அலரிமாளிகைக்கு மேலாக பறந்த ஆளில்லா விமானம்?: இரு இந்திய நாட்டவர்கள் கைது..
பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரிமாளிகைக்கு மேலாக ஆளில்லா விமானம் போன்ற ஒரு பொருளை அனுப்பிய குற்றச்சாட்டில் இரண்டு இந்திய பிரஜைகளை பொலிஸார் கைது செய்துள்ளனர். எனினும், குறித்த பொருள் ஆளில்லா விமானம் அல்ல எனவும், அது பறக்கும் வகையிலான பந்து போன்ற பொம்மை எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள பொலிஸார்; “இதுவரை எந்த பாதிப்பான விடயங்களும் அடையாளம் காணப்படவில்லை. அது ஆளில்லா விமானம் அல்ல, மாறாக பறக்கும் வகையான பந்துப் போன்ற பொம்மையாகும்” எவ்வாறாயினும், விசாரணைகள் தொடர்வதால் இரு நபர்களும் காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இச்சம்பவம் குறித்த சமூக ஊடகங்களில் பரவலாக தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. இது ஒரு பாதுகாப்பு பிரச்சினையாக இருப்பதாக பலர் கருதுவதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர். நிலைமை எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாது என்றும், வேறுவிதமாகக் கூறப்படும் ஊடக அறிக்கைகள் தவறானவை என்றும் பொலிஸ் வட்டாரம் மீண்டும் வலியுறுத்தியது. எவ்வாறாயினும், சம்பவம் தொடர்பாக குறித்து பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் பொருளாதாரத்துக்கு தொடர்ந்தும் ஆதரவளிக்கப்படும் : உறுதியளித்த இந்தியா
இலங்கையின் (Sri Lanka) முக்கிய பொருளாதார துறைகளில் நீண்டகால முதலீடுகளை ஊக்குவித்தல் உட்பட அந்த நாட்டின் பொருளாதார மீட்சிக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக இந்தியா (India) கூறியுள்ளது. இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இருதரப்பு உடன்படிக்கைகள் எட்டப்பட்ட நிலையில் அந்த ஆதரவை இந்திய அரசாங்கம் அறிக்கை ஒன்றின் மூலம் வெளிப்படுத்தியுள்ளது. இந்த மைல்கல், இலங்கை தனது பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதிலும் சீர்திருத்தம் மற்றும் வளர்ச்சியை நோக்கி நகர்வதிலும் அடைந்துள்ள வலுவான முன்னேற்றத்தை எடுத்துக்காட்டுகிறது என்று இந்திய அரசாங்கம் கூறியுள்ளது. உத்தியோகபூர்வ கடனளிப்பவர்கள் குழுவான OCC (Official Creditor Committee ) இன் இணைத் தலைவர்களில் ஒருவராக, பிரான்ஸ் மற்றும் ஜப்பானுடன் இணைந்து, இலங்கைப் பொருளாதாரத்தின் ஸ்திரப்படுத்தல், மீட்சி மற்றும் வளர்ச்சிக்கான அர்ப்பணிப்பில், தாம் உறுதியாக இருப்பதாகவும் இந்திய அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. நெருக்கடியான சூழ்நிலையில், இலங்கைக்கு 4 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்கியதன் மூலமும் இது நிரூபிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சர்வதேச நாணய நிதியத்திற்கு நிதியளிப்பு உத்தரவாதங்களை வழங்கிய முதல் கடனளிக்கும் நாடு இந்தியாவாகும். இதுவே, சர்வதேச நாணய நிதியத்திட்டத்தைப் பாதுகாக்க இலங்கைக்கு வழி வகுத்தது என்றும் இந்திய அரசாங்கம் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அரச ஊழியர்களுக்கு நிதி இராஜாங்க அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
அனைத்து அரச உத்தியோகத்தர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கும் முழுமைக்கும் தீர்வை வழங்குவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். தேர்தல் காலங்களில் கோரிக்கையை வென்றெடுக்கும் சூழல் உருவாகும் என்பதை தொழிற்சங்கங்கள் நன்கு அறிந்திருப்பதால், ஒரு குழுவினர் இதனை ஒரு வாய்ப்பாக பயன்படுத்த முயல்வதாக நிதி இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டி உள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஒவ்வொரு துறையிலும் அரச உத்தியோகத்தர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்காக முறையான முறைமை பின்பற்றப்படுவதாகவும் அதற்காக நியமிக்கப்பட்ட குழுவினால் நியாயமான பதில் வழங்கப்படும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். இதற்கெல்லாம் தீர்வு காண நியமிக்கப்பட்டுள்ள சக்தி வாய்ந்த குழு மூலம் நியாயமான தீர்வு கிடைக்கும் என உறுதியளித்துள்ளார். சுமார் நான்கு வருடங்களாக தொழில்சார் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக மக்களின் உயிரைக் காப்பாற்றும் போராட்டத்தையே அரசாங்கம் எதிர்கொள்ள நேரிட்டுள்ளது. இதன் காரணமாக அரசாங்க ஊழியர்களின் தொழில் வாழ்க்கையில் நியாயமான பிரச்சினைகள் இருப்பதை அரசாங்கம் ஏற்றுக்கொள்வதாகவும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இதேவேளை, அனைத்து சம்பள முரண்பாடுகளையும் நீக்கி சம்பள அதிகரிப்பு மற்றும் ஏனைய கொடுப்பனவுகளுக்கான தீர்வுகளை வழங்குவதற்கு அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் நிபுணர் குழுவொன்றை அதிபர் நியமித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும், ஊடகத்துறை அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். சில சம்பள அதிகரிப்பு மற்றும் சம்பள முரண்பாடுகள் தொடர்பில் இந்த வரவு செலவுத் திட்டத்தில் தீர்வு காணப்படவில்லை என்பதை நினைவுகூர்ந்த அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் அதிபர் இந்த நிபுணர் குழுவை நியமித்ததாக வலியுறுத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது நாளாக ஹட்டன் பாடசாலைகளின் கல்வி செயற்பாடுகள் ஸ்தம்பிதம்…!
ஹட்டன் வலய கல்வி திணைக்கள கோட்டம் மூன்றில் உள்ள 45 பாடசாலைகளில் கற்பித்தல் நடவடிக்கைகள் இரண்டாவது நாளாக முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளது. இன்று 26ம் , 27ம் திகதிகளில் கோட்டம் மூன்றில் கற்பிக்கும் சுமார் 360 க்கு மேற்பட்ட ஆசிரியர்கள் சுகயீன விடுமுறையில் பணி பகிஸ்கரிப்பு காரணமாக 30,000 மேற்பட்ட மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளது. கோட்டம் மூன்றில் உயர் தர பாடசாலைகள் 6ம், சாதாரண தர பாடசாலைகள் 15ம், கீழ் பிரிவு பாடசாலைகள் 24ம் காணப்படுகின்றது. இன்று இப் பாடசாலைகளுக்கு ஒரு சில மாணவர்கள் மாத்திரமே வருகை தந்து மீண்டும் தமது இல்லங்களுக்கு திரும்பியதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் மாணவர்கள் கருத்து தெரிவிக்கையில், இரண்டு நாட்களாக கொட்டும் மழையில் பள்ளி படிப்பை மேற்கொள்ள முடியாதுள்ளது. ஆசியர்கள் சுகயீன விடுமுறை போராட்டம் நடத்தி மாணவர்களின் எதிர்காலத்தை வீணடிக்க வேண்டாம். எந்த பிரச்சனையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள வேண்டும். வருடத்தில் பல மாதங்கள் விடுமுறை பெரும் ஆசிரியர்கள் மாணவர்கள் கல்வி நடவடிக்கை பாதிப்பு ஏற்படும் வகையில் இவ்வாறு நடந்து கொள்ள கூடாது. ஆசிரியர்கள் தற்போது உள்ள மாணவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ வேண்டும். ஆகையால், தொடர்ந்து போராட்டம் இல்லாமல் அரசாங்கத்தின் உயர் மட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என கேட்டுக் கொண்டார்கள்.
ஜனாதிபதியின் விசேட உரையை பட்டாசு கொளுத்தி, பாற்சோறு பரிமாறி கொண்டாடிய ஐ.தே.க.?
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்றைய தினம் இரவு நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றியிருந்த நிலையில் நாட்டின் வெவ்வேறு இடங்களில் பட்டாசு கொளுத்தப்பட்டு கொண்டாடப்பட்டதாக தெரியவருகின்றது. ஜனாதிபதியின் உரையை வரவேற்று இவ்வாறு பட்டாசு கொளுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. பண்டாரகம, மாலம்பே மற்றும் காலி போன்ற இடங்களில் அதிகளவில் பட்டாசு கொளுத்தப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதார நிலைமைகள், வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி தகவல் வெளியிட்டிருந்தார். இந்த உரையின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் இவ்வாறு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ரவி கருணாநாயக்க உள்ளிட்டவர்கள் பாற்சோறு பரிமாறி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையின் ஆறு மாவட்டங்கள் அபாயத்தில்..! – நோய் பரவல் தொடர்பில் எச்சரிக்கை
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக டெங்கு நோய் பரவக்கூடிய அபாயம் அதிகரித்துள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. மேல் மாகாணத்தில் கம்பஹா, கொழும்பு ஆகிய மாவட்டங்களிலிருந்து அதிகளவான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. அதன்படி, கம்பஹா, களுத்துறை, கண்டி, இரத்தினபுரி, குருநாகல், காலி ஆகிய மாவட்டங்கள் டெங்கு நோய் அபாயமிக்க மாவட்டங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இதனால், பொதுமக்கள் அனைவரும் தங்களது சுற்றுச்சூழலைச் சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்குமாறு தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
சாதாரண தர பரீட்சையின் இரண்டாம் கட்ட மதிப்பீடு தொடர்பில் வெளியான அறிவிப்பு..!
கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் இரண்டாம் கட்ட மதிப்பீட்டு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படமாட்டாது என பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இன்று ஆரம்பிக்கவிருந்த குறித்த பரீட்சையின் இரண்டாம் கட்ட மதிப்பீட்டு நடவடிக்கைகள் தவிர்க்க முடியாத காரணத்தினால் ஆரம்பிக்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை சாதாரண தர பரீட்சையின் இரண்டாம் கட்ட மதிப்பீட்டு நடவடிக்கைகள் நாளை (28) ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை எனும் குழந்தையை ஆபத்தான தொங்கு பாலத்திலிருந்து பாதுகாப்பாக அழைத்து வந்துள்ளேன் – ஜனாதிபதி ரணில் விசேட உரை
ஆபத்தான தொங்கு பாலத்திலிருந்து இலங்கைத் தாய்த் திருநாடு எனும் குழந்தையைப் பாதுகாப்பாக அழைத்து வந்துள்ளேன் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். “இலங்கையின் பிரதான உத்தியோகபூர்வ இருதரப்பு கடன் வழங்குநர்களுடன் இன்று (நேற்று) கடன் மறுசீரமைப்பு பேச்சுகளை நிறைவு செய்து உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவுடன் இறுதி உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. சீனாவின் எக்ஸிம் வங்கியுடன் இன்று (நேற்று) பீஜிங்கில் இறுதி உடன்பாடு எட்டப்பட்டதோடு அது அதற்கான முறையான நடைமுறைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.” – என்றும் அவர் குறிப்பிட்டார். நாட்டை நேசிக்கும் அனைவருக்கும் இது நற்செய்தி என்று தெரிவித்த ஜனாதிபதி, சிலர் ஜனாதிபதிப் பதவிக்காகக் கடுமையாகப் பாடுபடும் நிலையில் தான் நாட்டுக்காகப் பாடுபட்டு வருகின்றார் என்றும் அவர் தெரிவித்தார். அவர்கள் தமக்குக் கிடைக்கும் பதவிகளைப் பற்றிக் கனவு காணும்போது, தான் நாட்டின் அபிவிருத்தியைப் பற்றிக் கனவு காண்கின்றார் என்றும் அவர் கூறினார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றும்போதே மேற்படி விடயங்களைக் குறிப்பிட்டார். அன்று மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியின் பிரகாரம் இலங்கைத் தாயை ஆபத்தான தொங்கு பாலத்தின் ஊடாக கொண்டு வர முடிந்தது என்று தெரிவித்த ஜனாதிபதி, ஹுனுவட்டயே நாடகத்தில் வருவதைப் போன்று கடினமான நிலைமையில் குழந்தையைப் பாதுகாப்பதற்கு அஞ்சி எந்த ஆதரவையும் வழங்காத தரப்பினர், குழந்தை தொங்கு பாலத்தைக் கடக்கும் முன்பே குழந்தையின் உரிமையைக் கேட்டு போராடுகின்றனர் என்றும் சுட்டிக்காட்டினார். கடனைச் செலுத்த முடியாமல் வங்குரோத்தான நாடென்று முத்திரை குத்தப்பட்ட ஒரு நாடு இரண்டு வருடங்களில் இந்தளவு முன்னேற்றத்தைப் பெற முடிந்திருப்பது வெற்றி என்றும், அண்மைய வரலாற்றில் பொருளாதார படுகுழியில் விழுந்த உலகின் எந்த நாடும் இவ்வளவு குறுகிய காலத்தில் இவ்வாறான நிலையை அடைந்ததில்லை என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். “நாடு எதிர்நோக்கும் சவால்களை உண்மையாகப் புரிந்துகொண்டு அவருக்கு நடைமுறைத் தீர்வுகளை வழங்கி, முடிவுகளைக் காட்டிய என்னுடன் சேர்ந்து நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வீர்களா? இல்லையேல் இன்னும் பிரச்சினையைப் புரிந்து கொள்ளாத மற்றும் அதிகாரத்துக்காக இருட்டில் தடவிக் கொண்டிருக்கும் குழுக்களுடன் இணைவதா என்பதை நாட்டு மக்கள் தீர்மானிக்க வேண்டும்.” – என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். தவறான பாதையில் செல்வதால் ஏற்படும் ஆபத்துக்களை அனைவரும் அறிந்துவைத்துள்ளதால், அது தொடர்பில் தீர்மானத்தை எடுப்பதற்கு மக்களுக்கு முழு உரிமையும் சுதந்திரமும் இருக்கின்றது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். மக்கள் எடுக்கும் தீர்மானம் ரணில் விக்கிரமசிங்கவின் எதிர்காலத்தை தீர்மானிக்காது என்றும், அது நாடு மற்றும் எதிர்கால குழந்தைகளின் எதிர்காலத்தையே தீர்மானிக்கும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். வங்குரோத்து அடைந்து நாட்டின் பொருளாதாரம் படுகுழியில் வீழ்ந்திருந்த நாட்டை மீட்பதற்கு தனது கட்சிக்கு நாடாளுமன்ற அதிகாரம் இருக்கவில்லை என்றும், தன்னால் நியமிக்கப்பட்ட அரச அதிகாரிகளோ தான் நியமித்த அமைச்சரவையோ இருக்கவில்லை என்றும் குறிப்பிட்ட ஜனாதிபதி, அவை எதுவும் இன்றி உலகையே ஆச்சரியப்படுத்தும் விதத்தில் இரண்டு வருடங்களில் நிலையான நாட்டை கட்டியெழுப்ப தன்னால் முடிந்தது என்றும் குறிப்பிட்டார். ஜனாதிபதி ஆற்றிய முழுமையான உரை வருமாறு:- “நமது நாட்டின் அண்மைய வரலாற்றில் இன்று மிக முக்கியமான நாள். இந்நாள் ஒரு தனித்துவமான மைல்கல். கடந்த காலத்தில் நாம் பாடுபட்ட பணிகளுக்கான நல்ல பலன்கள் தற்போது நமது நாட்டுக்குக் கிடைத்துள்ளன. இன்று முற்பகல் பெரிஸ் நகரில் இலங்கையின் உத்தியோகபூர்வ இருதரப்பு கடன் வழங்குநர்களுடன் கடன் மறுசீரமைப்பு குறித்த பேச்சுவார்த்தைகள் நிறைவு செய்யப்பட்டு, கடன் வழங்குநர்களுடன் இறுதி இணக்கப்பாட்டை எட்ட முடிந்தது. அதேபோல் சீனாவின் எக்ஸிம் வங்கியுடன் இன்று நாம் பீஜிங் நகரில் இறுதி இணக்கப்பாட்டினை எட்டினோம். அதற்கு அமைவான உரிய செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நாட்டை உண்மையிலேயே நேசிப்பவர்களுக்கு இது ஒரு நற்செய்தியாகும். இருதரப்பு கடன் வழங்குநர்களுடன் இவ்வகையான இணக்கப்பாட்டை எட்டுவதற்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக நாங்கள் கடுமையாக உழைத்து வந்தோம். விரிவாக பேச்சுவார்த்தை நடத்தினோம். கடந்த காலத்தில் நாம் பெற்ற பொருளாதார வெற்றிகள் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் எமக்குப் பெரும் பலமாக இருந்தது. இந்த பேச்சுவார்த்தைகள் வெற்றியடைய, எமது கடன் வழங்குநர்களான சீனா மற்றும் சீன எக்ஸிம் வங்கி, உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவில் இணைத்தலைமை வகிக்கும் இந்தியா, ஜப்பான், பிரான்ஸ் ஆகிய நாடுகளும் அந்தக் குழுவின் மற்ற உறுப்பினர்களும், பெரிஸ் கழகத்தின் செயலகமும் எமக்கு வழங்கிய ஆதரவுக்கு நான் நன்றி கூறுகிறேன். இந்தப் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்ட இலங்கை மற்றும் ஏனைய நாடுகளின் பிரதிநிதிகளுக்கும், எமக்கு ஆலோசனை வழங்கிய லஸார்ட் மற்றும் கிளிபோர்ட் சான்ஸ் )அதிகாரிகளுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் . இந்த ஒப்பந்தங்களின் மூலம், வெளிநாடுகளில் உள்ள அனைத்து இருதரப்பு கடன் தவணைகளையும் 2028 ஆம் ஆண்டுவரை ஒத்திவைக்க முடியும். அதன்பிறகு, சலுகை நிபந்தனைகள் அடிப்படையில் அனைத்து கடன்களையும் செலுத்த 2043 வரை நீண்டகால அவகாசம் கிடைக்கும். 2023 ஆம் ஆண்டில் நாம் உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பை நிறைவு செய்துள்ளோம்.இப்போது வெளிநாடுகளின் இருதரப்புக் கடன் மறுசீரமைப்பை வெற்றிகரமாக நிறைவுசெய்ய முடிந்தது. அடுத்ததாக வெளிநாட்டு பிணைமுறி உரிமையாளர்களை உள்ளடக்கிய வணிகக் கடன் வழங்குநர்களுடன் ஒரு உடன்பாட்டை எட்ட வேண்டும். இந்தப் பாதையில் தொடர்ந்து செல்வதன் மூலம், அதற்கான இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ள முடியும். அது தொடர்பான பேச்சுவார்த்தைகளை நாம் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகிறோம். இன்று நாம் எட்டியுள்ள இணக்கப்பாடுகளால், நமது பொருளாதாரத்திற்கு சுவாசிக்க அவகாசம் கிடைக்கிறது. 2022ஆம்ஆண்டில்,மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9.2வீதத்தினை, வெளிநாட்டுக் கடனை செலுத்துவதற்கு செலவிட வேண்டியிருந்தது.2027 முதல் 2032 வரையான இடைப்பட்ட காலத்தில் கடன் செலுத்துவதற்காக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.5மூ இற்கும் குறைவான தொகையையே ஒதுக்குவதற்கான வாய்ப்பு கிட்டியுள்ளது. 2022 இல் அரசாங்கத்தின் வருடாந்த நிதித் தேவை, மொத்த தேசிய உற்பத்தியில் 34.6 சத வீதமாகும் . இந்த இணக்கப்பாடுகள் காரணமாக 2027-2032 வரையான காலப்பகுதியில் அந்த நிதித் தேவை 13 சதவீதத்தை விடக் குறையும். 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், இலங்கை கடன் செலுத்த முடியாத நாடு என்று உத்தியோக பூர்வமாக அறிவித்தது.அந்த அறிவிப்பைத் தொடர்ந்து உலக நாடுகள் எங்களுடனான கொடுக்கல் வாங்கல்களை நிறுத்திவிட்டன. வங்குரோத்து அடைந்த நாட்டுடன் நிதி உறவுகளைப் பேணுவதற்கு எந்தவொரு நாடும் முன்வராது, கடன்களை வழங்காது. குறைந்தபட்சம் கடன் பத்திரங்களைக்கூட ஏற்றுக்கொள்ளாது. இந்தப் பின்னணியில் வெளிநாட்டுக் கடன் உதவியோடு நம் நாட்டில் செயற்படுத்தப்பட்ட திட்டங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. அந்த நாடுகள், தங்கள் திட்ட அலுவலகங்களை மூடிவிட்டு தத்தமது நாடுகளுக்குச் சென்றன. அபிவிருத்திப் பணிகள் முற்றிலும் முடங்கின. ஆனால் இப்போது கடன் மறுசீரமைப்புப் பணியின் முக்கியமான கட்டத்தை வெற்றிகரமாக முடித்துள்ளதால், வெளிநாட்டு நிதியைப் பயன்படுத்தி முன்னெடுத்த அனைத்து திட்டங்களையும் மீண்டும் தொடங்க அந்தந்த நாடுகளுக்கு சட்டபூர்வ வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. கட்டுநாயக்க விமான நிலைய அபிவிருத்தி, இலகு ரயில் பாதை, அதிவேக நெடுஞ்சாலை உள்ளிட்ட பல திட்டங்கள் மீண்டும் ஆரம்பிக்கப்படும். அது மாத்திரமன்றி பல புதிய அபிவிருத்தித் திட்டங்களை எமக்குப் பெற்றுக்கொள்ள முடியும். இருதரப்பு கடன் வழங்குநர்கள் எங்களுடன் ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதால், நமது நாட்டின் மீதான சர்வதேச நம்பிக்கை மேலும் அதிகரித்து வருகிறது. இது ஒரு வகையான சர்வதேச அங்கீகாரமாகும். எமது கடன் பத்திரத்தைக்கூட ஏற்றுக்கொள்ளாத சர்வதேச சமூகம் தற்போது எமக்கு நம்பிக்கைச் சான்றிதழை வழங்கும் நிலைக்கு வந்துள்ளது. எனவே இன்று நாம் இணக்கப்பாட்டிற்கு வந்த இந்த இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளோம். இந்த உடன்படிக்கைகளை பிரதமர் அவர்கள், ஜூலை 2ஆம் திகதி நடைபெறும் விசேட நாடாளுமன்ற அமர்வில் நாடாளுமன்ற அங்கீகாரத்துக்காகச் சமர்ப்பிப்பார். நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாட்டை நேசிக்கும் அனைத்துத் தரப்பினரையும் அந்த ஒப்பந்தங்களை அங்கீகரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நாம் இதுவரை எளிதான பயணத்தை கடந்துவரவில்லை. கடந்த காலங்களில் நாம் மிகக் கடினமான, கஷ்டமான பாதையைக் கடந்துவந்தோம். இந்தப் பணிக்காக நமது அமைச்சர்களும், அதிகாரிகளும் கடுமையாக உழைத்தனர். நமது நாட்டின் பெரும்பான்மையான மக்கள் பொறுமையுடன் எங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கினர். நாங்கள் அனைவரும் வெவ்வேறு சிரமங்களையும், கஷ்டங்களையும் எதிர்கொண்டோம். இன்னமும் எதிர்கொள்கின்றோம். இந்த முன்னேற்றத்தை சீர்குலைக்க சிலர் முயன்றனர், இன்னும் முயல்கின்றனர். ஆனால் அவர்களால் இந்தப் பயணத்தை நிறுத்த முடியவில்லை. இவர்கள் எதிர்காலத்தில் ஒருநாள், நாட்டைக் காட்டிக் கொடுத்தமைக்காக, தங்களின் பிள்ளைகளின் முன்னால் வெட்கப்பட நேரிடும். பொருளாதாரம் வலுப்பெறும் போதெல்லாம், நாம் சலுகைகளை வழங்கினோம். பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அந்தச் சலுகைகள் வழங்கப்பட்டன. எதிர்காலத்திலும் அந்நிலைமை தொடரும். சரியான பாதையில் பயணித்தால், பொருளாதாரம் வலுப்பெறும்போது, தற்போதைய கஸ்டங்களை படிப்படியாகக் குறைத்துக் கொள்ளலாம். வேலை நிறுத்தங்களாலும், அச்சுறுத்தல்களாலும் இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து பொருளாதாரத்தை வலுப்படுத்துவதன் மூலம், எங்களுக்கு தீர்வுகளும், நிவாரணங்களும் கிடைக்கும். இரண்டு வருடங்களுக்கு முன்னர் நாட்டைப் பொறுப்பேற்றபோது, நாங்கள் மிகவும் கடினமான பாதையில் செல்ல வேண்டியிருக்கும் என்பதை நான் சுட்டிக்காட்டினேன். இந்தப் பிரச்சினைகளை ஒரு வாரத்தில், இரண்டு, மூன்று, நான்கு மாதங்களில் அல்லது ஒரு வருடத்தில் தீர்க்க முடியாது என்றும் குறிப்பிட்டிருந்தேன். ‘ஹுனுவட்டயே’ நாடகத்தை மேற்கோள்காட்டி, அடிவாரம் தெரியாத, பயங்கரமான பாதாளத்தின் மேலாக அமைக்கப்பட்ட தொங்கு பாலத்தை நாம் கடக்க நேரிடும் என்பதை வலியுறுத்தினேன். அப்போது நம் நாட்டின் பொருளாதாரம் பாதாளத்தில் இருந்தது. அதிலிருந்து நாட்டைக் காப்பாற்ற பலர் முன்வரத் தயங்கினர், பயந்தனர். ‘செய்யாத சிகிச்சைக்கு சிறு-தேன் ஔடதம் தேடுவதைப் போல’ ஒவ்வொரு காரணங்களைக் கூறி தப்பிக் கொள்ள முயன்றனர்.முழு ஆட்சி அதிகாரத்தையும் கொடுத்தால் நாட்டைப் பொறுப்பேற்பதாக ஒரு தரப்பு கூறியது. அமைச்சரவைக்கு தங்களுடைய ஆட்களை நியமிக்க அனுமதித்தால் பொறுப்பை ஏற்றுக் கொள்வதாக மற்றொரு குழுவினர் தெரிவித்தனர். இன்னும் சிலர் ஜனாதிபதி பதவியை வழங்கினால் ஏற்றுக் கொள்வதாகக் கூறினர். ஆனால் எந்த நிபந்தனையும் இல்லாமல் இந்த சவாலை நான் ஏற்றுக்கொண்டேன். பொருளாதாரப் படுகுழியில் இருந்து நம் நாட்டையும், நம் நாட்டு மக்களையும் காப்பாற்றும் வலிமை எனக்கு இருந்தது. என்னிடம் வேலைத்திட்டம் இருந்தது. இதுபோன்ற சூழ்நிலைகளில் இருந்து நாடுகள் வெளிவருவதற்கான வழிகளைப் பற்றிய புரிதலும் அனுபவமும் எனக்கு இருந்தது. திட்டமிட்ட கொள்கைகள் மற்றும் அர்ப்பணிப்புடன் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. அதற்காக
இறுதிப் போட்டிக்குள் நுழைந்த தென்னாபிரிக்க அணி!
2024 இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதல் அணியாக தென்னாபிரிக்க அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. இன்று ஆப்கானிஸ்தான் அணியுடன் இடம்பெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில் தென்னாபிரிக்க அணி வெற்றிப்பெற்று இந்த தகுதியை பெற்றுள்ளது. Taroubaயில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அந்த அணி 11.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 56 ஓட்டங்களையே பெற்றது. அந்த அணி சார்பில் அனைத்து வீரர்களும் 10 ஓட்டங்களுக்குள் ஆட்டமிழந்தனர். பந்து வீச்சில் தென்னாபிரிக்க அணி சார்பில் Marco Jansen மற்றும் Tabraiz Shamsi தலா 03 விக்கெட்டுக்களை வீழ்த்தினர். இதன்படி வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 8.5 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. அந்த அணி சார்பில் துடுப்பாட்டத்தில் Reeza Hendricks 29 ஓட்டங்களையும், அணித் தலைவர் Aiden Markram 23 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தனர்.
இன்று பல்வேறு தரப்பினரும் பணிப்புறக்கணிப்பில்….
சுகயீன விடுமுறையை அறிவித்து இன்று (27) நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு ஆசிரியர் – அதிபர் சங்கங்கள் தீர்மானித்துள்ளன. கொழும்பில் இடம்பெற்ற போராட்டத்தின் மீது பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட கண்ணீர்ப் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (26) ஆசிரியர் – அதிபர்கள் சுகயீன விடுமுறையை அறிவித்து பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டதுடன், இதன் காரணமாக நாடளாவிய ரீதியில் பல பாடசாலைகளில் கற்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. பல பாடசாலைகளில் மாணவர்களின் வருகை மிகவும் குறைவாக காணப்படுவதாகவும், பாடசாலைகளுக்கு வந்த சில மாணவர்கள் பாடசாலைகளுக்குள் நுழைய முடியாமல் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டதாகவும் “அத தெரண” செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். எவ்வாறாயினும், அனைத்து அரச பாடசாலைகளும் இன்று (27) வழமைப் போன்று நடைபெறும் என கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இன்று ஆரம்பமாகவிருந்த கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் இரண்டாம் கட்டப் மதிப்பீடு தவிர்க்க முடியாத காரணங்களால் மேற்கொள்ளப்படாது என பரீட்சைகள் ஆணையாளர் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இதன்படி, இரண்டாம் கட்ட மதிப்பீட்டு நடவடிக்கைகள் நாளை (28) முதல் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் அறிவிப்பொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார். இதேவேளை, இன்றும் நாளையும் நாடு தழுவிய பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஒன்றிணைந்த கிராம அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. தமது பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை தொழிற்சங்க நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என அதன் தலைவர் நந்தன ரணசிங்க தெரிவித்துள்ளார். இதேவேளை, பதிவாளர் நாயக திணைக்கள அதிகாரிகளும் இன்றும் நாளையும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். இதன்படி நாடளாவிய ரீதியில் காணி பதிவாளர்கள் மற்றும் மேலதிக பதிவாளர்கள் இந்த பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக பதிவாளர் சேவை அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சமன் ஜயவர்தன தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், இந்த தருணத்தில் நாட்டுக்காக அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி சங்கத்தின் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.