Search
Close this search box.
இலங்கையில் இணைய சிறுவர் துஷ்பிரயோகம் அதிகரிப்பு!

இணையத்தில் சிறார்களை துஷ்பிரயோகம் செய்வது அதிகரித்துள்ளமை தொடர்பில் அமெரிக்க அமைப்பு ஒன்று இலங்கைக்கு அறிவித்துள்ளது.

அந்த அறிக்கையை அடிப்படையாக கொண்டு நீதிமன்றம் சென்ற பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் இது தொடர்பில் விரிவான விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், இந்த வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் மாத்திரம், இணையத்தில் நிர்வாண புகைப்படங்களைப் பயன்படுத்தி சிறார்களை அச்சுறுத்தல் மற்றும் துன்புறுத்தல் தொடர்பாக 55 முறைப்பாடுகள் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு கிடைத்துள்ளன.

பெற்றோரின் பராமரிப்பில் வளரும் குழந்தைகள் சமூகத்தில் வெளிப்படும் போது படிப்படியாக கைப்பேசி மற்றும் இணைய நடவடிக்கைகளுக்கு திரும்புகின்றனர்.

இணையத்தில் அதிகரித்து வரும் சிறார் துஷ்பிரயோகங்களால் இது ஒரு பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது.

இணையம் மற்றும் சமூக ஊடக வலையமைப்புகளில் நிர்வாண புகைப்படங்களைப் பயன்படுத்தி சிறார்களை அச்சுறுத்துவது மற்றும் அழுத்தம் கொடுத்தல் தொடர்பில் 2023 ஆம் ஆண்டில் 150 முறைப்பாடுகளும், இந்த வருடம் ஏப்ரல் 31 ஆம் திகதி வரை 55 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

2021, 22 மற்றும் 23 ஆம் ஆண்டுகளில் துஷ்பிரயோகத்திற்காக சிறார்களை இணையத்தளங்களில் கோருவது 300 சதவீதம் அதிகரித்துள்ளது என அமெரிக்க நிறுவனமான காணாமல் போன மற்றும் சுரண்டப்பட்ட சிறார்கள் தொடர்பான தேசிய மையம் வௌிப்படுத்தியுள்ளது.

இலங்கையில் வயது குறைந்த சிறுவர்களின் ஆபாச புகைப்படங்களை உருவாக்கி இணையத்தில் வெளியிட சில குழுக்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குறித்த அமெரிக்க நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், நேற்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு சென்ற பொலிஸ் தலைமையக சிறுவர் மற்றும் மகளிர் பணியகம், குறித்த அறிக்கையை அடிப்படையாக கொண்டு  விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

எனினும்  எத்தனை சிறார்களின் புகைப்படங்கள் ஆபாசமான புகைப்படங்களாக உருவாக்கப்பட்டுள்ளன என்பது இதுவரை கண்டு பிடிக்கப்படவில்லை.

சமர்ப்பணங்களை பரிசீலித்த கொழும்பு மேலதிக நீதவான் கெமிந்த பெரேரா, சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொண்டு உண்மைகளை நீதிமன்றில் தெரிவிக்குமாறு பொலிஸ் தலைமையக சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திற்கு உத்தரவிட்டார்.

Sharing is caring

More News