Search
Close this search box.
வடமாகாணத்தில் இயலாமையுடைய நபர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு!!

மாற்றுத்திறனாளிகள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர்  டலஸ் அழகப்பெரும இயலாமையுடைய நபர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், பிரச்சனைகள், தற்பொழுது காணப்படும் வாய்ப்புக்கள் மற்றும் அவற்றை உரிய முறையில் நிவர்த்தி செய்வதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் முன்மொழிவுகள் பற்றிய தகவல்களைக் கலந்துரையாடுவதற்கான விசேட செயலமர்வு மாற்றுத்திறனாளிகள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைமையில் அண்மையில் (13) கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

மாற்றுத்திறனாளிகள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர்  டலஸ் அழகப்பெரும தலைமையில் நடைபெற்ற இந்த செயலமர்வில் குறித்த ஒன்றியத்தின் இணைத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர்  மதுர விதானகே, கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ். முரளிதரன், வடமாகாண சமூக சேவைகள் அமைச்சின் செயலாளர் எம். வாகீசன், பூநகரி, கண்டாவளை, கரச்சி மற்றும் பச்சிளைப்பள்ளி ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளின் பிரதேச செயலாளர்கள், தேசிய ஜனநாயக நிறுவனத்தின் (NDI) ஆலோசகர் ஷியாமா சல்காது, இயலாமையுடைய நபர்களுக்கான சங்கங்களின் ஒன்றிணைந்த முன்னணியின் தலைவர் ரசாஞ்சலி பதிரகே உள்ளிட்ட பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இயலாமையுடைய நபர்களின் சங்கங்களின் பிரதிநிதிகள், இயலாமையுடைய பிள்ளைகளுக்கு கல்வி வழங்கும் தரப்பினர் உள்ளிட்ட பலரும் இங்கு பங்கேற்றிருந்தனர்.

நாட்டின் நிர்வாகக் கட்டமைப்பு மற்றும் சமூகத்தில் இயலாமையுடைய நபர்களுக்கான ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதற்கான பொறிமுறையை நிறுவுவதற்குத் தேவையான தகவல்களும் முன்மொழிவுகளும் சேகரிக்கப்பட்டன. இதில் கலந்துகொண்ட இயலாமையுடைய நபர்களின் அமைப்புக்கள் மற்றும் பிரதிநிதிகளின் கருத்துக்கள், ஆலோசனை மற்றும் பிரச்சினைகளை எடுத்துரைத்தனர்.

இங்கு கருத்துத் தெரிவித்த ஒன்றியத்தின் தலைவர்  டலஸ் அழகப்பெரும குறிப்பிடுகையில், வடமாகாணத்தில் சகல மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கள் மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவிலும் இயலாமையுடைய நபர்களை வழிநடத்துவதற்கான குழுவொன்றை நியமிக்குமாறும், ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் இயலாமையுடைய நபர்களுக்குக் காணப்படும் பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாடுவதற்கு விசேட இடத்தை ஒதுக்குமாறும் கோரிக்கைவிடுத்தார். அத்துடன், இந்த நடைமுறை நாட்டின் சகல மாவட்டங்களிலும் நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கையின் சகல மாவட்டங்களிலும் ஆகக் குறைந்தது விசேட தேவையுடைய பிள்ளைகளுக்காக அரசாங்கத்தின் ஆதரவுடன் இயங்கும் ஒரு பாடசாலையாவது இருக்கின்றபோதும், வடமாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களுக்கும் அவ்வாறான ஒரேயொரு பாடசாலையே காணப்படுவதாக ஒன்றியத்தின் தலைவர் சுட்டிக்காட்டினார்.

கிளிநொச்சி மாவட்டத்திற்குள் காணியொன்றைப் பெற்றுக்கொடுத்தால் அவ்வாறானதொரு பாடசாலையொன்றை அமைப்பதற்கு பிரித்தானியாவில் வசிக்கும் ரஞ்சித் சந்திரசேகர என்ற இலங்கைப் புத்திஜீவி ஒருவர் விருப்பம் தெரிவித்திருப்பதாகவும், இதற்கமைய உரிய காணியை ஒதுக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அரசாங்க அதிபர் மற்றும் சமூக சேவைகள் செயலாளரிடம் ஒன்றியத்தின் தலைவர் கோரிக்கை விடுத்தார். அத்துடன், தற்பொழுது செயலிழந்து காணப்படும் கிளிநொச்சி தொழிற்பயிற்சி நிலையத்தை விரைவில் செயற்படுத்துவதற்கு கௌரவ ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

2012 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட குடிசன மதிப்பீட்டின் புள்ளிவிபரங்களுக்கு அமைய ஒட்டுமொத்த சனத்தொகையில் 8.2% அதாவது ஏறத்தாழ 17 இலட்சம் பேர் இயலாமையுடைய நபர்களாக அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். ஆனால், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் பிராந்தியத்துக்கும் ஏற்ற வகையில் தரவுகளைப் பார்க்கும்போது அதில் வேறுபாடுகள் இருப்பதாகவும் தலைவர் சுட்டிக்காட்டினார். நாடளாவிய ரீதியில் இயலாமையுடைய நபர்கள் தொடர்பான தகவல்களை உள்ளடக்கிய சரியான தரவு முறைமை இல்லாததன் பிரச்சினையை அவர் இங்கு தெரியப்படுத்தினார்.

அத்துடன், இயலாமையுடைய நபர்கள் பொதுப் போக்குவரத்தில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுப்பது தொடர்பில் இங்கு வருகை தந்திருந்த பலரும் முறைப்பாடுகளைத் தெரிவித்தனர். இந்நாட்டின் போக்குவரத்து சேவையில் இணைப்பதற்காக பஸ்கள் விரைவில் இறக்குமதி செய்யப்படவிருப்பதாகவும், அவ்வாறு இறக்குமதி செய்யப்படும் பஸ்களில் இயலாமை உடைய நபர்களின் தேவைக்குரிய பஸ்களையும் உள்ளடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஒன்றியத்தின் இணைத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர்  மதுர விதானகே இங்கு தெரிவித்தார்.

Sharing is caring

More News