Search
Close this search box.
இலங்கையில் 15 மிக முக்கிய சட்டங்கள் நிறைவேற்றம்! – நீதி அமைச்சர் அறிவிப்பு..

எதிர்வரும் வாரங்களில் 15 மிக முக்கியமான சட்டங்களை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்

அத்தோடு, கடந்த 18 மாதங்களில் சுமார் 75 சட்டமூலங்கள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டு, நாட்டுக்குத் தேவையான அடிப்படை மாற்றங்களைச் செய்ய முடிந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்

அரச துறையிலும், தனியார் துறையிலும் இலஞ்சம், மோசடி, ஊழல், கொமிஸ் எடுத்தல் போன்றவற்றைத் தடுக்கும் வகையில் ஊழல் தடுப்புச் சட்டம் அரசாங்கத்தால் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்

அதன்படி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு பல அதிகாரங்களும் சுதந்திரங்களும் வழங்கப்பட்டுள்ளதாகவும் விளையாட்டு மற்றும் பாலியல் இலஞ்சம் தொடர்பாக புதிய குற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், பெயரளவில் இருந்த சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான சட்டம் நிலையானதாக மாற்றப்பட்டுள்ளதால், நாட்டின் அனைத்து பிரஜைகளும் தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான அறிக்கைகளை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், வழக்குப் பொருட்கள் மற்றும் போதைப்பொருட்களை அகற்றுவது தொடர்பாக புதிய சட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், குற்றச் செயல்கள் மூலம் பெறப்பட்ட சொத்துக்கள் குறித்து விசாரிக்க அதிகார சபையொன்றும் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, திருமணம் தொடர்பான புதிய சட்டமூலமும் முன்வைக்கப்பட்டுள்ளதுடன், முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டம் தொடர்பாக பொதுவாக ஏற்றுக்கொள்ளக்கூடிய மாற்றங்களை மாத்திரம் முன்வைத்து அந்த சட்டமூலத்தை திருத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாவும் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ மேலும் குறிப்பிட்டார்.

Sharing is caring

More News