கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள போர்க் கப்பல்!
துருக்கிய கப்பல் ஒன்று உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றிற்காக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. துருக்கிய கடற்படையின் டி.சி.ஜி கினாலியாடா என்ற இந்த கப்பல் 152 மாலுமிகளைக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கப்பல் எதிர்வரும் 11ஆம் திகதி வரை இலங்கையில் நங்கூரமிட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கப்பலின் கட்டளை அதிகாரியாக செர்கன் டோகன் என்பவர் கடமையாற்றுகிறார். டோகனுக்கும் மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சமன் பெரேராவுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பொன்றும் இங்கு இடம்பெற்றுள்ளது. மேலும் அந்த கப்பலின் மாலுமிகள் இலங்கையின் முக்கிய இடங்களை பார்வையிட பல பகுதிகளுக்குச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் ஜனாதிபதிக்கு விடுத்துள்ள எச்சரிக்கை.
அரசாங்க ஊழியர்களின் சம்பளங்களை அதிகரிக்கும் நோக்கில் பெறுமதி சேர் வரி அதிகரிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேவர்தன இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். சம்பள அதிகரிப்பினை இலக்காகக்கொண்டு வற் வரி அதிகரிக்கப்பட்டால், தனியார்துறையினர் பாரியளவு தொழிற்சங்கப் போராட்டத்தை முன்னெடுக்க நேரிடும் என தெரிவித்துள்ளார். கல்வித்துறையையும் மாணவர்களையும் பாதுகாப்பதற்கு ஜனாதிபதி நேர்மையுடன் செயற்பட வேண்டுமென அவர் கோரியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசாங்கத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்குவதற்கு தனியார் துறைகளிடமிருந்து வரி அறவீடு செய்யப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். சம்பள அதிகரிப்பு கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் தொழிற்சங்கப் போராட்டத்தின் பின்னணியில் அரசியல் மறைகரமொன்று செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். சில அரசியல்வாதிகளும், கடும்போக்குவாதிகளும் இந்த தொழிற்சங்க போராட்டங்களின் பின்னணியில் செயற்பட்டு வருவதாகத் குறிப்பிட்டுள்ளார். கோவிட் காலத்தில் ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசாங்க ஊழியர்கள் இரண்டு ஆண்டுகளாக முழுச் சம்பளத்தைப் பெற்றுக் கொண்டனர் எனவும், தனியார் துறையினருக்கு அவ்வாறு நிவாரணங்கள் வழங்கப்படவில்லை எனவும் கெமுனு சுட்டிக்காட்டியுள்ளார். இந்தப் போராட்டம் காரணமாக தனியார் பஸ் உரிமையாளர்களின் வருமானம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். தொழிற்சங்கப் போராட்டம் முன்னெடுத்தாலும் அரச ஊழியர்களுக்கு சம்பளம் கிடைக்கப் பெறும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சிலர் தங்களது அரசியல் நோக்கங்களுக்காக நாட்டை பின்னோக்கி நகர்த்த முயற்சிப்பதாக, பிள்ளைகளின் கல்வியை பணயமாக வைத்து இடதுசாரி கடும்போக்குவாத அரசியல் சக்திகள் ஜனாதிபதி ஆசனத்தில் அமர முயற்சிப்பதாக கெமுனு விஜேரட்ன குறிப்பிட்டுள்ளார்.
சாவகச்சேரி வைத்தியசாலையில் நடக்கும் பகல் கொள்ளை ! சிக்கியது மற்றொரு பெரும் ஆதாரம்.
யாழ். ( Jaffna) சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் குருதி பரிசோதனை செய்வதற்கான அனைத்து வசதிகளும் உள்ள நிலையில் தன்னை வைத்தியர்கள் தனியார் வைத்தியசாலையில் குருதி பரிசோதனை செய்யச் சொன்னதாக பாதிக்கப்பட்ட நோயளியொருவர் ஆதங்கத்தை வெளியிட்டுள்ளார். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை முன்பாக நேற்று முன்தினம் தென்மராட்சி மக்களால் மேற்கொள்ளப்பட்ட மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தின் பின்னர் அவர் இதனை ஆதாரத்துடன் தெரிவித்துள்ளார். இதன்போது பாதிக்கப்பட்ட நோயாளி அதிக பணம் செலவளித்து குறித்த பரிசோதனையினை மேற்கொண்டதாகவும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
யாழில் போக்குவரத்து பொலிஸாரால் உயிரிழந்த மின்சாரசபை ஊழியர் : பிரதான சாட்சி வாக்குமூலம்
யாழ்ப்பாண (Jaffna) மின்சார சபை ஊழியரான செல்வநாயகம் பிரதீபன் உயிரிழக்க போக்குவரத்து பொலிஸாரின் செயற்பாடே காரணம் என வாக்குமூலம் வழங்கப்பட்டுள்ளது. சம்பவத்தை நேரில் கண்ட சாட்சி ஒருவர் 2 மாதங்களின் பின்னர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் இந்த வாக்குமூலத்தை வழங்கியுள்ளார். முன்னதாக யாழ் பலாலி பிரதான வீதியின் ஆயகடதை கடந்த மே 10ஆம் திகதி இந்த சம்வம் இடம்பெற்றுள்ளது. எனினும், சாட்சி வழங்குவதற்கு பயந்த நிலையில் தாமாக முன்வந்து குறித்த பொதுமகன் வாக்குமூலத்தை வழங்கியுள்ளார். நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதற்காகவே துணிந்து வந்து இந்த வாக்குமூலத்தை வழங்குவதாக தெரிவித்துள்ளார். குறித்த சாட்சி, யாழ்ப்பாணம் பலாலி பிரதான வீதியில் ஊடாக முச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த பொழுது, வீதியின் வலது பக்கம் நின்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவர் இடது பக்கமாக பயணித்த சிலரை மறித்து சோதனை மேற்கொண்டிருந்தனர். இதன்போது உயிரிழந்தவரையும் பொலிஸ் மறித்த பொழுது அவர் நிற்காமல் சென்றுள்ளார். இதனை அடுத்து கடமையில் ஈடுபட்டிருந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மோட்டார் சைக்கிளை எடுத்து பின்னால் துரத்திச் சென்று, வடக்கு புன்னாலைக் கட்டுவன் எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அருகில் வைத்த குறித்த மோட்டார் சைக்கிளை வலது காலால் உதைத்தார், இதன் போது பாதிக்கப்பட்டவர் மின்சார கம்பத்தில் மோதுண்டார். அவரை எடுத்துச் சென்று வைத்தியசாலையில் அனுமதிக்க நாங்கள் முயற்சி செய்த பொழுதும் அவரை உதைந்து விழுத்திய பலாலி போக்குவரத்து பொலிஸார் அனுமதிக்கவில்லை. எனினும், அவரை வைத்தியசாலையில் உடனடியாக அனுமதித்து இருந்தால் காப்பாற்றி இருக்கலாம் என அவர் தனது வாக்கு மூலத்தில் தெரிவித்திருந்தார்.
சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
கடந்த மாதத்திலிருந்து சுற்றுலா பயணிகளின் வருகை விகிதத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதற்கமைய ஜூலை முதல் வாரத்தில் 43,000 க்கும் மேற்பட்ட சர்வதேச பார்வையாளர்களை இலங்கை வரவேற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தற்காலிகத் தரவுகளின்படி வருடாந்தம் 1,053,332 சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஜூன் முதல் வாரத்துடன் ஒப்பிடுகையில், ஜூலை முதல் வாரத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 89 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும் போஹ்ரா சர்வதேச மாநாடு, 40 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு மேல் இருந்து 30,000க்கும் மேற்பட்ட மதப் பார்வையாளர்களை தீவு நாட்டிற்கு கொண்டு வருவதால், இலங்கை சுற்றுலாத்துறைக்கு ஒரு பெரிய ஊக்கமளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் போஹ்ரா சர்வதேச மாநாடு, ஜூலை 7 ஆம் திகதி ஆரம்பமானதுடன் 12 நாட்களுக்கு தொடர்ந்து நடைபெறவுள்ளது.
மின் கட்டணம் பற்றிய புதிய அறிவிப்பு.
மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களை ஆராய்ந்த பின்னர் இறுதித் தீர்மானம் எதிர்வரும் ஜூலை 15 ஆம் திகதி அறிவிக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன் தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ, இதற்கு முன்னர் பதிவு செய்த பல்வேறு தொழிற்துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 46 பிரதிநிதிகளிடம் கருத்துக்கள் பெறப்பட்டதாக குறிப்பிட்டார். எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் மின்சாரக் கட்டணத் திருத்தங்கள் தொடர்பான முன்மொழிவுகளை இலங்கை மின்சார சபை, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளது. அந்த முன்மொழிவுகளின்படி, குறைக்கப்படும் கட்டணங்களின் ஒட்டுமொத்த சதவீதம் 13.8% ஆகும். அதன்படி, குடும்ப அங்கத்தவர்களின் கட்டணத்தில் 25.5% குறைப்பும், மத மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு 3% குறைக்கப்படும். எவ்வாறாயினும், இந்த முன்மொழிவுகளின்படி, ஹோட்டல் மற்றும் தொழில்துறை துறைக்கான கட்டணக் குறைப்பு எதுவும் முன்மொழியப்படவில்லை.
சம்பளத்தை அதிகரிக்காத நிறுவனங்களின் குத்தகை ஒப்பந்தம் இரத்து செய்யப்படும்!
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிராக சில பெருந்தோட்டக் கம்பனிகள் நீதிமன்றத்தை நாடியமையால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகள் உட்பட பெருந்தோட்டத் தொழிலாளர்கள் குழுவினர்கள் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சில் நேற்று (09 ) அமைச்சர் மனுஷ நாணயக்காரவைச் சந்தித்தனர். குறிப்பிட்ட பெருந்தோட்டக் கம்பனிகள் அதிகரிக்கப்பட்ட சம்பளத்தை வழங்க மறுப்பதால் ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்து அமைச்சர் தொழிலாளர் பிரதிநிதிகளிடம் விளக்கினார். மேலும் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்திலும் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டார். தற்போதுள்ள சட்ட திட்டங்களுக்கு அமைய சம்பளத்தை 1,350 ரூபாவாகவும், உற்பத்தி திறன் அடிப்படையிலான ஊக்குவிப்பு கொடுப்பனவை 350 ரூபாவாகவும் அதிகரிப்பதற்காக சம்பள சபையின் மூலம் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளுக்கு பெருந்தோட்ட கம்பனிகள் ஒத்துழைப்பு நல்கவில்லை. பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அதிகரித்த சம்பளத்தை வழங்கிய நிறுவனங்களின் குத்தகை ஒப்பந்தத்தை நீடித்து மற்றும் அதை மறுத்தவர்களின் ஒப்பந்தத்தை நீடிக்காது இருக்க இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிகரிக்கப்பட்ட ஆயிரம் ரூபாய் சம்பளத்தை நாளையும், நிலுவைத் தொகையான 350 ரூபாயையும் ஒரு வாரத்திற்குலும் அதன் பிறகு ஊக்கத்தொகையை வழங்குவதற்கு சில தோட்ட நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டாலும் தோட்டத் தொழிலாளர்கள் தற்போது அனுபவித்து வரும் சலுகைகள் அனைத்தும் இரத்து செய்யப்பட மாட்டாது என அமைச்சர் உறுதியளித்தார். தோட்டத் தொழிலாளர்களின் வீடுகள் அமைந்துள்ள பகுதிகளை கிராமங்களாக வர்த்தமானியில் வெளியிடுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். எனவே எதிர்காலத்தில் இக்கிராமங்களில் வசிப்பவர்கள் பெருந்தோட்ட தோட்ட நிறுவனங்களின் பராமரிப்பு நிர்வாகத்திலிருந்து விலக்கப்பட்டு ஏனைய கிராமவாசிகள் அனுபவிக்கும் வசதிகளை அனுபவிக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள். பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்காத நிறுவனங்களின் தொடர்பில் சில தொழிற்சங்கங்கள் கடைப்பிடிக்கும் இரட்டைக் கொள்கை குறித்து கவலை வெளியிட்ட அமைச்சர், அதிகரிக்கப்பட்ட சம்பளத்தை வழங்க மறுக்கும் நிறுவனங்கள் வருடாந்தம் பல பில்லியன் ரூபா இலாபத்தைப் பெறுவதாகத் தெரிவித்தார். இச் சாதகமான தலையீட்டிற்காக தோட்டத் தொழிலாளர்கள் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர், ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு நன்றிகளை தெரிவித்தனர்.
துப்பாக்கிப் பிரயோகத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை
கொலன்னா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அப்டன் தோட்டத்தின் உரிமையாளர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமைக்கான காரணம் இதுவரையில் தெரியவரவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் வீட்டில் இருந்த நபரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான 61 வயதுடைய நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் மற்றும் அவரது மனைவி வீட்டில் தங்கியிருந்தபோது துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் வந்து இறந்தவர் வீட்டில் இருக்கிறாரா என்று மனைவியிடம் கேட்டுள்ளனர். இதனை அடுத்து குறித்த நபர் வீட்டில் இருந்து வெளியே வந்த போது சுட்டுக்கொல்லப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. நீதவான் பரிசோதனையின் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
புதிய சட்டமா அதிபர் நியமனம் தொடர்பில் விளக்கம்..
புதிய சட்டமா அதிபர் நியமனம் தொடர்பாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு அனுப்பியுள்ள கடிதத்திற்கு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க பதிலளித்துள்ளார். அரசியலமைப்பு பேரவையின் அங்கீகாரத்துடன் சட்டமா அதிபரை நியமிக்க அரசியலமைப்பின் 41வது சரத்து கூறுகிறது என ஜனாதிபதியின் செயலாளர் அக்கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். அரசியலமைப்பின் கீழ் ஜனாதிபதிக்கு அரசியலமைப்பு அதிகாரம் உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரியை இந்தப் பதவிக்கு மூப்பு அடிப்படையில் நியமிக்க, அரசியலமைப்புத் தேவை இல்லை என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. இலங்கை வரலாற்றில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் மிகவும் சிரேஷ்ட அதிகாரிக்கு, சட்டமா அதிபர் பதவி வழங்கும் முறை பின்பற்றப்படவில்லை எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி சட்டத்தரணி சரத் என். சில்வா, ஜனாதிபதி சட்டத்தரணி மொஹான் பீரிஸ் போன்ற சட்டமா அதிபர் பதவிக்கான நியமனங்கள் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகளுக்குப் புறம்பாக வழங்கப்பட்டுள்ளதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தம்புள்ளையில் பெண்களின் திருட்டுச் சம்பவத்தில் சர்ச்சை – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.
தம்புள்ளை நகரிலுள்ள கையடக்க தொலைபேசி கடையொன்றில் இருந்து கைத்தொலைபேசி மற்றும் உபகரணங்கள் திருடியமை தொடர்பில் சமூக ஊடகங்களில் பரவிவரும் காணொளியை உடன் அகற்றுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. குறித்த காணொளியில் சிறுவன் உள்ளமையினால், காணொளியை நீக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டதாக அதன் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான உதயகுமார அமரசிங்க தெரிவித்தார். இரண்டு பெண்கள், சிறுவன் ஒருவருடன் கையடக்க தொலைபேசி கடைக்கு சென்று தொலைபேசி மற்றும் பொருட்களை திருடிச் சென்றுள்ளனர். சமூக ஊடகங்களில் சிறுவனின் உருவம் அடங்கிய காணொளி பரவல் தொடர்பில் மேற்கொண்ட விசாரணையின் போதே தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் இவ்வாறு தெரிவித்தார். இதன் ஊடாக சிறுவனின் உரிமை மீறப்பட்டுள்ளது. இது சட்டத்தை மீறி செய்யப்பட்ட ஒரு செயலாகும். ஒரு குற்றச் செயல் தொடர்பாக சமூக ஊடகங்கள் மூலம் சிறுவர்கள் தொடர்பான அல்லது சந்தேகப்படும்படியான படங்களை பரப்புவது நெறிமுறைக்கு புறம்பானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால், வீடியோவை இணையத்தில் வெளியிட்ட நபரை தற்போதுள்ள சட்டத்தின்படி கையாள்வதில் சிரமம் உள்ளதென அவர் கூறியுள்ளார். அதற்கமைய, எந்தவொரு குற்றச்சாட்டையும் இணையத்தில் வெளியிடும் நபர்களுக்கு எதிராக சட்டங்கள் அவசரமாக தயாரிக்கப்பட வேண்டும் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான உதயகுமார அமரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.