அடுத்த ஆட்சி மாற்றத்தோடு மலையகமும் மாற வேண்டும் : மனோ எம்.பி. தெரிவிப்பு
அடுத்து வரும் ஆட்சி மாற்றத்தை அடுத்து, இது ஒட்டு மொத்த பெருந்தோட்டத் துறையிலும் முறை மாற்றமாக பரிணமிக்க வேண்டும். அதற்கான முன் தயாரிப்பு பணிகளில் நாம் இன்று ஈடுபட்டுள்ளோம் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி மார்க் அந்திரேவுக்கும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தலைமையிலான தூதுக்குழுவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (27) கொழும்பில் நடைபெற்றது. இந்தச் சந்திப்பு தொடர்பில் மனோ கணேசன் எம்.பி. ஊடகங்களுக்குக் கருத்துக் கூறியபோது தெரிவித்தாவது, “நுவரெலியா முதல் கொழும்பு அவிசாவளை உட்பட கண்டி, மாத்தளை, பதுளை, மொனராகலை, கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை, காலி, மாத்தறை, குருநாகலை ஆகிய மாவட்டங்களில் பரந்து விரிந்துள்ள பெருந்தோட்ட பிரதேசங்களில், நவீன அடிமைத்துவ அம்சங்களுக்கு மத்தியில், மலையக சமூக குடும்பங்கள் வாழ்கின்றன. இம்மக்களுக்கு பெருந்தோட்ட நிலங்களில், வதி விட காணி உரிமை, வாழ்வாதார காணி உரிமை உள்ளிட்ட உரிமைகளைப் பெற்றுத் தந்து அவர்களை இந்நாட்டின் முழுமையான பிரஜைகளாக்கும் கொள்கையை தமிழ் முற்போக்குக் கூட்டணி முன்னெடுக்கின்றது. இந்த விவகாரங்கள் தொடர்பான உள்நாட்டு அரசியல் சட்டவாக்க நடவடிக்கைளை தமிழ் முற்போக்குக் கூட்டணி மேற்கொள்ளும். அதற்கான பலம் மற்றும் தூரப்பார்வை எம்மிடம் உள்ளது. அடுத்த ஆட்சி மாற்றத்துக்கு உள்ளே சென்று திட்டங்களை வகுப்பதை விட, முன்கூட்டியே முன் தயாரிப்பு நடவடிக்கைகளில் தற்போது நாம் ஈடுபட்டுள்ளோம். இந்த விவகாரம் தொடர்பில் மலையக சிவில் சமூகத்துடனும் நாம் தற்போது கலந்துரையாடுகின்றோம். மக்கள் ஆணை கொண்ட அரசியல் பிரநிதிகளுடன் இணைந்து பணியாற்றக் கூடிய மலையக சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் பற்றியும் நாம் வெகுவிரைவில் சர்வதேச சமூகத்துக்கு அறிவிப்போம். ஐ.நா. நிறுவனங்களான உணவு விவசாய நிறுவனம், யுனிசெப், உலக உணவு நிறுவனம் ஆகியவை ஊடாக எமக்குத் தொழில்நுட்ப, அபிவிருத்தி, ஒத்துழைப்புகளை வழங்க ஐ.நா. முன்வர வேண்டும் என்ற கோரிக்கையையும் நாம் ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி மார்க் அந்திரேயிடம் முன்வைத்துள்ளோம் எமது கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி ஆவன செய்வதாக உறுதி அளித்தார்.” – என்றார். இந்த சந்திப்பில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம். உதயகுமார் மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணி/ஜனநாயக மக்கள் முன்னணியின் கேகாலை மாவட்ட அமைப்பாளர் எம். பரணிதரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
கடன் மறுசீரமைப்புச் செயற்பாட்டில் பல பிரச்சினைகள்! – எதிர்க்கட்சித் தலைவர் தெரிவிப்பு
26 ஆம் திகதி IMF திட்டம் மற்றும் கடன் மறுசீரமைப்புத் திட்டங்கள் குறித்து பல விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டன. கடன் மறுசீரமைப்பு செயல்முறை நாட்டிற்கு நன்மை பயக்கும் என்றால், அதற்கு ஆதரவை வழங்குவோம். என்றாலும் நேற்றைய தினம் வெளிப்படுத்தப்பட்ட விடயங்கள் தொடர்பில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். 2028 வரை கடனை செலுத்துவதற்கு கால அவகாசம் விதிக்கப்பட்டுள்ளது. 2028 முதல் கடன் தவணைகளைச் செலுத்த வேண்டும். இது ஒரு நல்ல விடயம் போல் தெரிந்தாலும், IMF இன் 2023 மார்ச் அறிக்கை கடன் நிலைத்தன்மை பகுப்பாய்வின்படி, நாம் 2033 முதலே கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும். IMF அறிக்கையில் அவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தாலும், இந்த இணக்கப்பாட்டு கலந்துரையாடலினால் 2033 இலக்கை எட்ட முடியாது போயுள்ளது. 2028 ஆம் ஆண்டு முதல் கடன் தவணைகளைச் செலுத்துவதற்கு இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். மேலும், சகல நாடுகளையும் விட நமது நாடு கடன் மறுசீரமைப்புச் செயல்முறையை வேகமாக பூரத்தி செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அது முற்றிலும் தவறான கருத்தாகும். எமது நாட்டின் கடன் மறுசீரமைப்பு செயல்முறை இன்னும் முடிவடையவில்லை. செயல்முறையை முழுமைப்படுத்தாமல் இவ்வாறு பட்ட பொய்யை மக்களிடம் சொல்வது தவறாகும். எம்மை விட வேகமாக தங்கள் கடனை மறுசீரமைப்புச் செயல்முறையை முழுமையாக மறுகட்டமைத்த பல நாடுகள் உள்ளன. கானா போன்ற நாடு முன்னெடுத்த விரிவான கடன் மறுசீரமைப்புத் திட்டத்தின் மூலம் அந்நாட்டின் மொத்த கடனில் 37% குறைப்பை, வெட்டைச் செய்து கொள்ள அ முடிந்துள்ளது. இத்தகைய சூழ்நிலையின் அடிப்படையில் நமது நாட்டில் வட்டி குறைப்புக்கான இணக்கப்பாடு எட்டப்படவில்லை. வட்டியையும் கந்துவட்டியையும் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். ஒரு நாடாக நாம் ஒரு முழுமையான இணக்கப்பாட்டை எட்டவில்லை. சர்வதேச இறையாண்மை பத்திரதாரர்கள் அடங்களாக சர்வதேச வணிக்கடன் தரப்பினரோடு இதுவரை எந்த நிலையான இணக்கப்பாடுகளையும் எட்டவில்லை. இந்த கலந்துரையாடல்கள் ஜூலை 3 ஆம் திகதி வரை தொடர்கிறது. இறுதி இணக்கப்பாடு எட்டப்படாவிட்டால், எமது நாட்டுக்கு எதிராக வழக்குத் தொடரவும் குறித்த தரப்பினர் தயார் நிலையில் உள்ளனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 265 ஆவது கட்டமாக 1,177,000 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், களுத்தறை, புலத்சிங்கல மதுராவல, ரெமுன மகா வித்தியாலத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (27) இடம்பெற்றது. இதன்போது, பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினருக்கு ஒரு இலட்சம் ரூபா நிதியுதவியும் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். கானா நிதி அமைச்சர் தனிப்பட்ட முறையில் சர்வதேச இறையாண்மை பத்திரதாரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதுதான், கானா நாடு எமது நாட்டை விட வேகமாக ஒரு விரிவான ஒப்பந்தத்தில் நுழைந்ததற்கு வழிவகுத்த காரணமாகும். எமது நாட்டின் நிதியமைச்சர் அவ்வாறான கலந்துரையாடலுக்குச் செல்லவில்லை. இதனால் அரசாங்கம் பொய்யுரைத்து வருகிறது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் கடன் சலுகையைப் பெற இந்த கலந்துரையாடல்களில் கவனம் செலுத்தப்பட்டது. கானா மற்றும் சாம்பியா போன்ற நாடுகள் கடன் மறுசீரமைப்புக்கு வெளிநாட்டு வருமானம் மற்றும் பணவனுப்பல்களை அடிப்படைகளாக கொண்டிருந்தன. கானா மற்றும் சாம்பியா வெளிநாட்டு வருவமானம் மற்றும் பணவனுப்பல்களை அடிப்படையாகக் கொண்டு குறித்த பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து இருந்தாலும், ஒரு நாடு என்ற ரீதியில் நாம் இந்த பேச்சுவார்த்தைகளிலும் கலந்துரையாடல்களிலும் தவறிழைத்துள்ளோம். இங்கு பிழை நேர்ந்துள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார். மேலும், சீன அபிவிருத்தி வங்கியுடனும் நாம் கடன் மறுசீரமைப்புச் செயல்பாட்டை மேற்கொள்ள வேண்டும் தான். சாம்பியா மற்றும் ஈக்வடார் ஆகிய நாடுகளுக்கு இந்த வங்கி இருதரப்பு கடன்களையே வழங்கியிருந்தாலும், எமது நாட்டுக்கு வணிகக் கடனாகவே வழங்கியுள்ளது. இங்கும் பல பிரச்சினைகள் எழுகின்றன. சமத்துவ அடிப்படையில் சர்வதேச இறையாண்மை பத்திரதாரர்களுடன் இணக்கப்பாட்டுக்கு வருவமாறு இருதரப்பு கடன் வழங்குநர்களின் ஒரு தரப்பான பாரிஸ் கிளப் அறிவிப்பை விடுத்துள்ளது. இது தொடர்பில் அரசாங்கம் மேற்கொள்ளும் நடைமுறைகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் இங்கு கேள்வி எழுப்பினார். எக்ஸிம் வங்கி, எமது நாட்டில் உள்ள அரச முயற்சியாண்மைகளுக்கு கடன் வழங்கியுள்ளது. நீர் வழங்கல் மற்றும் தாமரை கோபுரம் நிர்மாணிப்பதற்கு இந்த கடன் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்த எந்த வெளிக்கொணர்வும் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை. தற்போது ஸ்ரீலங்கன் விமான சேவையின் 179 மில்லியன் டொலர் பிணைமுறி பத்திரங்களுக்கான காலக்கேடு முடிவடையவுள்ளது. இந்த பத்திரதாரர்கள் கடன் வெட்டுக்கு உடன்பாடில்லை. இவர்கள் வழக்கு தொடரவும் தயாராகி வருகின்றனர். இந்த பிணைமுறி பத்திரங்களின் காலக்கேடு முடிவடையும் திகதி நெருங்கி வருவதால், இது குறித்து அரசாங்கம் எடுக்கும் கொள்கை நிலைப்பாடு என்ன? என்றும், அந்த கொள்கை நிலைப்பாட்டை நாட்டு மக்கள் தெரிந்து கொள்வது அவசியம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். இதுபோன்ற பல சிக்கல்களும், பிரச்சினைகளும் இருக்கின்றன. இது குறித்த சரியான தகவல்கள் வெளிப்படுத்தப்படவில்லை. இந்தத் தகவல்கள் தொடர்பில் அறிவியல் பூர்வமாக பகுப்பாய்வுகளை செய்து, நாட்டுக்கு ஏற்படும் நன்மை தீமைகள் குறித்த உண்மைகளை மக்களிடம் முன்வைக்க தயார் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் சுட்டிக்காட்டினார். ஆசிரியர்கள், அதிபர்கள் மீது அரசாங்கம் மேற்கொண்ட மிலேச்சத்தனமான தாக்குதலைக் வண்மையாக கண்டிக்கிறேன், எமது நாட்டின் கல்வித்துறையில் சேவையாற்றி வரும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தங்களது உரிமைகளுக்கான முன்மொழிவுகளை சமர்ப்பிக்க அவர்களுக்கு இருக்கும் ஜனநாயக உரிமையைப் பயன்படுத்தியுள்ளனர். அது அவர்களின் உரிமை என்றாலும், அவர்கள் முன்னெடுத்து வந்த போராட்டத்துக்கு மிலேச்சத்தனமாக அரசாங்கம் மிகவும் அடக்குமுறைத்தனமாக நடந்து கொண்டதை வன்மையாகக் கண்டிக்கிறேன். கல்வித் துறையில் 7 பகுதியினர் உள்ளனர். சகல அரசியல்வாதியும் கல்வி குறித்து பேசுகின்றனர். கல்வியில் மனித வளத்துக்கு ஏற்ற சூழலை உருவாக்கி, அவர்களினது சுய திருப்தியை மேம்படுத்தும் பயணத்தை மேற்கொண்டால் தான் கல்வியில் குறிப்பிட்ட முன்னேற்றத்தை அடைய முடியும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். இந்நாட்டிலுள்ள 10,096 பாடசாலைகளில் 41 இலட்சம் பிள்ளைகளுக்கு கல்வி கற்பிக்கும், அவர்களை புத்திஜீவிகளாகவும் மாற்றுவதில் முக்கிய பங்காற்றுகின்ற இந்த ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் இவ்வாறு தாக்கப்பட்டமைக்கு வருந்துகிறேன். ஆசிரியர்கள் எப்பொழுதும் தங்கள் மாணவச் செல்வங்களுக்கு சிறந்த எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்த்தே செயற்பட்டு வருகின்றனர். சிறப்புச் சலுகைகள் ஏதும் பெறாமல் மாலை வேளையில் கூட, பாடசாலைகளில் மேலதிக வகுப்புகளை நடத்தி மாணவர்களை பரீட்சைகளில் தேர்ச்சியடையச் செய்வதில் பெரும் பங்காற்றி வருகின்றனர். அவர்களின் முன்மொழிவுகளை முன்வைக்க அவர்களுக்கு வாய்ப்பளிக்காமல், மிலேச்சத்தனமாகவும், காட்டுமிராண்டித்தனமான முறையிலும் தாக்கப்பட்டதற்கு எனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.
கொழும்பு மாவட்டபிரதேச செயலாளர்களுக்கு அறிவுறுத்தல்!
கொழும்பு மாவட்டத்தில் வெள்ளம் ஏற்பட்டதற்கான காரணங்களை ஆராய்ந்து அனைத்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளையும் உள்ளடக்கிய வகையில் அறிக்கை கோருமாறும், அந்த அறிக்கைகளின் அடிப்படையில் ஆரம்ப அறிக்கையை தயாரித்து இரண்டு வாரங்களுக்குள் ஜனாதிபதி அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறும், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க கொழும்பு மாவட்டத்தின் பிரதேச செயலாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கினார். அதன் பிரகாரம், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் தலைவர்களுடன் கலந்துரையாடி இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்குத் தேவையான திட்டங்களை உடனடியாகத் தயாரிக்க நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்தார். மோசமான காலநிலை காரணமாக கொழும்பு மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ள நிலைமைக்கான காரணங்களைக் கண்டறிந்து அதற்குத் தீர்வுகாண்பதற்காக துறைசார் நிறுவனங்களின் தலைவர்களுடன் 26 ஆம் திகதி பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே சாகல ரத்நாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார். கொழும்பு மாவட்டத்தில் வெள்ளத்தினால் சேதமடைந்த பகுதிகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் குறித்த பிரதேச அரசியல் பிரதிநிதிகள் நேரில் சென்று அவதானித்ததாகவும், இயற்கை காரணங்களைப் போன்று, ஒழுங்கற்ற மனித செயற்பாடுகளும் வெள்ள நிலைமை ஏற்படக் காரணமாக உள்ளமை இனங்காணப்பட்டுள்ளதாகவும் சாகல ரத்நாயக்க மேலும் தெரிவித்தார். அதன்படி, எதிர்காலத்தில் மீண்டும் இதுபோன்ற வெள்ள நிலைமை ஏற்படாமல் தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக குறுகிய கால, இடைக்கால மற்றும் நீண்ட கால வேலைத்திட்டங்களை விரைவாக தயாரிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார். பாராளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி. தொலவத்த, நீர் வழங்கல் அமைச்சின் செயலாளர் ஏ.சி.எம். நபீல், துறைசார் நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் கொழும்பு மாவட்டத்தில் வெள்ள நிலைமையை எதிர்கொண்ட பிரதேசவாசிகள் சிலரும் இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.
காலநிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு
நாட்டின் காலநிலை மாற்றம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேலும் அனுராதபுரம்,மட்டக்களப்பு,யாழ்ப்பாணம்,திருகோணமலை மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் பிரதானமாக சீரான வானிலை காணப்படும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.