Search
Close this search box.

வவுனியாவில் ஓர் தனியார் மருந்தகத்தில் மாத்திரம் 10 மாதங்களில் 42,700 போதை மருந்து கொள்வனவு – பாரிய குற்றம் என அறிக்கை சமர்ப்பிப்பு

வவுனியாவில் சில மருந்தகங்களில் போதை மருந்து கொள்வனவு பாரிய குற்றமாகும் எனவும் தேவையேற்படின் பொலிஸ் விசாரணை மேற்கொள்ளப்படல் வேண்டும் எனவும் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.   வவுனியாவிலுள்ள தனியார் மருந்தகங்களில் போதையினை ஏற்படுத்தும் மருந்து விற்பனை தொடர்பில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் நிலக்சன் , வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி யூட் பிரீஸ் , வவுனியா மேலதிக சுகாதார வைத்திய அதிகாரிகளான பிரசன்னா மற்றும் அரங்கன் , உணவு மருந்து பரிசோதகர் , வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை ஆகியோர் அடங்கிய குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமையானது,   வவுனியா இரண்டாம் குறுக்குத்தெருவில் அமைந்துள்ள ஓர் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது அங்கு குறித்த (போதையினை ஏற்படுத்தக்கூடிய) PREGABALIN CAPSULES மருந்துகள் அங்கு கைப்பற்றப்பட்டுள்ளதுடன் தவறான முறையில் மருந்துகள் வழங்கப்பட்டுள்ளமையும் உறுதி செய்யப்பட்டமையுடன் குறித்த வைத்திய நிலையத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவுள்ளது.   மேலும் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அருகாமையில் ஓர் தனியார் மருந்தகத்தில் தை 2022 லிருந்து ஜப்பசி 2022 வரையான காலப்பகுதியில் 1220 பெட்டி குறித்த (போதையினை ஏற்படுத்தக்கூடிய) PREGABALIN CAPSULES மருந்து கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. ஒர் பெட்டியில் 35 மருந்துகள் வீகிதம் 1220X35=42700 மருந்துகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.   மருந்து கொள்வனவுக்குரிய பற்றுச்சீட்டுக்கான காசோலையினை குறித்த தனியார் மருந்தகத்தின் இயக்குனரான அரச வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியர் அவரது கையோப்பத்துடன் வழங்கியுள்ளமையும் விசாரணையில் அவதானிக்கப்பட்டுள்ளமையும் குறித்த 42700 மருந்துகள் எங்கு சட்டரீதியற்ற முறையில் விநியோகப்பட்டுள்ளது என்பதை தெரிந்து கொள்ள முடியவில்லை என்பதுடன்,   இவ்விடயம் தொடர்பாக திணைக்களத்தினால் பூர்வாங்க விசாரணைகள் செய்யப்படல் வேண்டும் மேலும் இது ஓர் பாரிய குற்றம் என்பதுடன் தேவையேற்படின் பொலிஸ் விசாரணை செய்யப்பட வேண்டும் என அறிக்கையின் இறுதியில் தெரிவிக்கப்பட்டு விசாரணைக்குழுவினால் கையோப்பம் இடப்பட்டு அறிக்கைகள் வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.   தொடர்ச்சியாக இதனை முன்னெடுக்க வேண்டியது மாகாண சுகாதார பணிப்பாளர் ஆனால் இது வரை தீர்வில்லை   ஆவணங்கள் கீழே இணைப்பு

கனடாவுக்கு தப்பிச் செல்ல முயற்சி: யாழ்ப்பாண இளைஞர் விமான நிலையத்தில் கைது

போலி வெளிநாட்டு கடவுச்சீட்டைப் பயன்படுத்தி கனடாவுக்கு தப்பிச் சென்ற நபரை குடிவரவுத் திணைக்களத்தின் எல்லை அமலாக்கப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று (06) இரவு குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர் யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவர். இவர் நேற்று (06) இரவு 07.20 மணியளவில் சவூதி அரேபியாவின் தமாம் நோக்கிப் புறப்படவிருந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-263 இல் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். இதன்போது எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகள் அவரைத் தடுத்து நிறுத்தி கடவுச்சீட்டு உள்ளிட்ட ஆவணங்களைச் சரிபார்த்தனர். இவருடைய கடவுச்சீட்டு, கனடாவில் விசா பெற்றுள்ள மற்றுமொரு இலங்கையருக்கு சொந்தமான கடவுச்சீட்டு என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 18 லட்சம் ரூபாயை தரகர் ஒருவரிடம் கொடுத்து, கடவுச்சீட்டில் தனது புகைப்படம் மற்றும் பிற அடிப்படைத் தகவல்களை இணைத்து இந்தக் கடவுச்சீட்டை போலியாகத் தயாரித்தது தெரியவந்துள்ளது. இதன்போது சந்தேகநபரின் பயணப் பையை சோதனை செய்த போது அதில் அவரது உண்மையான கடவுச்சீட்டு, போலி விமான டிக்கெட், போலி துபாய் குடியுரிமை விசா மற்றும் போலி குடியேற்ற முத்திரை ஆகியவையும் கண்டுபிடிக்கப்பட்டன. கைது செய்யப்பட்ட நபர் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

போதையூட்டும் மூலிகைச் செடியால் வந்த விபரீதம் – 7 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

பொலன்னறுவை – வெலிகந்த பிரதேசத்தில் பாடசாலை ஒன்றில் றம்புட்டான் போன்ற அத்தன என்ற மூலிகைச் செடியின் பழ விதைகளை உட்கொண்ட 7 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளதாக வெலிகந்தை பொலிசார் தெரிவித்தனர். வெலிகந்த அசேலபுரத்தில் சித்த வைத்தியங்களுக்கு பயன்படுத்தப்படும் மூலிகைச் செடியான அத்தன செடியின் பழத்தின் விதைகளை உட்கொண்டால் போதை ஏற்படும் என முதியவர் ஒருவர் உட்கொண்டு வந்துள்ளதை அவதானித்த பாடசாலை சிறுவன் ஒருவர் அந்த விதைகளை உட்கொண்டபோது அவருக்கு போதை ஏற்பட்டுள்ளதாகத் தொிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக குறித்த   சிறுவன் தான் கல்விகற்கும் அசேலபுரத்திலுள்ள பாடசாலையிலுள்ள சக மாணவர்களுக்கு  தெரியப்படுத்தியதையடுத்து அவர்கள் இந்த விதையை எடுத்துக் கொண்டுவருமாறு அந்த மாணவனிடம் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவதினமான கடந்த வெள்ளிக்கிழமை குறித்த விதையை பாடசாலைக்கு எடுத்துச் சென்ற மாணவன், சக மாணவர்களுக்கு வழங்கியதையடுத்து அவர்கள் அதனை  உட்கொண்டதில் 4 மாணவர்கள் 3 மாணவிகள் உட்பட 7 மாணவர்கள்  மயக்கமடைந்துள்ளனா். அவர்களை உடனடியாக அம்புலனஸ் வண்டி வரவழைத்து வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதிக்கப்பட்டதாக பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதில் 6 மாணவர்கள் சிகிச்சை பெற்று வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதுடன் ஒரு மாணவி தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருவதாகவும் அவருக்கு எந்த விதமான ஆபத்துக்களும் இல்லை என வைத்தியசாலைப்  பணிப்பாளர் தெரிவித்தார். இதேவேளை இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகந்த பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

15 இலட்சம் ரூபாவுக்கு ‘டீல்’ – வலம்புரிச் சங்குடன் வசமாக சிக்கிய இளைஞன்

புத்தளம் – மாரவில பகுதியில் 15 இலட்சம் ரூபா டீல் அடிப்படையில் விற்பனை செய்ய முற்பட்ட வலம்புரிச் சங்குடன் ஒருவர் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார். மாரவில பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். மாரவில பகுதியில் ஒருவர் வலம்புரிச் சங்கு வைத்திருப்பதாக மீரிகம விமானப்படைப் புலனாய்வுப் பிரிவருக்குக் கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய நேற்று பிற்பகல் இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. கருவலகஸ்வெவ வனஜீவராசிகள் திணைக்களத்தினர் மற்றும் புத்தளம் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் 15 இலட்சம் ரூபா ஒப்பந்தம் அடிப்படையில் குறித்த நபரிடம் வலம்புரிச்சங்கை வாங்கும் நோக்கில் சென்று அவரை கைது செய்துள்ளனர். இவ்வாறு கைப்பற்றப்பட்ட வலம்புரிச் சங்கு சுமார் 50 இலட்சம் ரூபா பெறுமதியென வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நேற்று மாலை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இதேவேளை எதிர்வரும் புதன்கிழமை மாரவில நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை முன்னெடுத்துள்ளதாக கருவலகஸ்வெவ வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்தனர்.

ஹிஸ்புல்லாவின் உக்கிர தாக்குதல் – இலங்கையர்களுக்கு இஸ்ரேல் தூதரகத்தின் அவசர எச்சரிக்கை

இஸ்ரேலின் வடபகுதியில் ஹெஸ்புல்லா அமைப்பின் தாக்குதல்கள் அதிகரிப்பது குறித்து அப்பகுதியில்  வசிக்கும் இலங்கையர்களிற்கு இஸ்ரேலிற்கான  இலங்கை தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இஸ்ரேலின் வடக்கு பிராந்தியத்தில் விவசாயம் மற்றும் பராமரிப்பு துறைகளில் வேலைகளில் சுமார் 2,000 இலங்கையர்கள் பணிபுரிவதாக தூதரகம் தெரிவித்துள்ளது. சிரேஷ்ட ஹிஸ்புல்லாஹ் இராணுவ அதிகாரி மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக லெபனானில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை மற்றும் ஆளில்லா விமான தாக்குதல்களால் 15,000 ஏக்கர் உலர் புல்வெளிகளும் விளைநிலங்களும் எரிந்து நாசமாகியுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் தெரிவித்துள்ளார். நிலவும் கடும் வறட்சி காரணமாக பல பகுதிகளுக்கு தீ பரவியுள்ளதாகவும், நிலைமையை கட்டுப்படுத்த இஸ்ரேல் தீயணைப்பு வீரர்கள் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் இஸ்ரேலுக்கான  இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது. இந்நிலைமையைக் கருத்தில் கொண்டு, குறித்த பிரதேசத்தில் வசிப்பவர்கள் தமது பாதுகாப்பில் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும் எனவும் அத்தியாவசிய விடயங்களுக்கு அன்றி பணியிடங்களை விட்டு வெளியேற வேண்டாம் எனவும் இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது.

ஜனாதிபதிக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்போம்: பசில் ராஜபக்ச அறிவிப்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாட்டைப் பற்றி நன்கு சிந்தித்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் அரசியல் வாழ்வில் 27 வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு களுத்துறையில் நடைபெற்ற வைபவத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “கட்சியை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு எமது கட்சியின் தலைவர் மகிந்த ராஜபக்சவிடம் இருந்து எமக்கு கிடைத்த பலத்துடன் இந்த அரசாங்கத்தில் ஒரு கட்சியாக செயற்படும் போது எப்பொழுதும் அச்சமின்றி உங்களுக்கு உதவியுள்ளோம். அன்றைய தினம் ரோஹித அபேகுணவர்தன உட்பட எமது கட்சியில் உள்ள அனைவரும் இந்த நாட்டைக் காப்பாற்றும் திறன் உங்களிடமே இருக்கின்றது என்று தீர்மானித்தோம். இன்று வரை அந்த ஆதரவை நாங்கள் உண்மையாக வழங்கி வருகின்றோம். அந்த ஆதரவு தொடரும். இது நாட்டுக்காக எடுத்த முடிவு. இந்த நாட்டு மக்களை நீங்கள் பாதுகாக்கும் வரை உங்களுக்கு எல்லா பலத்தையும் தருவோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகியோர் கலந்துகொண்டனர்.

சென்னை – அநுராதபுரம் இடையில் கடலுக்கு அடியில் மின் இணைப்பு: இறுதி கட்டத்தில் பேச்சுகள்

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் மின் இணைப்புத் திட்டமொன்றை முன்னெடுப்பது தொடர்பில் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலம் முதல் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன. இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜுன் மாதம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்திய விஜயத்தின் பின் இந்தத் திட்டம் தொடர்பில் பல இணக்கப்பாடுகள் எட்டப்பட்டன. இத்திட்டத்தை கடலுக்கு அடியில் கேபிள்கள் மூலம் செயல்படுத்தவும் இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன. இதுதொடர்பில் அண்மையில் புதுடில்லிக்குச் சென்ற ஜனாதிபதியின் ஆலோசகரும் ஜனாதிபதி செயலகத்தின் தலைமை செயலாளருமான சாகல ரத்நாயக்க முக்கிய கலந்துரையாடல்களை நடத்தியிருந்தார். தற்போது திட்டத்தை இருநாடுகளும் இணைந்து கூட்டு முயற்சியின் கீழ் செயல்படுத்தும் இறுதிகட்ட பேச்சுகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கைத் தீவில் முக்கியத்தும் வாய்ந்த ஜனாதிபதித் தேர்தல் வருட இறுதியில் நடைபெற உள்ளது. அதற்கு முன் அரசாங்கத்தின் செல்வாக்கை அதிகரித்துக்கொள்ளும் நோக்கில் பல பிரமாண்ட திட்டங்களை செயல்படுத்த அரசாங்கம் உத்தேசித்துள்ளது. இதன் ஒருகட்டமாக இந்திய அரசாங்கத்தின் பிரமாண்ட திட்டங்களை செயல்பாட்டு வடிவத்துக்கு கொண்டுவர அரசாங்கம் ஆலோசித்துள்ளது. மின் இணைப்புத் திட்டத்தை சென்னைக்கும் அநுராதபுரத்துக்கும் இடையில் செயல்படுத்தவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 200 ஜிவாபோட் மின்சாரத்தை தேசிய கட்டமைப்பில் இணைப்பது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது.

சிங்கள தேசம்: யாசகம் கேட்காது – ரணில்

இலங்கையில் புதிய அரசியல் மற்றும் பொருளாதார முறைமையொன்று உருவாக வேண்டும். அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டு அச்சமின்றி உண்மையைப் பேசக்கூடிய தலைவர்கள் அரசியல் கட்டமைப்பில் உருவாக வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். தேசிய வங்கியாளர்கள் ஒன்றியத்தினால் நேற்று வெள்ளிக்கிழமை (05) காலிமுகத்திடல் ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்ட வங்கியாளர் மாநாட்டில் உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைக் கூறினார். நாடு எதிர்நோக்கும் பொருளாதாரச் சவாலை அச்சமின்றி மக்களுக்கு எடுத்துக்கூறியதாக தெரிவித்த ஜனாதிபதி, நாட்டை நெருக்கடியிலிருந்து மீட்பதற்குத் தகுந்த வேலைத்திட்டத்தை முன்வைத்துள்ளதாகவும் தெரிவித்தார். அதற்கு மாறான வேலைத்திட்டங்கள் எவையும் நாட்டுக்கு கிடையாதெனவும், கனவுலகில் இருப்பதை விடுத்து நாட்டுக்குத் தேவையான வேலைத்திட்டத்தை அடையாளம் கண்டு செயற்படுத்துவதன் மூலம் பொருளாதாரத்தை முன்னேற்றிச் செல்ல வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளதெனவும் வலியுறுத்தினார். சிலர் அர்ஜென்டினாவின் மார்ட்டின் குஸ்மானை முன்மாதிரியாகக் கூறினாலும், அவர் தோல்வியடைந்தவர் என்பதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, சிலர் உலகத் தலைவர்களிடம் பணம் கேட்கச் சொல்கிறார்கள். ஆனால் சிங்கள தேசம் ஒருபோதும் யாசகம் கேட்டுச் செல்லாதெனவும், தன்னம்பிக்கையால் முன்னேறக்கூடிய தேசமாகவே திகழ்வதாகவும் சுட்டிக்காட்டினார். ஏற்றுமதிப் பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்டு நாட்டில் துரித அபிவிருத்தியை ஏற்படுத்துவதே தமது நோக்கமாகும் என தெரிவித்த ஜனாதிபதி, ஏற்றுமதிப் பொருளாதாரத்தை உருவாக்குவதற்கான சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த வேலைத்திட்டத்தை முன்னோக்கிக் கொண்டுச் செல்வதில் வங்கிக் கட்டமைப்புக்கு முக்கிய வகிபாகம் உள்ளதெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியை தோண்டும் பணி மீள ஆரம்பம்: 40 எலும்புக்கூடுகள் இதுவரை மீட்பு

போரினால் மிகவும் பாதிக்கப்பட்ட வன்னியில் ஓராண்டுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய புதைகுழியின் அகழ்வுப் பணிகள், கடந்த எழு மாதங்களுக்கும் மேலாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில், நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெற்றுள்ளமையால் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இன்று முதல் எதிர்வரும் பத்து நாட்களுக்கு அகழ்வுப் பணிகள் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்படாத, சடலங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படும் பகுதிகளில் நாளை முதல் அகழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்கான தயார்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு சட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் கனகசபாபதி வாசுதேவ இன்று ஊடகங்களுக்குத் தெரிவித்தார். “கொக்குத்தொடுவாய் இதுவரை காலமும் போதிய நிதியுதவி இல்லாமை காரணமாக காலம் தாழ்த்தப்பட்ட அகழ்வுப் பணியானது போதிய நிதி ஒதுக்கீட்டின் பின்னர் இன்று ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து 10 நாட்கள் நடத்தப்படுவதாக உத்தேசிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுவரையில் 40 மனித எலும்புக்கூடுகள் முற்றாகவும் பகுதியளவிலும் மீட்கப்பட்ட நிலையில் இன்று பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதுவரை அகழ்ந்து எடுத்த பகுதிகளைத் தவிர மிகுதி பகுதியில் மனித எலும்புக்கூடுகள் இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் பகுதி துப்புரவு செய்யப்பட்டு அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இப்பகுதியில் அகழ்வுப் பணி தொடரும்.” என்றார்.   கடந்த நவம்பர் மாதம் 29ஆம் திகதி அகழ்வுப் பணிகள் நிறுத்தப்பட்டதை அடுத்து மேற்கொள்ளப்பட்ட நிலத்தடி ஸ்கேன் பரிசோதனைக்கு அமைய, முல்லைத்தீவு – கொக்கிளாய் பிரதான வீதிக்கு கீழும் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. குறித்த பகுதியின் அகழ்வு பணிக்காக நாளை மாற்று வீதி தயார்படுத்தப்படும் என வீதி அபிவிருத்தி அதிகாரசபை இன்று உறுதியளித்ததாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். 40 எலும்புக்கூடுகள் முழுமையாகவும், பகுதியளவிலும் எடுக்கப்பட்டுள்ள கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் அகழ்வுப் பணிகளை தொடர்ந்து மேற்கொள்வதற்கு, நிபுணர் குழு கோரிய நிதி ஒதுக்கீட்டிற்கு நிதி அமைச்சு அனுமதி வழங்காத காரணத்தினால் காலவரையறையின்றி அந்த பணிகள் தாமதமாகியிருந்தன. கடந்த ஏப்ரலில் எதிர்காலப் பணிகளுக்கு ஒரு கோடியே 37இலட்சம் ரூபாய் தேவைப்படும் என மதிப்பிடப்பட்டது. குறித்த தொகையை மீள்பரிசீலனை செய்யுமாறு நீதி அமைச்சினால் விடுக்கப்பட்ட கோரிக்கையின் பிரகாரம், கோரப்பட்ட 97 இலட்சம் ரூபாவானது எழுத்து மூலம் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக, முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் பிரதம கணக்காளர் மயில்வணகம் செல்வரட்ணம் கடந்த மே மாதம் உள்ளூர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்திருந்தார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் இருந்து தோண்டியெடுக்கப்பட்டுள்ள மனித உடல்கள் தொடர்பான மேலதிக தடயவியல் பரிசோதனைகளுக்கு தேவையான பணம் கிடைக்குமா என்பது தொடர்பில் தெளிவான தகவல்கள் இல்லை. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான அண்மைய அறிக்கையானது, இலங்கையில் உள்ள பாரிய புதைகுழிகளை சர்வதேச நியமங்களுக்கு அமைவாக அடையாளம் காணவும், பாதுகாக்கவும் மற்றும் விசாரணை செய்யவும் அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்துள்ளது. கொக்குத்தொடுவாய் விசாரணைக்கு முன்னோடியாக இருந்த தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவ, பாரிய புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட எலும்புகள் தொண்ணூறுகளின் நடுப்பகுதியில் சட்டவிரோதமாக புதைக்கப்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர்களின் எலும்புகள் என மார்ச் மாதம் நீதிமன்றத்திற்கு அறிவித்தார். அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டிருக்க வேண்டும் என்பது அவரது அனுமானமாகும். 2023ஆம் ஆண்டு ஜூன் மாத இறுதியில், கொக்குத்தொடுவாய் மகாவித்தியாலயத்திலிருந்து கொக்கிளாய் நோக்கி சுமார் 200 மீற்றர் தொலைவில், நீர் வழங்கல் திணைக்கள ஊழியர்கள் நீர் குழாய்களை அமைப்பதற்காக நிலத்தை தோண்டிக் கொண்டிருந்த போது, மனித உடல் உறுப்புகள் மற்றும் ஆடைத் துண்டுகள் தற்செயலாக வெளிப்பட்டன.