Search
Close this search box.

டயனா கமகேவிற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள ஏழு குற்றச்சாட்டுக்கள்.

முன்னாள் ராஜாங்க அமைச்சர் டயனா கமகேவிற்கு எதிராக குற்ற விசாரணைப் பிரிவினர் ஏழு குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளனர். கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது. குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளரிடம் போலி தகவல்களை வழங்கியமை, போலிய ஆவணங்களை வழங்கி கடவுச்சீட்டு பெற்றுக்கொண்டமை, குடிவரவு குடியகல்வு சட்டத்தை மீறியமை உள்ளிட்ட ஏழு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. சந்தேக நபரின் கடவுச்சீட்டை நீதிமன்றில் ஒப்படைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். வெளிநாட்டு கடவுச்சீட்டுடைய டயனா கமகே நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்க முடியாது எனக் கூறி சமூக செயற்பாட்டாளரான ஓசல ஹேரத் வழக்குத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கினை விசாரணை செய்த நீதிமன்றம் டயனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ரத்து செய்து ஏற்கனவே தீர்ப்பு வழங்கியிருந்தது. இந்த நிலையில், ஏனைய குற்றச்சாட்டுக்கள் உள்ளடங்கிய குற்றப் பத்திரிகை ஒன்றை குற்ற விசாரணைப் பிரிவினர் நீதிமன்றில் முன்வைத்துள்ளனர். இந்த வழக்கு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 1ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

மொட்டு கட்சியின் வேட்பாளர் தொடர்பில் உதயங்க வீரதுங்க வெளியிட்ட தகவல்

ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க போட்டியிடமாட்டார் என ரஷ்யாவிற்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலில், மொட்டு கட்சி நிச்சயமாக வேட்பாளர் ஒருவரை களமிறக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே உறுயளிக்கப்பட்டது போன்று ரணில் விக்ரமசிங்கவிற்கு இரண்டாண்டுகள் ஆதரவளிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் ரணிலின் அரசியல் பயணம் தனியான பாதையிலும் மொட்டு கட்சியின் அரசியல் பயணம் தனியான பதையிலும் நகரும் எனவும், ஜனாதிபதி தேர்தல் வாக்குச் சீட்டில் மொட்டு கட்சியின் சின்னம் நிச்சயமாக இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், கூட்டணி அமைத்துக்கொண்டாலும் சின்னத்தில் மாற்றமில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்று முதல் ஜனாதிபதி புலமைப்பரிசில்…

க.பொ.த உயர் தரம் மற்றும் முதலாம் தரம் முதல் 11 ஆம் தரம் வரை கல்வி கற்கும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் மூலம் வழங்கப்படும் புலமைப்பரிசில் உதவித் தொகையை இன்று (12) முதல் மாவட்ட மட்டத்தில் செயற்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கொழும்பு மாவட்டத்தில் மாணவருக்கு புலமைப்பரிசில்கள் வழங்கும் நிகழ்வு அண்மையில் (ஜூன் 19) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரி மாளிகையில் இடம்பெற்றதுடன் ஏனைய 24 மாவட்டங்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு இன்றுமுதல் நாடளாவிய ரீதியில் நடைபெறவுள்ளது. இதன்படி, பதுளை, மாத்தளை மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் ஜூலை 13 ஆம் திகதியும், கிளிநொச்சி மாவட்டத்தில் ஜூலை 14 ஆம் திகதியும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் இன்றும் (12), ஜூலை 15 ஆம் திகதியும், கம்பஹா மாவட்டத்தில் ஜூலை 16 மற்றும் 17 ஆம் திகதிகளிலும், காலி மற்றும் அநுராதபுரம் மாவட்டங்களில் எதிர்வரும் 15 ஆம், 16 ஆம் திகதிகளிலும், வவுனியா, மட்டக்களப்பு, இரத்தினபுரி, கேகாலை, நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும், களுத்துறை, மன்னார், அம்பாறை, குருநாகல், கண்டி மாவட்டங்களில் ஜூலை 17 ஆம் திகதியும் முல்லைத்தீவு, திருகோணமலை, பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் ஜூலை 18 ஆம் திகதியும் மொணராகலை, மாத்தறை மாவட்டங்களில் ஜூலை 19ஆம் திகதியும், புத்தளம் மாவட்டத்தில் ஜூலை 22 ஆம் திகதியும் புலமைப் பரிசில்களை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாவட்ட செயலாளர்கள் தலைமையில், அனைத்து வலயக் கல்வி அலுவலகங்கள் மற்றும் அதிபர்களின் ஒருங்கிணைப்புடன், இந்த புலமைப்பரிசில் வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். முதலாம் கட்டத்தில் புலமைப் பரிசில் பெறும் மாணவர்களில் ஒருபகுதியினர் மாத்திரம் புலமைப்பரிசில் வழங்கும் விழாவிற்கு அழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் க.பொ.த உயர் தரம் கற்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும் புலமைப் பரிசில் திட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் பெயர்ப் பட்டியல் ஏற்கனவே வலய மட்டத்தில் ஜனாதிபதி நிதியத்தின் உத்தியோகபூர்வ முகநூல் (Facebook) பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. க.பொ.த உயர் தர மாணவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.6000/- வீதம், 24 மாதங்களுக்கு வழங்கப்படவிருப்பதோடு ஒரு கல்வி வலயத்திலிருந்து 60 மாணவர்களைத் தெரிவு செய்து 6,000 மாணவர்களுக்கு புலமைப் பரிசில்கள் வழங்கப்படும். இந்த மாணவர்களுக்கான நிலுவைக் கொடுப்பனவுடன் ரூ.30,000/- புலமைப்பரிசில் தொகை புலமை பரிசில் வழங்கும் நிகழ்வில் வழங்குவதற்கும், அடுத்த மாதம் முதல் க.பொ.த உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றும் வரை மாதம் ரூ.6000/- புலமைப்பரிசில் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதலாம் வகுப்பு முதல் 11 ஆம் வகுப்பு வரை உள்ள நாட்டின் 10,126 பாடசாலைகளையும் உள்ளடக்கும் வகையில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான 12 மாதங்களுக்கு மாதாந்தம் ரூ.3000/-வீதம் உதவித் தொகை வழங்கப்படும். புலமைப்பரிசிலுக்கு விண்ணப்பிக்காத பாடசாலைகள் தொடர்பான பட்டியில் சகல வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளன. இதன்படி, ஏதாவது பாடசாலை புலமைப்பரிசில் பெற விண்ணப்பிக்கவில்லை என்றால், அது தொடர்பில் ஆராய்ந்து விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு பெற்றோர் மற்றும் பிள்ளைகளை ஜனாதிபதி நிதியம் கோருகிறது. இந்த இக்கட்டான நேரத்தில் யாரையும் கைவிடக்கூடாது என்பது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கருத்தாகும். பிள்ளைகளுக்கு அதிக கல்வி வாய்ப்புகளை வழங்குவதற்கும், நிதி நெருக்கடி காரணமாக பிள்ளையொன்று பாடசாலையை விட்டு விலகும் நிலை இருந்தால் அவ்வாறான நிலைமைகளை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி வழங்கிய ஆலோசனைக்கமைய புலமைப்பரிசில்களுக்கு விண்ணப்பிக்காத பாடசாலைகளுக்கு மீண்டும் புலமைப்பரிசில்களைப் பெற விண்ணப்பித்து அதனைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு ஜனாதிபதி நிதியம் கோரியுள்ளது. அதன்படி, மாவட்ட மட்டத்தில் இந்தப் புலமைப்பரிசில் கொடுப்பனவுகள் தொடர்பான புதிய தகவல்களைப் பெற ஜனாதிபதி நிதியத்தின் உத்தியோகபூர்வ முகநூல் (Facebook) பக்கத்தை Follow/Like செய்யுமாறு ஜனாதிபதி நிதியம் கோரியுள்ளது. இந்த புலமைப்பரிசில் கொடுப்பனவுகள் தொடர்பான மேலதிக தகவல்களை அந்தந்த மாவட்ட செயலகங்களில் இருந்து பெற்றுக்கொள்ள முடியும். ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் மாத்திரம் ஜனாதிபதி நிதிய அதிகாரிகளை 0112354354 – தொடர் இலக்கம் 4835 மற்றும் 0740854527 (Whatsapp மட்டும்) மூலம் தொடர்பு கொள்ளலாம்.

கொழும்பு அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு உரிமைப் பத்திரங்கள்!

கொழும்பில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்களுக்கு அறுதி உறுதிப் பத்திரங்களை வழங்குவதற்காக முத்திரை மற்றும் நொத்தாரிசு கட்டணமாக 515 மில்லியன் ரூபாவை வழங்க திறைசேரி ஒப்புக்கொண்டுள்ளது. 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட அனுமதி வரம்புக்கு அமைவாக உரிய ஏற்பாடுகள் ஒதுக்கப்பட்டுள்ளது என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எஸ். சத்யானந்தா தெரிவித்தார். கொழும்பில் உள்ள 03 அடுக்குமாடி குடியிருப்புகளின் உரிமைப் பத்திரங்களை வழங்குவதற்காக திறைசேரியால் இந்தத் தொகை வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வரவு செலவுத் திட்ட பிரேரணையின் பிரகாரம் கொழும்பு மாவட்டத்தில் உள்ள 50,000 அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்களுக்கு அறுதி உறுதிப் பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு இம்மாதம் 17 ஆம் திகதி சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் ஆரம்பமாகவுள்ளது. ஆரம்ப விழாவில், நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான மிஹிந்து செத்புர, சிரிசர உயன மற்றும் மெட்ரோ வீட்டுத் தொகுதிகளின்  அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்களுக்கும், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான வீட்டுத் தொகுதிகளில் வசிப்பவர்களுக்கும்  சுமார் 1,500 உரிமைப் பத்திரங்கள் வழங்கப்படவுள்ளன. அறுதி உறுதிப்  பத்திரங்கள் வழங்குவது அரசு எடுத்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு என்றார் அமைச்சின் செயலாளர் டப்ளியூ. எஸ். சத்யானந்த. பெரும்பாலான அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்களுக்கு உரிய உரிமைப் பத்திரம் இல்லாததால் பல பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டியிருந்தது. இந்த வீடுகளுக்கான வாடகையை செலுத்துவது கூட குடியிருப்பாளர்களுக்கு பாரிய சிரமங்களை ஏற்படுத்தியுள்ளதாக செயலாளர் மேலும் தெரிவித்தார். இந்த உறுதிப்பத்திரங்களை வழங்குவதற்கு அரசாங்கம் சட்டமா அதிபரிடம் ஆலோசனை நடத்தியதாகவும், கூட்டு ஆதன முகாமைத்துவ அதிகாரசபையின் சான்றிதழ் பெற்ற அனைத்து அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும் இந்த உறுதிகளை வழங்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் செயலாளர் தெரிவித்தார்.

யாழில் அதிகரித்து வரும் விபத்துக்கள்!

வீதி விபத்துக்கள் காரணமாக அவசர சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்படுவபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை வைத்திய நிபுணர் கந்தையா மணிதீபன் தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்று (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த காலங்களில் காணப்பட்டதை விட தற்பொழுது விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து யாழ். வைத்தியசாலையில் அதிகமான நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். யாழ். போதனா வைத்தியசாலை என்பது வட மாகாணத்தில் மிகப்பெரிய போதனா வைத்தியசாலை இங்கு விபத்து பிரிவு ஆரம்பிக்கப்பட்டு 5 வருடங்கள் ஆகும் நிலையில், அதிகமான நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு வருவதை நாங்கள் அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. குறிப்பாக 16 தொடக்கம் 40 வயதுக்குட்பட்டவர்கள் அதிகமாக விபத்துக்களுக்கு உள்ளாகின்றனர். அதிலும் வட மாகாணத்தில் யாழ். மாகாணத்தில் அதிகளவிலான விபத்துக்கள் ஏற்படுகின்றது என தெரிவித்தார்.

அரசியலமைப்புச் சட்டத்தை கேலி செய்யும் காலம் ஏற்பட்டுள்ளது! – சஜித் பிரேமதாச தெரிவிப்பு.

அரசியலமைப்புச் சட்டத்தில் தேர்தல் எப்போது நடத்தப்பட வேண்டும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தை கேலி செய்யும் காலம் இன்று ஏற்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (11) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இலங்கை ஒரு ஜனநாயக நாடு. மக்கள் இறையாண்மை கொண்ட அரசாங்கம், ஜனநாயகத்தின் மூன்று தூண்கள் நிறைவேற்று அதிகாரம், சட்டவாக்கம், நீதித்துறை, அதிகாரப் பகிர்வு அதனோடிணைந்த தடைகள் மற்றும் சமன்பாடுகள் என்ற கொள்கைகளின் அடிப்படையில் நாட்டின் ஜனநாயக கட்டமைப்பு ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக சஜித் பிரேமதாச தெரிவித்தார். தற்போதுள்ள அரசாங்கமும் ஜனாதிபதியும் அரசியலமைப்பு சதித்திட்டத்தை மேற்கொள்வதாக நாட்டின் பெரும்பான்மையான மக்கள் கருதுகின்றனர். மக்கள் இறைமை, தேர்தல், ஜனநாயகம் எனப் பேசி, சதிகளை மேற்கொண்டு, மக்கள் ஆணை இல்லாத ஜனாதிபதி தனது அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காக அரசியலமைப்பிற்கு முரணான வழிமுறைகளைப் பின்பற்றுவது வெட்கக்கேடான செயலாகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தாமல் செய்தவை ஜனாதிபதி தேர்தலுக்கும் பயன்படுத்தப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் எண்ணிக்கையை குறைக்க வேண்டும், எல்லை நிர்ணயம் செய்ய வேண்டும், தேர்தல் நடத்த நிதி இல்லை, தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களை ஜனாதிபதி அழைத்தல், உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் மூலம் வேட்புமனுப் பத்திரம் பெறுப்பேற்பதை நிறுத்துமாறு தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்துதல், ஜனநாயகத்தை மீறும் வகையில் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலருக்கு அழுத்தம் கொடுத்தல் போன்ற செயற்பாடுகள் நடந்தன. இவ்வாறான நிலையில் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பிலும் இது நடக்கலாம் என்ற நியாயமான சந்தேகம் எழுகிறது என்று சஜித் பிரேமதாச தெரிவித்தார். தேர்தல் ஒழுங்குமுறை தொடர்பான சட்டமூலத்தை கொண்டு வரல், இளைஞர்  பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டும் என்ற சட்டமூலத்தைக் கொண்டு வரல், தேர்தல் நடத்தினால் அரச ஊழியர்களுக்கு உரிய திகதியில் சம்பளம் வழங்க முடியாது என தெரிவித்தல், தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களை இராஜினாமா செய்யுமாறு கொலை மிரட்டல் விடுத்தல், இதனால் தேர்தல் ஆணைக்குழுவின் கோரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்தல், தேர்தல் ஆணைக்குழு முன்னாள் உறுப்பினர் ஒருவருக்கும் அரசாங்கம் இலஞ்சம் கொடுத்தல் என்பன முன்னர் நடந்தன. இத்தகைய நடவடிக்கைகள் காரணமாக ஜனாதிபதித் தேர்தல் தொடர்பிலும் நியாயமான சந்தேகம் எழுந்துள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்ட நேரத்தில், ஆணைக்குழு உறுப்பினர்களை நியமிக்க விண்ணப்பங்கள் கோரப்பட்டன. அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீடுகளுக்கு இடையூறான செலவினக் கட்டுப்பாடுகளை உள்ளடக்கிய சுற்றறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். 2019 ஆம் ஆண்டுக்குப் பிறகு நியமிக்கப்பட்ட அரசாங்கம் விவசாயிகள், மீனவர்கள், தொழிலாளர்கள், தொழில்முனைவோர், தொழிலதிபர்கள், சிறு குழந்தைகள் என முழுக் குடும்பத்தையே அழித்துவிட்டது. 2019 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கம் நாட்டையே வங்குரோத்தடையச் செய்தது. 700 பில்லியன் அரச வருமானம் இழக்கப்பட்டன. அரச வருமானத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக 12 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. fitch moody’s standard & poor’s ratings  தரவரிசைகளில் எமது நாட்டை கீழே இறக்கி நாட்டை அழித்தவர்கள், இன்று நாடு சிறந்த மட்டத்தில் இருப்பதாக அரசாங்கமே கூறி வருகிறது. தற்போதைய இயல்புநிலையை தற்போதைய அரசாங்கமே உருவாக்கியுள்ளது. இந்த இயல்புநிலை ஜனாதிபதி, அமைச்சரவை மற்றும் அரசாங்கத்திற்கு ஒரு திருப்திகரமான இயல்பு நிலையாக காணப்பட்டாலும், 220 இலட்சம் மக்களுக்கு அவர்களது வாழ்க்கையச் சுருக்கி வறுமையை அதிகரித்துள்ளனர். 220 இலட்சம் மக்களின் பொருளாதார நெருக்கடி அதிகரித்துள்ளதோடு, அரசாங்க புள்ளிவிபரங்களின்படி, நாட்டில் இரண்டு முதல் மூன்று இலட்சம் வரையிலான நுண், சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இவ்வாறான நிலையிலயே நாட்டை இயல்புநிலைக்கு கொண்டு வந்தோம் என்று அரசாங்கம் கூறுகிறது. வங்குரோத்தான நாட்டு மக்களின் பணத்தை திருடியவர்களுக்கும், மதுபான உரிமப் பத்திரங்களைப் பெற்றவர்களுக்கும், பணத்தின் மீது மோகம் கொண்டவர்களுக்கும் மட்டுமே இயல்பு நிலை உருவாகியுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். இவ்வாறு நிதிகளைப் பெற்று, சலுகைகளைப் பெற்றவர்கள் எப்படியாவது அரசியலமைப்புச் சதிகளின் ஊடாக காலத்தை நீட்டிக்கப் பார்க்கிறார்கள். அரசியலமைப்பிற்கு முரணான செயற்பாடுகளை விடுத்து, அஞ்சாமல் மக்கள் முன் வந்து, மக்களின் தீர்மானத்திற்கு தலைவணங்குமாறு தற்போதைய ஆட்சியாளர்களிடம் கோரிக்கை விடுக்கிறேன். உள்ளூராட்சி மன்றத் தேர்தலை சீர்குலைக்க சதிகள் மேற்கொள்ளப்பட்டன. அரசியலமைப்பின் சட்டமன்றத்துக்குரிய ஷரத்துக்கள் மீறப்பட்டு, அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணாக அரச நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறு தன்னிச்சையாகச் செயற்படும் போது ஜனாதிபதித் தேர்தல் பிட்பொகட் அடிக்கப்படுமா என்ற நியாயமான சந்தேகம் எழுகின்றது. மக்களின் குரலுக்கு இடம் கொடுங்கள், மக்களின் கருத்துக்கு இடம் கொடுங்கள், மக்கள் சொல்வதைக் கேளுங்கள், மக்களின் எண்ணங்களையும் விருப்பங்களையும் புரிந்து கொள்ளுங்கள். மக்கள் ஆணை வழங்கினால் ஆட்சியில் இருங்கள், ஆணை வழங்கவில்லை என்றால் ஆட்சியை விட்டுப்போக வேண்டும். இது ஜென்ட்ல்மென்ட் அரசியல் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். குறித்த காலப்பகுதியில் ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டும் என அரசியலமைப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டின் அரசியலமைப்பை மீறாமல், நாட்டின் உச்ச சட்டத்தை மீறாமல், அரசியலமைப்பை நடைமுறைப்படுத்த வேண்டும் என தீர்மானமொன்று கொண்டு வர வேண்டும் போல என எண்ணத்தோன்றுகிறது. நாட்டில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கத் தேவையான வசதிகள் இல்லை. பொலிஸ் திணைக்களத்துக்குத் தேவையான மனித வளங்கள் மற்றும் பௌதீக வளங்கள் இல்லை. ஆனால் ஊவா மாகாணத்தில், பதுளை மாவட்டத்தில் கோடிக்கணக்கில் பணம் செலவழித்து, சமுதாய பொலிஸ் திட்டம் என்ற திட்டத்தை உருவாக்கி, வெல்லவாய பிரதேசத்திற்கு மக்களை அழைத்துச் சென்று, ஜனாதிபதி தலைமையில் அரசியல் கூட்டங்களை நடத்துவதற்கு இந்த அரசாங்கத்திடம் பணம் இருக்கிறது என்று சஜித் பிரேமதாச தெரிவித்தார். தேர்தல் நடைமுறைகளை மீறக்கூடாது. மக்களின் ஜனநாயக உரிமைகளில் கை வைக்க வேண்டாம். தேர்தலுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் அரசாங்கம் நடந்து கொள்ள வேண்டும். மக்கள் தீர்மானத்திற்கு அடிபணியக் கற்றுக் கொள்ள வேண்டும். நாட்டில் ஜனநாயகத்திற்கு மட்டுமே இடம் உண்டு. தேர்தலை சீர்குலைக்க இந்த ஆட்சியாளர்கள் எடுக்கும் அனைத்து வழிமுறைகளையும் தோற்கடித்து, நாட்டு மக்களின் சர்வஜன வாக்குரிமையை மக்கள் பலத்துடன் வென்றெடுக்க ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய மக்கள் கூட்டணியும் நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்தார்.

கொழும்பில் நடந்த படுகொலையை நேரலையில் பார்வையிட்ட கும்பல்: வெளிநாட்டிலிருந்து வந்த கடும் எச்சரிக்கை

கொழும்பின் புறநகர் பகுதியான அத்துருகிரியலில் இடம்பெற்ற கொலைச் சம்பவங்களை அடுத்து பாதாள உலகக் குழுவினரின் அட்டகாசம் தீவிரம் அடைந்துள்ளது. கிளப் வசந்த படுகொலை செய்யப்படுவதை, கொலைத் திட்டத்தை செயல்படுத்தியதாக கூறப்படும் சஞ்சீவ புஸ்பகுமார அல்லது லொக்கு பெட்டி நேரலையில் பார்வையிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதை அவர் தனது கைப்பேசி மூலம் நேரலையில் பார்த்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கிளப் வசந்த குறித்த நிலையத்தை திறக்க வந்ததில் இருந்து சுட்டுக் கொல்லப்படும் வரை நேரலையாக காட்சிப்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதேவேளை அத்துருகிரிய பச்சை குத்தும் நிலையத்தில் வைத்து கொலை செய்யப்பட்ட சுரேந்திர வசந்த பெரேரா எனப்படும் கிளப் வசந்தவின் சடலம் பொரளை மலர்ச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த சடலத்தை அங்கு வைக்கக் கூடாது என்றும் அப்படியிருந்தால் மலர்ச்சாலை வெடித்து சிதறும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டிலிருந்து வந்த தொலைபேசி அழைப்பின் மூலம் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸாரிடம் முறையிடப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த மலர் சாலையின் பாதுகாப்பை பலப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

பலத்த பாதுகாப்புடன் டுபாயிலிருந்து இலங்கைக்கு அழைத்துவரப்படும் பாதாள உலக உறுப்பினர்கள்.

இலங்கையில் கொலைகள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைச் செய்து டுபாயில் பதுங்கியிருந்த இரண்டு இலங்கையர்கள் அந்நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று (12) அதிகாலை குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் நான்கு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குழுவினால் சந்தேகநபர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். கொழும்பு, நுகேகொட பிரதேசத்தை சேர்ந்த 48 வயதான களுதுர தினேஷ் சமந்த டி சில்வா என அழைக்கப்படும் “பாபி” மற்றும் 26 வயதான கங்கனம்ல திமுத்து சதுரங்க பெரேரா ஆகியோரே இவ்வாறு அழைத்து வரப்பட்டுள்ளனர். மட்டக்குளி, சமித்புர பிரதேசத்தை சேர்ந்த இரண்டு சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை 05.10 மணியளவில் டுபாயில் இருந்து வந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-226 மூலம் இருவரும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். கங்கனம்லவின் திமுத்து சதுரங்க பெரேரா கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரிடமும், களுதுர தினேஷ் சமந்த டி சில்வா கொழும்பு நாரஹேன்பிட்டி  ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடமும் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அம்பாறையில் 6 மாத கர்ப்பிணி தாயொருவர் மாயம்

அம்பாறையை சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயான 6 மாத கர்ப்பிணி ஒருவர் கடந்த (09) திகதி முதல் காணாமல்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 9 ஆம் திகதி காலை பத்து மணியளவில் தனது மகளுடன் மகப்பேறு மருத்துவமனைக்கு சென்ற அவர், பின்னர் தாய் வீட்டிற்கு செல்வதாக கூறி மகளை அனுப்பி வைத்துள்ளார். இதன்பின்னர் மனைவியின் கையடக்கத் தொலைபேசிக்கு பல தடவைகள் அழைப்பு விடுத்த போதும், அவர்  வீட்டிற்கு வரவில்லை என காணாமல்போயுள்ள பெண்ணின் கணவர் மாதம்பிட்டிய (10) பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். ஒரு வாரத்திற்கு முன்னர் கர்ப்பிணி பெண் தனது கணவரிடம் வயிற்றில் உள்ள குழந்தையை அகற்றுமாறு தெரிவித்ததாகவும் கூறியுள்ளார். இதற்கமைய, பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிகரிக்கும் மழை வீழ்ச்சி! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்.

காலநிலையில் இன்று முதல் அடுத்த சில நாட்களில் ஏற்படவுள்ள மாற்றம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் மழையுடனான வானிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவயில் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, கண்டி, நுவரெலியா மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் 40-50 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்தை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவயில் திணைக்களம், பொது மக்களை அறிவுறித்தியுள்ளது.