Search
Close this search box.

வரி இலக்கத்தை பெறுவதற்காக மாத்திரம் பதிவு செய்தவர்களுக்கு அதிர்ச்சி

அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கமைய, வரி செலுத்துவோர் அடையாள எண்ணைப் பெறுவதற்காக மட்டும் பதிவு செய்த ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களின் வரிக் கோப்புகளை தற்போது உள்நாட்டு இறைவரித் திணைக்களம் திறந்துள்ளது. இவ்வாறு திறக்கப்பட்ட கோப்புகளில் உள்ளவர்கள் உடனடியாக வரி செலுத்துமாறு திணைக்களம் எழுத்து மூலம் அறிவித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இந்த குழுவில் ஏற்கனவே சம்பளத்தில் இருந்து வரி செலுத்துபவர்களும், ஒரு லட்சம் ரூபாய்க்கு குறைவாக வருமானம் ஈட்டுபவர்களும் வேறு எந்த வருமானமும் பெறாதவர்களும் இருப்பதாக கூறப்படுகிறது. வரி செலுத்துவோர் அடையாள எண்ணைப் பதிவு செய்துள்ள ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கான வரிக் கோப்புகளைத் தங்கள் வரி இலக்குகளை அடைவதற்காக உள்நாட்டு வருவாய்த் திணைக்களம் திறந்து வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது. உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தனது வரி இலக்குகளை அடைவதை நோக்கமாகக் கொண்டு வரி செலுத்துவோர் அடையாள எண்ணில் பதிவு செய்த ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களின் வரிக் கோப்புகள் திறந்துள்ளதாக தெரியவந்துள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வரி செலுத்துவோரை அடையாளம் காண மட்டுமே வரி செலுத்துவோர் அடையாள எண் வழங்கப்படும் என இறைவரி திணைக்களம் அறிவித்திருந்தது. மேலும், இந்த இலக்கம் பெற்ற அனைவரும் வரி செலுத்த வேண்டியதில்லை என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் இலக்கம் பெற்ற அனைவருக்கும் உரிய வரிகளை செலுத்துமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் கடிதங்கள் மற்றும் குறுஞ்செய்திகளையும் அனுப்பியுள்ளதாக அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.

உலகளாவிய ஆடைத் திட்டம் தொடர்பான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவுள்ள இலங்கை

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபைக்கும் (EDB) பொருளாதார விவகாரங்களுக்கான சுவிஸ் அரச செயலகத்திற்கும் இடையிலான உலகளாவிய ஆடைத் திட்டம் தொடர்பான உத்தேச ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு அமைச்சரவையால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆடை கைத்தொழில் துறைக்கான உலகளாவிய ஆடை வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக சுவிஸ் பொருளாதார விவகாரங்களுக்கான செயலகத்திற்கும் EDBக்கும் இடையில் திட்ட உடன்படிக்கையில் ஈடுபடுவதற்கு முன்மொழியப்பட்டதாக அரசாங்கம் கூறுகிறது. இந்த உடன்படிக்கையில் நுழைவதன் மூலம், டிஜிட்டல் மயமாக்கலை ஊக்குவித்து தரமான தயாரிப்புகளை நோக்கி நகரும் பணியின் அடிப்படையில் ஆடை அலங்காரம் மற்றும் ஆடை தொழிற்துறையின் மாற்றத்திற்கான உலகளாவிய ஆதரவை  இலங்கை பெற முடியும். இதன்படி, மேற்படி ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கனடா மக்களிடம் மன்னிப்புக் கோரிய பிரித்தானிய இளவரசி.

பிரித்தானிய மன்னரின் தங்கையான இளவரசி ஆன் (Princess Anne) கனடாவில் நடைபெறவிருந்த தேசிய போர் நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இயலாததற்காக வருத்தம் தெரிவித்துக்கொண்டுள்ளார். போரின்போது வட பிரான்சில் உயிரிழந்த கனேடிய வீரர் ஒருவரின் உடலை கனடாவுக்குக் கொண்டுவரும் அந்த நிகழ்ச்சியில் இளவரசி ஆன் கலந்துகொள்ளவேண்டியிருந்தது. இளவரசி குதிரை ஒன்றினால் தாக்கப்பட்டதால் காயமடைந்ததைத் தொடர்ந்து, மருத்துவர்களின் ஆலோசனைப்படி, இளவரசி ஆன் ஓய்வெடுக்க வேண்டியிருப்பதால் அவர் கலந்துகொள்ளவிருந்த சில நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. இதயையடுத்து அவரால் கனடா செல்ல முடியாத நிலைமை ஏற்படவே, அவர் கனடா மக்களுக்கு அனுப்பிய செய்தியை, கவர்னர் ஜெனரல் வாசித்துள்ளார். குறித்த செய்தியில், 2016ஆம் ஆண்டு தான் கனடாவில் தேசிய போர் நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதை நினவுகூர்ந்துள்ள இளவரசி ஆன், இம்முறை தன்னால் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இயலாததற்காக வருத்தம் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தனின் வெற்றிடத்திற்கு குகதாசன் நியமிப்பு..! வெளியான வர்த்தமானி

திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக கதிரவேலு சண்முகம் குகதாசனின் பெயரை அறிவித்துத் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் காலமானதால் 9ஆவது நாடாளுமன்றத்தில் ஆசன வெற்றிடமொன்று ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்றச் செயலாளர் நாயகத்தினால் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறியப்படுத்தப்பட்டது. இதற்கமைய, இறுதியாக இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பெறப்பட்ட விருப்பு வாக்குகளின் அடிப்படையில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக கதிரவேலு சண்முகம் குகதாசன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதனடிப்படையில் 16,170 விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ள சண்முகம் குகதாசன், இரா.சம்பந்தனின் மறைவை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகியுள்ளார்.  

இன்றைய காலநிலை தொடர்பில் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முன்னறிவிப்பு

நாட்டின் காலநிலை மாற்றம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கு மேல் ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யும். ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலை அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு (40-50) கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.