கொழும்பு தேசிய நூலகத்தில் திடீர் தீ விபத்து
கொழும்பு 07இல் அமைந்துள்ள தேசிய நூலக ஆவணவாக்கல் மத்திய நிலையத்தின் கேட்போர் கூடத்துக்கு அருகில் உள்ள அறையில் திடீர் தீப்பரவல் ஒன்று ஏற்பட்டுள்ளது. குறித்த தீ விபத்து இன்று (10.07.2024) காலை 10 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தேசிய நூலக ஆவணவாக்கல் மத்திய நிலையத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் கட்டடத்திலிருந்து வெளியேறியுள்ளனர். இதனையடுத்து, கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு படையினர் வருகை தந்து தீயை உடனே கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
அர்ச்சுனா மீதான குற்றச்சாட்டு ; கேதீஸ்வரன் பின்னணியில் தயாரிக்கப்பட்ட கடித்தில் எழுந்துள்ள சர்ச்சை.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பொறுப்பு வைத்தியர் அர்ச்சுனா மீது குற்றச்சாட்டை முன்வைத்த சாவகச்சேரி ஆதார வைத்திய சாலை நலம்புரி சங்கம் வெளியிட்டுள்ள கடிதம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், ஊழல் வாதி என மக்களால் அழைக்கப்படும் வைத்திய கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரனை தமது சங்கத்தின் போசகர்களில் ஒருவராக வைத்துக் கொண்டு அர்ச்சுனா மீது குற்றச்சாட்டை கூறுவது தான் வேடிக்கை என நெடிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். வைத்தியர் அர்ச்சுனா வைத்திய கலாநிதி கேதீஸ்வரன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகின்ற நிலையில் குற்றச்சாட்டுக்கு இலக்காக இருக்கும் கேதீஸ்வரன் அங்கம் வகிக்கும் நலன்புரிச் சங்கம் நீதியான சங்கமா என பொதுமக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளமை சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்துயுள்ளது.
அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகள் சடுதியாக குறைப்பு.
சில அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு லங்கா சதொச நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வர்த்தகம், வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆலோசனையின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, பயறு ஒரு கிலோகிராமின் புதிய விலை 998 ரூபாவாகவும், இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு ஒரு கிலோகிராமின் விலை 205 ரூபாவாகவும், சிவப்பு சீனி ஒரு கிலோகிராமின் விலை 375 ரூபாவாகவும், வெள்ளை சீனி ஒரு கிலோகிராமின் விலை 263 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படவுள்ளது.
உயிரிழந்த வர்த்தகர்களுக்கு அஞ்சலி: புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தால் ஏற்பாடு
புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்துக்குட்பட்ட பகுதியில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு உயிரிழந்த வர்த்தகர்களை நினைவுகூறும் விதமாக புதுக்குடியிருப்பு பகுதியில் இன்று புதன்கிழமை அஞ்சலி நிகழ்வொன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் வர்த்தகத்தை மேற்கொண்டு உயிரிழந்த 15 வர்த்தகர்களின் படங்கள் வைக்கப்பட்டு அவர்களுக்கு ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. உயிரிழந்த வர்த்தகர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், புதுக்குடியிருப்பு வர்த்தக சங்க நிர்வாக உறுப்பினர்கள், வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் இந் நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.
இந்தியப் பெருங்கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கையா…? – அச்சத்தில் மக்கள்
இந்திய பெருங்கடலில் தென்னாப்ரிக்காவுக்கு தெற்கே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கேப் டவுன் நகரத்தில் இருந்து 2,500 கி.மீ. தொலைவில் கடலின் ஆழத்தில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.7ஆக பதிவாகியுள்ளது. இந்தியாவில் ஆங்காங்கே சிறிய அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு வருவது, மக்களுக்கு அச்ச உணர்வை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் மகாராஷ்டிர மாநிலம் ஹிங்கோலி பகுதியில் இன்று காலை 7.14 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.5-ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்திய பெருங்கடலில் தென்னாப்ரிக்காவுக்கு தெற்கே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.7ஆக பதிவு ஆகியுள்ளது. இதனால் சுனாமி எச்சரிக்கை விடப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரணிலின் தேர்தல் பரப்புரை பதாதைகளை உடைத்த மர்ம நபர்கள்
ஐக்கிய தேசியக் கட்சியின் தம்புள்ளை தொகுதியின் செயற்பாட்டு அலுவலகத்திற்கு முன்பாக உள்ள பதாகைகளை சிலர் உடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தம்புள்ளை மாநகரசபையின் முன்னாள் தவிசாளர் மாயா பதெனியவின் வீட்டில் இந்த அலுவலகம் பராமரிக்கப்பட்டு வருகின்றது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் தம்புள்ளை தொகுதி அமைப்பாளர் ஆகியோரின் உருவம் பொறிக்கப்பட்ட பதாகைகளே இவ்வாறு சேதப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் தம்புள்ளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மன்னாரில் மீண்டும் அமைக்கப்பட்ட இராணுவ சோதனைச்சாவடி…
மன்னார் பிரதான பாலத்தடியில் சில வருடங்களாக அமைக்கப்பட்டிருந்த இராணுவ சோதனைச் சாவடி கடந்த சில வாரங்களுக்கு முன் அகற்றப்பட்ட நிலையில் மீண்டும் புதிதாக அமைக்கப்பட்டுள்ளமை குறித்து மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். எனினும், கொழும்பு- அத்துருகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற கொலை சம்பவமே இதற்கான காரணம் என்று பாதுகாப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்கள் மன்னாரிற்கு சென்று தலைமன்னார் ஊடாக இந்தியாவுக்கு தப்பிச் செல்ல உள்ளதாக புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளதன் காரணமாக சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
முள்ளிப்பொத்தானையில் அதிசொகுசு பஸ் வீதியை விட்டு விலகி விபத்து
திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி திருகோணமலை பிரதான வீதியின் 96 ம் கட்டை முள்ளிப்பொத்தானையில் கொழும்பிலிருந்து நேற்றிரவு செவ்வாய்க்கிழமை (09) திருகோணமலை நோக்கி வந்த அதிசொகுசு தனியார் பயணிகள் போக்குவரத்து பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த சம்பவம் இன்று புதன்கிழமை (10) அதிகாலை இடம்பெற்றுள்ளது. தனியாருக்கு சொந்தமான அதிசொகுசு பஸ் ஒன்றே பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பஸ் விபத்தில் சாரதி, நடத்துனர் உட்பட பயணிகள் சிலரும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், சம்பவ இடத்துக்கு தம்பலகாமம் போக்குவரத்து பொலிஸார் விரைந்துள்ளதையடுத்து, நித்திரை கலக்கமே விபத்துக்கு காரணம் என ஆரம்ப கட்ட விசாரனை மூலம் தெரியவருவதாகவும், சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி ஒஸ்ரியாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கையர் கைது.
போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி ஒஸ்ரியாவின் வியன்னா நகரத்துக்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று (09) குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் யாழ்ப்பாணம், தெல்லிப்பழை பகுதியைச் சேர்ந்த 39 வயதுடையவர் ஆவார். சந்தேக நபர் நேற்று (09) இரவு இந்தியாவிற்குச் சென்று பின்னர் அங்கிருந்து ஒஸ்ரியாவின் வியன்னா நகரத்துக்கு தப்பிச் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளார். இதன்போது, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபரின் கடவுச்சீட்டு போலியானது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், தரகர் ஒருவரிடம் 90 இலட்சம் ரூபா பணத்தை கொடுத்து, இந்த போலி கடவுச்சீட்டை தயாரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
ஞானசார தேரருக்கு நாம் மன்னிப்புக் கொடுக்க மாட்டோம்! – உலமா சபை உறுதி
மத நிந்தனை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரருக்கு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை எந்த காரணம் கொண்டும் பொதுமன்னிப்பு வழங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நேற்று தெஹிவளை பள்ளிவாசலில் இடம்பெற்ற கூட்டத்தில் இது தொடர்பாக முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு குறித்த தேரருக்கு மன்னிப்பு வழங்கும் அதிகாரம் ஜனாதிபதியின் கையில் இருக்கின்ற காரணத்தால் அதில் ஜம்மியத்துல் உலமா சபை தலையிட வேண்டிய நிலை ஏற்படாது என்றும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மௌலவி அப்துல் ஹாலிக் தெரிவிக்கையில், தேரருக்கு மன்னிப்பு வழங்கும் விடயம் எங்கள் கைகளில் இல்லை. அது ஜனாதிபதியின் கையில் உள்ளது. அது தொடர்பாக எங்களுக்கு முடிவெடுக்க முடியாது. சமூக வலைத்தளங்களில் பேசப்படுவது போன்றும் நாம் ஒரு தலைப்பட்சமாக முடிவுகளை எடுக்க மாட்டோம். என்று தெரிவித்துள்ளார்.