இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட உலர்ந்த மஞ்சள் பொதிகளுடன் கடற்படையினரால் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மஞ்சள் பொதிகளை கடத்துவதற்கு முற்படுவதாக உடப்பு கடற்படையினருக்குக் கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய தம்பபண்ணி கடற்படை உதவியுடன் நேற்று அதிகாலை பள்ளிவாசல்பாடு கடற்கரைப் பகுதியில் சுற்றிவளைப்பினை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது, டிங்கி படகில் சுமார் 44 உரைகளில் 1,373 கிலோகிராம் மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்துள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்தனர்.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட மஞ்சள் பொதிகள் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக கடல்மார்க்கமாக கொண்டுவரப்பட்டதாக கடற்படையினர் விசாரணையின்போது தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் கற்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று கடற்படையினர் தெரிவித்தனர்.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட மஞ்சள் சுமார் 50 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியென தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும் கைப்பற்றப்பட்ட மஞ்சள் பொதிகளையும் மற்றும் டிங்கி படகையும் மேலதிக விசாரணைகளுக்காக புத்தளம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தம்பபண்ணி கடற்படையினர் தெரிவித்தனர்.