தமிழர்கள் மறைந்த தமது உறவுகளை நினைவேந்தும் நிகழ்வையும் கூட, இனங்களுக்கிடையில் குரோதத்தை ஏற்படுத்துவதற்கு எதிரான சட்டத்தின் மூலம் தடுப்பதற்குக் களம் இறங்கியமை மூலம் தேசிய நல்லிணக்கத்துக்கான கடைசி வாய்ப்பையும் இறுக மூடி இருக்கின்றது. இலங்கை ஆட்சிப் பீடம் இது பெரும் துரதிஷ்டவசமானதாகும் என ரெலோவின் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் தெரிவித்துள்ளார்.
மக்களின் நினைவேந்தல் உரிமை மறுக்கப்பட முடியாத அடிப்படை உரிமையாகும். சர்வதேசத் தரப்புக்கள் ஐ.நா. மனித உரிமைகள் அவையிலேயே திரும்பத்திரும்ப இதனை வலியுறுத்தி வருகின்றன.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூட, தாம் ஜனாதிபதியாகப் பதவியேற்ற கையோடு, ‘மக்கள் தமது உறவுகளை நினைவுகூர உரிமை உண்டு. அது மறுக்கப்பட முடியாது’ என்று கூறினார்.
இருப்பினும், அவையெல்லாம் பேச்சளவில் தான் இருக்கின்றன.
அவரின் பொலிஸ் கட்டமைப்பு அதற்கு எதிராக மிக முரட்டுத்தனமாக தமிழ் மக்களின் ஆன்மாவையே சீண்டிப் பார்க்கும் விதமாக அடக்குமுறைத் திமிருடன் இப்படி நடந்து கொள்கின்றது.
இன்னொரு கோட்டாபய ராஜபக்சவின் அராஜக ஆட்சியையே இந்தச் செயற்பாடு மூலம் ரணில் விக்ரமசிங்கவும் இங்கு நிலைநிறுத்த முயலுகின்றாரோ என்ற சந்தேகம் நமக்கு எழுகின்றது என தெரிவித்துள்ளார்.