தமிழரசு கட்சியின் மன்னார் கிளையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு தின நினைவேந்தல் நிகழ்வு…!
கடந்த 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதிப் போரில் உயிர் நீத்த உறவுகளை நினைவுகூறும் முள்ளிவாய்க்கால் நினைவு தின 15 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் (18) வடக்கு, கிழக்கு பகுதிகளில் நினைவு கூறப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் மன்னாரில் இன்றைய தினம்(18) காலை 9 மணியளவில் தமிழரசு கட்சியின் மன்னார் கிளையின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இடம் பெற்றது. தமிழரசு கட்சியின் மன்னார் கிளை தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சால்ஸ்நிர்மலநாதன் தலைமையில் மன்னார் நகர் பகுதியில் உள்ள தந்தை செல்வா சிலை பகுதியில் நினைவேந்தல் நிகழ்வு இடம் பெற்றது இதன் போது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு மெளன அஞ்சலி நிகழ்வு இடம் பெற்றது அதனைத் தொடர்ந்து மக்களுக்கு முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி வழங்கப்பட்டது. குறித்த நினைவேந்தல் நிகழ்வில் அரசியல் பிரதிநிதிகள்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள்,சமூக செயற்பாட்டாளர்கள்,பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
பேரெழுச்சி கொள்ளும் தமிழர் பகுதிகள்…! பொலிஸாரின் கெடுபிடிகளுக்கு மத்தியில் முள்ளிவாய்க்கால் நோக்கி நகரும் நினைவேந்தல் ஊர்தி…!
கடந்த 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூர்ந்து இன்றையதினம்(18) காலை கிளிநொச்சி தர்மபுரத்திலிருந்து முள்ளிவாய்க்கால் வலிகள் சுமந்த ஊர்தியானது முள்ளிவாய்க்கால் முற்றத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறானதொரு நிலையில் குறித்த ஊர்தியை பொலிஸார் கடுமையாக சோதனைக்குட்படுத்தியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை வடக்கு கிழக்கு உள்ளிட்ட தமிழர் பகுதிகளில் இன்றையதினம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் இ-பாஸ்போர்ட் முறை வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு
இலங்கையில் இ-பாஸ்போர்ட் முறையை அடுத்த சில மாதங்களில் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் (Tiran Alles) தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். அத்துடன் பாதாள உலக மற்றும் குற்றச்செயல்களை தடுப்பதற்கு சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் அடுத்த 24 மணித்தியாலங்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
இலங்கையில் அடுத்த சில நாட்களில் மழை நிலைமையும் காற்று நிலைமையும் மேலும் அதிகரிக்கக் கூடிய வாய்ப்பு காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு வானிலை அறிக்கை ஒன்றை வெளியிட்டு வளிமண்டலவியல் திணைக்களம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இலங்கையிலும் சூழவுள்ள கடற்பகுதிகளிலும் விருத்தியடைந்து வருகின்ற பருவப் பெயர்ச்சிக்கு முந்தைய நிலை காரணமாக இந் நிலைமை ஏற்படவுள்ளது. இதன்படி, மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய வாய்ப்பு காணப்படுகின்றது. இலங்கையின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் நண்பகல் 12.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. இலங்கை முழுவதும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
யாழில் கண்டுபிடிக்கப்பட்ட ஆபத்தான வெடி பொருட்கள்..
யாழ் ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுருவில் பகுதியில் உள்ள வெற்றுக் காணி ஒன்றில் இருந்து மூன்று கண்ணிவெடிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறித்த காணியின் உரிமையாளர் நேற்றையதினம் (17.05.2024) காணியை சுத்தம் செய்யும் போது கண்ணிவெடிகள் இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, ஊர்காவற்துறை பொலிஸாருக்கு கண்ணிவெடிகள் தொடர்பில் தகவல் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நீதிமன்றத்தில் அனுமதி வழங்கப்பட்ட பின்னர் கண்ணிவெடிகள் மீட்கப்படவுள்ளன.
ஈழத்தமிழர்களின் சுதந்திரம் குறித்த சர்வஜனவாக்கெடுப்பு-ஆதரவு தெரிவித்த அமெரிக்கா..
ஈழத்தமிழர்களின் சுதந்திரம் குறித்த சர்வஜனவாக்கெடுப்பை கோரும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானத்தினை அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் வரவேற்றுள்ளனர். ஈழத்தமிழர்களின்சுதந்திரம் குறித்த சர்வஜனவாக்கெடுப்பை கோரும் மற்றும் ஈழத்தில் இடம்பெற்றது இனப்படுகொலை என அங்கீகரிக்கவேண்டும் என கோரும் தீர்மானம் அமெரிக்க காங்கிரசில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் அதனை வரவேற்றுள்ளனர். தீர்மானம்சமர்ப்பிக்கப்பட்டு உரைகள் ஆற்றப்பட்ட பின்னர் அமெரிக்க காங்கிரஸ்; உறுப்பினர்கள் காங்கிரஸ் நூலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டனர் . இந்த நிகழ்வில் அமெரிக்காவை சேர்ந்த 100க்கும் அதிகமான தமிழர்களும் கலந்துகொண்டுள்ளனர். முள்ளிவாய்க்கால் படுகொலையின் 15 வருடத்தினை நினைவேந்துவதற்கு உலகம்எங்கிலும் உள்ள ஈழத்தமிழர்கள் தயாராகிவந்த நிலையிலேயே இந்த தீர்மானம் அமெரிக்க காங்கிரஸில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த தீர்மானம் இழப்பை நினைகூருகின்றது ஆனால் தமிழர்களை எதிர்கால வன்முறைகள் பாரபட்சங்களில் இருந்து பாதுகாக்க முயல்கின்றது என தீர்மானத்தை அமெரிக்க காங்கிரஸில் சமர்ப்பித்த சனப்பிரதிநிதிகள் சபை உறுப்பினர் வில்லே நிக்கல் தெரிவித்தார். எனது தீர்மானம் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள் என்பதை அங்கீகரிக்கின்றது ஜனநாயக வழிமுறைகள் மூலம் சுயநிர்ணய உரிமைக்கான தமிழர்களின் உரிமையை வலியுறுத்துகின்றது என தெரிவித்த அவர் இலங்கையில் தொடரும் பதற்றங்களிற்கு அமைதியான ஜனநாயக தீர்வுகள் அவசியம் என்பதை தீர்மானம் வலியுறுத்துகின்றது எனவும் குறிப்பிட்டார். இ;ந்த தீர்மானம் சுதந்திரத்திற்கான சர்வஜனவாக்கெடுப்பை முன்வைக்கி;ன்றது இவ்வாறான அணுகுமுறை உலகின் பல பகுதிகளில் பின்பற்றப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார். இலங்கையின் வரலாற்றின் இருள்படிந்த அத்தியாயங்களின் முடிவை நாங்கள் நினைவுகூரும் அதேவேளை நாங்கள் எதிர்காலத்தை நோக்கியும் சிந்திக்கவேண்டும் என குறிப்பிட்ட வில்லியம் நிக்கெல் இந்த எதிர்காலம் அனைத்து மக்களினதும் உரிமைகளும் கௌரவமும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக காணப்படவேண்டும் எனவும் தெரிவித்தார். எங்களால் இதனை செய்ய முடியும் நாங்கள் இணைந்து நிற்போம் தங்கள் எதிர்காலத்தை தாங்களே தீர்மானிப்பதற்கு தமிழர்களிற்கு உள்ள உரிமையை மதிக்கும் ஜனநாயக அமைதி தீர்விற்காக பரப்புரை செய்வோம் எனவும் அவர் தெரிவித்தார். இதற்கான ஆதரவு மெதுவாக ஆனால் நிச்சயமாக அதிகரிப்பதை நாங்கள் காணமுடிகின்றது அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் இது குறித்து கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளனர் ஈழத்தமிழர்கள் விவகாரத்திற்கு அமெரிக்க காங்கிரஸின் இரு கட்சிகளினதும் ஆதரவு உள்ளது என அவர் குறிப்பிட்டார். இந்த முக்கியமான தீர்மானத்திற்கு ஆதரவளிக்குமாறு அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையில் உள்ள எனது சகாக்களை கேட்டுக்கொள்கின்றேன் என தெரிவித்த அவர் இது முன்னுதாரணத்தின் மூலம் தலைமை வகிப்பதற்கான சிறந்த உதாரணம் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளிற்காக குரல்கொடுப்பதற்கான தமிழ்மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான சந்தர்ப்பம் எனவும் குறிப்பிட்டார். இலங்கை தமிழர்களின் கதை போராட்டங்களின் கதைகளில் ஒன்று என தெரிவித்த காங்கிரஸ் உறுப்பினர் டொம் டேவிஸ் எங்கு அநீதி நிலவினாலும் அது நீதிக்கு அச்சுறுத்தலே என மார்ட்டின் லூதர் கிங் தெரிவித்ததை நினைவுபடுத்துகின்றேன் எனவும் தெரிவித்தார். தமிழர்களிற்கு எதிரான அநீதி உலகில் நீதி;க்கான அச்சுறுத்தல் என குறிப்பிட்ட அவர் 2009 இனப்படுகொலைக்கு இட்டுச்சென்ற துயரமான சம்பவங்கள் பாராபட்சத்தின் கொடுமைகளை நினைவுபடுத்துகின்றன எனவும் தெரிவித்தார்.
வவுனியா இரட்டை கொலை சம்பவம்… சாட்சியாளருக்கு பெண் கிராம அலுவலரால் அச்சுறுத்தல்!
வவுனியாவில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபருடன் தொடர்பில் இருக்கும் பெண் கிராம அலுவலரால் சாட்சியாளருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக வவுனியா நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா, தோணிக்கல் பகுதியில் கடந்த ஆண்டு ஜுலை மாதம் 23 ஆம் திகதி அதிகாலை வீடு புகுந்து தாக்குதல் நடத்தி பெற்றால் ஊற்றி எரியூட்டப்பட்ட சம்பவத்தில் கணவன், மனைவி ஆகிய இருவர் உயிரிழந்தனர். குறித்த இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேகத்தில் 7 பேர் கைது செய்யப்பட்டிருந்ததுடன், அவர்களிடம் சிஐடியின் கொலை விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்ததுடன், அவர்கள் நீதிமன்ற உத்தரவுக்கமைய தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். குறித்த வழக்கு விசாரணை வவுனியா நீதிமன்றில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது தாக்குதல் சம்பவம் இடம்பெற்ற வீட்டு உரிமையாளரான சுரேஸ் மன்றில் ஆஜராகி சாட்சியமளித்திருந்தார். குறித்த சாட்சியத்தில் தனது வீட்டில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் எரிகாயங்களுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று தற்போது கல்வி கற்று வரும் தனது மகள் இச்சம்பவம் தொடர்பில் சந்தேக நபரை அடையாளம் காட்டியிருந்தார். இதன் பின்னர் குறித்த சம்பவத்தின் பிரதான சந்தேக நபருடன் தொடர்புடைய பெண் கிராம அலுவலர் எனது மகள் கல்வி கற்க செல்கின்ற போது அங்கு நின்று மகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளார். நான் குறித்த இடத்திற்குச் சென்றதும் அவர் அங்கிருந்து சென்றுள்ளார். குறித்த பெண் கிராம அலுவலரால் அச்சுறுத்தல் தொடர்ச்சியாக ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர்,குறித்த பெண் கிராம அலுவலர் சம்பவத்தின் போது மரணமடைந்த சுகந்தன் அவர்களுடன் முன்னர் இணைந்து வாழ்ந்து வந்ததாகவும், அதன் பின் சுகந்தனின் நண்பரும் பிரதான சந்தேக நபருமாகிய தடுப்பில் உள்ள நபர் குறித்த கிராம அலுவலரை காதலித்து தான் அழைத்து சென்று வாழ்ந்து வந்ததாகவும் தெரிவித்ததுடன், அதனால் ஏற்பட்ட முரண்பாடு இக் கொலைக்கு காரணம் என சாட்சியமளித்திருந்ததாக தெரிவித்தார். இதேவேளை, இச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் மூவர் தலைமறைவாகியுள்ளதுடன், அவர்களுக்கு பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
வடக்கு கிழக்கில் முள்ளிவாய்க்கால் நினைவு நாள் இன்று அனுஷ்டிப்பு:
இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போர் 15 ஆண்டுகளுக்கு முன்னர் இராணுவ ரீதியாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இதன்படி, இன்று போரின் இறுதிநாளாக கருதப்படுகின்றது. 2009 ஆம் ஆண்டு மே 18 ஆம் திகதி போரின் முடிவில் முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கரையோரப் பகுதியில் பெருமளவிலான தமிழ் மக்கள் போர் வளையத்தில் சிக்கிக்கொண்டனர். இதன்போது தமிழ் மக்கள் மீது குண்டு வீசி கொல்லப்பட்டதாக குற்றம் சுமத்தப்படுகின்றன. சுமார் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் போர் வளையத்தில் சிக்கியிருந்ததாக கூறப்படுகின்றது. இறுதி யுத்தத்தின் போது வடக்கு கிழக்கு மக்களுக்கான பொருட்கள் மற்றும் சேவைகள் இடைநிறுத்தப்பட்டதன் காரணமாக ஒரு பிடி அரிசி கூட வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. அந்த நாட்களில் உணவின்றி தவித்த அவர்கள் வீடுகளில் இருந்துகொண்டு வந்த அரிசியை மட்டுமே பயன்படுத்தி கஞ்சி காய்ச்சிக் குடித்து உயிர் பிழைத்ததுடன் உயிரைத் தவிர அனைத்தையும் இழந்திருந்தனர். யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட வெற்றியை ஒரு குழுவினர் கொண்டாடும் நிலையில், இறுதி யுத்தத்தின் போது தாம் அனுபவித்த கசப்பான நினைவுகளை நினைவுகூரும் வகையில் வடக்கு, கிழக்கு மக்கள் பல்வேறு நினைவு நிகழ்வுகளை நடத்தி வருகின்றனர். இதன்படி, கடந்த கடந்த 15 ஆண்டுகளில், ஒவ்வொரு ஆண்டும் மே 11 முதல் மே 18 வரை முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் அனுஷ்டிக்கப்படுகின்றது. இந்த ஆண்டும் பல்வேறு தடைகளுக்கு மத்தியில் வடக்கு கிழக்கு உள்ளிட்ட பல பகுதிகளில் முள்ளிவாயக்கால் நினைவு வாரம் அனுஷ்டிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று முள்ளிவாய்க்கால் வார இறுதி நிகழ்வுக்கு தமிழ் மக்கள் தயாரகி வருகின்றனர். புலம்பெயர் தேசங்களிலும் முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் அனுஷ்டிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும், முள்ளிவாய்க்கால் தினத்தையொட்டி இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் படையினர் தீவிரப் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு மற்றும் கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுகள் குறித்து பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும், தமிழீழ விடுதலைப் புலிகளை நினைவுகூர முயற்சிக்கும் எந்தவொரு குழுவினரும் கைது செய்யப்படுவார்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஈழத்தமிழர் வரலாற்றில் வலிசுமந்து இன்றுடன் 15ம் ஆண்டுகள்..!!
மே 18-ஆம் தேதி என்பது இறுதிக்கட்ட போரின்போது முள்ளிவாய்க்காலில் அகப்பட்டு, வாா்த்தைகளால் விவரிக்க முடியாத துயரத்தை அனுபவித்த ஆயிரக்கணக்கான தமிழா்களை நினைவுகூரும் நாளாகும்’ அந்தவகையில், இலங்கை முள்ளிவாய்க்கால் 15ஆவது நினைவு தினத்தையொட்டி, போரில் உயிரிழந்த தமிழா்களுக்கு முள்ளிவாய்க்கால் மனிதப் பேரவலத்துடன் கூடிய தமிழ் இனப் படுகொலையை நினைவூட்டும் வகையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வுகள் மற்றும் நினைவேந்தல் நிகழ்வுகள் என்பன ஒரு வரமாக தமிழர் தாயகம் முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. முறிகண்டி மக்களின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி..வழங்கும் நிகழ்வு,,சுண்டிகுளம் இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு,,சாவகச்சேரியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு,மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு, தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தினால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு ,உயிர்நீத்த உறவுகளுக்காக ரவிகரன் நந்திக்கடலில் அஞ்சலி நிகழ்வு என தமிழர் தாயகம் முழுவதும் பல்வேறு இடங்களில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் இன்று நடைபெறும் 15ம் ஆண்டு இன அழிப்பு நினைவு நாளில் அனைத்து தமிழ் உறவுகளையும் உணர்வுபூர்வமாக ஒன்றிணையுமாறு தமிழ்ச் சிவில் சமூகங்களின் கூட்டிணைவு அழைப்பு விடுத்துள்ளது.
ஜனாதிபதி இந்தோனேசியா பயணம்!
இந்தோனேசியாவின் பாலி நகரில் நடைபெறும் 10 ஆவது உலக நீர் மாநாட்டின் உயர்மட்டக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (18) காலை இந்தோனேசியா பயணமானார். இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோவின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி இந்த உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொள்கிறார். ‘கூட்டு செழுமைக்கான நீர்’ என்ற தொனிப்பொருளில் 10 ஆவது உலக நீர் மாநாடு மே 18 முதல் 20 வரை இந்தோனேசியாவின் பாலி நகரில் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் மே மாதம் 20 ஆம் திகதி மாநாட்டில் விசேட உரையாற்றவுள்ளார். இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, இந்தோனேசிய ஜனாதிபதி உள்ளிட்ட அந்நாட்டின் பல உயர்மட்ட பிரதிநிதிகளுடன் இருதரப்பு கலந்துரையாடல்களிலும் ஈடுபடவுள்ளார்.