இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்களை விடுவிக்க கோரும் தமிழ்நாடு
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ் நாட்டு கடற்றொழிலாளர்களையும் அவர்களது படகுகளையும், விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் (M. K. Stalin) வலியுறுத்தியுள்ளார். வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு அனுப்பிய கடிதத்தில் அவர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். அண்மையில் இலங்கைப் படையினரால் இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டிருப்பது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமது கடிதத்தில் அதிருப்தியை வெளியிட்டுள்ளார். அவர்களை விடுவிக்க மையத்தின் தலையீட்டைக் கோரியுள்ள அவர், அதற்காக தூதரக வழிவகைகளை செயல்படுத்த வேண்டும் என்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் கோரியுள்ளார். இதேவேளை நேற்றும் இந்திய கடற்றொழிலாளர்கள், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் குறைந்த விலையில் விற்பனை
குறைந்த விலையில் பொருட்களை இறக்குமதி செய்து அதிக விலைக்கு விற்கும் அல்லது இருக்கும் பொருட்களை அதிக விலைக்கு விற்க விலை நிர்ணயம் செய்யும் மாபெரும் மாபியா இந்த நாட்டில் இயங்கி வருவதாக வர்த்தக மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் எஸ். வியாழேந்திரன் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். இந்த நிலைமையைக் கட்டுப்படுத்த அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும், அப்பணியில் ஈடுபடும் கூட்டுறவுச் சங்கங்களுக்கு அதிகப் பொறுப்பு வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார். சுமார் 03 மில்லியன் உறுப்பினர்களைக் கொண்ட கூட்டுறவு வலையமைப்பின் ஊடாக பொருட்களை விநியோகிக்கும் போது நேரடியாக பொருட்களை இறக்குமதி செய்து குறைந்த விலையில் மக்களுக்கு விற்பனை செய்ய முடியும் எனவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.