Search
Close this search box.

A/L குறித்து அமைச்சரவையில் முடிவு!

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்தவுடன் உயர்தர வகுப்புகளை உடனடியாக ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. மாணவர்களின் நேரத்தை திறம்பட நிர்வகிக்கும் நோக்கில் கல்வி அமைச்சர்  சுசில் பிரேம்ஜயந்தவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதற்கமைவாக, உயர்தரப் பாடத்திட்டத்தை உள்ளடக்குவதற்கு ஆசிரியர்களுக்கு போதிய கால அவகாசம் வழங்கும் வகையில், க.பொ.த சாதாரண தரம் நிறைவடைந்தவுடன் பாடசாலைகளில் உயர்தரக் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட உள்ளன. 2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை  தற்போது நடைபெற்று வருகிறது.

விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு மேலும் ஐந்து ஆண்டுகள் தடை: இந்திய மத்திய அரசு அறிவிப்பு!

விடுதலைப்புலிகள் இயக்கத்தை இந்திய மத்திய அரசு மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு தடை செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் இந்தத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி 1991ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து விடுதலைப்புலிகள் இயக்கத்தை இந்திய மத்திய அரசு தடை செய்தது. இத் தடை ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் நீட்டிக்கப்பட்டு வருகின்றது. இந்தியத் தேசிய பாதுகாப்புக் கருதி விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு 1992ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் திகதி இந்தியாவில் முதன் முதலில் தடை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அஹுங்கல்ல துப்பாக்கிச் சூட்டுக்கு உதவிய நபர் கைது!

அஹுங்கல்ல பிரதேசத்தில் நபர் ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவத்திற்கு உதவிய நபர் ஒருவர் கொஸ்கொட பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொஸ்கொட, துவமோதர பிரதேசத்தில் வைத்து விசேட அதிரடிப்படையின் தென் மாகாண விசேட அதிரடிப் பிரிவின் அதிகாரிகள் குழு சந்தேக நபரை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சந்தேகநபர் கடந்த 8 ஆம் திகதி அஹுங்கல்ல பிரதேசத்தில் நபர் ஒருவரைக் கொல்ல துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு உதவிய ‘அதரே’ என்ற புனைப்பெயர் கொண்டவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. அவரிடமிருந்த 1,150 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் கையடக்கதொலைபேசியை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர். சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக கொஸ்கொட பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

பள்ளிமுனையில் மீனவர் பலி!

மன்னார், பள்ளிமுனை கடற்பரப்பில் இருந்து நேற்று (13) மாலை வல்லத்தில் கடற்தொழிலுக்கு சென்ற குடும்பஸ்தர் ஒருவர் வள்ளம் தண்டதில் கடலில் விழுந்து உயிரிழந்தார். உயிரிழந்தவர் மன்னார், பள்ளிமுனை மேற்கு பகுதியைச் சேர்ந்த எஸ்.ஏ.ஜான்சன் (வயது 62) என்ற குடும்பஸ்தர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் உள்ளடங்களாக மேலும் சில மீனவர்கள் வல்லம் ஒன்றில் தொழிலுக்குச் சென்றுள்ளனர். இதன் போது நேற்று மாலை 4 மணியளவில் திடீரென கடும் காற்று மற்றும் மழை பெய்துள்ளது. இதன் போது குறித்த மீனவர்கள் சென்ற வல்லம் (படகு) கடலில் மூழ்கியது. இதன் போது ஏனையவர்கள் தப்பிய போதும் குறித்த குடும்பஸ்தரான மீனவர் கடலில் மூழ்கி உயிரிழந்தார். உயிரிழந்தவரின் சடலம் மீட்கப்பட்டு மன்னார் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.மேலதிக விசாரணைகளை மன்னார் வைத்தியசாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நாட்டை மீளக்கட்டியெழுப்புவதற்க்காக ஏற்றுக்கொண்டது

நாட்டின் பொருளாதார சவாலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரசாங்கம்  அரசியல் சவாலாக எடுத்துக் கொள்ளாமல், நாட்டை மீளக்கட்டியெழுப்புவதற்க்காக ஏற்றுக்கொண்டது என தொழில்  மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். ஹம்பாந்தோட்டை, அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலை விளையாட்டரங்கில் கடந்த (10) ஆம் திகதி ஆரம்பமான ‘ஜயகமு ஸ்ரீலங்கா மக்கள் நடமாடும் சேவையின்  பதினான்காவது கட்டத்தின் அங்குரார்பண நிகழ்வில் கலந்துகொண்டு அமைச்சர் இதனைத் தெரிவித்தார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், “சிலரால் தாங்கள் இடதுபுறம் அல்லது வலதுபுறம் அல்லது எங்கு செல்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்க முடியாது, அவ்வாறு நிகழும்போது வழியைக் கண்டுபிடிக்க நமக்கு ஒரு திசைகாட்டி தேவை. நாம் காணாமல் போகும் போது, ஒரு திசைகாட்டி நமக்கு சரியான வழியை காட்டுகிறது  இடதுசாரிகளையும், வலதுசாரிகளையும் குழப்பிவிடாமல் நாட்டைக் கட்டியெழுப்பும், நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் வேலைத்திட்டத்தை நாங்கள் செயற்படுத்தி வருகின்றோம். நாடு வீழ்ந்த இடத்தில் இருந்து கட்டியெழுப்பும் சவாலை ஏற்றுக்கொண்டோம்.இந்த நாட்டை மீட்க வேண்டும். எனவேதான் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.இப்போது வடக்கு தெற்கை  கண்டுகொள்ளாமல் குழம்பிப்போய் இருப்பவர்கள் பேசும்போது ரணில் கூறுவது  சரிதான் என்று சொலிகிறார்கள். நாட்டை அதல பாதாளத்திலிருந்து மீட்டவர் ரணில் என இன்று அனைவராலும் சொல்லப்படுகிறது. நோய்வாய்ப்பட்டுக் கிடக்கும் இலங்கையை மீட்டெடுக்கும் தலைவன் இதற்குத் தேவை. இரண்டே வருடங்களில் அதி தீவிர சிகிச்சைப்பிரிவிலிருந்து ஓர் நல்ல நிலைமைக்கு   வந்துவிட்டோம்  வலிமையுடனும் ஆற்றலுடனும் எழுந்து நின்று முன்னோக்கி ஓடும் அளவிற்கு இந்த நாட்டை கட்டியெழுப்ப வேண்டும். அதனால்தான் படித்த தலைமை தேவை. நாட்டைக் கட்டியெழுப்பும் பயணத்தில் பேசுவது சரியாகப் போகாது. வேலை செய்ய வேண்டும் ‘ஜயகமு ஸ்ரீலங்கா’ மக்கள் நடமாடும் சேவையானது இங்கு  பொருட்களுடன் வந்து மக்களுக்கு நிவாரணம் மற்றும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்களை வழங்குகிறது. இரண்டு வருடங்களுக்கு முன் நாட்டில் இவ்வாறான நிலை இல்லை. அபிவிருத்தி மற்றும் பொருளாதார வளர்ச்சியின் பலன்களை மக்களுக்கு வழங்க முடியவில்லை. இன்று அந்த பலன்களை கிராமம் கிராமமாக மாவட்டம் தோறும் மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளோம். இரண்டு வருடங்களில் இதுவே  உண்மையான மாற்றம். அந்த நாட்டை வங்குரோத்து   நிலையில் இருந்து மீட்க IMF க்கு சென்று நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளோம். இந்த வேலையை செய்யாவிட்டாலும் நட்பு நாட்டிலிருந்து பணம் வாங்கிக்கொண்டு செய்யலாம் என்று சிலர் நினைக்கிறார்கள். நம் நாட்டில் கலாச்சார ரீதியாக மாற்றப்பட்ட  வேண்டும். பொருளாதார கட்டமைப்பை மாற்ற வேண்டும். நாடு வளர்ச்சியடைய வேண்டுமானால் அரசியல் கலாசாரம் மாற்றப்பட வேண்டும் என தெரிவித்தார்.

அறிகுறிகள் தென்பட்டால் அவதானம் – இலங்கை மக்களுக்கு சுகாதார நிபுணர்கள் விடுத்த எச்சரிக்கை!!

இலங்கையில் காய்ச்சல், இருமல், தொண்டை புண், மூக்கடைப்பு, தசை அல்லது உடல் வலி, தலைவலி மற்றும் சோர்வு போன்ற அறிகுறிகளைக் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு சுகாதார நிபுணர்கள் பொதுமக்களை வலியுறுத்துகின்றனர். இது குழந்தைகள் மத்தியில் அதிகமாகக் காணப்படுவதாகவும், எனவே பெற்றோர்கள் தமது பிள்ளைகளை உன்னிப்பாக அவதானிக்குமாறு அறிவுறுத்தப்படுவதாக கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையின் குழந்தை நல மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். வழக்கமாக நவம்பர் முதல் பெப்ரவரி வரை மற்றும் ஏப்ரல் முதல் ஜூலை வரை காய்ச்சலின் இரண்டு உச்சநிலைகள் உள்ளன. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தொற்றாளர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளன. தற்போதைய நிலவரப்படி, இன்புளூயன்சா A முதன்மையானது. இருப்பினும், இன்புளூயன்சா B யும் பரவலாக உள்ளது. இது தொடர்பான அறிகுறிகள் தொடர்ந்தால், உடனடி மருத்துவ உதவியை நாடுவதே சிறந்தது. இன்புளூயன்சா போன்ற நோய்களால் பாதிக்கப்படக்கூடிய குழுக்களில் கர்ப்பிணித் தாய்மார்கள், இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள், 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் நாட்பட்ட நோய்கள் உள்ளவர்கள் அடங்குவர்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ரி 20 உலகக் கிண்ணத்தை நிட்சயம் வெல்வோம்!

மக்களின் எதிர்பார்ப்பு நிச்சயம் நிறைவேறும் என இலங்கை அணியின் முன்னாள் தலைவர் தசுன் ஷனக தெரிவித்துள்ளார். ரி 20 உலகக் கிண்ணத்திற்காக இலங்கை கிரிக்கெட் அணி இன்று (14) இலங்கையில் இருந்து புறப்பட்டு சென்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். “எமது அணி நன்றாக பயிற்சி செய்து இருக்கிறது. ஒரு நல்ல போட்டிக்கு செல்கிறோம். மக்களின் எதிர்பார்ப்பை நிட்சயம் நிறைவேற்ற முயற்சி செய்வோம். நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். பயணத்தை ஆரம்பிப்பதற்கு முன் நடைபெற்ற போட்டியில் அனைத்து வீரர்களும் சிறப்பாக கலந்து கொண்டார்கள். அணிக்குள் நல்ல ஒற்றுமை இருக்கிறது. சீனியர் மற்றும் ஜூனியர் வீரர்களின் நல்ல ஒற்றுமை உள்ளது. இம்முறை மிகவும் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். கண்டிப்பாக வெற்றி பெறுவோம்.”

முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிக்க தடை!!

அம்பாறை – பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாண்டிருப்பு பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிக்க முற்பட்டவர்களை தடுப்பதற்கு நூற்றுக்கணக்கான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் இன்று (14) காலை 8.30 மணிக்கு இடம்பெற்றுள்ளதுடன் இச்சம்பவத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் மாவட்ட அமைப்பாளர் புஸ்பராஜ் துஷானந்தன் அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்க தலைவி தம்பிராசா செல்வராணி ஆகியோருக்கு பொலிஸாரினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டு குறித்த நிகழ்வு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதன் போது கல்முனை பாண்டிருப்பு அரசடி அம்மன் ஆலய முன்றலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கம் பொதுமக்களுடன் இணைந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வினை முன்னெடுத்திருந்தது. எனினும் சம்பவ இடத்திற்கு வருகை தந்த பெரியநீலாவணை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜே.எஸ்.கே.வீரசிங்க தலைமையிலான பொலிஸார் கல்முனை நீதிவான் நீதிமன்ற தடை உத்தரவை காண்பித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் மாவட்ட அமைப்பாளர் புஸ்பராஜ் துஷானந்தன் என்பவருக்கு தடை உத்தரவு உள்ளதாகவும் எனவே முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களை நினைவுகூரும் முகமாக ஏற்பாடு செய்துள்ள குறித்த நிகழ்வினை நிறுத்துமாறு கூறி தடை உத்தரவை வழங்கினர். அத்துடன் ஏனைய அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்க தலைவி தம்பிராசா செல்வராணி ஆகியோருக்கு பொலிஸாரினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டு அவ்விடத்தில் இருந்து செல்லுமாறு எச்சரித்தமை குறிப்பிடத்தக்கதாகும். இது தவிர கடந்த ஞாயிற்றுக்கிழமை (12) இரவு முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களை நினைவுகூரும் முகமாக செயற்பட்ட குற்றச்சாட்டில் திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சேனையூர் பகுதியில் மூன்று பேரும் பல்கலைக்கழக மாணவி ஒருவருமாக நால்வர் சம்பூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அரச வர்த்தமானி அறிவிப்புக்கு அமைய கம்பனிகள் செயற்பட வேண்டியது அவசியம்!

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு குறித்து அரசாங்கம் விடுத்துள்ள வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய பெருந்தோட்ட கம்பனிகள் செயற்பட வேண்டியது அவசியமென வலியுறுத்திய நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான், அதற்கு எதிராக கம்பெனிகள் மேற்கொள்ளும் நீதிமன்ற நடவடிக்கைளுக்கு முகம்கொடுக்கத் தயாரெனவும் தெரிவித்தார். கூட்டு ஒப்பந்தம் இருந்த காலத்தில் 2 வருடங்களுக்கு ஒரு முறை சம்பளம் அதிகரிப்பு செய்யப்பட்ட நிலையில் கடந்த நான்கு வருடங்களாக தொழிலாளர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்கப்படவில்லை எனத் தெரிவித்த அமைச்சர் ஜீவன் தொண்டமான், டொலரின் பெறுமதி வீழ்ச்சியை சாதகமாக கொண்டு பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்க கம்பனிகள் முன்வர வேண்டுமெனவும் வலியுறுத்தினார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் ஜீவன் தொண்டமான் மேலும் குறிப்பிட்டதாவது: “தற்பொழுது நடைமுறைப்படுத்தப்படும் நாள் சம்பள முறைமை பொருத்தமற்றதாகும். அந்த முறைமையில் இருந்து மாற வேண்டியது அவசியம். அதற்காக நான்கைந்து வருடங்கள் அவசியப்படும். அதற்காக தோட்ட தொழிலாளர்களை 1000 ரூபா சம்பளத்துடன் காத்திருக்கச் வைப்பதை ஏற்றுகொள்ள முடியாது. தேர்தல் காலத்தில் ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு தொகையை பெற்றுத்தருவதாக கூறும். எதிர்கட்சிகள் தோட்ட மக்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக மாற்றுவதாக கூறினாலும் அதற்காக பொறிமுறை என்னவென்பது கேள்விக்குரியாகும். ஆரம்பத்தில் பெருந்தோட்ட தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளத்தில் ஒரு ரூபா கூட அதிகரிக்க முடியாதென கூறிய கம்பனிகள், அரசாங்கம் 1700 சம்பள அதிகரிப்புக்கான வர்த்தமானி அறிவித்தலை விடுத்த பின்பு அடிப்படைச் சம்ளத்தில் 200 ரூபாவை அதிகரிக்க முன்வந்துள்ளனர். அதனால் சம்பள அதிகரிப்பை செய்ய முடியும் என்று கம்பெனிகள் காண்பித்துள்ளன. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கொட்டகலை மே தினக் கூட்டத்தில் பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு குறித்து அறிவித்தார். ஏப்ரல் 30 ஆம் திகதி பெருந்தோட்ட மக்களுக்கு 1700 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்குவது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு தொழில் அமைச்சர் மனுஷ நாணாயக்காரவினால் வெளியிடப்பட்டது. இது குறித்து சிலர் மக்கள் மத்தியில் சர்ச்சைகளை ஏற்படுத்தி வதந்திகள் பரப்பினர். ஜனாதிபதி இந்த அறிவிப்பை விடுத்த மறு தினமே அது நடக்காது என்றும் கூறினார்கள். இதே பெருந்தோட்ட நிறுவனங்கள் 1000 சம்பள அதிகரிப்பை வழங்க முடியாதென கூறினார்கள். அதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கிலும் இரண்டு தடவைகள் வெற்றி பெற்றிருக்கிறோம். தற்போது மேல்முறையீடு செய்துள்ளனர். குறித்த வழக்கு ஏற்கனவே உள்ள சம்பள நிர்ணய சபை மீதே தொடரப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் மேற்கொள்ளப்போகும் சம்பள விடயத்தில் நிர்ணயச் சபைக்கு தொடர்பில்லை. 1000 ரூபாவுக்கு மேலதிகமாக ஒரு ரூபாவும் கொடுக்க முடியாது என்று கூறிய பெருந்தோட்ட நிறுவனங்கள் 1700 சம்பள அதிகரிப்புக்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்ட பின்பு 1200 ரூபாவாக அடிப்படை சம்பளத்தை உயர்த்த முன்வந்துள்ளனர். ஒரு ரூபா கூட அதிகரிக்க முடியாது என்று கூறியவர்கள் அடிப்படைச் சம்பளத்தில் 200 ரூபாவை அதிகரிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். வழங்கு இடம்பெறுவதால் சம்பள உயர்வு வழங்க முடியாது என்று சட்டம் இல்லை. அது குறித்த எழுத்துமூல அறிவிப்பு சட்டமா அதிபரினால் தொழில் அமைச்சுக்கு அனுப்பட்டிருக்கிறது. பெருந்தோட்ட நிறுவனங்கள் இந்த விடயத்தை இழுபரியாக்கவே பார்க்கின்றார்கள். இது குறித்து ஜனாதிபதியிடமும் பேசியிருக்கின்றோம். அதன்படி ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் தொழில் அமைச்சரால் இது குறித் ஆவணமொன்று தயாரிக்கப்படுகிறது. பெருந்தோட்ட நிறுவனங்கள் எந்தெந்த இடத்தில் எல்லாம் சட்டத்தை மீறியிருக்கின்றது? எந்தெந்த இடத்தில் எல்லாம் அவர்கள் இலக்கு இல்லாமல் வேலை செய்திருக்கின்றார்கள்? மீள் நடுகை செய்யாமலிருப்பதற்கான காரணம் என்ன உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இதன்போது ஆராயப்படும். இவ்வாறிருக்க பெருந்தோட்ட கம்பனிகள் குத்தகை காலத்தை நீட்டித்து தாருமாறு கேட்கிறார்கள். மீள் நடுகைச் செய்தால் இலாபமீட்ட 60 வருடங்கள் ஆகும் என்று கூறுகிறார்கள். 53 வருடங்கள் குத்தகைக்கு காணிகளை பெற்றுக்கொண்டபோது அவர்களுக்கு அது விளங்கவில்லையா என்பது கேள்விக்குரியாகும். அதனால், தற்போது சம்பளத்தை அதிகரிக்க முடியாது என்று கூறுவது நியாயமற்றது. பராமரிப்பு இன்மையினாலேயே தோட்டங்கள் காடாக மாறியுள்ளன. தோட்டத் தொழிலாளர்கள் தொழில் செய்யும் இடத்தில் கௌரவமாக நடத்தப்படுத்துவதில்லை. அதுவே தொழிலாளர்கள் எண்ணிக்கை குறையக் காரணமாகும். அவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை. தேயிலைத் தோட்டத்தில் தேயிலை மாத்திரம் தான் இருக்கும் என்ற நிலை இன்று மாறிவிட்டது. பங்களாக்கள் சுற்றுலா இடங்களாக மாற்றப்பட்டுள்ளன. அதிலும் நாளாந்தம் 1000 – 2000 டொலர் ஈட்டுகின்றனர். அங்கு தேநீர் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு இரு முனைகளில் வருமானம் ஈட்டினாலும் கம்பனிகள் அரசாங்கத்திற்கு வெறும் 500 ரூபாவை மாத்திரமே வழங்குகின்றனர். தங்களாலேயே சுற்றுலாத்துறை ஊக்குவிக்கப்படுவதாக கூறிக்கொள்கிறார்கள். இது பெருந்தோட்ட நிறுவனங்களின் சூழ்ச்சியாகும். அதனாலேயே ஜனாதிபதியும் தொழில் அமைச்சரும் எமது கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளனர். கடந்த 4 வருடங்களாக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கிவில்லை. கூட்டு ஒப்பந்தம் இருக்கும்போது இரண்டு வருடத்திற்கு ஒரு முறை சம்பள உயர்வு கிடைத்தது. டொலரின் பெறுமதி வீழ்ச்சி கண்டதன் மூலம் பெருந்தோட்ட கம்பனிகள் அதிக இலாபம் ஈட்டியுள்ளன. அதனால் நிச்சயமாக தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்க முடியும். மேலும், தற்போது யாழ். குடாநாட்டில் சுத்தமான குடிநீர் 11% ஆனோருக்கு மாத்திரமே கிடைக்கிறது. தற்போது நிர்மாணிக்கப்பட்டு வரும் உப்புநீர் சுத்திகரிப்பு நிலையம் திறக்கப்பட்ட பின்னர் யாழ். குடாநாட்டில் 40% ஆனோருக்கு சுத்தமான குடிநீர் கிடைக்கும்’’ என்றும் அமைச்சர் தெரிவித்தார்…

பாடசாலைகளுக்கு கணனிகளை வழங்குங்கள்!

ஆலோசனைக் குழு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றங்களுக்கும் 10 மில்லியன் ஒதுக்குகின்றனர். இந்த பணத்தில் 10 திறன் வகுப்பறைகளை வழங்க முடியும் என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். இதன் பிரகாரம், 341 உள்ளூராட்சி மன்றங்களில் 3,410 திறன் வகுப்பறைகளை நிறுவ முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். தேர்தலை இலக்காக் கொண்டு வழங்கப்படும் இந்த நிதி தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு கூட எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ஆராய்ந்து பார்க்குமாறும், இந்தப் பணத்தைப் பயன்படுத்தி பாடசாலைகளுக்கு கணனி வழங்குமாறு கோரிக்கை விடுப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார். ஆலோசனைக் குழு குறித்து வினவப்பட்ட கேள்விக்கான பதில்கள் சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டாலும் இதுவரையில் அது சமர்ப்பிக்கப்படவில்லை என்றும், இது குறித்து ஆராயுமாறும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.