Search
Close this search box.

குறைந்த விலையில் மதுபானம் விரைவில் அறிமுகம்

உடலுக்கும் உயிருக்கும் தீங்கு ஏற்படுத்தும் கசிப்பிற்கு மாற்றீடாக குறைந்த விலை மதுபான வகையொன்று விரைவில் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்படவுள்ளது. கசிப்பு காரணமாக கலால் திணைக்களத்துக்கு வருடாந்தம் 30 வீதமான வருமான இழப்பு ஏற்படுகின்றது. அதனைத் தடுப்பதற்கும், பொதுமக்களை கசிப்பு பாவனையில் இருந்து மீட்பதற்கும் குறைந்த விலை மதுபான வகையொன்றை அறிமுகப்படுத்த கலால் திணைக்களம் உத்தேசித்துள்ளது. தற்போதைக்கு இது தொடர்பான கலந்துரையாடல்கள் நிதியமைச்சுடன் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.

முள்ளிவாய்க்காலில்கரைஒதுங்கிய வெளிநாட்டு பயணிகள் கப்பல்

முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் வெளிநாட்டு பயணிகள் அடங்கிய கப்பல் ஒன்று கரைஒதுங்கிய சம்பவம் ஒன்று இன்றையதினம் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரைப்பகுதியில் மியன்மாரில் இருந்து 103 பயணிகளுடன் கப்பல் ஒன்று திசைமாறி வந்துள்ளது. குறித்த கப்பலில் 25மேற்பட்ட சிறுவர்களும் உள்ளடங்கியிருக்கின்றனர்.அவர்களை மீட்டு கரைக்கு கொண்டுவரும் நடவடிக்கையில் முல்லைத்தீவு மீனவர் சங்கத்தினர், கடற்படையினர், இராணுவத்தினர், பொலிஸார் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறித்த கப்பலில் இருப்பவர்களுக்கு உணவுகள், உலருணவுகளை முல்லைத்தீவு மீனவர் சங்கத்தினர் வழங்கியிருக்கின்றார்கள், அதில் சிலர் மயக்கநிலையிலும், சுகவீனமுற்று இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையருக்கு விதிக்கப்பட்ட 37 ஆண்டுகள் சிறைத்தண்டனை

அவுஸ்திரேலியாவின்(australia) மெல்பேனில் இலங்கைப்(sri lanka) பெண்ணான நிலோமி பெரேரா, இலங்கையைச் சேர்ந்த அவரது முன்னாள் கணவரால் கத்தி மற்றும் கோடரியால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குறித்த நபருக்கு 37 ஆண்டுகள் சிறைத்தண்டனை அந்நாட்டு நீதிமன்றால் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 03 ஆம் திகதி மெல்பேன் சான்டேஸ்ட் என்ற இடத்தில் இரண்டு பிள்ளைகளுக்கு முன்னால் வைத்து தனது முன்னாள் மனைவியை இவர் மோசமாக தாக்கியுள்ளார். இதன்போது தலை,முகம் கழுத்து பகுதியில் மோசமான தாக்குதலுக்கு இலக்கானார்.இதனையடுத்து அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை அடுத்து முன்னாள் கணவரான டினுஷ் குரேரா (Dinush Kurera)தனது முன்னாள் மனைவி மீது கத்தி மற்றும் கோடரியை கொண்டு தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்ட நிலையில் இருவரும் 2021 இல் பிரிவதென தீர்மானித்துள்ளனர்.இதனையடுத்து அந்த ஆண்டில் டினுஷ் குரேரா  இலங்கைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து மனைவியான நிலோமி பெரேரா விவகாரத்துக்கான திட்டங்களை தயார் செய்ததுடன் நீதிமன்றில் கணவர் வீட்டிற்கு வருவதற்கான தடை உத்தரவையும் பெற்றிருந்தார். இந்த நிலையில் டிசம்பர்03, 2022 அன்று நீதிமன்ற தடை உத்தரவை மீறி கோடரி, கத்தி மற்றும் எரிபொருள் கானுடன் வீட்டின் பின்வேலியை உடைத்துக்கொண்டு வீட்டிற்குள் சென்றுள்ளார். இதனையடுத்து இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கொலையில் முடிந்ததாக தெரிவிக்கப்படுகிறது. நீதிமன்றில் இவர் குற்றவாளி என கண்டறியப்பட்டதை அடுத்து அவருக்கு விக்டோறியா நீதிமன்றம் 37 வருடங்கள் சிறைத்தண்டனையை விதித்தது.இவர் 30 ஆண்டுகளின் பின்னர் பிணையில் விடுதலை செய்யப்படுவார்.தற்போது அவருக்கு 47 வயது என்பது குறிப்பிடத்தக்கது.

எலிக்காய்ச்சல் நோய் காரணமாக 110 பேர் பாதிப்பு!

யாழ். மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் நோய் காரணமாக இதுவரை 110 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 7,200 பேருக்கு இதுவரை தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளதாக யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 28 பேரும் யாழ். போதனா வைத்தியசாலையில் 8 பேரும் சிகிச்சைபெற்று வருகின்றனர். கடந்த 24 மணிநேரத்தில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 6 நோயாளர்களும் யாழ் போதனா வைத்தியசாலையில் 5 நோயாளர்களும் எலிக்காய்ச்சலுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் இந்நோய் காரணமாக எந்தவொரு இறப்பும் ஏற்படவில்லை. இதுவரை யாழ். மாவட்டத்தில் இந்நோய் காரணமாக 7 இறப்புக்கள் ஏற்பட்டுள்ளன. எலிக்காய்ச்சல் நோய் வராமல் தடுப்பதற்காக தடுப்பு மருந்து வழங்கும் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. நேற்று (17) வரை ஏறத்தாழ 7200 பேருக்கு தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் பாதிக்கப்பட்ட சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் காய்ச்சல் நோயாளர்களை இனங்காண்பதற்காக சுகாதாரப் பணியாளர்கள் வீடுவீடாகச் சென்று ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பாதிக்கப்பட்ட சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் உள்ள கால்நடைகளில் இக்கிருமித்தொற்று உள்ளதா என்பதை ஆய்வு செய்வதற்காக கொழும்பிலிருந்து கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்திலிருந்து குழு ஒன்று யாழ் மாவட்டத்திற்கு இன்று வருகை தந்துள்ளது. இக்குழு பருத்தித்துறை, கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளுக்குச் சென்று கால்நடைகளிலிருந்து ஆய்வுகளை மேற்கொண்டு குருதி மாதிரிகளை எடுத்துச்செல்லவுள்ளது என தெரிவித்தார்.

இலங்கையில் தங்கத்தின் விலை மீண்டும் குறைந்தது!!

இலங்கையில் தங்கத்தின் விலையானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (19) சற்று குறைந்துள்ளது. அதன்படி, கொழும்பு, செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கு அமைவாக 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலையானது இன்று 207,000 ரூபாவாக உள்ளது. அதேநேரம், 22 கரட் தங்கம் ஒரு பவுணானது 190,750 ரூபாவாக உள்ளதாக அகில  இலங்கை நகைகள் விற்பனையாளர் சங்கப் பொருளாளர் ஆர்.பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலையானது 208,500 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் விலையானது 191,500 ரூபாவாகவும் காணப்பட்டிருந்தது. இதேவ‍ேளை, சர்வதேச சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலையானது 2,609.13 அமெரிக்க டொலர்களாக காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் மாரடைப்பால் 45 பேர் மரணம்!!

வவுனியா பொது வைத்தியசாலையில் இவ்வாண்டு ஜனவரி முதல் ஒக்டோபர் வரையுமான 10 மாத காலப்பகுதியில் மாரடைப்பால் 45 பேர் மரணம் அடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக கோரப்பட்ட தகவலுக்கு அமைய குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் 20 வயது தொடக்கம் 40 வயது வரையானவர்களில் ஒருவரும் 40 தொடக்கம் 60 வயது வரையானவர்களில் 13 பேரும் 60 தொடக்கம் 100 வயது வரையானவர்களில் 31 பேருமாக 45 பேர் இவ்வாறு மாரடைப்பால் மரணமாகியுள்ளனர். அண்மைக்காலமாக வவுனியாவில் மாரடைப்பால் மரணிப்போரின் தொகை அதிகரித்து காணப்பட்ட நிலையில் அதற்கான பல்வேறு காரணங்களும் சுகாதார திணைக்களத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சின் விசேட அறிவித்தல்

பாடசாலைப் பயிற்சிப் புத்தகங்கள் மற்றும் உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கான மானியத் திட்டம் அஸ்வெசும நலன்களைப் பெறும் குடும்பங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படவில்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அஸ்வெசும கொடுப்பனவு கிடைக்கபெறாத, ஆனால் பொருளாதார ரீதியாக மிகவும் சிரமத்திற்கு உள்ளான பிள்ளைகளுக்கு உரிய கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அதன் செயலாளர் தெரிவித்துள்ளார். குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களைத் தெரிவு செய்யும் பணி எதிர்வரும் நாட்களில் துரிதமாக மேற்கொள்ளப்படும் என செயலாளர் குறிப்பிட்டார். இதேவேளை பாடசாலை மாணவர்களுக்கான கொடுப்பனவு வழங்குவதற்கான மேலதிக மதிப்பீடு நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனடிப்படையில், பாதிக்கப்படக்கூடிய பாடசாலை மாணவர்களின் கல்வியில் ஏற்படும் பாதகமான தாக்கத்தை குறைக்க, 2025 ஆம் ஆண்டு முதல் அவர்களின் கல்விக்கான உதவித்தொகையை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இந்தநிலையில், ஐந்து வயது முதல் பதினாறு வயது வரையிலான குழந்தைகளுக்கு ஆறாயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்க திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.