Search
Close this search box.

அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகளுக்கு சிக்கல் – இன்று முதல் விசேட சோதனை..

நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகளை கண்டுபிடிப்பதற்காக இன்று முதல் (02) விசேட சோதனை நடத்தப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இவ்வாறான பேருந்துகள் தொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு பயணிகள் முறைப்பாடுகளை சமர்ப்பிக்க முடியும் என அதன் திட்டமிடல் பணிப்பாளர் கே.எஸ்.சி கருணாரத்ன தெரிவித்துள்ளார். நேற்று நள்ளிரவு முதல் பேருந்து கட்டணம் 5.07 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி 30 ரூபாவாக இருந்த குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 02 ரூபாவினால் குறைக்கப்பட்டு 28 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வீடு சென்ற மாணவிகளை தடுத்துவைத்து அச்சுறுத்திய இளைஞர்கள் – கண்டியில் நடந்த பரபரப்புச் சம்பவம்…

கண்டி – பன்வில பகுதியில் 5 பாடசாலை மாணவிகளை தடுத்துவைத்த இளைஞர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம்  இடம்பெற்ற புலமை பரிசில் பரீட்சை செயலமர்வில் கலந்துகொண்ட 5 மாணவிகளே இவ்வாறு தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். புலமை பரிசில் பரீட்சை செயலமர்வு நிறைவடைந்த நிலையில், 10 வயதான 5 மாணவிகள் வீட்டிற்கு சென்றுக்கொண்டிருந்த போது 17 வயது மதிக்கத்தக்க 3 பேர், மாணவிகளை இடைமறித்து தடுத்து வைத்துள்ளனர். இதன்போது குறித்த இளைஞர்களிடமிருந்து தப்பிச்செல்ல முயற்சித்த மாணவி ஒருவர் மீது, இளைஞர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மாணவிகள் வீடு திரும்பாததை அடுத்து, மாணவி ஒருவரின் தந்தை தேடி சென்ற போது, மாணவிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதை அவதானித்து இளைஞர்களிடமிருந்து  மாணவிகளை மீட்டுள்ளார். இதன்போது மாணவிகளை தடுத்து வைத்திருந்ததாக கூறப்படும் இளைஞர்கள், அந்த இடத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. குறித்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதேச மக்கள் நேற்றுமுன்தினம் மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், அங்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் மூன்று இளைஞர்களில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மற்றைய சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். குறித்த மாணவிகள் தவறான செயற்பாட்டிற்கு உட்படுத்தப்பட்டதாக பரவிய செய்தி, உண்மைக்கு புறம்பானது எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.  

முச்சக்கர வண்டி கட்டணம் தொடர்பான புதிய அப்டேட்…!

நாட்டில் தற்போது பெற்றோல் விலை குறைக்கப்பட்டாலும் முச்சக்கர வண்டி கட்டணத்தை குறைக்கும் சாத்தியம் இல்லை என அகில  இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது. மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் அடிப்படையில் கட்டணத்தை குறைக்க முடியாது என அதன் தலைவர் லலித் தர்மசேகர சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டில் இரண்டு இலட்சம் முச்சக்கரவண்டிகளுக்கு இதுவரை மீட்டர் பொருத்தப்படவில்லை. அரசாங்கம் எரிபொருளின் விலையை குறைத்துள்ள போதிலும், முச்சக்கரவண்டிகளை பயன்படுத்தும் மக்களுக்கு நன்மைகளை பெற்றுக்கொடுக்கும் முறைமை உருவாக்கப்படவில்லை எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இரா.சம்பந்தனுக்கு வட்டுக்கோட்டையில் அஞ்சலி…!

மறைந்த,  இலங்கை தமிழரசு கட்சியின் பெருந்தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இராஜவரோதயம் சம்பந்தனுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு   இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிக்கிளை அலுவலகத்தில் நேற்றையதினம்(01)இடம்பெற்றது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ஈஸ்வரபாதம் சரவணபவன் தலைமையில்,  துயரின் வெளிப்பாடாக அலுவலகத்தின் முன்றலில் கட்சி கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. தொடர்சியாக, சம்பந்தனின் திருவுருவ படத்திற்கு ஈகைச்சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து அஞ்சலி உரைகளும் இடம்பெற்றன. இந்நிகழ்வில்,  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன், முன்னாள் காரைநகர் பிரதேச சபை தவிசாளர் பாலசந்திரன், வலிகாமம் மேற்கு முன்னாள் தவிசாளர் நாகரஞ்சினி, முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதி மகளிர் அணி, தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.  

சகோதரியின் மகளான 13 வயது சிறுமிக்கு மாமாவால் நடந்த கொடூரம்..

நோட்டன் – பிரிட்ஜ் 04 ஆம் தூண் பகுதியில் வசிக்கும் 13 வயதுடைய பாடசாலை மாணவியை வன்புணர்வு செய்ததாக கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் நேற்றுமுன்தினம் பிற்பகல் நோட்டன் பிரிட்ஜ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் இதற்கு முன்னர் 9 வயதுடைய பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்து பிரதேசத்தை விட்டு தப்பியோடி, மாவனெல்லையில் சுமார் 10 வருடங்களாக தலைமறைவாக இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர் தலைமறைவாக இருந்த போது கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட பின்னர் 05 மாத காலம் விளக்கமறியலில் வைக்கப்பட்டு கடுமையான பிணை நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டதாக நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர் நேற்றுமுன்தினம் காலை ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் பொலிஸில் கையொப்பமிட வந்துள்ளார். பின்னர், சந்தேகநபரின் பிணையில் கையொப்பமிட்ட தனது சகோதரியின் வீட்டிற்குச் சென்ற அவர், அவரது மகளை பாலியல் வன்புணர்வு செய்துவிட்டு அப்பகுதியில் இருந்து தப்பிச் சென்றுள்ளார். சிறுமியின் தாயார் செய்த முறைப்பாட்டின் படி, வீதித் தடைகளை பயன்படுத்தி சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். வன்புணர்வுக்கு உள்ளானதாக கூறப்படும் பாடசாலை மாணவி டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 29 வயதான நோட்டன்பிரிட்ஜ் பகுதியைச் சேர்ந்தவராவார். சந்தேக நபரை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கையில் நாளொன்றுக்கு காயங்களால் 32 பேர் மரணம்..!

இலங்கையின் சுகாதார அதிகாரிகளால் வெளியிடப்பட்டுள்ள தரவுகளின்படி, ஒவ்வொரு நாளும் குறைந்தது 32 பேர் ஏதோ ஒரு காரணத்தினால் காயங்களுக்கு உள்ளாகின்றனர் இதன் காரணமாக, வருடாந்தம் சுமார் 12,000 பேர் உயிரிழக்கின்றனர். இலங்கையில் ஜூலை 01 முதல் 07 வரையில், தேசிய காயம் தடுப்பு வாரம் நினைவுக்கூரப்படுகின்ற நிலையிலேயே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. தகவல்களின்படி காயங்கள் காரணமாக வருடாந்தம் ஒரு மில்லியனுக்கும் அதிகமான இலங்கையர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்றனர். இது சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினரை பாதிக்கும் விடயமாகும். காயங்கள் உயிரிழப்புகளை விளைவிப்பது மட்டுமல்லாமல், குடும்பங்கள் மற்றும் சுகாதார அமைப்பு மீது கணிசமான பொருளாதார சுமையையும் சுமத்துவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில்,  இலங்கையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் 10வது முக்கிய காரணங்களில் காயங்களும் உள்ளடங்கியுள்ளன கடுமையான காயங்கள் அல்லது அவற்றின் சிக்கல்கள் வைத்தியலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளிடையே இறப்பு விகித அதிகரிப்புக்கு கணிசமான பங்கை வகிக்கின்றன என்றும் சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.  

எரிவாயு விலைத் திருத்தம் இன்று அறிவிப்பு!

எரிவாயு விலை திருத்தம் இன்று (02) அறிவிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக சந்தையில் உள்ள எரிவாயு விலைக்கு ஏற்ப இந்த விலை திருத்தம் செய்யப்பட உள்ளதாக அதன் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார். மாதாந்திர எரிவாயு விலை திருத்தத்தின்படி, ஜூன் 4 ஆம் திகதி இறுதியாக எரிவாயு விலை திருத்தம் செய்யப்பட்டது. இதன்போது,12.5 கிலோகிராம் எடையுள்ள வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை 150 ரூபாவால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், அதன் தற்போதைய விலை 3,790 ரூபாவாக உள்ளது. 5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 60 ரூபாவாலும், 2.3 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 28 ரூபாவாலும் குறைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கடலோர ரயில் பாதையின் தண்டவாளத்தில் உடைப்பு..

கடலோர ரயில் பாதையின் தண்டவாளத்தில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால்  ரயில் போக்குவரத்து தடைபட்டுள்ளது. பம்பலப்பிட்டி மற்றும் வெள்ளவத்தை ரயில் நிலையங்களுக்கு இடையிலான பாதையில் தண்டவாளம் உடைந்துள்ளதாக ரயில்வே பிரதி பொது முகாமையாளர்  என்.ஜே.இந்திபொலகே குறிப்பிட்டார். இதனால் கடலோர வழித்தடத்தில் ஒரு தண்டவாளத்தில் மட்டுமே ரயில்கள் இயக்கப்படுவதால் ரயில்கள் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. குறித்த வீதியின் திருத்தப் பணிகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பிரதி பொது முகாமையாளர் குறிப்பிட்டுள்ளார்.

கள்ளக்காதலியை கொலை செய்த நபர் கைது!

பியகம, மல்வான பிரதேசத்தில் வீடொன்றில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொலைச் சம்பவம் சில நாட்களுக்கு முன்னர் இடம்பெற்றுள்ளதுடன், இந்தக் கொலையைச் செய்ததாகச் சந்தேகிக்கப்படும் 32 வயதுடைய நபர் ஒருவர் கொஸ்கொட பொலிஸ் அதிகாரிகளால் நேற்று (01) கைது செய்யப்பட்டுள்ளார். நவந்தகல பிரதேசத்தில் வசிக்கும் 32 வயதுடைய பெண்ணே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் தங்கியிருந்த வாடகை வீடொன்றினுள் அவரது கள்ளக்காதலி கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஸ்கொட மற்றும் பியகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ரயிலில் இருந்து தப்பியோடிய ரயில் சாரதியின் பணி இடைநிறுத்தம்!

சர்ச்சைக்குரிய ரயில் இயந்திர சாரதி பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே தெரிவித்துள்ளது. கொழும்பில் இருந்து கண்டி நோக்கி பயணித்த ரயில் சாரதியின் தவறான நடத்தை காரணமாக திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. நேற்று முற்பகல் 10.40 மணியளவில் கொழும்பில் இருந்து கண்டி நோக்கி புறப்படத் தொடங்கிய ரயிலின் சாரதி அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு சர்ச்சைக்குரிய வகையில் நடந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. கண்டி நகருக்கு அருகில் உள்ள சுடுஹும்பொல என்ற இடத்தில் ரயிலை நிறுத்தி விட்டு ரயிலில் இருந்து தப்பி ஓடிய போது, ​​ரயிலில் இருந்த பயணிகள் அவரை துரத்திச் சென்று பிடித்து, உதவி சாரதியை ஈடுபடுத்தி ரயில் கண்டி ரயில் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர், குடிபோதையில் இருந்த ரயில் சாரதியை ரயில்வே போக்குவரத்து ஆய்வாளர் மூலம் ரயில்வே பாதுகாப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த ரயில் மதியம் 1.40 மணிக்கு கண்டியை  சென்றடைய வேண்டும் என்ற நிலையில்,   மதியம் 2.30 மணிக்கே ரயில் கண்டியை வந்தடைந்ததாக பயணிகள் தெரிவித்தனர்.