் கடன் அடிப்படையில் கொள்வனவு செய்து, 5 கோடி ரூபாவுக்கும் மேல் நிலுவை வைத்துவிட்டுத் தலைமறைவான பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட விசேட குற்றவிசாரணைப் பிரிவுப் பொறுப்பதிகாரி குணரோஜன் தலைமையிலான குழுவினரிடம் வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போதே   தலைமறைவாக இருந்த போது சந்தேகநபர் வவுனியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக 14 முறைப்பாடுகள் தனித்தனியாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளன. கைதான சந்தேகநபர் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் நேற்று முற்படுத்தப்பட்ட நிலையில், அவரை 14 நாள்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

பெண்ணொருவர் சுட்டுக்கொலை

மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இனந்தெரியாத இருவர் வீடொன்றில் இருந்த பெண்ணை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் நேற்று (05) இரவு பதவிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போகஹவெவ பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பெண், பதவிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். பாலயாவெவ, போகஹவெவ பகுதியைச் சேர்ந்த 73 வயதுடைய பெண்ணே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். இந்த துப்பாக்கிச் சூட்டுக்காக டி56 துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் அல்லது சந்தேகநபர்கள் தொடர்பில் இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை. பதவிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

ரணில் தரப்பு அதிரடி அறிவிப்பு

கடந்த அரசாங்க காலத்தில் மதுபான அனுமதிப்பத்திரம் வழங்கியமை தொடர்பில் எதிர்வரும் வார இறுதியில் நாட்டிற்கு விரிவான விளக்கத்தை முன்வைக்கவுள்ளதாக புதிய ஜனநாயக முன்னணி தெரிவித்துள்ளது. கடந்த தேர்தல் காலத்தில் 361 மதுபான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டமை தொடர்பில் அவைத்தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க பாராளுமன்றத்தில் விடுத்த அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையிலேயே இந்த விளக்கத்தை முன்வைக்கவுள்ளதாக பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். மதுபான உரிமம் வழங்கும் முறை குறித்து விரிவாக விளக்கவுள்ளதாக புதிய ஜனநாயக முன்னணி தெரிவித்துள்ளது. கடந்த அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட மதுபான அனுமதிப்பத்திரங்களின் பட்டியல் பிமல் ரத்நாயக்கவினால் அண்மையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

பரீட்சைக்கு செல்ல மறுத்த மாணவி ; தனக்கு தானே தீ மூட்டி உயிர்மாய்த்த தாய்.

கடந்த 10ஆம் திகதி நடைபெற்ற க.பொ.த சாதாரணதரப் பரீட்சையின் நடனபாட செய்முறைப் பரீட்சைக்கு மகள் செல்ல மறுத்ததால் தாயார் தனக்கு தானே தீமூட்டி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் கடந்த 10ஆம் திகதி இடம்பெற்றது. பற்றிமா வீதி பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய  5 பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மகள் நடன பாட செய்முறை பரீட்சைக்கு செல்லா விட்டால் தான் மண்ணெண்ணெய் ஊற்றி எரிவேன் என தெரிவித்து தனது உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றியுள்ளார். அதன் பின்னர் தீக்குச்சியை பற்றவைத்த நிலையில் மகளிடம் பேசிக்கொண்டு இருந்தவேளை திடீரென அவரது ஆடையில் தீப்பற்றி எரிய ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் அவர் மீது பரவிய தீ அணைக்கப்பட்டு தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது சடலம் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இலங்கை நோக்கி வந்த சரக்குக் கப்பலில் பாரிய தீ விபத்து!

இந்தியாவிலிருந்து இலங்கை நோக்கி வந்து கொண்டிருந்த சரக்கு கப்பலில் வெள்ளிக்கிழமை (19) மாலை பாரிய தீ விபத்து இடம் பெற்றுள்ளது. இந்த கப்பல் இந்தியாவின் குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தில் இருந்து கொழும்பு நோக்கி வந்து கொண்டிருந்த போது  கோவாவின் தென்மேற்கே உள்ள கார்வார் கடற்பகுதியில்  தீ விபத்துக்குள்ளாகியுள்ளது. MV Maersk Frankfurt  என்ற கப்பலே தீ விபத்துக்குள்ளாகி உள்ளது. தீ விபத்தில் கப்பலின் முன் பகுதி வெடித்துள்ளது. தீயில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். கப்பலில் பிலிப்பைன்ஸ், மாண்டினெக்ரின் மற்றும் உக்ரைன் நாட்டவர்கள் உட்பட 21 பணியாளர்கள் இருந்துள்ளனர் கப்பலில் தீ மேலும் பாரவாமல் இந்திய கடலோர காவல்படை தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. “அவசர தீ விபத்தின்போது நீர்த்தாரைக்காக பயன்படுத்தப்படும் டோர்னியர் (Dornier) ரக  விமானம் அனுப்பப்பட்டது.இந்தக் கப்பல் சர்வதேச கடல்சார் அபாயகரமான பொருட்கள் (ஐஎம்டிஜி) ஏற்றிச் சென்றதாகவும், கப்பலின் முன் பகுதியில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது” என இந்திய கடலோர காவல்படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

பதுளை மாவட்டத்தில் சில பகுதிகளில் மின் தடை! வெளியான காரணம்

பதுளை மாவட்டத்தில் அடாவத்தை, எல்ரோட், லுணுகலகம ஆகிய பகுதிகளுக்கான மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். லுணுகலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட அரவாகும்புர கிராம சேவகர் பிரிவில் எல்ரோட் தீகல எல்ல வனப் பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இதன்போது இரண்டு மர மின்கம்பங்கள் எரிந்து சாய்ந்துள்ளமையினால் இவ்வாறு மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ். தெல்லிப்பளை புற்றுநோயாளர் சிகிச்சை சர்ச்சையின் உண்மைத்தகவல்கள்!

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனாவின் விவகாரத்துடன், கொதிப்படைந்த சில சமூக ஊடக பயனர்கள் சகட்டுமேனிக்கு வைத்தியத்துறையை விளாசி வருகிறார்கள். இந்த விளாசலில் உண்மைக்கும், ஆதாரங்களுங்களும் இடமில்லாமல் போய்விட்டது. இவ்வாறு, சம்பந்தமில்லாமல் இணைக்கப்பட்ட விவகாரமே- வைத்தியர் நடராசா ஜெயக்குமாரனின் குற்றச்சாட்டு விவகாரம். யாழ்ப்பாணம், தெல்லிப்பளை புற்றுநோயாளர் வைத்தியசாலையின் வைத்தியர்கள் மீது, வைத்தியர் ஜெயக்குமாரன் குற்றம்சாட்டிய கடிதம் ஒன்று சமூக ஊடகங்களில் பரவியது. பின்னர் அது சமூக ஊடக பயனர்கள் பலரால் பிரதியெடுக்கப்பட்டு பலவிதமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த குற்றச்சாட்டு கடிதத்தின் பின்னணி, அதன் பின்னாலுள்ள மருத்துவ விவகாரங்கள் பற்றியெல்லாம் யாரும் ஆராயவில்லை. “பச்சை சட்டை போட்டால் அடிப்போம்“ பாணியில், மருத்துவர்கள் மீது யார் குற்றம்சாட்டினாலும், கண்ணை மூடிக்கொண்டு அதை நம்பி பகிர்வோம் என்ற மனநிலையுடன் பெரும்பாலானவர்கள் காணப்பட்டதை அவதானிக்க முடிந்தது. வைத்தியர் ஜெயக்குமாரனின் குற்றச்சாட்டு பின்னணியை  ஆராய்ந்த போது கிடைத்த தகவல்களை தொகுத்து தருகிறோம். யாழ்ப்பாணத்தில் இப்போது புற்றுநோய் சிகிச்சை சிறப்பான நிலையில் உள்ளது. தெல்லிப்பளையில் உள்ள புற்றுநோயாளர் சிகிச்சை நிலையத்துக்கு தினமும் ஏராளமானவர்கள் வருகிறார்கள். பணவசதியுள்ள சிலர் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலைகளுக்கு சென்றாலும், வடக்கிலுள்ள பெரும்பாலான புற்றுநோயாளர்களுக்கு ஆதாரமாக தெல்லிப்பளை புற்றுநோயாளர் சிகிச்சை நிலையமே உள்ளது. இதற்கு காரணமான வைத்தியர்கள் இருவர். முதலாமவர்- வைத்தியர் ஜெயக்குமாரன்.. இரண்டாமவர் வைத்தியர் கிருசாந்தி. இருவருமே அர்ப்பணிப்பாக செயற்பட்டதாலேயே தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை வளர்ச்சியடைந்துள்ளது. தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலையின் வளர்ச்சியில் இருவரின் பங்கும் தவிர்க்க முடியாதது என்பதே உண்மை. ஆனால் சிக்கல் என்னவெனில்- கிட்டத்தட்ட ஒரே தகுதி நிலையுடைய இருவருமே ஒருவித ஈகோ சிக்கலில் சிக்கியுள்ளதே பிரச்சினையின் மூல காரணமென்கிறார்கள் மருத்துவத்துறையினர். அண்மையில், தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு ஜெயக்குமாரன் வழங்கிய செவ்வியை தொடர்ந்து, சமூக வலைத்தளங்களில் பல தவறான கருத்துக்கள் பரப்பப்பட்டு வருகிறது. அதில் முக்கியமானது- ஜெயக்குமாரனின் வீட்டை எரித்து, உடைத்து அவரை வடக்கிலிருந்து விரட்டியதாகவும், அந்த சம்பவத்தின் பின்னணியில் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தியே இருந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது. இது மிகவும் தவறன தகவல். சத்தியமூர்த்தி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளராக கடமையேற்கு முன்னரே, ஜெயக்குமாரன் வெளியேறி விட்டார். ஜெயக்குமாரன் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேறியதற்கு ஒரே காரணமாக அமைந்த சம்பவம்- அப்போது யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக இருந்த பவானி. பவானி பணிப்பாளராக இருந்த சமயத்தில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பெரும் ஊழல் மோசடி நடைபெற்றதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்திருந்தன. நிர்வாக உத்தியோகத்தர் ஒருவரின் உதவியுடன் இந்த மோசடி நடந்ததாகவும் பகிரங்கமாக செய்திகள் வெளியாகியிருந்தன. அப்போது, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவராக செயற்பட்டவர் ஜெயக்குமாரன். அப்போது, யாழ்ப்பாணத்தில் கோலோச்சிய  அரச ஆதரவு ஆயுத இயக்கமொன்றின் தலைவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் பவானியை தீவிரமாக ஆதரித்தார். சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னள் பதில் அத்தியட்சகர் விவகாரத்திலும் இதே விதமான அணுகுமுறை தென்பட்டது. இதனால், அந்த ஆயுத இயக்கத்தின் தலைவருடனும், வைத்தியர் ஜெயக்குமாரன் முரண்பட்டிருந்தார். இதன்பின்னர், 2012ஆம் ஆண்டு வைத்தியர் ஜெயக்குமாரன் வீட்டின் மீது கழிவு ஓயில் வீசப்பட்டு தாக்கப்பட்டது. இந்த தாக்குதலை யார் நடத்தியது என்பது தொடர்பான விசாரணைகள் நடத்தப்படவில்லை. வைத்தியசாலையின் ஊழல் தரப்பு அல்லது ஆயுத இயக்க தரப்பு இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாமென அப்போது கருதப்பட்டது. இதுதான், வைத்தியர் ஜெயக்குமாரன் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேறிய கதை. ஜெயக்குமாரன் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேறிய போது, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர். பலமான தொழிற்சங்க தலைவராக இருந்த வேறு யாரேனும் இப்படியொரு முடிவை எடுத்திருப்பார்களா என்பது சந்தேகமே. எனினும், உயிராபத்து என அவர் வெளியேறிய முடிவை யாரும் குறைமதிப்பிற்குட்படுத்த முடியாது. வைத்தியர் கிருசாந்தி, வைத்தியர் ஜெயக்குமாரன் விவகாரத்தில் யார் சரி, யார் தவறு என்பதை தீர்மானிப்பது சிரமம். வைத்தியர் கிருசாந்தி உள்ளிட்ட தெல்லிப்பளை புற்றுநோயாளர் வைத்தியசாலையில்  வைத்தியர்கள் தனியார் வைத்தியசாலைகளிலும் சிகிச்சையளிக்கிறார்கள். வைத்தியர்  ஜெயக்குமாரனும் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கிறார். அவர் தனியார் வைத்தியசாலையிலும், மகரகம தேசிய புற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சையளித்தவர்களையும் தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்ததே சர்ச்சையாகியுள்ளது. இவர்கள் அனைவருமே தனியார் வைத்தியசாலைகளிலும் சிகிச்சையளித்து, சிகிச்சைக்கு அரச வைத்தியசாலைகளையும் பயன்படுத்தியுள்ளனர். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது தந்தையை தெல்லிப்பளைக்கு அழைத்துச் சென்று, மனம் வெறுத்து, மகரகமவிற்கு அழைத்து சென்ற ஒருவர் தமிழ் பக்கத்துடன் பேசிய போது, தனது தந்தைக்கு புற்றுநோய் இருப்பது தெரிய வந்ததும், தனது நண்பருக்கு அறிமுகமான தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை வைத்தியர் ஒருவரை, நண்பர் மூலமாக தொடர்பு கொண்ட போது, எம்மை யாழிலுள்ள தனியார் வைத்தியசாலைக்கு அழைத்ததாக தெரிவித்தர். தனியார் வைத்தியசாலையில் ஒரு நோயாளிக்கு ஆரம்ப சிகிச்சையளித்து விட்டு, அவரை அரச வைத்தியசாலைக்கு பரிந்துரைத்து ஒரு வைத்தியர் அனுப்பினால் விவகாரம் சிக்கலானதே. ஜெயக்குமாரன் விவகாரத்தில் இதுதான் நடந்தது. ஆனால், அரச வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்பட்ட ஒருவர், மற்றொரு அரச வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதை வைத்தியர்களே எதிர்ப்பது அநீதியானது. ஆனால், உயிராபத்தான புற்றுநோய் போன்ற சிகிச்சைகளில், நோயாளிகள் மாற்றப்படும் போது, அவரது சிகிச்சை விபரங்களை முறையாக அனுப்ப வேண்டும். அந்த விபரங்களில் சிக்கல் இருந்ததாக தெல்லிப்பளை வைத்தியர்கள் வட்டாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் மருத்துவம் ஜெயக்குமாரன் அதை மறுக்கிறார். இப்படியான சமயத்தில், இரு தரப்பையும் இணைத்து பேசி சிக்கலை தீர்ப்பதே முறையான நடவடிக்கை. அதுதான் நடந்தது. தனக்கு எதிராக வைத்தியர் சத்தியமூர்த்தி உள்ளிட்டவர்கள் கையொப்பமிட்டு கடிதம் அனுப்பியதாக கூறப்படும் சம்பவத்தின் பின்னணி இதுதான். இரு தரப்பையும் இணைத்து பேசி, சிக்கலில்லாத சிகிச்சை பொறிமுறையை உருவாக்க வேண்டுமென்றுதான் அந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மற்றொரு பார்வையும் உள்ளது. ஜெயக்குமாரன் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சையளித்த நோயாளியை தெல்லிப்பளை அரச வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தெல்லிப்பளை வைத்தியர்களும், யாழில் தனியார் வைத்தியசாலைகளில் சிகிச்சையளிப்பவர்கள்தான். யாழில் தனியார் வைத்தியசாலைகளில் சிகிச்சையளிக்கும் தமது நோயார்களை, அங்கு இல்லாத வளங்களை பயன்படுத்த, தெல்லிப்பளை அரச வைத்தியசாலைக்கு அழைத்து வருகிறார்கள். வைத்தியர் ஜெயக்குமாரனின் பேட்டி ஒளிபரப்பான சமயத்தில், அந்த நிகழ்ச்சியில் தொலைபேசி வழியாக உரையாடிய தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் தேவநேசன், தெல்லிப்பளை புற்றுநோய் மருத்துவர்கள் நோயாளர்களுடன் சுமுகமாக நடப்பதில்லையென்ற முறைப்பாடு தன்னிடம் வரவில்லையென தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், அவ்வாறான முறைப்பாடுகள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சென்றுள்ளதை தமிழ்பக்கம் அறிந்தது. இந்த விவகாரம் தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அதிகாரியொருவர் விளக்கம் கோரும் அளவுக்கு நிலைமை சென்றுள்ளது. தெல்லிப்பளை புற்றுநோயாளர் வைத்தியசாலை வைத்தியர்கள், நோயாளர்களை அணுகும் விதத்தில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் அது சீர்செய்யப்பட வேண்டும். அதற்காக, அங்கு மருத்துவ மாபியா கடைவிரித்து உட்கார்ந்துள்ளது என்பது பொருளல்ல. பிற தனியார் வைத்தியசாலைகளில் சிகிச்சையளித்து விட்டு தெல்லிப்பளைக்கு பரிந்துரைப்பதே மாபியாவின் கூறு- அதை வைத்தியர் ஜெயக்குமாரன் செய்திருப்பினும் தவிர்க்கப்பட வேண்டியதே. தெல்லிப்பளை வைத்தியசாலையில் அது நடப்பதும் தவிர்க்கப்பட வேண்டியதே. வைத்தியர் ஜெயக்குமாரனும், தற்போது தெல்லிப்பளையிலுள்ள வைத்தியர்களும்- இந்த சமூகத்திலுள்ள புற்றுநோயாளர்களுக்கு சிகிச்சையளிக்க தேவையானவர்களே. வைத்தியத்துறை மீதான மக்களின் கோபங்களை, வைத்தியத்துறை அமைப்பின் மீதான கோபமாக மாற்றும் முயற்சிகள் தற்போது நூதனமாக நடந்து வருவதை பலரும் அறியவில்லை. இது ஆபத்தானது. தற்போது மருத்துவ மாபியா பற்றி பரவலாக பேசும் யாரும், யாழிலுள்ள நெதேர்ன் சென்ரல் வைத்தியசாலை பற்றியோ, பிற தனியார் வைத்தியசாலைகள் பற்றியோ பேசவில்லை. அண்மையில் நொதேர்ன் சென்ரல் வைத்தியசாலையில் ஒரு ஸ்கானரை வைத்து, யாழிலுள்ள வைத்தியர்களை அழைத்து கருத்தமர்வு நடந்தது. அதை யாரும் கண்டுகொள்ளவில்லை. இவைதான் மருத்துவ மாபியா. யாழில் கருவுறு சிகிச்சை ஒரு பெரும் மாபியாவாக வளர்ந்து வருகிறது. இதை யாரும் கண்டுகொள்ளவில்லை. மாறாக, இரண்டு வைத்தியர்கள் தொடர்பான ஈகோ போட்டியை நாம் அலசி ஆராய்ந்து கொண்டிருப்பது, வைத்தியத்துறை மாபியாவை தப்ப வைப்பதுடன், சிஸ்டம் மீதான அவநம்பிக்கையை உருவாக்கி, தனியார் வைத்தியசாலைகளை நோக்கி மக்களை திசைதிருப்பும் ஒரு முயற்சியுமாகும்.

சிறுவர்கள் மத்தியில் எச்.ஐ.வி. தொற்று அதிகரிப்பு!

கடந்த 2023 ஆம் ஆண்டில் 40 சிறுவர்கள் எச்.ஐ.வி. தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய பால்வினை நோய்கள் மற்றும் எயிட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் வினோ தர்மகுலசிங்க தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எச்.ஐ.வி. தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2022 ஆம் ஆண்டில் 607 ஆகவும் 2023 ஆம் ஆண்டில் 694 ஆகவும் அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்ட 694 பேரில் 613 ஆண்கள் உள்ளடங்குகின்றனர். இந்நிலையில், 15 முதல் 24 வயதுக்குட்பட்டவர்கள் மத்தியில் எச்.ஐ.வி. தொற்று அதிகரித்து வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சாவகச்சேரி வைத்தியசாலை விவகாரம் : முக்கிய சுகாதார சேவை அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கொழும்பு தலைமைக்காரியாலத்தில் இடம்பெறவிருக்கும் விசேட கலந்துரையாடலுக்கு முக்கிய சுகாதார சேவை அதிகாரிகள் அழைக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு  இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளர் தங்கவேல் கனகராஜ் தலைமையிலான குழுவினர் அவதானிப்பு விஜயம் ஒன்றை இம் மாதம் 7ஆம் திகதி மேற்கொண்டிருந்தனர். பொதுமக்கள் தமக்கான சேவைகளை பெற்றுகொள்வதில் இடர்பாடுகளை சந்திப்பதாக அலுவலகத்துக்கு கிடைத்த தொலைபேசி முறைப்பாடுகளுக்கு அமைய அக் களவிஜயம் மேற்கொள்ளப்பட்டது. குறித்த களவிஜயத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட மனித உரிமைகள் சார் பிரச்சினைகள் தொடர்பில் கடந்த 08 ஆம் திகதி வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், ஆகியோருடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. அதன் அறிக்கை  இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமைக்காரியாலயத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் அடுத்தகட்ட நடவடிக்கையாக, மத்திய மற்றும் மாகாண சுகாதார சேவை அதிகாரிகளை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கொழும்பு தலைமைக்காரியாலத்தில் விசேட கலந்துரையாடல்  எதிர்வரும் 30.07.2024 அன்று நடைபெறவுள்ளது. குறித்த கலந்துரையாடலில் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளவர்களின் விபரம் 01. செயலாளர்- சுகாதார அமைச்சு, கொழும்பு 02.சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்-சுகாதார அமைச்சு, கொழும்பு 03.மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர்- வடக்கு மாகாணம் 04.மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்- வடக்கு மாகாணம் 05.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்- யாழ்ப்பாணம் 06.மருத்துவ அத்தியட்சகர்,சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை