Search
Close this search box.
ரணிலுக்கே சம்பந்தன் ஆதரவு! – ஐ.தே.க. அதீத நம்பிக்கை

“வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கும் தீர்மானத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எடுப்பார் என்று நம்புகின்றோம்.

அந்தத் தீர்மானத்துக்கு வடக்கு – கிழக்கு தமிழ்க் கட்சிகளின் தலைவர்களும் இணங்குவார்கள் என்றும் நம்புகின்றோம்.”- இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

இலங்கையில் மிகவும் அரசியல் அனுபவம் வாய்ந்த சிங்களத் தலைவர்களில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முக்கிய இடம் வகிக்கின்றார். அதேவேளை, மிகவும் அரசியல் அனுபவம் வாய்ந்த தமிழ்த் தலைவர்களில் இரா.சம்பந்தன் முக்கிய இடம் வகிக்கின்றார். இருவரும் தவிர்க்க முடியாத ஆளுமைகள்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கும் தீர்மானத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எடுப்பார் என்று நம்புகின்றோம். அந்தத் தீர்மானத்துக்கு வடக்கு – கிழக்கு தமிழ்க் கட்சிகளின் தலைவர்களும் இணங்குவார்கள் என்றும் நம்புகின்றோம். எனவே, வடக்கு – கிழக்கு தமிழ் மக்களின் அமோக வாக்குகளால் ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெறுவார் என்றும் நம்புகின்றோம்.

ஜனாதிபதித் தேர்தலில் இம்முறை ரணில் விக்கிரமசிங்க வரலாற்று வெற்றியை நிலைநாட்டுவார் என்றும் நம்புகின்றோம்.

தமிழ்ப் பொது வேட்பாளர் பயனற்ற விடயம். அதைப் பற்றிப் பேசி நாம் அலட்டிக்கொள்ள விரும்பவில்லை. தேவையில்லாத விடயத்தைப் பேசி காலத்தை வீணடிக்கக்கூடாது.” – என்றார்.

 

Sharing is caring

More News